தேசிய கீதத்தை தவறாகவேனும் சிங்கள மொழியில் மாத்திரம் பாடலாம்…?
7 ஆவணி 2023 திங்கள் 10:49 | பார்வைகள் : 5391
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதற்கு இன்னும் எதிர்ப்புகள் உள்ளன. இப்போது மீண்டும் தேசிய கீத சர்ச்சை கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த முறை சர்ச்சை எழ காரணம் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு அல்ல.. மாறாக, சிங்கள மொழியில் வித்தியாசமான முறையில் பாடப்பட்டமைக்காகும்.
2023 எல்.பி.எல். ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதமானது சிங்கள மொழியில் இலங்கை பாடகி உமாரா சிங்ஹவன்சவினால் இசைக்கப்பட்டது. முன்பு எப்போதும் இல்லாதவாறு வித்தியாசமான குரல் வெளிப்படுத்தலில் அவர் தேசிய கீதத்தை இசைத்தார். அதில் வரும் 'நமோ நமோ மாதா' என்ற வரிகளில் மாதா என்பதற்குப் பதிலாக மஹதா என்றே அவர் உச்சரித்திருந்தார். அந்த உச்சரிப்பு மாத்திரமல்ல, மேலைத்தேய பாணியில் அவர் தேசிய கீதத்தை முழுமையாக இசைத்ததே தவறு என்பதை எவரும் சரியாக சுட்டிக்காட்டவில்லை.
தேசிய கீதம் திரிபுபடுத்தப்பட்டு பாடப்பட்டமை தேசத்துரோக செயல் என எவரும் பெரிதாக கொதித்தெழவில்லை. ஏனென்றால், அது பாடப்பட்ட மொழி சிங்களம். அதை பாடியவர் ஒரு சிங்கள பாடகி. ஆகவே தவறு நடந்துவிட்டது என்றே பரவலான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. ஆனால், இதை கிண்டல் செய்த பதிவுகள் பல அதிகரிக்கவும் வேறு வழியின்றி அது குறித்து விசாரணை நடத்துவதற்கு சி.ஐ.டிக்கு உத்தரவிடப்பட்டது. சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் சிங்கள பெளத்த மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாடகி உமாரா சிங்ஹவன்ச பெரிதும் மன உளைச்சலுக்குள்ளானார்.
இறுதியில் நடந்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தார். இதை எல்லாம் ஒரு பக்கம் வைப்போம். தேசிய கீத வரிகள் திரிபுபடுத்தப்பட்டமை குறித்து சிலர் தெரிவித்த கருத்துக்களே இப்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் இது குறித்து வேடர் இன தலைவரான உருவரிகே வன்னியல அத்தோ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது ‘எமது நாட்டின் தேசிய கீதம் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் சிதைக்கப்பட்டே பாடப்பட்டு வருகின்றது. அதன் மெல்லிசையையும் ஒலியமைப்பையும் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமைகள் இல்லை… இதை நாட்டின் உயர் அதிகாரிகள் கண்காணித்தல் அவசியம்’ என்று கூறியுள்ளார். அவர் கூறியதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது.
தேசிய கீதமானது பல இடங்களில் வரிகள் பாடப்படாமல் இசைக்கோர்வையாகவே ஒலிக்கச் செய்யப்படுகின்றது. இது இலங்கையில் மாத்திரமல்ல, சர்வதேச ரீதியாக நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ் உட்பட ஏனைய போட்டி நிகழ்வுகள், உலகக் கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் தேசிய கீதங்கள் இவ்வாறு இசைக்கோர்வையாக மாத்திரமே ஒலிக்கும்.
வேடர் தலைவரை விட பொதுஜன பெரமுனவின் எம்.பி. காமினி லொக்குகேயின் கருத்துக்கள் தேசிய கீத விவகாரத்தில் இன்னும் இனவாதம் உச்ச இடத்திலேயே இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தேசிய கீதம் திரிபுபடுத்தப்பட்டு சிங்கள மொழியில் பாடப்படுவதானது தண்டனைக்குரிய குற்றமாகும். அதேவேளை தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதே தவறு என அவர் இனவாதத்தை கக்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதியை விட காட்டில் இருக்கும் வேடர் தலைவர் எவ்வளவோ மேல் என்று கூறலாம். ‘ஒரு நாட்டுக்கு அல்லது ஒரு தேசிய இனத்துக்கென தனித்துவமான அடையாளம் ஒன்று இருக்குமாயின் அதை பாதுகாக்க வேண்டும்' என அவர் கூறுகிறார்.
காமினி லொக்குகேயின் கருத்துப்படி பார்க்கும்போது இலங்கையில் வாழ்ந்து வரக் கூடிய தமிழர்கள் தமக்கென ஒரு தேசிய கீதத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா? பிரிவினையை ஏற்படுத்துவது யார் என்பதை இந்நாட்டின் சிங்கள மக்கள் நன்கு விளங்கிக்கொள்வது அவசியம்.
