4 வைகாசி 2021 செவ்வாய் 14:25 | பார்வைகள் : 10190
இந்தவாரம் சீனப் பாதுகாப்பு மந்திரி இலங்கைக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் வத்திராயனில் ஒரு சிறுவர் பூங்காக்கட்டடம் சீனத்துக் கட்டடக் கலைச்சாயலோடு கட்டித் திறக்கப்படுகிறது. கட்டிடத்தின் உச்சியில் சீனத்து டிராகன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. கட்டடத்தில் சீன எழுத்துக்களும் வரையப்பட்டிருக்கின்றன.இவை அனைத்தையும் செய்தவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழர். ஊருக்கு நல்லது செய்ய விரும்பிய அவர் அந்த கட்டடம் கட்டுவதற்கான நிதி உதவிகளை வழங்கியிருக்கிறார்.அவரே கட்டிடத்துக்கான வரைபடத்தையும் தீர்மானித்திருக்கிறார்.அது அவருடைய ரசனைத் தெரிவு.அதில் அரசியல் எதுவும் கிடையாது என்று சொல்லப்படுகிறது.அவருக்கோ அதைக் கட்டிய மேசனுக்கோ அல்லது சீன எழுத்துக்களை வரைந்த வண்ணம் பூசுபவருக்கோ தாம் என்ன செய்கிறோம் என்பதன் அரசியல் மற்றும் கலாச்சார பரிமாணங்கள் எவையும் தெரிந்திருக்கவில்லை.அதனால்தான் சீன எழுத்துக்களின் மத்தியில் சமஸ்கிருதத்தில் ஓம் எழுதப்பட்டிருக்கிறது.
வத்திராயனில் கட்டப்பட்டிருக்கும் சீனத்து ட்ராகன் ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கற்பனை.ஆனால் இந்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்த சீனப் பாதுகாப்பு மந்திரியின் விடயம் அவ்வாறு ஒரு கற்பனை அல்ல.அதனாற்றான் அவர் நாட்டுக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான தூதுவர்கள் எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார்கள்.இதன் மூலம் சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய யூனியன் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறது என்பது வெளிப்படையானது.அரசாங்கம் சீனாவை அதிகமாக நெருங்கிச் சென்றால் மேற்கு நாடுகள் எதிர்க்கட்சிகளை முன்னிலைப்படுத்தி மீண்டும் ஓர் அரசியல் விளையாட்டை விளையாடக்கூடும் என்ற ஊகங்களை இச்சந்திப்பு உணர்த்துகின்றதா?
எப்படியும் இருக்கலாம்.ஆனால் அரசாங்கம் இச்சந்திப்பு காரணமாக தனது சீனச் சாய்வைக் கைவிடும் என்று நம்பத் தேவையில்லை.ராஜபக்சக்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய யதார்த்தங்களை புறக்கணித்துவிட்டு ஓர் அணியின் பக்கம் போகிறார்கள் என்று தயான் ஜயதிலக்க போன்ற விமர்சகர்கள் எச்சரித்து வருகிறார்கள்.ஆனால் தயான் ஜெயதிலக கூறுவதை இந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ளாமல் இல்லை.இந்த அரசாங்கம் தான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு விளங்கித்தான் செய்கிறது.சில அரசியல் விமர்சகர்கள் நம்புவது போல அரசாங்கம் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் ஓர் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விட்டது என்பது உண்மை அல்ல.எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் அரசாங்கம் இந்த ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது.அதை இன்னும் ஆழமாக சொன்னால் இதை விட்டால் அரசாங்கத்துக்கு வேறு தெரிவுகள் இல்லை.ஏனெனில் ராஜபக்சக்கள் தங்கள் சொந்த வெற்றிகளின் கைதிகள்.
முதலாவது யுத்த வெற்றி.இரண்டாவது தேர்தல் வெற்றிகள். யுத்தத்திற்கு பின்னரான எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் சிங்களபௌத்த பெருந்தேசிய உணர்வுகளைத்தான் தூண்டி வளர்த்தார்கள்.தனிச்சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றதாக காட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் இது.எனவே அந்த தேர்தல் வெற்றிகளின் இருந்து அவர்களால் பின்வாங்க முடியாது.சிங்களபௌத்த மக்களின் காவலனாக இந்த அரசாங்கம் தன்னை காட்டிக் கொள்கிறது.அந்த மக்களின் உணர்வுகளை திருப்திப்படுத்தும் ஓர் ஆட்சியைத்தான் நடத்த முடியும்.இப்படிப்பார்த்தால் ராஜபக்சக்கள் அவர்களுடைய சொந்த வெற்றிகளின் கைதிகள் எனலாம்.
