15 வைகாசி 2021 சனி 10:31 | பார்வைகள் : 10262
அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அந்தக் கருத்து கண்ணில் பட்டபோதே இவ்வாறானதொரு கட்டுரை எழுத வேண்டுமென்னும் எண்ணம் ஏற்பட்டது. அதாவது, நான் எந்த இடத்திலும் எந்தப் பொய்யையும், ஒரு தடவை கூட சொன்னதில்லை. மக்களுக்கு உண்மை நிலையை கூறுவதால்தான், என்னை பலருக்கும் பிடிப்பதில்லை. நான் எனது சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன். சுமந்திரன் அவரது சட்டத்தரணி வாழ்வில் பொய்களை கூறுகின்றாரா அல்லது இல்லையா என்பது பற்றி கருத்துக் கூறும் ஆற்றல் எனக்கில்லை ஏனெனில் நான் சட்டத்துறை சார்ந்த நபரல்ல ஆனால், அரசியல் வாழ்வில் சுமந்திரன் போன்றவர்கள் பொய்களை கூறுகின்றனரா அல்லது இல்லையா என்பதை – இந்தக் கட்டுரையை, முழுமையாக வாசித்து முடிக்கும்போ நிங்கள் அறியலாம்.
அரசியல்வாதிகள் தங்களை நம்பும் மக்களுக்கு முன்னால் பொய்களை கூறலாமா? ஆம் சொல்லலாம். ஆனால் அந்தப் பொய்கள் சுயநல நோக்கம் கொண்டதா அல்லது மக்களின் நலனை – நாட்டின் நலனை கருத்தில் கொண்டதா என்பதுதான் கேள்வி. அரசியலில் பொய்கள் இரண்டு வகையில் நோக்கப்படும். ஒன்று, ஒரு அரசியல்வாதி – அல்லது ஒரு குழுவினர், தனது அல்லது தங்களது சுயநலன்களுக்காக கூறும் பொய்கள். இரண்டு, ஒரு அரசியல் தலைவர் – தனது நாட்டின் எதிர்காலத்தை – மக்களின் நலனை கருத்தில்கொண்டு கூறும் பொய்கள். இவ்வாறான பொய்கள் மூலோபாய பொய்கள் எனப்படும். இது பல வகையாக நோக்கப்படும். இந்த அடிப்படையில், ஒரு அரசியல்வாதி தனது நலனை முன்னிறுத்தி பொய்களை கூறுவாராயின், அந்தப் பொய்களின் பலனை அந்த அரசியல்வாதி மட்டுமே (அவரது குடும்பத்தினரும்) அனுபவிப்பார். ஆனால் மக்களின் நலனை – நாட்டின் நலனை – கருத்தில்கொண்டு ஒரு அரசியல்வாதி பொய்களை கூறுவாராயின், அந்தப் பொய்களால் கிடைக்கும் நன்மையை நாடு அனுபவிக்கும் – மக்கள் அனுபவிப்பர். வரலாற்றில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.
