Paristamil Navigation Paristamil advert login

பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதில் பிரதமர் ரணில் பொறுப்பேற்றுள்ள சவால்!

பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதில் பிரதமர் ரணில் பொறுப்பேற்றுள்ள சவால்!

31 வைகாசி 2022 செவ்வாய் 19:02 | பார்வைகள் : 14624


இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உருவான அரசியல் நெருக்கடி தற்போது ஓரளவு தணிவு நிலைமைக்கு வந்துள்ளது.
 
அரசாங்கம் பதவி விலக வேண்டு மென்றும், பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் வீடு செல்ல வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பின்னர் உருவான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களையடுத்து அமைச்சரவையிலுள்ள சமல் ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரும் பதவி விலகினர். பின்னர் மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ இராஜினாமா செய்தார்.
 
இதன் போது ஏற்றபட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சகல அரசியல் கட்சிகளையும் இணைத்து அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பல நிபந்தனைக் கோரிக்கைகளை முன்வைத்ததால் சஜித் பிரதமராகப் பதவியேற்பது சாத்தியமற்றுப் போய் விட்டது.
 
அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பல கோரிக்கைகளை முன்வைத்தார். அதுவும் சாத்தியமற்றுப் போய் விட்டது. அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அப்பதவியைப் பொறுப்பேற்றார்.
 
இலங்கை அரசியல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த ரணில் விக்கிரமசிங்க, நாடு பெரும் சவாலை எதிர்நோக்கியிருக்கும் இன்றைய காலப்பகுதில் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், துணிச்சலுடன் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் ரணில் வகுத்துள்ளார்.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், அமெரிக்க டொலரின் பெறுமானம் சற்றுக் குறைந்துள்ளமை நல்லதொரு அறிகுறியாகும். இதேநேரம், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
 
42 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் பல்வேறு பதவிகளில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஆறாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்துள்ளார்.
 
எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்கிரமசிங்க தம்பதிகளுக்கு புதல்வனாக, 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிறந்தார். பெரும் செல்வந்த மற்றும் கல்வி கற்ற குடும்பத்தில் ஒரு பெண் சகோதரி உட்பட நான்கு சகோதரர்களுடன் ரணில் பிறந்தார்.
 
தனது கல்வியை கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர்,கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்ற பின்னர், 1972 ஆம் ஆண்டு, இலங்கை உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
 
இவரின் துணிச்சல் மிக்க செயல்களை அவதானித்த ரணில் விக்கிரமசிங்கவின் உறவினரான ஜே.ஆர். ஜயவர்த்தன அவரை அரசியலின் பக்கம் ஈர்த்தார். 1970 களில் ஐக்கிய தேசியக் கட்சியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர், பின்னர் பியகம தேர்தல் தொகுதியில்,1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
 
அப்போது அவர், வெளிவிவகார பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து தமது கடமைகளை திறம்படச் செய்தார். அதேவேளை, இளைஞர் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். அதற்குப் பின்னர், கல்வி விவகார அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டது.
 
1980 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அன்று கல்வி அமைச்சு ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. 9 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார். அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பிரேமதாசவின் அரசின் கீழ் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ரணில் விக்கிரமசிங்க தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரவை அமைச்சராகவும் செயற்பட்டார்.
 
1993ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆண்டு வரையும், இதன் பிறகு 2001-04 மற்றும் ஜனவரி 2015 முதல் பிரதமராக திகழ்ந்தவர். இவர் வரலாற்று சிறப்புமிக்க களனி விகாரையின் தாயக சபையின் தலைவருமாவார்.
 
1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான காமினி திசாநாயக்க படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க 1994 ஆண்டு நவம்பர் மாதம் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு தனது வாழக்கைப் பயணத்தின் துணைவியாக களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் மைத்திரியை திருமணம் செய்து கொண்டார்.
 
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடித்து உருவான நல்லாட்சி அரசில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் (8ஆம் திகதி ஜனவரி 2015) ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
 
இதேவேளை 26 ஒக்டோபர் 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டார். அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தார்.
 
இந்த முறையற்ற செயலை ஏற்கமுடியாதென ரணில் விக்கிரமசிங்க நடவடிக்ைக மேற்கொண்டார். அதே அரசியல் அரசியல் யாப்பினூடாக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் அரசியலமைப்பு நெருக்கடி முடிவுக்கு வந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் விடாமுயற்சியும் அவரிடமிருந்த சட்டஅறிவுமே அந்த வெற்றிக்கான காரணங்களாகும்.
 
1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு 42.71 % வாக்குகளே கிடைத்தன.
 
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
 
அதற்குப் பின்னர், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தது.
 
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குச் சென்றார்.
 
பிரதமர் ரணில் தனது அரசியல் வாழ்வில் வெற்றிகளை மாத்திரமன்றி பெரும் சவால்கள், சோதனைகளையும் சந்தித்துள்ளார். இன்றைய பொருளாதார நெருக்கடி வேளையில் அவர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றிருப்பதும் அவர் எதிர்கொண்டுள்ள சவால்களில் ஒன்றாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்