டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?
16 வைகாசி 2022 திங்கள் 19:44 | பார்வைகள் : 14202
பொருளாதார ரீதியிலும் எரிபொருள் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள், மின்வெட்டு போன்ற விடயங்களில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிக நெருக்கடிமிக்கதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம், மேலும் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது
2003 ஆண்டு ரணில் பிரதமராக இருந்தபோது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச உதவி வழங்கும் மாநாட்டை நடத்தியிருந்தார்.
அதில் இலங்கை 19 வருடங்களுக்கு முன்னர் 4.5 பில்லியன் டொலர்கள் உதவி வழங்கப்படுவதற்கு இணக்கம் ஏற்பட்டது.
அந்தவகையில் அந்த அனுபவங்களை கொண்டே தற்போது பிரதமர் இலங்கைக்கு உதவுவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கருதப்படுகின்றது
பொருளாதார ரீதியிலும் எரிபொருள் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள், மின்வெட்டு போன்ற விடயங்களில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிக நெருக்கடிமிக்கதாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறுகின்றனர்.
மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம், மேலும் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இதனை எவ்வாறு சமாளிப்பதென்பது முக்கியமாக இருக்கின்றது.
கடந்த சில மாதங்களாக மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு பொருளாதார நிலைமைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அவற்றின் விலை உயர்வு காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து இருக்கின்றனர்.
நீண்டநேர மின்வெட்டு மக்களை பல வழிகளில் பாதித்திருக்கின்றது. அதுமட்டுமன்றி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
அதாவது கிலோ மீட்டர் கணக்கில் பத்து மணித்தியாலங்கள் என்ற வகையில் ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பது எந்தளவு தூரம் மனநிலையைப் பாதிக்கும் என்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அவ்வளவு நேரம், நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்தும் இறுதியில் எரிபொருள் கிடைக்காவிடின் எரிபொருள் முடிந்துவிட்டது என்று எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகள் கூறும்போது அந்த மனிதருக்கு எவ்வாறான மனநிலை இருக்கும் என்பதன் பாரதூரத்தை புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடியே காணப்படுகின்றன. கிலோமீட்டர் கணக்கில் மிக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
மக்கள் மிகவும் விரக்தியான நிலையிலேயே வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது. முக்கியமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்ளும் விடயத்தில் மக்களின் அந்த உற்சாகமான மனநிலை என்பது மிக முக்கியமாகின்றது.
ஆனால் தற்போது மக்களை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக இவ்வாறான ஒரு விரக்தியையும் அழுத்தத்தையும் எதிர்க்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
அந்தளவுக்கு இங்கு நிலைமை மோசமாக இருக்கின்றது. மக்கள் தொழிலைச் செய்வதா ? அல்லது எரிபொருள் எரிவாயு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்குத் வரிசையில் நிற்பதா என்று திணறிக்கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி 1000 ரூபாவை கொடுத்தால் மூன்று லீற்றர் பெற்றோலையே பெற முடிகின்றது. ஆனால் 1000 ரூபாவை உழைப்பது என்பது தற்போதைய சூழலில் மிக கடினமானதாக மாறியுள்ளது.
இவ்வாறான சூழலில் பொருளாதார ரீதியில் மிகவும் ஒரு இக்கட்டான நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றிருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவாக இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதை காணமுடிகின்றது.
அதற்கமைய கடந்த வியாழக்கிழமை பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜப்பான் தூதுவர் மிஷுகோஷி ஹதேகி, அமெரிக்க தூதுவர் ஜூலி சங், சீன தூதுவர் யீ. ஷியேன்லயங் உள்ளிட்ட தூதுவர்களை சந்தித்து ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடன் உதவிகளை பெற்றுக் கொள்வ தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன் தொலைபேசியில் பிரதமர் ரணில் கலந்துரையாடியுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முன்பதாக இந்த தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதன்படி நாட்டின் தற்போதைய இந்த நெருக்கடிகளை விரைவாக தீர்ப்பதற்கு புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க என்ன செய்யப்போகிறார் என்பதை சகலரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
நாட்டு மக்கள், பொருளாதார நிபுணர்கள், வர்த்தகத் துறையினர், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள், அரசியல் கட்சிகள், எதிர்க் கட்சிகள், ஆளும் கட்சியினர், ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கின்ற தரப்பினர் என சகல தரப்பினரும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அல்லது பிரச்சினைக்கு தீர்வுகாண அல்லது இந்த நாட்டில் வரிசை பிரச்சினைக்கு பொருள் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ன செய்யப்போகிறார் என்பதை மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற உடனேயே இதற்கான நடவடிக்கைகளை அனுகியிருப்பதை காணமுடிகின்றது. மிக முக்கியமாக இலங்கைக்கு உதவுவதற்கான ஒரு சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை உருவாக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளமை இங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.
இங்கு ஒரு வரலாற்று விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது 2001 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக பதவியேற்று இரண்டு வருட காலங்கள் ஆட்சியை நடத்தினார். அப்போது ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க பதவி வகித்தார்.
இக்காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இக்காலத்தில் சர்வதேசத்துடன் மிகப்பெரிய அளவிலான தொடர்புகளை ரணில் விக்கிரமசிங்க பேணியதுடன் இலங்கைக்கு உதவி வழங்குகின்ற ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தினார்.