மூலோபாய பொய் எவ்வாறிருக்கும்? இதற்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம். பனிப்போhர் காலத்தில், அமெரிக்கா சோவியத்தின் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொண்டது. இதனை வரலாற்றில் ‘கியூப ஏவுகணை’ நெருக்கடி என்பர். சோவியத் யூனியன் – அமெரிக்காவை பார்த்தவாறு கியுபாவில் ஒரு ஏவுகணை தளத்தை நிறுவியது. இந்த நெருக்கடியை போக்கும் வகையில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் . எப். கெனடி, அப்போதைய சோவியத் தலைவர் நிகிட்டா குருசேவ்வுடன் ஒரு இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார். அதவாது, அமெரிக்கா துருக்கிலிருக்கும் ஏவுகணை தளத்தை அகற்றினால், அதே போன்று தாங்கள் கியுபாவிலிருக்கும் ஏவுகணை தளத்தை அகற்றுவதாக, சோவியத் ஒப்புக்கொண்டது. இதற்கு கெனடி உடன்பட்டார். ஆனால் இந்த இடத்தில் கெனடி ஒரு விடயத்தை வலுயுறுத்தினார் அதாவது எங்களுக்கிடையிலான இந்த இரகசிய உடன்பாடு வெளியில் தெரியக் கூடாது. ஏனெனில் இது வெளியில் தெரிந்தால், நான் சோவியத்துடன் சமரம் செய்துவிட்டதாக அமெரிக்க மக்கள் எண்ணுவர். அதே வேளை, ஜரோப்பாவின் பாதுகாப்பை நான் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர்கள் எண்ணுவர். எனவே இது வெளியில் தெரியக் கூடாது. ஒரு வேளை இதனையும் மீறி இது வெளியில் கசிந்தால், அப்போது நான் இதனை மறுத்து பேசுவேன். அப்படியொன்றில்லை என்பேன். குருசேவ் ஏற்றுக் கொண்டார். இந்த உடன்பாடு தொடர்பில் அமெரிக்க பத்திரிகையாளர்கள் முகர்ந்துவிட்டனர். இது பற்றி கெனடியிடம் கேட்டபோது – அப்படியொரு உடன்பாடு இல்லை. அது பொய் – என்று, கெனடி ஒரு பொய்யை கூறினார். இந்த இரகசிய உடன்பாடு மூலம், அமெரிக்கா எதிர்கொண்ட கியூப ஏவுகணை அச்சுறுத்தலை கெனடி முடிவுக்கு கொண்டுவந்தார். கெனடி அமெரிக்க மக்களுக்கு பொய்தான் கூறினார் ஆனால் அந்தப் பொய்யால் அமெரிக்க மக்களுக்கு எந்தவொரு தீங்குமில்லை. நன்மையே கிடைத்தது. இது ஒரு மூலோபாய பொய்.
இப்போது நமது அரசியல்வாதிகளின் விடயத்திற்கு வருவோம். சுமந்திரன் பல விடயங்களை வெளிப்படையாக பேசும் ஒருவர்தான். அதில் மாறுபட ஒன்றுமில்லை. மற்றவர்களுடன் ஒப்பிட்டால், சுமந்திரனிடம் விடயங்களை விழுங்கிக் கொள்ளும் பழக்கம் மிகவும் குறைவுதான். அதற்காக சுமந்திரன் அரசியலில் பொய்களை ஒரு போதுமே கூறவில்லையென்று கூறலாமா?
தமிழ் அரசியல்வாதிகள் உண்மையை கூறுகின்றனரா அல்லது பொய்களை கூறுகின்றனரா – என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமாயின், முதலில் தமிழ் அரசியலில் எது பொய் – எது உண்மை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் அரசியலை பொறுத்தவரையில், (தமிழ் அரசியலென்பதால், இங்கு குறிப்பிடப்படுவது, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகளாகும்) தேர்தல் மேடைகளில் கூறப்படும் விடயங்களுக்கும் அரசியல் யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளியில், இந்த பொய்களை, நாம் அளவிடலாம். எப்படி அளவிடுவது?
தேர்தல் மேடைகளில் ஏனையவர்களை போன்றுதான் – சுமந்திரனும், அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றார். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவரப்போவதாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். இதில் சுமந்திரனின் பங்குதான் முதன்மையானது. ஆனால் சமஸ்டி என்னும் சொற்பிரயோகத்தோடு, சிங்கள – மக்களும் தமிழ் மக்களும் சம அதிகாரமுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் யாப்பு இந்த நாட்டில் வரமுடியுமா? அப்படி வரமுடியுமென்று கூறுவது – அதற்காக வாதிடுவது – அரசியல் பொயில்லையா?
புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியான போது – அதனை மையப்படுத்தி பலவாறான விவாதங்கள் இடம்பெற்றன. இதில் முதன்மையானது – ஏக்கிய ராஜ்ய தொடர்பானது. ஏக்கிய ராஜ்ய சமஸ்டியை குறிக்கின்றது – அதற்குள் சமஸ்டியும் உள்ளடங்கியிருக்கின்றது – என ஒரு தரப்பும், பிறிதொரு தரப்போ – இல்லை, அது ஒற்றையாட்சியை குறிப்பதாகும் – என வாதிட்டு, நேரத்தை விரயம் செய்துகொண்டிருந்த போது, இந்த நாட்டில், ‘சமஸ்டி’ என்னும் சொற்பிரயோகத்துடன், ஒரு அரசியல் யாப்பு எப்படி வரமுடியுமென்று, எவருமே கேட்கவில்லை. சுமந்திரனும் கேட்கவில்லை. உண்மையில் சமஸ்டி என்னும் சொற்பிரயோகம் இந்த நாட்டில் இந்தளவிற்கு சிக்கலான ஒன்றாக இருப்பதற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் அரசியல் பொய்தான் காரணம். ஏனெனில், 1949இல் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய செல்வநாயகம், அதனை, தமிழில் இலங்கை தமிழரசு கட்சியென்று கூறிவிட்டு, சிங்களவர்களுக்கு முன்னாலோ அதனை சமஸ்டி கட்சியென குறிப்பிட்டிருந்தார். தமிழர்களுக்கான அரசு ஒன்றை கோரும் கட்சியான, சமஸ்டி கட்சி கோரும் தீர்வானது, தனிநாடாகத்தானே இருக்க முடியுமென்னும் சிந்தனை, சிங்கள தேசியவாதிகள் மத்தியில் ஆழமாக வேருன்றிவிட்டது.
இந்த பின்புலத்தில் நோக்கினால், செல்வநாயகம், ஒரே நேரத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இரட்டைப் பொய்யை கூறியிருக்கின்றார். இந்த அரசியல் பொய் பாரம்பரியத்தால் வளர்க்கப்பட்ட தமிழ் மிதவாத அரசியல் பரம்பரையின் வட்டுக் கோட்டைத் தீர்மானமும் ஒரு அசியல் பொய்தான். ஏனெனில் தாங்கள் முன்வைத்த சுலோகத்தை எவ்வாறு அடைவதென்பதற்கான எந்தவொரு வழிமுறையும் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. இந்தப் பாரம்பரியத்தின் தொடர்சியாகத்தான் இப்போதும் தேர்தல் காலத்தில் பொய்களை முன்வைக்கும் அரசியல் தொடர்கின்றது. ஆனால் தனிநாட்டு தீர்வை, ஆயுத இயங்கங்கள் உண்மையிலேயே நம்பியிருந்தன. அதற்கு விசுவாசமாக இருந்தன. ஆனால் இந்தியா அவ்வாறானதொரு தனிநாட்டை ஒரு போதுமே அங்கீகரிக்காது, என்பதை தெளிவாக அறிந்துகொண்ட போது, விடுதலைப் புலிகள் தவிர்ந்த, ஏனைய பிரதான இயக்கங்கங்கள் அனைத்தும், ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டன. ஆனால் பிரபாகரன் (விடுதலைப் புலிகள்) மட்டும் இந்தியாவை மீறி தங்களால் ஒரு தனிநாட்டை அடைய முடியுமென்று நம்பினார். அந்தக் கனவிற்காக போராடி, அழிந்தனர். இந்த அடிப்படையில் பார்த்தால் தனிநாடு என்பதில் பிரபாகரனிடம் பொய்யிருக்கவில்லை. ஆனால் மிதவாதிகளின் தனிநாடு என்பது மோசமானதொரு சுயநல அரசியல் பொய். ஆனால் இந்தப் பொய்யின் விளைவோ, தமிழ் தலைமுறையொன்றையே அழித்துவிட்டது. அமிர்தலிங்கம் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் சிலரை சந்தித்த போது, இப்படி கூறியிருக்கின்றார். அதவாது, நாங்கள் ஒரு யுத்தத்திற்கு சென்றால், ஜம்பது வருடங்கள் பின்நோக்கிச் செல்ல நேரிடும். அவ்வாறாயின், எந்த அடிப்படையில் தனிநாட்டு சுலோகத்தை அமிர்தலிங்கம் போன்றவர்கள் ஆதரித்தனர்? எதனை – யாரை – நம்பி அதனை முன்வைத்தனர்?
