Paristamil Navigation Paristamil advert login

சீனா முடியாதென்று கூறினால் 2.9 பில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைக்காதா?

சீனா முடியாதென்று கூறினால் 2.9 பில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைக்காதா?

4 புரட்டாசி 2022 ஞாயிறு 02:58 | பார்வைகள் : 7086


 சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவி செயற்திட்டத்தின்கீழ் 48 மாதங்களுக்காக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு
 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து மேற்படி ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 
 
எனினும் இந்த நிதி உதவி தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் இறுதிக்கட்ட அனுமதியைப் பெறுவதற்கு இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களுடன்  கடன் மறுசீரமைப்பை செய்வது  இன்றியமையாதது என்றும்,  அந்த உத்தரவாதத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியாதவிடின்  நிதியுதவி கிடைக்காமல் போகும் சாத்தியம் உள்ளது  என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

முன்னேற்றகரமான இணக்கம் 
 
அந்த வகையில் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து இந்த 2.9  பில்லியன் டாலர் கடனை பெற்றுக் கொள்வது தொடர்பான ஆரம்பகட்ட உத்தியோகத்தர் மட்டத்திலான இணக்கப்பாட்டை எட்டிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட அதில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.  அதில் நெருக்கடிகள், சாத்தியமற்ற தன்மை தொடர்ந்தும் காணப்படுகின்றன.   இலங்கையும் சர்வதேச நாணய  நிதியமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த இணக்கப்பாட்டுக்கு வந்தமையானது ஒரு மிகப்பெரிய அடைவு மட்டமாக காணப்படுகின்றது.  ஆனால் அங்கு காணப்படுகின்ற ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் பார்க்க வேண்டி இருக்கிறது. 
 
அதாவது தற்போது இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து 2.9  பில்லியன் டொலர்  கடன் குறித்த    எட்டப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பை செய்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மட்டுமே இந்த 2.9  பில்லியன் டொலர் கடனை இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியும்.  ஒருவேளை இவ்வாறு இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பை செய்து இணக்கப்பாட்டை அடைந்து கொள்ள முடியாவிடின் தற்போது சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கு இணங்கி இருக்கின்ற 2.9  பில்லியன் டொலர் கடன் உதவி கிடைக்காமல் போகும் நிலைமையே அதிகம் காணப்படுகிறது.
 
கடன் மறுசீரமைப்பு 
 
எனவே இலங்கை தற்போது விரைவாக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகிறது.  
 
குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பரிஸ் கிளப்  நாடுகள் எனப்படுகின்ற இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி,  ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்றவற்றுடன்  இலங்கை கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள வேண்டும்.    
 
கடன் மறுசீரமைப்பு   எனப்படுவது  இலங்கை தமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் ஒரு மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 
 
அதில் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கலாம்.  அல்லது அந்த கடன்களுக்கான தவணை பணத்தை மீள்செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம்.  ஒரு நிவாரண காலப்பகுதியை பெற்றுக் கொள்ளலாம்.  மூன்றாவதாக இலங்கை இந்த நாடுகளிடம் பெற்றிருக்கின்ற கடன்களில் ஒரு தொகையை கழித்து விடலாம். அல்லது ரத்து செய்துவிடலாம்.  அதனை Haircut  என்று கூறுவார்கள்.  
 
இந்த மூன்று முறைகளில் இலங்கை சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள முடியும்.  அவ்வாறு செய்து கொள்ளும் பட்சத்தில் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கி இருக்கின்ற 2.9  பில்லியன் டொலர் கடனை பகுதி பகுதியாக நான்கு வருட காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 
 
தற்போது இலங்கை  கடன் மறுசீரமைப்பை  செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.  அதற்காக சர்வதேச ரீதியில் இரண்டு ஆலோசர்களையும் இலங்கை நியமித்திருக்கின்றது.  ஆனால் இங்குதான்   பிரச்சனை இருக்கின்றது.  
 
காரணம் இந்தியா, ஜப்பான், மற்றும் பரிஸ் கிளப்  அமைப்பில காணப்படுகின்ற நாடுகள் மற்றும்   உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் என்பன   இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்வதற்கு இஒக்கம் தெரிவித்திருக்கின்றன.  அதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 
 
ஜப்பானின் ஒத்துழைப்பு 
 
மேலும் இந்த நாடுகளுடன் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையை தொடர்பான கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் உதவி கரம் நீட்டி இருக்கின்றது.  ஜப்பான் இது தொடர்பாக ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தி   இந்த கடன் மறுசீமைப்பை செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தற்போது ஜப்பான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட கோரிக்கைக்கு அமைவாகவே ஜப்பான் இந்த கடன் மறுசீரமைப்பு  செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை  முன்னெடுத்துள்ளது.  
 
