கைவிடப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
7 ஐப்பசி 2022 வெள்ளி 03:49 | பார்வைகள் : 8185
கடந்த ஜூன் மாதம் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பலாலி விமான நிலையத்துக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, அடுத்த மாதம் (2022 ஜூலை) முதல் இந்தியாவில் இருந்து பலாலிக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
ஆனால், மூன்று மாதங்களாகியும் எந்தவொரு விமானமும் இந்தியாவில் இருந்து வந்து பலாலியில் தரையிறங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் பலாலி விமான நிலையத்தை மீளத் திறக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திய போது, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பதில் வேறு விதமானதாக இருந்தது.
இந்தியாவுடன் பேசி ஒரு விமானத்தையாவது பலாலியில் கொண்டு வந்து இறக்குங்கள் என்று சவால் விடும் வகையில் அவர் பதிலளித்திருந்தார்.
பொருளாதார நெருக்கடி உச்சமடைந்து, அரசியல் குழப்பங்கள் மேலோங்கிய காலப்பகுதி என்பதால் இந்திய நிறுவனங்கள் பலாலிக்கான சேவையைத் தொடங்குவதற்குப் பின்னடித்திருக்கலாம். பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை பெரிதும் பாதித்துள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக இந்தியா இருந்தாலும், அரசியல் குழப்பங்கள், எரிபொருள் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, போன்ற தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில், எவரும் இலங்கையைத் தேடி வரக் கூடிய நிலை இருக்கவில்லை.
இவ்வாறானதொரு காலகட்டத்தில் பலாலிக்கான விமான சேவையை மீள ஆரம்பிக்க எந்த நிறுவனமும் தயங்குவது இயல்பு. கொழும்புக்கு விமான சேவையை மேற்கொண்ட பல நிறுவனங்கள் குறித்த காலத்தில் இடைநிறுத்தியதும் உண்டு.
ஆனால் ஜூன் மாதம் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்திய நிறுவனங்களுடன் பேசிப் பார்த்தும், அவர்கள் சேவையை தொடங்க முன்வரவில்லை என்று கைவிரித்திருப்பது, முன்னுக்குப் பின் முரணான தொன்றாக உள்ளது.
பலாலி விமான நிலையத்துக்கு போதியளவில் செலவழித்து விட்டோம், இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் பலாலி விமான நிலையத்துக்காக ஒப்பீட்டளவில் அரசாங்கம் செலவிட்டது மிக குறைந்த தொகையே.
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா உதவிகளை வழங்கியது. ஓடுபாதை திருத்தப் பணிகளையும் முன்னெடுத்தது. அங்கு உட்கட்டுமான அபிவிருத்தி என்று பெரிதாக எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அவசர கதியில் விமான நிலையத்தை திறக்க வேண்டும் என்பதற்காக, தற்காலிக கட்டடங்களே ஏற்படுத்தப்பட்டன.
2019 தேர்தலுக்கு முன்னர் விமான நிலையம் திறக்கப்பட்ட சில நாட்களில் கொட்டித் தீர்த்த மழையால், வெள்ளம் தேங்கியிருக்கும் காட்சிகளைப் படம் பிடித்து பலாலி சர்வதேச விமான நிலையத்தின் நிலையை பாருங்கள் என்று கேலியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் குதூகலித்திருந்தார் நாமல் ராஜபக்ஷ.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் எப்படியும் பலாலி விமான நிலையத்தை மூடுவதில் அவர்கள் கரிசனையாகவே இருந்தனர். ஆனால் இந்திய அரசின் அனுசரணையுடன் தொடங்கப்பட்டது என்பதால், உடனடியாக அவர்களால் சேவையை நிறுத்த முடியவில்லை.
2020 மார்ச்சில் கொரோனா பரவத் தொடங்கியதை சாட்டாக வைத்துக் கொண்டு, சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கான சேவை நிறுத்தப்பட்டது.
அதனை மீள ஆரம்பிக்கும் முயற்சி இன்று வரை கைகூடவில்லை.
ஏற்கனவே சேவையை நடத்திய அலையனஸ் எயர் நிறுவனம் இம்முறை சேவையை தொடங்குவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர்களின் சேவைக்கு அதிக வரவேற்புக் கிடைக்கவில்லை.
பலாலி விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையில் 75 ஆசனங்களை கொண்ட சிறிய விமானங்களைத் தான் தரையிறக்க முடியும்.
