Paristamil Navigation Paristamil advert login

இனவழிப்பிற்கான நீதி விசாரணைகள் இன்றி 14 வருடங்கள் கடந்துபோகும் மே 18

இனவழிப்பிற்கான நீதி விசாரணைகள் இன்றி 14 வருடங்கள் கடந்துபோகும் மே 18

18 வைகாசி 2023 வியாழன் 08:49 | பார்வைகள் : 8594


ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடைபெற்று இவ்வருடம் 14 வருடங்கள் நிறைவுறும் நிலையில், இந்நாளை "தமிழின அழிப்பு நினைவு நாளாக" உலகெங்கும் நினைவு கூருகிறோம். 
 
இன்றும் திட்டமிட்ட நில அபகரிப்புகளும் தமிழர் மரபுரிமை மையங்களும் தொடர்ந்து சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. 50,000 ற்கு மேற்பட்ட மாவீரர்களையும் பல இலட்சம் அப்பாவிப் பொதுமக்களையும் நாம் இழந்த நிலையில், 146,679 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்ற விடை தெரியாமலே நீதி விசாரணைகளும் இன்றி 14 வருடங்கள் கடந்து போய்விட்டது.
 
அன்று தொடக்கம் இன்றுவரை காலங்காலமாய் ஸ்ரீலங்கா அரசுகள் தமிழர் அபிலாசைகளை எப்போதும் தட்டிக்கழிப்பதையே  முனைப்போடு செய்திருக்கின்றன. மேலும், தமிழ்மக்கள்மீது திடடமிட்டு கடடவிழ்த்தப்பட்ட இனவழிப்பு இப்போதும் தொடர்கின்றது. ஸ்ரீலங்கா படைகள் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
 
தமிழரின் கலாச்சார மையங்கள் சிங்கள பௌத்தமயமாக்கப்பட்டுக்  கொண்டிருக்கின்றன.  தமிழீழத்தில் மது மற்றும் போதைப்பொருட்களின் தாராளமயமாக்கலின் மூலம் தமிழ் இளையசமுதாயத்த்தின்  எதிர்காலம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. கல்வி கேள்விக்குறியாக இருக்கின்றது. இனவழிப்பு நிதர்சனமாய் இன்றும் தொடர்கின்றது.     
 
தொல்பொருள் மற்றும் வனவிலாகா திணைக்களங்கள்:
 
வெடுக்குநாறி மலையிலே ஆதிலிங்கேசுவரர் சிலையை உடைத்தது, குருந்தூர் மலையிலே தமிழருக்குச் சொந்தமான தொன்மைவாய்ந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை அமைத்தது, குசலான மலை முருகன் ஆலய அபகரிப்பு , அரிசி மலையிலே அபகரிப்பு, கந்தரோடையில் தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி பௌத்த பிக்குகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்படி பல தமிழர்களின் மத அடையாளங்கள் எமது தாயகத்தில் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. 
 
சிங்களவர்கள் வசிக்காத இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்தும் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியும் இலங்கையை ஒரு சிங்கள பௌத்த நாடாக்கும் முயற்சி மிகவேகமாக நடைபெற்று வருகிறது. இன்று ஈழத்தமிழர்கள் அதியுச்ச இனவழிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
 
வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்கள்:
 
வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் செல்லாக் காசாக மாறியிருக்கின்றது. குருந்தூர் மலையில் எந்தவித கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த பின்னரும் அங்கு மிகப்பெரிய விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்கள், நீதிபதிகள் இந்த நாட்டினுடைய நீதிமன்றகள், நீதிபதிகளாக ஏற்றுகொள்ளப்படவில்லை என்பதற்கு இந்த விடயம் உள்ளங்கை நெல்விக்கனி. 
 
சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதி என்ற வகையில் சர்வதேச விழுமியங்களை மீறி ஓரவஞ்சனையாகச் செயற்படுகிறது சிங்கள அரசு. இப்படிப்பட்ட சிறிலங்கா நீதித்துறை உள்ளகப் பொறிமுறையினூடாக இனவழிப்பிற்கான நீதி விசாரணையை நடுநிலையாக விசாரித்துத் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்ப்பு வழங்கத் தகுதியற்றது.
 
13 வது திருத்தச் சட்டம்:
 
ஸ்ரீலங்காவின் தமிழ் விரோதப்போக்கின் அடிநாதமே ஒற்றையாட்சியின்கீழ் தமிழரை அடிமைகளாகவே வைத்திருப்பதுதான். இதன்மூலம் நாட்டின் இறையாண்மை என்ற பெயரில் தமிழ்மக்களின் உரிமைகளை நிராகரித்து, தமது இனவழிப்பை சர்வதேசத்திற்கு நியாயப்படுத்துவதுதான். 
 
 இலங்கையில் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஒற்றையாட்சி அரசியலமைப்பாகும். இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மாநிலத்தின் ஆட்சிமுறைமை ஒற்றையாட்சிக்கு கீழிருக்கும் வரை, அர்த்தமுள்ள சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமையை அடைய முடியாது என்ற அடிப்படையில் தமிழர்கள் 13ஐ நிராகரித்து வந்துள்ளனர். 
 
13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது கொண்டுவரப்பட்ட காலத்தை விட நிலைமை இன்று மிகவும் மோசமாக உள்ளது. காணி அதிகாரமும் காவல்துறை அதிகாரமும் மறுக்கப்பட்ட வெற்று 13 வது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் மீது திணித்து இனவழிப்பாளர்களைப் பிணையெடுக்கும் முயற்சியை ரணில் அரசு முன்னெடுத்துள்ளது. கூடவே பல தமிழ் அரசியல்வாதிகள் இதனை பலமாக எதிர்க்காததன் மூலம், தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை ஊதாசீனம் செய்கின்றனர்.
 
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்:
 
தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை முடக்க ஸ்ரீலங்காவின் சர்வாதிகாரிகள் எடுத்துக்கொண்ட இன்னோர் துருப்புச்சீடே பயங்கரவாத தடைச்சட்டம். 1979ல் அமுல்படுத்தப்பட்ட இந்த சட்டம்,  பலதமிழர்களை கேட்டுக்கேள்வியற்று  பலதசாப்தங்களாக கம்பிகளுக்கு பின்னால் அடைத்தது மாத்திரமன்றி பல்லாயிரமாக்களைக் காணாமற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கம் தற்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை உருவாக்குகின்றது. இன்று உருவாக்கப்படும் சட்டத்தினூடாக தனது சொந்த இனத்தையும் அடக்கவேண்டிய தேவை உள்ளது. 
 
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் இப்படியான சனநாயகத்திற்கு எதிரான சட்டமூலங்களை உருவாக்கவேண்டிய தேவை மேற்குலகின் பொம்மை அரசான ரணில் அரசிற்குத் தேவையாகவுள்ளது. இத்துடன் இனப்படுகொலைக்கு உள்ளாகும்  எஞ்சிய ஈழத்தமிழ் மக்களை கடத்தவும், காணாமல் போக செய்வதற்குமாக குறித்த சட்டமூலத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
 
இந்த புதிய சட்டத்தால் சனநாயக ரீதியான போராட்டம், நீதி கோருகின்ற பேரணிகள், கவனயீர்புப் போராட்டங்களில் எல்லாம் சுயாதீனமாக இயங்குகின்ற ஊடகங்கள் கூட எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வர முடியாத அளவிற்கு குறித்த சட்டம் அமையும் என்பது கருத்துருவாக்கிகளின் கருத்தாகும்.
 