சீனாவின் தயக்கம் 
 
ஆனால் இங்கு என்ன சிக்கல் காணப்படுகின்றது என்றால் சீனா இவ்வாறு இலங்கையுடன் கடன் மறுசீமைப்பை செய்து கொள்வதற்கு தயாராக  இல்லை.  சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவித்திருக்கிறது.  ஆனால் கடன் மறுசீரமைப்பு  செயல்பாட்டை மேற்கொள்ள முடியாது என்று சீனா அறிவித்திருக்கிறது. காரணம் சீனா எந்த ஒரு நாட்டுடனும் இவ்வாறு கடன் மறுசீரமைப்பை செய்து கொள்வதில்லை.  அந்தக் கொள்கையிலேயே சீனா இருந்து வருகிறது.  ஆனால் மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரையில் அமெரிக்கா கனடா  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பொறுத்தவரையில் அந்த நாடுகள் கடன் மறுசீரமைப்பை செய்யும் கொள்கையில் இருக்கின்றன. 
 
எனினும் சீனாவானது கடன் மறுசீரமைப்பு  கொள்கையை விரும்புவதில்லை.  காரணம் அது மேற்கு நாடுகள் முன்னெடுக்கின்ற கொள்கை என்பதனால் சீனா அதனை விரும்புவதில்லை.  அதுமட்டுமின்றி இலங்கையுடன் மட்டும் தான் கடன் மறுசீரமைப்பை செய்து கொண்டால் அது தான் கடன் வழங்கி இருக்கின்ற, தன்னிடம் கடன் பெற்று இருக்கின்ற ஏனைய நாடுகளையும் பாதிக்கும்  என்பதால் இவ்வாறு கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கின்றது.  
 
ஆனால் இலங்கை தற்போது சர்வதேசத்தில் பெற்றிருக்கின்ற கடன்களில் 10 வீதமான கடன் சீனாவுக்கு செலுத்தவேண்டியவையாக காணப்படுகின்றது. 

2.9 கடனுதவி இழக்கப்படுமா? 
 
எனவே சீனா இந்த கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள முன்வராத பட்சத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9  பில்லியன் டொலர் கடனை பெற்றுக் கொள்வது கடினமாக அமைந்துவிடும். 
 
அதனால் இந்த விடயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை இங்கு மிக முக்கியமான கேள்வியாக இருக்கின்றது. சீனா கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள இணைங்குமா?  அல்லது இலங்கை சர்வதேச நாணயத்தின் உடன்பாட்டுக்கு வந்திருக்கின்ற 2.9  பில்லியன் டொலர் கடனை இழக்குமா?  என்பது இங்கு பிரதான கேள்வியாக இருக்கின்றது.  இங்கு ஒரு பூகோள அரசியல்  உபாய நுட்பம் இடம் பெறுவதை காணமுடிகிறது.  
 
சீனா எக்காரணம் கொண்டும் இந்த சர்வதேச மேற்குலக நாடுகளின் இந்த கடன் மறுசீரமைப்பு கொள்கையை பின்பற்றுவதில்லை என்ற நோக்கில் விடாப்படியாக இருக்கின்றது. இலங்கை விடயத்தில் மட்டும் இதில் விட்டுக்கொடுப்பு செய்தால் அது ஏனைய தனது நாடுகளுடனான கொள்கைகளை பாதிக்கும் என்று சீனா கருதுகிறது.  ஆனால் அதனையே மேற்கு நாடுகளும் சீனாவுக்கு வலியுறுத்துகின்றன.  
 
அதாவது இலங்கையின் இந்த  விவகாரத்தை பயன்படுத்தி சீனாவை தமது கொள்கைக்குள் கொண்டுவரும் முயற்சியை மேற்கு நாடுகள் முன்னெடுப்பதை காணப்படுகிறது.  எனவே சீனா மேற்கு நாடுகளின் கொள்கையை இலங்கைக்காக பின்பற்றுமா?    இலங்கைக்காக தனது கொள்கையை விட்டு இந்த கடன் மறுசீரமைப்புக்கு வருமா?  அல்லது சர்வதேச நாணயநிதியத்திடம்  இலங்கை பெறப்போகின்ற 2.9 பில்லியன் கடன் சாத்தியமற்றதாகிப் போகும் வகையில் சீனா கடன் மறுசீரமைப்பை செய்யாது விடுமா என்பதே  தற்போது இங்கு பிரதான கேள்வியாக இருக்கின்றது. 
 