இந்த விமானங்களில் அதிகளவில் சரக்குகளை ஏற்றுவதற்கு வசதி இருக்காது. இதனால் பயணிகளுக்கான வசதிகளும், சலுகைகளும் குறைவாக இருக்கும்.
அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில இருந்து சென்னைக்கான கட்டணத்தை விட பலாலி – சென்னை இடையிலான கட்டணம் அதிகமாக இருந்தது. அதனால் வடக்கில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகள் கூட, கட்டுநாயக்க ஊடாகவே பயணிக்க முயன்றனர்.
பலாலி விமான நிலையத்தின் முக்கியமான தோல்வி இது. இதற்கு காரணமாக இருந்தது அரசாங்கம் தான். அரசாங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் பலாலி விமான நிலையத்துக்கும் ஒரே அளவு வரிகளையே விதித்தது.
எந்த சலுகையையும் வழங்க மறுத்து விட்டது. கட்டுநாயக்கவில் உள்ள வசதிகள் பலாலியில் இல்லாத போது, பலாலிக்கு மட்டும் ஏன் சமமான வரியை விதிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அரசாங்கத்திடம் இருந்து பதில் இல்லை.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், மத்தல விமான நிலையத்தின் ஊடாக போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, வரிச்சலுகை வழங்கப்பட்டது. ஆனாலும் மத்தல விமான நிலையத்தை அவர்களால் தூக்கி நிறுத்த முடியவில்லை.
அவ்வப்போது உக்ரேனில் இருந்து வந்து போய்க் கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் 125 மரியா விமானமும் கூட ரஷ்யாவின் குண்டுவீச்சில் அழிந்து விட்டதால் இப்போது வருவதில்லை.
மத்தல விமான நிலையத்தை அமைத்ததால், அரசாங்கத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. இப்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அந்த வெள்ளை யானையும் ஒரு காரணம்.
மத்தல விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்காக 248 மில்லியன் டொலரை அரசாங்கம் செலவிட்டது. ஆனாலும் அதற்கேற்ற வருமானத்தைப் பெற முடியவில்லை.
அதேவேளை, பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக அரசாங்கம் செலவிட்டது வெறும் 225கோடி ரூபா மட்டும் தான். அதில் 30கோடி ரூபாவை இந்தியாவே வழங்கியது.
248மில்லியன் டொலரை தின்ற மத்தலவுக்கு வரிச்சலுகை கொடுத்து காப்பாற்ற முயன்ற அரசாங்கம், வெறும் 225கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பலாலி விமான நிலையத்தின் கழுத்தை நெரித்து சாகடித்து விட்டு, ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள், சலுகைகளை வழங்குவது பற்றிப் பின்னர் பார்க்கலாம் என்று கூறுகிறது.
எந்த நிறுவனமும், சேவையைத் தொடங்கி விட்டு சலுகையை எதிர்பார்ப்பதில்லை. சலுகை தொடர்பான உத்தரவாதத்தை பெற்ற பின்னர் தான் சேவையை தொடங்கும், இது மூத்த அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு தெரியாத இரகசியம் இல்லை.
பலாலி விமான நிலையம் ஊடாக பயணிகள் போக்குவரத்துச் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் செல்பவர்கள் அதிகம். அதுபோன்று இந்தியாவில் இருந்து சுற்றுலா வருபவர்களும், வணிகத்துக்காக வருபவர்களும் அதிகம்.
இந்த வாய்ப்பை பலாலியின் ஊடாகத் தக்கவைப்பதற்கு அரசாங்கம் சலுகைகளை அறிவிக்க வேண்டியது முக்கியம்.
குறைந்த கட்டணம், கூடுதல் பொதிகளை அனுமதிக்கும் வாய்ப்புகள் இருந்தால், பலாலி விமான நிலையத்துக்கு அதிகளவு பயணிகளை ஈர்க்க முடியும்.
ஆனால், அரசாங்கத்தின் அணுகுமுறை பலாலியை சர்வதேச விமான நிலையமாக வைத்திருப்பதை விட, அதனை இராணுவப் பயன்பாட்டுக்கான விமான நிலையமாக பேணுவதையே நோக்காக கொண்டிருக்கிறது.
இந்த அடிப்படை அணுகுமுறை பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு முக்கியமானதொரு சவாலாகவே நீடிக்கிறது.
- கபில்