இலங்கையில் குழந்தைத் தொழிலாளர் - திருடப்பட்ட குழந்தைப் பருவமும் நிச்சயமற்ற எதிர்காலமும்
17 ஆவணி 2023 வியாழன் 10:10 | பார்வைகள் : 4794
இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகளில், மேற்பரப்பிற்கு அடியில் ஒரு இருண்ட யதார்த்தம் நீடிப்பதுடன், அங்கு குழந்தைகளின் சிரிப்பானது சுரண்டல் மற்றும் பற்றாக்குறையால் அமைதிப்படுத்தப்படுகிறது. குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தை அழித்து, அவர்களின் திறனையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வேலைவாய்ப்பைக் குறிப்பதால், "குழந்தைத் தொழிலாளர்" என்ற சொல் ஒரு ஆபத்தான விளக்கத்தைப் பெறுகின்றது.
இலங்கையில் குழந்தைத் தொழிலாளி என்பது குழந்தைகளுக்கு ஆபத்தானதாகவும், உடல் ரீதியாக உழைப்பை தேவைப்படுத்துவதாகவும், தார்மீக ரீதியாக தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. இது பல்வேறு தொழில்களில் தோன்றி, பல ஆதரவற்ற குழந்தைகளை கல்வி மற்றும் இன்பத்தின் மகிழ்ச்சிக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கு செல்ல கட்டாயப்படுத்துகிறது.
இலங்கையில், இளம் பிள்ளைகள் முறைசாரா விவசாயத் துறையில் அயராது உழைப்பதுடன், பயிர்களைப் பராமரித்து, குடும்ப வியாபாரங்களில் பெரும்பாலும் அபாயகரமான சூழ்நிலையில் பணியாற்றுகின்றார்கள்.
கடலோரப் பகுதிகளில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்படுவதுடன், அங்கு அவர்கள் முதலாளிகளின் கைகளில் வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான மற்றொரு மனச்சோர்வான அம்சம் நகர்ப்புறங்களில் காணப்படுகிறது, அங்கு குழந்தைகள் வீட்டு வேலைகளின் நிழலில் சிக்கியுள்ளனர். இந்த குழந்தைகளின் வாழ்க்கை இடைவேளையின்றி அல்லது ஓய்வு நாட்களின்றி, ஒரு நாளைக்கு இருபது மணிநேரம் வரையும், வாரத்தில் ஏழு நாட்களும், சிறிதளவு ஊதியத்திலிருந்து ஊதியம் எதுவுமின்றி பணி செய்வதில் சுழல்கின்றது.
எஅவர்கள் தங்களின் கல்வியைத் தொடர்வதற்கான மற்றும் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு கொடூரமாக மறுக்கப்படுகிறது. இலங்கையின் பரபரப்பான தெருக்களில், வித்தியாசமான குழந்தைப் பருவம் சித்தரிக்கப்படுகிறது.
மன்னிக்க முடியாத தெருக்களில் வாழும் மற்றும் பணி செய்யும் பல இளைஞர்களுக்கு, பொருட்களை விற்பதும் தெருவில் பிச்சை எடுப்பதும் மட்டுமே அவர்களின் ஒரே வருமானமாக உள்ளது.
அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு போராடுவதால், குறிப்பாக சுற்றுலாத் துறையுடன் இணைக்கப்பட்ட பிராந்தியங்களில் விபச்சாரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளின் சங்கிலிகளுக்கு அவர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படுகிறார்கள்.
அரசு நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான வாய்ப்புகளை வழங்கினாலும், அது திருடப்பட்ட குழந்தைப் பருவத்தின் இருண்ட அடையாளமாகச் செயற்படுவதுடன், இளம் உள்ளங்களுக்கு கல்விக்கான வாய்ப்பையும் பிரகாசமான எதிர்காலத்திற்கான சந்தர்ப்பத்தையும் மறுக்கின்றது. இந்த வகையில், குழந்தைத் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வில் நிழலிடுவது தொடர்வதால் எண்ணற்ற இலங்கைக் குழந்தைகளின் கனவுகளும் அபிலாஷைகளும் அந்தரத்தில் தொங்குகின்றன.
இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்களை ஆளும் சட்டக் கட்டமைப்பு
இலங்கை அரசாங்கம், அதன் அரசியலமைப்பு மற்றும் பல்வேறு சட்டங்களின் மூலமாக, இந்த கடுமையான அநீதியை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் சுரண்டல் மற்றும் தப்பெண்ணத்திலிருந்து தனது இளைஞர்களைப் பாதுகாப்பதில் அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1978 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு இலங்கையின் சட்ட கட்டமைப்பின் அத்திவாரமாக செயற்படுகிறது.