தென் ஆபிரிக்கா உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை:
 
ஐ.நா சபை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில்  போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை ஆகியவற்றிற்கான நடவடிக்கை குறித்து ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திலிருந்து தப்பிப்பதற்கான மற்றொரு ஏமாற்றும் தந்திரமாக தென் ஆபிரிக்க மாதிரியான உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையைக் கையில் எடுத்துள்ளனர். இந்தப் பொறிமுறை பிரயோகிக்கப்பட்டால், படுபாதகமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் தண்டனையில் இருந்து தப்புவதற்கு வழிவகுக்கும். மேலும் சிறிலங்கா இனவழிப்பாளர்கள் தமது எழுபது ஆண்டுகால படுபாதகக் குற்றங்களைத் தொடர இது உதவும். 
 
 
 
தமிழர் தேடவேண்டியது நட்பு நாடுகளை:
 
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இன்றைய உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு நட்பு நாடுகளைத் தேடவேண்டியது மிக அவசியம். போராட்ட காலத்தில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தான் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளும் ஐநாவும் ஆகும். தங்கள் நலன்களுக்காக எங்களை அழிப்பதற்கு சிறிலங்கா அரசிற்குத் துணை போனார்கள். இன்றும் கூட தமது நலன்களை முன்நிறுத்தி தான் எம்மைப் பயன்படுத்துகிறார்கள். மிட்டாய் காட்டி குழந்தைகளை அரவணைப்பது போன்று, இடைக்கிடை சிறிலங்காவிற்கு எதிராக ஒருசில தடைகளையும் தீர்மானங்களையும் கொண்டுவந்து ஏமாற்றுவித்தை காட்டி எங்களை ஆசுவாசப்படுத்துகிறார்கள். இவர்கள் வலையில் விழுந்து ஏமாறாமல் நாம் செயற்பட்டு நட்பு நாடுகளை உருவாக்க வேண்டும். யாரையும் எதிரியாகப் பார்க்கத் தேவையில்லை.
 
 
 
களமும் புலமும் ஒன்றிணைந்த நேர்கோட்டில் பயணிக்கவேண்டும்:
 
உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது பூர்வீகத் தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800 முதல் 1900-களில் நமது தேச வளங்களைச் சுரண்ட வந்த  பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் பல ஆசிய நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் குடியேற்றப்பட்டார்கள். போர் காரணமாக பல இலட்சம் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.
 
 தாயகத்தமிழர்களின் மிகப்பெரிய பலம் புலத்தில் வாழும் தமிழர்களே. சிங்கள ஒடுக்குமுறையாளர்களை ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து விரட்டி ஈழத்தமிழ் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் நிறைந்த வாழ்வை ஏற்படுத்த  உலகத் தமிழர்கள் ஒரு அரசியற் கோட்பாட்டுத் தளத்தில் இணையவேண்டும்
 
வலி சுமந்து ஆண்டுகள் 14 விரைந்தோடிவிட்டன. களத்தில் ஸ்ரீலங்காவின் சிங்கள அரசோ இன்னும் தமிழர்விரோத போக்கையோ  இனவழிப்பு நடவடிக்கையோ எப்போதும் மாற்றப்போவதில்லை. களத்தில் காணாமலாக்கப்பட்ட தம்முறவுகளைத்தேடி எம்முறவுகள் விடிவு எப்போதென்று தெரியாவிடினும் விடாது தொடர்போராட்டங்களை தொடர்கின்றனர். புலம்பெயர் உறவுகளோ எப்படியாவது  இனவழிப்பிற்கு தீர்வுகிடைக்கு என்று ஜெனீவாவிற்கும் தம் வதிவிடநாட்டு அரசுகளுக்கும் என்று நடையாய் நடக்கின்றனர்.  
 
எம்கரங்கள் இணையவேண்டும்; நடப்பு அரசியலை திறம்பட உணர்ந்து, தமிழர்சார் நட்புநாடுகளை சேர்க்கவேண்டும். இவற்றின்மூலம் தமிழீழமே ஒற்றைத் தீர்வு என ஒருங்கே உரத்து ஒலிக்கவேண்டும்; சொல்லை செயலாக்கவேண்டும்.  
 
நன்றி வீரகேசரி
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்