Paristamil Navigation Paristamil advert login

பிரச்சாரப் போரில் 'போலிப் புன்னகைகள்'

பிரச்சாரப் போரில் 'போலிப் புன்னகைகள்'

15 ஆனி 2023 வியாழன் 12:22 | பார்வைகள் : 5767


இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள், பஸ் ஒன்றுக்குள்  புன்னகைத்துக் கொண்டிருப்பதைப் போன்று சமூகவலைத்தளங்களில் வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அவர்கள் உண்மையிலேயே அப்படி புன்னகைத்தவாறு போஸ்கொடுக்கவில்லை எனவும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் அப்படம் அவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 
ஆயிரம் சொற்களைவிட ஒரு புகைப்படம் பெறுமதியானது என்பர். இந்நிலையில், போலிச் செய்திகளுக்கும் புகைப்படங்களும் திரிபுபடுத்தப்பட்ட படங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
 
மேற்படி மல்யுத்த வீராங்கனைகளின் திரிபுபடுத்தப்பட்ட படமும் பிரச்சாரப் போரின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
 
இந்திய மல்யுத்த சம்மேளன சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்களைகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். வீராங்னைகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் எனவும் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் சம்மேளனத் தலைவர் பதவியலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் வீராங்கனைகள் கோருகின்றனர்.
 
பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்தியாவின் ஆளும் பாரதிய  ஜனதா கட்சியின் (பிஜேபி) பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.
 
இந்நிலையில், தமது முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்தி புது டெல்லியில் வீராங்கனைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
கடந்த மே 28 ஆம் திகதி இந்தியாவின் புதிய பாராளுமன்றத் திறப்பு விழா நடைபெற்ற தினத்தில் பாராளுமன்றத்தை  நோக்கி மேற்படி மல்யுத்த வீரவீராங்கனைகளும் ஆதரவாளர்களும்  பேரணியாக செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
 
பிரபல மல்யுத்த நட்சத்திரங்களான வினேஷ் போகத், சங்கீதா போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட பலர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
 
அன்றைய தினம் நண்பகல், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் சகிதம் சகோதரிகளான வினேஷ் போகத், சங்கீதா போகத் உட்பட கைது செய்யப்பட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் சிலர் காணப்படும் படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
 
சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர், அதேபோன்ற மற்றொரு படம் வெளியாகியது. இரண்டாவது படமும் ஏறத்தாழ முதல் படத்தைப் போலவே காணப்பட்டது. இரு படங்களிலும், மல்யுத்த வீரவீராங்கனைகள் மற்றும் பொலிஸார் அமர்ந்திருக்கும் நிலைகள், அவர்கள் பார்வைக் கோணங்கள், பஸ்ஸின் வெளிப்புறத்தில் தெரியும் காட்சிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் முகபாவனைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால், இரண்டாவது படத்தில் மல்யுத்த வீரவீராங்கனைகள் புன்னகைத்துக்கொண்டிருந்தனர்.
 
இப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர்கள் சிலர் வீதியில் இன்று நடந்த நாடகங்களின் பின்னர், இது தான் அவர்களின் உண்மையான முகம்' என குறிப்பிட்டிருந்தனர்.
 
அதாவது, வீராங்கனைகள் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள். வீதியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், இழுபறிகள், எல்லாம் வெறும் நாடகங்கள் என விமர்சிக்கும் வகையில் இக்கருத்துகள் அமைந்திருந்தன.
 
ஆனால், மேற்படி வீராங்கனைகள் சிரித்துக் கொண்டிருக்கும் படம் போலியானது என, ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் புனியா டுவிட்டரில் அறிவித்தார். 'ஐரி செல் ஆட்கள், இந்த போலிப் படத்தை பகிர்ந்துவருகின்றனர். இப்போலிப் படத்தை பகிர்பவர்களுக்கு எதிராக நாம் முறைப்பாடு செய்வோம்' என அவர் தெரிவித்திருந்தார். வீராங்கனைகள் புன்னகைக்காத நிலையில் காணப்படும் படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
 
இதில், 'ஐரி செல்' எனக் குறிப்பிடப்படுவது பிஜேபி கட்சியின் தகவல்தொழில்நுட்ப பிரச்சாரக் குழுவாகும். இக்குழுவினரே மேற்படி படத்தை திரிபுபடுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் அக்குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.
 
சர்ச்சைக்குரிய படத்தில், வீர வீராங்கனைகளின் முகங்களில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் மூலம் புன்னகை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
 
வினேஷ் மற்றும் சங்கீதா போகத் புன்னகைத்தவாறு காணப்படும் படத்திலுள்ள அவர்களின் கன்னக்குழிகளும் இப்படம் போலியானது என்பதை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. இக்கன்னக்குழிகள் ஒரே மாதிரியானவையாக காணப்படுகின்றன. உண்மையில்  வினேஷ் போகத், சங்கீதா போகத் ஆகியோர் இத்தகைய கன்னக்குழியைக் கொண்டவர்கள் அல்லர். இதனால் இப்படம் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
 
இவ்வீராங்கனைகள் பஸ்ஸில் வைத்து ஏன் இப்படத்தை பிடித்துக்கொண்டனர் என கேட்கப்பட்டபோது, 'நாம் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பது குறித்து நிச்சயமின்மையும் அச்சமும் ஏற்பட்டிருந்தது எம்முடன் யார் யார் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பினோம்' என சங்கீதா போகத்  தெரிவித்துள்ளார்.
 
 
வீராங்கனைகள் புன்னகைத்த நிலையில் காணப்படும் படத்தை பகிர்ந்த பலர், அப்படம் திரிபுபடுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களையடுத்து, தமது சமூகவலைத்தளப் பக்கங்களிலிருந்து அதை அகற்றினர்.
 
மேற்படி படத்தை திரிபுபடுத்தியவர்கள் யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும், போலித் தகவல்களை திட்டமிட்டு உருவாக்குபவர்களின் செயற்பாட்டில் மற்றொரு பரிமாணத்தை இது வெளிப்படுத்துகிறது.
 
மேற்படி புகைப்படம் வெளியாகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், கடந்த மே 22 ஆம் திகதி அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அருகில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக கூறி சமூகவலைத்தளங்களில் படமொன்று வெளியாகியிருந்தது. பின்னர் அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படம் என்பது தெரியவந்தது. எனினும் அதற்கிடையில் சிறிது நேரம் பங்குச் சந்தைகளில் அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளின்  பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது. செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட படமொன்றின் மூலம் பங்குச்சந்தை ஆட்டம் கண்ட முதல் சந்தர்ப்பமாக அது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
போலிச்  செய்திகள், தகவல்கள் பரவுவதைத்  தடுப்பதில், செயற்கை நுண்ணறிவு மூலம் திரிபுபடுத்தப்பட்ட படங்கள் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இத்தகைய படங்கள் உணர்த்துகின்றன.
 
நன்றி வீரகேசரி
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்