இன்றைய அரசியல் உண்மை என்ன? மாகாண சபையை தாண்டி தமிழர்களால் பயணிக்க முடியாதென்பதையே, இன்றைய அரசியல் யதார்த்தம் தெளிவாக உணர்த்துகின்றது. இந்த அரசியல் உண்மையை மறுதலிக்கும் அனைத்து வாதங்களுமே அரசியல் பொய்கள்தானே!
இலங்கைத் தீவில் இரண்டு அடிப்படைகளில்தான் தமிழர்களின் எதிர்பாப்பு நிறைவேற முடியும். ஒன்று, சிங்கள பெரும்பாண்மை, மனம்மாறி, தமிழர்கள் கேட்பதில் தவறில்லை, அதில் நியாயமுண்டு – என்பதை ஏற்றுக்கொள்வதன் ஊடாக, தமிழ் மக்களின் அரசியல் அவா நிறைவேற வேண்டும். அடுத்தது, சிங்களவர்களை தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும். அந்தத் தோல்வி தரும் அச்சத்தினால், அவர்கள் கீழிறங்கிவர வேண்டும். பிரபாகரன் தெரிவு செய்திருந்த பாதை அதுதான் – அதாவது சிங்களவர்களுக்கு தோல்வியை கொடுப்பது. அதன் மூலம் தான் நினைப்பதை அடைவது. ஆனால் அதிலும் தமிழர்களுக்கு தோல்வியே கிடைத்தது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு, எவ்வாறு தமிழர்களின் எதிர்பார்ப்பு ஈடேற முடியும்?
இந்தியா உதவுமா? நிச்சயமாக இந்தியா உதவாது. ஏனெனில் இந்தியா இந்த விடயத்தில் பயணிக்கக் கூடிய ஆகக் கூடிய இடம் இந்த மாகாண சபை முறைமை மட்டும்தான். ஏனெனில் இந்தியாவில் இல்லாத முறைமையொன்றை இலங்கைக்குள் தமிழர்களுக்கு வழங்குமாறு இந்தியாவால் கூற முடியாது. இதனை தமிழர் தரப்புக்கள் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் கடந்த 34 வருடங்களாக இந்தியா தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே வலியுறுத்திவருகின்றது. அண்மையில் இதனை மிகவும் தெளிவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது தெரிவித்திருந்தது. அமெரிக்கா, அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர்களுக்கு உதவுமா? நிச்சயமாக இல்லை. ஏனெனில் அமெரிக்கா இலங்கை விவகாரத்தை மனித உரிமைகள் விவகாரமாக மட்டுமே நோக்குகின்றது. அது தவிர, இந்த விடயத்தில் இந்தியாவை மீறி, அமெரிக்கா தமிழர்களுக்கு உதவுவதற்கான அரசியல் வெளியும் இல்லை. இந்த பின்புலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் கூறிவருகின்ற விடயங்கள் எவ்வாறு அரசியல் ரீதியில் உண்மைகயாக இருக்க முடியும்?
சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு – இவைகளை கோரும் நியாயம் என்பது வேறு, அவற்றை அடைய முடியுமா என்பது வேறு. இந்த பின்புலத்தில் ஒரு அரசியல்வாதி உண்மை கூறுகின்றாரா அல்லது பொய்யுரைக்கின்றாரா என்பதை – குறித்த அரசியல்வாதி எந்தளவிற்கு யதார்தத்திற்கு நெருக்கமானவராக இருக்கின்றார் – என்பதைக் கொண்டே நாம் அளவிட முடியும். இந்த அரசியல் யதார்த்தத்தை தனது பேச்சில் பிரதிபலிப்பவர் எவரோ – இந்த அரசியல் யதார்தத்திற்காக கட்சிக்குள்ளும், வெளியிலும் எவர் உறுதியுடன் செயற்படுகின்றாரோ – அவரே அரசியலில் உண்மைகளை சொல்பவராக இருக்க முடியும். ஆனால் தற்போதிருக்கின்ற நிலைமையை விடவும் சிறந்ததொரு நிலைமையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பின் அரசாங்கத்துடன் இரகசிய உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அது பற்றி பொது வெளியில் பொய்களை கூறலாம். ஏனெனில் அந்தப் பொய்களால் மக்களுக்கு நன்மை கிட்டும்.