ஜப்பானில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் இந்த சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டிருந்தன. அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என பல்வேறு நாடுகள் இதில் பங்கேற்றன. அப்போது இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாடுகளின் இணங்கின.
அதாவது இன்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர் 4.5 பில்லியன் டொலர்களை உதவியாக பெறுவதற்கான நடவடிக்கையை அன்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்திருந்தார். (ஆனால் சமாதான பேச்சுவார்த்தை முறிவுகாரணமாக அந்த உதவிகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது)
அதாவது ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த விடயத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும்? யாரை அணுகவேண்டும்? எவ்வாறான பொறிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயம் தொடர்பான ஒரு அறிவு மிக ஆழமான மட்டத்தில் இருப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்தவகையில் அவர் 2003 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட அந்த அனுபவத்தின் ஊடாக தற்போது இந்த செயற்பாட்டை ஆரம்பிக்கலாம் என கூறப்படுகின்றது. முக்கியமாக உடனடியாக இலங்கைக்கு உதவி வழங்க சர்வதேச ஒத்துழைப்பு பேரவை ஒன்றை நிறுவுவதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
இது அனுபவத்தின் ஊடான ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது. அவர் இதன் ஊடாக இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அணுகுமுறையை முயற்சிப்பதை காணமுடிகிறது.
ஜப்பான் இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமான சமிக்ஞையை வெளிக்காட்டியிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த கட்டம் எவ்வாறு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது.
இந்த செயற்பாடுகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தளவு தூரம் வெற்றியடைய போகின்றார் என்பது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தங்கியிருக்கின்றன.
தற்போது ஜப்பான் 2 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே ஜப்பானிடம் 3 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்குமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கடிதம் மூலம் கோரியிருந்தார். அந்த கடிதம் ஜப்பான் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் மீண்டும் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட ஜப்பான் தூதரகம் 3 பில்லியன் என்று குறிப்பிடாமல் தமக்கு கடனுதவியை பெற்று தருமாறு மட்டும் குறிப்பிடுங்கள் என்று தகவல் அனுப்பி இருந்தது.
அதற்கமைய ஜனாதிபதி மீண்டும் கடனுதவியை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியிருந்தார். தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் ஜப்பான் அந்த உதவியை விரைவுபடுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் மாமா முறையிலான முன்னாள் ஜனாதிபதி சூஜ, ஆர். ஜெயவர்த்தன ஜப்பானின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அனைவரும் தெரிந்ததாகும்.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பான் மிகவும் பாரதூரமான வீழ்ச்சியை சந்தித்திருந்தபோது ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் ஜே.ஆர். தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப உலக நாடுகள் ஜப்பானுக்கு உதவி செய்து ஜப்பான் இந்த நிலைக்கு வந்துள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜே,ஆர். குடும்பத்திற்கும் ஜப்பான் எப்போதுமே ஒரு நன்றிக்கடன் என்ற முறையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதனடிப்படையில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அதுவும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கின்ற சூழலில் ஜப்பான் இரண்டு பில்லியன் டொலர்களை விரைவாக இலங்கைக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜப்பான் தூதுவர் ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கின்றார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜப்பானை நோக்கி சென்றார்.
அதுமட்டுமன்றி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளும் விரைவான உதவிகளை இலங்கைக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் விரைவாக நாட்டின் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மக்களின் வரிசை பிரச்சினை, பொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை, பொருளாதார சுமை என்பவற்றுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும்.
மக்களுக்கு பொருளாதார ரீதியான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பொருளாதார நெருக்கடி இலங்கையில் எப்போதும் இல்லாதவாறு ஒரு பாரதுரமான நிலைமையில் காணப்படுகின்றது.
அதனை விரைவாக தீர்க்க வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். தூரநோக்குடன் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியமாகவுள்ளது.
முக்கியமாக சுற்றுலாத்துறையை மீண்டும் முன்னேற்றி அதனூடாக கிடைக்கின்ற 5 பில்லியன் டொலர்களை உறுதிப்படுத்துவதுடன் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்புகின்ற அன்னிய செலாவணியையும் அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதுடன் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் தற்போது வருடாந்தம் 12 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றன. ஆனால் இறக்குமதி செலவானது 22 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றன.
அந்தவகையில் எந்தளவு தூரம் ஒரு நெருக்கடியை ஏற்றுமதி இறக்குமதி இடைவெளியில் நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகின்றது. அதுமட்டுமன்றி இலங்கைக்கு வேறு பல்வேறு துறைகளில் இருந்தும் டொலர் உள்வரும் மூலங்களை அதிகரிப்பது அவசியமாகும்.
அந்தவகையில் பிரதமர் எதிர்க்கட்சியில் இருந்தபோது இலங்கை இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை தொடர்ச்சியாக கூறிக்கொண்டு வந்திருந்தார்.
அதாவது உலக வங்கி, சார்க் பாராளுமன்றம், ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றை இலங்கை உடனடியாக நாட வேண்டும் என்று அவர் அப்போது பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக கூறிவந்தார்.
அந்தவகையில் தற்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைத்திருக்கின்றது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
விரைவாக மக்களின் இந்த பொருளாதார சுமையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கின்றது.