எனவே சீனா தற்போது என்ன செய்யப் போகிறது என்பது மிக முக்கியமானதாகும். அண்மையில் இது குறித்து  கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  சீனா இந்த கடன் மறுசீரமைப்பை விவகாரத்தில் தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.  எனினும்  சீனாவானது இலங்கையின்  பொருளாதார மீட்சி  செயல்பாடுகளுக்கு உதவுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவித்து வருகிறது.  
 
ஆனால் கடன் மறுசீரமைப்பை செய்து  கொள்வதற்கு தயங்குகிறது.  இது தொடர்பில் அண்மையில் எம்முடன் கருத்து வெளியிட்டிருந்த சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித்த கோஹன சீனா  பொதுவாகவே   கடன் மறுசீரமைப்பை செய்து கொள்வதற்கு தயங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார். 
 
என்ன நடக்கும்?  
 
அதாவது சர்வதேச நாணய நிதியத்துடன் சீனாவுக்கு தொடர்புகள் இருந்தாலும் கூட சர்வதேச சர்வதேச நாணயத்தில் அதிகமான பங்குகள் அமெரிக்காவுக்கே இருக்கின்றன. இது சீனாவுக்கு கொள்கைளவில் ஒரு சிக்கலை தோற்றுவித்திருக்கிறது.  அமெரிக்கா மற்றும் மேற்குலக ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு   அமைப்பில் மற்றுமொரு நாபடு  உதவி பெறுவதற்கு தான் ஏன் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சீனா கருதுவதாகவு  தெரிகிறது.  
 
எப்படியிருப்பினும் சீனா எடுக்கப் போகின்ற முடிவிலேயே இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பெற்றுக் கொள்ளுமா இல்லையா என்பதை கண்டு கொள்ள முடியும். மறுபுறம்  இந்தியா சர்வதேச நாணயத்தில் இலங்கை இந்த கடன் உதவி பெற்றுக் கொள்வதற்கு முழுமையான ஆதரவை வழங்கிருக்கின்றது. தன்னை நம்பி இலங்கைக்கு இந்த கடனை வழங்குங்கள் என்று ஏற்கனவே இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியிருந்தமை இங்கு மிக முக்கியமானதாகும்.  இந்தியா ஏற்கனவே இந்த வருடத்தில் இலங்கைக்கு 2.4  பில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்கி இருக்கின்றது. 
 
மாறாக சர்வதேச நாணய நிதியத்துடன்   பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை  2.9    பில்லியன் டொலர்களை நான்கு வருட காலத்தில் பெறப்போகின்றது. அதன் பொருளாதார விளைவுகள் அதன் சர்வதேச நிதி சந்தையிலான தாக்கங்கள் இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்பது ஒரு புறம் இருக்க அவ்வாறான நீண்ட கால பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்றி  இந்தியா தனது அயல்நாடு என்ற ஒரே அடிப்படையில் இலங்கைக்கு இரண்டு 2.4  பில்லியன் டொலர்களை கடன் உதவியாக இந்த வருடத்தில் வழங்கி இருக்கின்றது. 
 
இதன் காரணமாகவே இலங்கை இதுவரை காலமும் பொருளாதார ரீதியில் மூச்சு விடுவதற்கு   முடியுமாக இருந்திருக்கிறது. எனவேதான் தனது சிம்மாசன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் மூச்சு விடுவதற்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.   
 
எப்படியோ சர்வதேச ரீதியில் தற்போது இந்த விவகாரம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது. இலங்கை சர்வதேச நாணயத்திடம் இந்த உதவியை பெற்றுக் கொள்வதற்கு சீனா கடன் மறுசீரமைப்புக்கு வருமா ? அல்லது சீனா விடாப்படியாக இருக்குமா? என்பது இங்கு முக்கியமானதாக உள்ளது. 
 
எனவே சீனாவின் அடுத்த கட்ட நகர்வுகள்,  சீனாவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளப் போகின்ற பேச்சு வார்த்தைகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடியின் தாக்கம் போன்றவைகளே  அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை தீர்மானிப்பதாக காணப்படுகின்றன. 
 
- ரொபட் அன்டனி 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்