அவர்களுடைய பலம் எதுவோ அதுதான் அவர்களுடைய பலவீனமும்.அவர்களுடைய பலங்கள் இரண்டு.முதலாவது யுத்ததத்தை வென்றது.இரண்டாவது அந்த யுத்தவெற்றியை பல தலைமுறைகளுக்கு உரிமை கோரக்கூடிய ஒரு பலமான குடும்பத்தை கொண்டிருப்பது.மு. திருநாவுக்கரசுவின் வார்த்தைகளில் சொன்னால் உலகில் அதிகம் தலைவர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்களில் ஒன்று அது.அக்குடும்பம் யுத்த வெற்றியை ஒரு குடும்பத்தின் சொத்தாக்கி அதையே தனது எதிர்கால அரசியலுக்கான முதலீடாகவும் மாற்றி வைத்திருக்கிறது.எனவே ராஜபக்சக்கள் முதலாவதாக அவர்களுடைய யுத்த வெற்றியின் கைதிகள்.இரண்டாவதாக யுத்த வெற்றியை அவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் அப்டேட் பண்ணி தேர்தல்களில் வென்று வருகிறார்கள்.எனவே அந்த தேர்தல் வெற்றிகளின் கைதிகள்.
இந்தப்பின்னணியில் வைத்துத்தான் ரிசாத் பதியுதீனின் கைதை விளங்கிக்கொள்ள வேண்டும்.கடந்தகிழமை முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவதைத் தடைசெய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதையும் அவ்வாறே விளங்கிக்கொள்ள வேண்டும்.
எனவே இந்த அரசாங்கம் தனது வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் களத்தில் இறங்கியுள்ளது என்று கருதுவது இந்த அரசாங்கத்தின் தன்மையை குறிப்பாக ராஜபக்ச ஆட்சியின் அடிப்படைகளை விளங்கிக் கொள்ளாத ஒரு விமர்சனம்தான்.அதைப்போலவே ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையே முரண்பாடுகள் வரலாம் என்று நம்புவதும் கற்பனை அதிகம் உடைய ஓர் ஊகம்தான். அதைப்போலவே தாமரை மொட்டு கட்சியின் பங்காளிகளான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,ஆனந்த முருத்தெட்டுவ தேரர் போன்றோர் அரசாங்கத்துடன் முரண்படுவதை வைத்து அக்கட்சி உடைந்து போய்விடும் என்று நம்புவதும் காலத்தால் முந்திய ஒரு எதிர்பார்ப்புதான்.இவை மட்டுமல்ல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் 2015இல் நடந்தது போல ஒரு ஆட்சி மாற்றத்தை இனிமேலும் இலகுவாக நடத்தி முடிக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் விருப்பங்களின் அடிப்படையிலான காலத்தால் முந்திய ஒரு கணிப்புத்தான்.
ஆழமான பொருளில் சொன்னால் ராஜபக்சக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்படி ஒரு தடத்தில்தான் அவர்களுடைய வெளியுறவுக்கொள்கை அமைய முடியும்.ஏனென்றால் யுத்த வெற்றிதான் அவர்களுடைய ஒரே முதலீடு.யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முடியாது. போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வில்லை என்றால் மேற்கு நாடுகளை நெருங்கிச் செல்ல முடியாது.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பலமான தமிழ் டயஸ்போரா உண்டு.இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர்கள் உண்டு.எனவே பலமான தமிழ்ச்சமூகங்களைக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளை இந்த அரசாங்கம். ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்கிச் செல்ல முடியாது என்பது ஒரு ராஜபக்ச யதார்த்தம்.குறிப்பாக போர்க்குற்ற விசாரணைகள் பொறுத்து அதிலும் குறிப்பாக ஐநா தீர்மானம் பொறுத்து ஒரு கட்டத்துக்கு மேல் மேற்கு நாடுகளுடன் இணங்கிப் போக முடியாது என்பதும் ஒரு ராஜபக்ச யதார்த்தம்.எனவே இந்த யதார்த்தங்களின் விளைவாக அவர்கள் சீனாவை நோக்கி செல்வதைவிட வேறு தெரிவுகள் இல்லை.
