டெங்கு அபாயத்தில் இலங்கை!
29 ஆனி 2023 வியாழன் 11:46 | பார்வைகள் : 6999
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் டெங்கு அபாயம் அதிகரிக்கக்கூடும். எனவே, சுற்றுச்சூழலை சுகாதாரமான முறையில் பராமரிக்க அனைவரும் முன்வருதல் அவசியமாகும்.
நாட்டில் டெங்கு நோய் காரணமான உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல குறிப்பிட்டுள்ளார்.
பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 75 வீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு காய்ச்சல் இதற்கு முன்னர் சிறுவர்களிடையே அதிகளவில் காணப்பட்ட போதிலும், தற்போது இளைஞர்களே அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் டெங்கு நோய் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்றாகும். நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக செயற்படுகிறது. உலகின் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் டெங்கு நோய் அதிகமாக பரவுகிறது.
குறிப்பாக, ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஒரு நபரை கொசு கடித்துவிட்டு, அந்த வைரஸை சுமந்து செல்லும் அதே கொசு தொற்றில்லாத இன்னொரு நபரை கடிக்கும்போது டெங்கு பரவல் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சல் மேற்கு பசிபிக் தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதியின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக ஏற்படுகிறது.
கரீபியன் தீவுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது.
டெங்கு ஏற்படும்போது உடனடியாக அதன் தீவிரம் நமக்கு தெரியாமல் இருக்கலாம். ஆயினும், அதிக காய்ச்சல் திடீரென்று ஏற்படலாம். கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, உடலின் பல்வேறு பாகங்களில் தடிப்புகள், சுரப்பிகளில் வீக்கம், உடல் வலி, எலும்பு மற்றும் மூட்டு வலி, மூக்கில் அல்லது ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல், தோலில் எளிதில் சிராய்ப்பு ஏற்படுதல் (சில சமயங்களில் தோலின் கீழ் உள்ள நுண்ணிய துளைகள் சிராய்ப்பு போல் தோன்றும். இது எந்த காயமும் இல்லாமல் ஏற்படலாம்) சோர்வு, கண் இமைகளுக்குப் பின்னால் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.
ஒரு நபர் வாழ்க்கையில் முதல் முறையாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது இலேசான காய்ச்சல் போன்றுதான் இருக்கும். ஆயினும், நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடியாக வைத்திய அறிவுரை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
டெங்கு நோயினை முன்னரே இனங்கண்டு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் டெங்கு நோயின் சிக்கலான மற்றும் குணப்படுத்த முடியாத நிலைமையை குறைத்துக்கொள்ள முடியும்.
மேலும், டெங்கு நோய்க்கு இலக்கானவராயின், கடினமான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், நோயின் பாதிப்பு அதிகரிக்கும்.
காய்ச்சல் ஏற்படும்போது பரசிடமோல் தவிர்ந்த ஏனைய மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எந்தவொரு காய்ச்சல் நோயாளிக்கும் வேறு மருந்துகளை வழங்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கவில்லை. சில நேரங்களில் பரசிடமோல் மருந்தினால் நோய் முழுமையாக குணமடையாமல் இருக்கலாம். அந்த சந்தர்ப்பங்களில் நோயாளர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. நோய் இருப்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்படாது. ஓய்வெடுப்பதால் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியும்.
இளநீர், தேசிக்காய், தோடம்பழம், ஜீவனி உள்ளிட்ட திரவ வகைகளை உட்கொள்வது மிகவும் உகந்தது என்று இலங்கை டெங்கு ஒழிப்பு நிபுணக்குழு தெரிவித்துள்ளது.
ஆயினும், இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.
டெங்குவில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முதலில் நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
தூய்மையான நீர் சேரும் பகுதிகளிலேயே டெங்கு நுளம்புகள் தங்கியிருக்கும். இனி வரும் காலம் மழைக்காலம் என்பதால் நீர் தேங்கியிருக்கும் இடங்களை நாம் சுத்தமாக பாதுகாப்பான முறையில் வைத்திருக்கவேண்டியது அவசியமாகும். குறிப்பாக, பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர், பூச்சாடிகள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் இடங்களில் நீர் தேங்கியிருக்கும்போது டெங்கு கொசுக்களின் உருவாக்கம் அதிகரிக்கின்றன. இதனால் நோய்த் தாக்கமும் அதிகரிக்கிறது. முடிந்தளவுக்கு இப்பகுதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவற்றை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
நீர் நிரம்பிய பாத்திரங்களில் நீரை அகற்றினாலும் குடம்பிகள் தங்கியிருக்கக்கூடும். எனவே, நீர் நிரம்பாத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக 5 அல்லது 6 நாட்கள் மாத்திரமே நுளம்புகள் உயிர் வாழும். அதனால் வாராந்தம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும். மக்கள் வசிக்கும் பகுதிக்கு அண்மித்த பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அதேபோல் நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
டெங்கு நோய்க்கு இலக்கானவர்கள் மற்றையவர்களுக்கு நோய் பரவாமலிருக்கும் வகையில் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியதும் அவசியமாகும். அதற்காக உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை பயன்படுத்த வேண்டியதும் அவசியமாகும். நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான பூச்சி விரட்டித் திரவியங்கள் ஊடாகவும் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.
எவ்வாறாயினும், இந்த முறைமைகள் 100 சதவீதம் பலன் தருபவையல்ல என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் பிரதேச சபைகள், நகர சபைகள், பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவுகள், பாதுகாப்பு பிரிவுகளின் பங்களிப்புடன் நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. டெங்கு நோய் அதிகளவில் பரவும் மாகாணங்களை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நோயாளர்கள் பதிவாகும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் எதிர்வரும் வாரங்களில் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அப்பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்காக இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு நோயை நாட்டிலிருந்து முழுமையாக விரட்டியடிக்க வேண்டுமானால், அது தனி ஒருவரினால் மட்டும் முடியாது. நாம் அனைவரும் நமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு தூய்மையை பேணி விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து அனைவரும் தப்பிக்க முடியும். இதற்காக அனைவரும் முயற்சிப்போம்.
நன்றி வீரகேசரி