பிரிவு 12(1) இன் கீழ், இது சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாத உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கின்ற அதே சமயம் அரச கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளின் உறுப்புரை 27(13) குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், அவர்களின் உடல், உள மற்றும் சமூக நலனை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கொள்கைகள் 1956 ஆண்டின் 47ம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தை (EWYPCA) உருவாக்க வழிவகுத்ததுடன், இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் வேலை நிலைமைகள் மற்றும் நேரங்களை முகாமை செய்கின்றது. இந்த சட்டமானது 14 வயதுக்குட்பட்டவர்களை குழந்தைகள் என்றும், 14 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர் என்றும் வரையறுக்கிறது. அபாயகரமான குழந்தைத் தொழிலாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, 2010 ஆம் ஆண்டின் EWYPCA ஒழுங்குவிதியானது அபாயகரமான குழந்தைத் தொழிலாளர்களின் பட்டியலைக் சுட்டிக் காட்டியதுடன், வேலைக்கான குறைந்தபட்ச வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கிறது.
இந்த நடவடிக்கையானது மார்ச் 2001 இல் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பு பிரகடனத்தின் உறுப்புரை 3(d) இன் கீழான இலங்கையின் அர்ப்பணிப்பிற்கு இணங்குகிறது. மேலும், 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், 1939 ஆம் ஆண்டின் 28ம் இலக்க இளைஞர் குற்றவாளிகள் (பயிற்சிப் பாடசாலை) கட்டளைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டின் 50ம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் (NCPA) போன்ற பிற தேசிய சட்டங்கள் மிகவும் பரவலாக உள்ள குழந்தைத் தொழிலாளர் மற்றும் முறைசாராத் துறையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை நிவர்த்தி செய்வதில் முக்கிய வகிபங்கை வகிக்கின்றது.
மேலும், 1942 இன் 45ம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் 1954 ஆம் ஆண்டின் 19ம் இலக்க வர்த்தக நிலையம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டம் ஆகியவை விபச்சாரத்துடன் தொடர்புடைய செயல்கள், இதில் குழந்தைகள் ஈடுபடுவது உட்பட குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் தடுப்பது குறித்து தண்டனைச் சட்ட கோவையின் பிரிவுகள் 360A, 360B மற்றும் 288A ஆகியவற்றுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இலங்கை 1998 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கட்டாயக் கல்விச் சட்டத்தின் ஊடாக, நாட்டின் இலவசக் கல்விக் கொள்கையை வலுப்படுத்துவதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்களை நிவர்த்தி செய்வதில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இந்தச் சட்டம் கட்டாய பாடசாலை வருகைக்கான வயதை 14-லிருந்து 16 ஆக உயர்த்தி, அதிக குழந்தைகள் கல்வி பெறுவதையும், குழந்தைத் தொழிலாளர்களின் மோகத்திற்குக் குறைவானவர்கள் ஆளாகுவதையும் உறுதி செய்கிறது. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், சிக்கல்கள் இன்னமும் குறிப்பாக முறைசாரா துறையில் உள்ளன. எனவே, ஒரு புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தவும், மோசமான வகையான குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்குக் கொண்டுவரவும் ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் கூட்டு முயற்சி அவசியமாகும். இலங்கையின் மிகவும் நலிவடைந்த மக்களையும் அதன் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக; அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் தங்களது முயற்சிகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைக்க வேண்டும்.
பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குதல் : இலங்கையில் குழந்தை தொழிலாளர்களை ஒழித்தல் ஒரு சமுதாயமாக, குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்து, நம் குழந்தைகளுக்கு ஒளிமயமான நாளைய பாதையை உருவாக்க, கருணை மற்றும் உறுதியுடன் ஒன்றுபடுவது நம் மீதான கடமையாகும்.
குழந்தைத் தொழிலாளர்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற முடியாது, ஏனெனில் இது நமது மிக மதிப்புமிக்க சொத்தாகிய எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு, கண்ணியம் மற்றும் திறனைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது. கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு, நிறுவனங்கள் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த வேண்டியதுடன் மீறுபவர்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், சர்வதேச தரத்துடன் அவற்றைச் சீரமைப்பதும் குழந்தைத் தொழிலாளர் முறைமை அனுமதிக்கப்படாது என்ற தெளிவான செய்தியை வழங்கும்.