சீனாவில் பலமான தமிழ்ச்சமூகம் இல்லை.செல்லத் தமிழ்பேசும் சில சீன அழகிகள் மட்டும் உண்டு.இது ஒரு காரணம்.இரண்டாவது காரணம்-சீனா கடனோ உதவியோ வழங்கும் பொழுது அதற்கு மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக முன்வைப்பதில்லை.மூன்றாவது காரணம் சீனா ஐநாவில் இலங்கை அரசாங்கத்தை நிபந்தனையின்றி பாதுகாக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நாலாவது காரணம் சீனாவின் பட்டியும் பாதையும் வியூகத்தில் ஸ்ரீலங்கா எப்பொழுதோ இணைக்கப்பட்டு விட்டது. ஸ்ரீலங்கா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிலிருந்து விடுபடுவது கடினம்.2015இல் ஆட்சி மாற்றத்தின் பின் வந்த சீனாவுக்கு அதிகம் நெருக்கம் இல்லாத ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அதை நிரூபித்தது.சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கைதீவை மீட்கும் சக்தி இலங்கைதீவில் இனி வரக்கூடிய எந்த ஒரு உள்நாட்டு அரசாங்கத்துக்கும் கிடையாது.
இதுதான் மாலைதீவுகளின் நிலையும்.மாலைதீவுகள் சீனாவிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு அந்நாட்டின் ஆளற்ற தீவுகளில் ஒன்றை விற்க வேண்டியிருக்கும் என்று ஒர் இந்திய பாதுகாப்புத்துறை விமர்சகர் தெரிவித்திருக்கிறார்.சீனாவை பொறுத்தவரை அதன் பட்டியும் பாதையும் திட்டத்தில் இலங்கைத் தீவுக்கு இன்றியமையாத ஒரு முக்கியத்துவம் உண்டு. எனவே இலங்கைத் தீவு விரும்பினாலும் சீனா தன் பிடிக்குள் இருந்து இச்சிறிய தீவை இலகுவில் கழண்டு போக விடாது. அதிலும் குறிப்பாக 2018ஆம் ஆண்டு மாலத்தீவுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தோடு அத்தீவுக்கூட்டம் ஒப்பீட்டளவில் சீனாவின் கைகளுக்குள் இருந்து சற்று தூரமாக சென்று விட்டது.அது முழுவதுமாக சீனாவிடம் இருந்து விடுபட முடியாதபடிக்கு சீன கடன் பொறிக்குள் சிக்கியிருக்கிறது.எனினும் அரசியல் ரீதியாக அது இப்பொழுது இந்தியாவுக்கு நெருக்கமாக வந்திருக்கிறது.எனவே மாலத்தீவுகளில் நடந்ததுபோல இனிமேலும் சிறிலங்காவிலும் நடக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை சீனாவிடம் இருக்கும்.
இந்த அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ராஜபக்சக்கள் சீனாவை நோக்கி போனமை என்பது அவர்களைப் பொறுத்தவரை வேறு தெரிவுகள் இல்லாத ஒரு நிலைதான்.ஏனெனில் அவர்கள் இறந்த காலத்தின் கைதிகள். அதிலிருந்து அவர்கள் விரும்பினாலும் வெளிவர முடியாது.
தமிழில் ஒரு கிராமியக் கதை உண்டு.இரண்டு நண்பர்கள் ஆற்றங்கரைக்கு போனார்கள்.ஆற்றில் ஒரு பொதி மிதந்து வரக் கண்டார்கள். நண்பர்களில் ஒருவன் அந்த பொதியை அடைய விரும்பி ஆற்றில் இறங்கினான். நீந்திச்சென்று பொதியை கரைக்கு கொண்டுவர முயற்சித்தான். ஆனால் நீண்ட நேரமாக முயற்சித்தும் அவனால் பொதியை கரைக்குக் கொண்டு வர முடியவில்லை.கரையில் நின்றவன் கத்தினான் “முடியவில்லை என்றால் அதை விட்டுவிட்டு நீ திரும்பி நீந்தி வா” என்று. அதற்கு ஆற்றில் நின்றவன் கூறினான் “நான் அதை எப்பொழுதோ விட்டுவிட்டேன் ஆனால் அதுதான் என்னை விடுகுதில்லை” என்று.ஏனென்றால் அவன் பஞ்சுப்பொதி என்று நினைத்துப் பிடித்தது வெள்ளத்தில் அள்ளப்பட்டு வந்த ஒரு கரடியை. இப்பொழுது இலங்கைத்தீவின் நிலையும் சீனா பொறுத்து அப்படித்தானா? ட்ரகனைப் பிடித்தவனின் நிலை? நிச்சயமாக அந்த ட்ராகனும் வத்திராயனுக்கு வந்த ட்ராகனும் ஒன்றல்ல.