மேலும், காமினி லொக்குகே போன்ற இனவாத கொள்கை கொண்ட மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கூறும் கருத்துக்களை தற்சமயத்தில் பெரிதுபடுத்தத் தேவையில்லை. அவர் தமிழில் தேசிய கீதம் பாடுவது தவறு என்று கூறியிருப்பது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சீண்டுவதற்காகத்தான் என்பதை புரிந்துகொள்ள முடியும். நல்லாட்சி கால பிரதமராக இருந்தபோது சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதற்கு பேரினவாதிகளால் முன்வைக்கப்பட்ட இனவாத பேச்சுக்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணிலுக்கும் மொட்டு கட்சியினருக்கும் இடையில் சில முரண்கள் ஆரம்பித்துள்ளன. அக்கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கட்சியின் சில உறுப்பினர்கள் கதை பரப்பி வருகின்றனர்.
அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. இனவாத போக்குடன் கதைத்தாலும் செயற்பட்டாலும் மாத்திரமே இந்நாட்டு சிங்கள பெளத்த மக்களிடமிருந்து வாக்குகளை பெறலாம் என்ற எண்ணம் காமினி லொக்குகே போன்ற பழைமைவாத சிந்தனை கொண்ட இனவாத அரசியல்வாதிகளிடமும் இன்னும் ஊறிப்போய் உள்ளது.
அவர் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அல்லது பார்வையிடும் ஒருவராக நிச்சயமாக இருக்கமாட்டார் என்றே கூறத்தோன்றுகின்றது. இன்று இந்த நாட்டின் சிங்கள பெளத்த இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ள நல்லிணக்கங்கள் பற்றி அவர் அறிந்திருக்க நியாயமில்லை. எனவே அரசியலில் பல வருடங்கள் பின்னோக்கியிருக்கும் இவர் போன்ற அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நின்று வெற்றி பெறப்போவதில்லை. அவரது கருத்து அவரின் சொந்த கருத்தாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
அதேவேளை சிங்கள மொழியில் தேசிய கீதம் திரிபுபடுத்தப்பட்டு பாடப்பட்டமையானது அரசியல் சாசனத்தை மீறும் செயற்பாடு என்றும் அவ்வாறு பாடிய பாடகி உமாரா சிங்ஹவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இவருக்கும் காமினி லொக்குகேவுக்கும் பெரிதாக வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இலங்கையின் பாரம்பரிய தொல்லியல் இடங்களையே அறியாமல், தமிழர் பிரதேசங்களில் சென்று இவை எல்லாம் பெளத்த வழிபாட்டிடங்கள் என்று கூறிவரும் அவருக்கு எங்ஙனம் இலங்கையின் தேசிய கீதம் ஏற்கனவே திரிபுபடுத்தப்பட்டு தான் உள்ளது என்ற விடயம் தெரியப்போகின்றது?
தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரகோன் முதலில் ‘நமோ நமோ மாதா.. அப ஸ்ரீலங்கா...' என்றுதான் வரிகளை அமைத்தார். அந்நேரம் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆலோசகர்கள் தேசிய கீத வரிகளைப் பற்றி தவறான கருத்துக்களை முன்வைத்தனர். இந்த வரிகளை மாற்றும்படி ஆனந்த சமரகோனுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். ஆகவே அவர்களே தேசிய கீதத்தின் முதல் வரிகளை மாற்றிவிட்டனர். ‘நமோ நமோ மாதாவானது ‘ஸ்ரீலங்கா மாதா’ என மாற்றப்பட்டது.
முதன் முதலாக இலங்கையின் தேசிய கீதம் வானொலியில் ஒலிபரப்பப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆனந்த சமரகோனுக்கு வந்த அழைப்பில் வானொலியை செவிமடுக்கும்படி கேட்கப்பட்டது. சில நிமிடங்களில் ஒலித்த தேசிய கீதத்தை கேட்ட சமரகோன் மிகவும் அதிர்ச்சியடைந்தார். தனது வரிகளும் இசை வடிவமும் மாற்றப்பட்டதை அறிந்த அவர் அதன் பிறகே கடும் மனஉளைச்சலுக்குள்ளானார். அதிக தூக்கமாத்திரைகளை அருந்தி இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் காலங்காலமாகவே சிங்கள மேலாதிக்கவாதிகளால் மறைக்கப்பட்டே வந்தது. ஆனந்த சமரகோன் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற விடயம் அவரின் மகன் மூலமாகவே வெளிவந்தது. இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவரையே தற்கொலை செய்துகொள்ள வைத்தவர்கள் அதை தவறாக பாடியவர்களை என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள்?
நன்றி வீரகேசரி