செயற்கை நுண்ணறிவும் மனித சமூகமும்
24 வைகாசி 2023 புதன் 03:59 | பார்வைகள் : 8721
நாம் வாழும் இந்த நவீன யுகத்தில் நாம் பயன்படுத்தும் பல மின்சாதனங்கள் தானியக்கமாகவே காணப்படுகிறது. முன்பெல்லாம் மனித கட்டளையின் பெயரில் இயங்கும் சாதனங்கள் தற்போது மனிதனைவிட வேகமாகவும் புத்திசாதுரியமாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றால், அதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறு வளர்ச்சியடைந்த சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும். சுருக்கமாக கூறவேண்டுமானால், மனித தலையீடு மற்றும் கட்டளைகளின்றி சுயமாக தாக்கமொன்றை மேற்கொண்டு, ஒரு முடிவை மனிதனைப் போலவே எடுக்கும் சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு எனப்படும். உதாரணமாக, இப்போது வளர்ச்சியடைந்து பிரபல்யமாகிவரும் செட் ஜீ.பீ.டி.ஐ எடுத்துப் பார்ப்போம்.
இந்த சாதனமானது ஒரு கேள்விக்கு மனிதனையும் தாண்டி, உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி விடைகளை கூறுவதென்றால் என்ன சொல்ல!
இப்படிப்பட்ட இந்த செயற்கை நுண்ணிறவு மனிதனுக்கு பல வழிகளில் நன்மைகளை செய்கின்றன.
இப்போது மனிதனால் செய்ய முடியாத பல விந்தைகளை இச்செயற்கை நுண்ணறிவு நேர்த்தியாக செய்து முடிக்கிறது.
உதாரணமாக, கடினமான அறுவை சிகிச்சைகளை செய்தல், புது புது வலைத்தளங்களை நொடிக்குள் உருவாக்குதல், சிறந்த பொது அறிவு கலைக்களஞ்சியமாக காட்சியளித்தல்... என பல வகைகளில் இந்த சாதனம் சிறப்பு பெறுகிறது.
அறிவை வளர்க்கும் மைக்ரோசொஃப்ட் எட்ஜ், கூகுல் போன்ற தளங்களுக்கு இப்போது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சேர்க்கப்பட்டு, மேலும் அவை மெருகூட்டப்பட்டுள்ளது. அதனையும் தாண்டி, அனைத்து மக்களும் பயன்படுத்தும் பொழுதுபோக்குச் சாதனங்களும் தளங்களும் இப்போது செயற்கை நுண்ணறிவை நாடுகின்றன என்று கூறினால் ஆச்சரியமில்லை.
முகநூல், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை திறந்தால் போதும் எமக்கு என்ன வேண்டுமோ, கட்டளையின்றியே அவை தகவல்களை வெளிக்காட்டுகின்றன. இதுவே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி.
இந்த செய்கை நுண்ணறிவு எவ்வளவுதான் நன்மைகளை செய்தாலும், அதிலும் எதிர்மறையான சில விளைவுகளும் உண்டு என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். என்னதான் மனிதனைப் போல சிந்தித்தாலும், அதற்கு எது சரி, எது பிழை என்று பிரித்தறியும் தன்மை கிடையாது.
இந்த செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு எமது அன்றாட வாழ்க்கைக்கு அளப்பெரிய சேவையாற்றினாலும், அதனால் சில எதிர்மறையான விளைவுகளும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. உதாரணமாக, நாம் ஒரு தகவலை பெறவேண்டுமானால், இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் இலகுவாக கண்டெடுத்துவிடுகிறோம்.
அந்த சந்தர்ப்பங்களில் எமது மூளைக்கு வேலை குறைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தேடல் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடுகிறது. ஆழமான தேடல் என்பது இல்லாமல் போகிறது. உதாரணமாக, நாம் பத்திரிகைகளையோ அல்லது ஒரு புத்தகத்தையோ வாசிக்கும்போது அவற்றில் உள்ள விடயங்கள் எமது மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால், நாம் முகப்புத்தகத்திலோ அல்லது வேறு ஒரு வலைத்தளங்களிலோ அந்த ஒரு விடயத்தை பார்க்கும்போது, அது எம் மனங்களில் ஆழமாக பதிவுசெய்யப்படுவது என்பது குறைவாகவே உள்ளது.
இவ்வாறான பல எதிர்மறையான செயற்பாடுகளுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு காரணமாகிறது என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.
சுருக்கமாக கூறுவதானால், இன்றைய காலகட்டத்தில் நாம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றோம். காலப்போக்கில், இந்த செயற்கை நுண்ணறிவின் பிடியில் நாம் சிக்கிவிடுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றே கூறவேண்டும்.
நன்றி வீரகேசரி