குழந்தைத் தொழிலாளர் முறைமையை இல்லாதொழித்து இலங்கையின் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு, பன்முகத்தன்மையான அணுகுமுறை அவசியமாகும். பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்:
அணுகக்கூடிய கல்வியை ஊக்குவித்தல்: 16 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை இலவசமாக வழங்குவதன் மூலம் கல்வியை முதன்மையான முன்னுரிமையாக ஆக்குதல். அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக நலிவுற்ற சமூகங்களில் உள்ளவர்களுக்கு, கல்வி உட்கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கல்வி வாய்ப்புகள் கிடைக்கச் செய்தல்.
குழந்தை பாதுகாப்பு பொறிமுறைகளை வலுப்படுத்துதல்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தொடர்புடைய அரச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதை உள்ளடக்குகின்ற வினைத்திறனான குழந்தை பாதுகாப்பு அமைப்பை நிறுவுதல். இது குழந்தை தொழிலாளர் வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதுடன் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆலோசனை மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை வழங்குவதை உள்ளடக்குகின்றது.
மாற்றீடான வாழ்வாதார வாய்ப்புகள்: குழந்தைத் தொழிலாளர்களை சார்ந்துள்ள குடும்பங்களுக்கு அவர்களின் தற்போதைய வாழ்வாதாரத்திற்கு மாற்றீட்டை வழங்குவது சுரண்டல் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். கிராமப்புறங்களில் தொழில்முனைவோர் மற்றும் சிறு அளவிலான வணிகங்களை ஆதரிப்பது குழந்தைத் தொழிலாளர்களை நாடாமல் வாழ்வதற்கான சாத்தியமான வாய்ப்புகளை பெற்றோருக்கு வழங்கலாம்.
வறுமை மற்றும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்: குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வறுமையாகும். எனவே, இலங்கை இந்த சுழற்சியை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால் வறுமையை குறைப்பதற்கும் பின்தங்கிய மக்களை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். சமூக நலத் திட்டங்களைச் அமுல்படுத்துவதன் மூலமும், தொழிற்பயிற்சி அளிப்பதன் மூலமும், வளர்ந்தவர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், குடும்பங்கள் குழந்தைகளின் உழைப்பை நம்பாமல், குழந்தைகளின் கல்வியை ஆதரிக்கும் நிலைமையை அதிகப்படுத்துகிறது.
அரச-தனியார் பங்காண்மை: அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான வெற்றிகரமான ஒத்துழைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் போக்கை அடிப்படையாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. வணிகங்கள் நெறிமுறையான வணிக நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டியதுடன் குழந்தை தொழிலாளர் இல்லாத விநியோக சங்கிலிகளை நிறுவ வேண்டும். குழந்தை தொழிலாளர் சட்டங்களை கடைபிடிக்கும் வணிகங்களுக்கு அரசாங்கம் வெகுமதி அளிப்பதுடன் அதனை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை விதிக்கலாம்.
இலங்கையில் உள்ள பிள்ளைகள் நாட்டின் எதிர்காலத்திற்கான திறவுகோலைக் கொண்டுள்ளதுடன், அவர்கள் குழந்தைத் தொழிலால் கட்டுப்படுத்தப்படாமல் கனவு காண்பதையும், கற்றுக்கொள்வதையும், அபிவிருத்தியடைவதையும் சுதந்திரமாக இருப்பதையும் உறுதிப்படுத்துவது எமது கூட்டான கடமையாகும்.
கல்விக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், சட்டங்களை அமுலாக்குவதன் மூலமும், சமூகங்களுக்கு வலுவூட்டுவதன் மூலமும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், நம் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். நாம் இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்களை இல்லாதொழிக்கவும், குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தை போற்றும் சமூகத்தை உருவாக்கவும் மற்றும் ஒவ்வொரு குழந்தையும் செழித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு நேர்மறையாக பங்களிப்பதற்காகவும் எமது அர்ப்பணிப்பில் ஒன்றிணைவோம்.
பிரிட்னி மார்டில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஆவார். அவர் நீதி மற்றும் சமத்துவத்திற்கான ஆர்வத்துடன், அனைத்து வகையான அநீதிகளுக்கும் எதிராக போராடுவதில் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்.
Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
நன்றி வீரகேசரி