தமிழர் அரசியல் எதை நோக்கி?
18 சித்திரை 2021 ஞாயிறு 14:21 | பார்வைகள் : 9518
திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? நிச்சயம் இருக்கின்றது. ஜெனிவா திருவிழா முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக தமிழர் அரசியலானது, களத்திலும் புலத்திலும் கடும் பரபரப்பாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெனிவா பற்றிய பேச்சுக்கள்தான். முதலில் பூச்சிய வரைபு சரியா – தவறா என்பதில் ஆரம்பித்த ஜெனிவா திருவிழா, இறுதியில் இந்தியா முதுகில் குத்திவிட்டது – தமிழர்கள் மீளவும் ஏமாற்றப்பட்டுவிட்டனர் – என்றவாறான விவாதங்களுடன் முற்றுப்பெற்றது.
எப்போது மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதோ, அப்போதே தமிழ் அரசியல் அடியார்கள் அனைவரும் காலாற ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டனர். மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் வரையில் இந்த ஒய்வுநிலை தொடரும். ஒரு வேளை எம்.ஏ.சுமந்திரன் எங்காவது, ஏதாவது, கருத்துக் கூறினால், இந்த அரசியல் அடியார்கள் திடுக்குற்று விழித்தெழக்கூடும். உண்மையில் சுமந்திரன் சிறிது காலத்திற்கு அரசியலில் மெனவிரதம் இருப்போமென்று முடிவெடுத்தால், பலரின் நிலைமை கவலைக்கிடமாகிவிடலாம்.
உண்மையில் தமிழர் அரசியல் எதை நோக்கி பயணிக்கின்றது? தமிழர் அரசியல் எவர் மீதான நம்பிக்கையில் பயணிக்கின்றது? தங்களது சொந்த பலத்தின் மீதான நம்பிக்கையிலா – அல்லது, இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக தலையீடுகளின் மீதான நம்பிக்கையிலா? இங்கு குறிப்பிடப்பட்ட வெளியாரின் மீதான நம்பிக்கையில்தான், தமிழர் அரசியல் நகர்கின்றதென்றால் – இந்தியாவை தமிழர் தரப்பு சரியாக விளங்கிக்கொண்டிருக்கின்றதா? அமெரிக்காவை சரியாக விளங்கிக்கொண்டிருக்கின்றதா? மேற்குலக தலையீடுகளை தமிழர் தரப்புக்கள் சரியாக விளங்கிக்கொண்டிருக்கின்றனரா?
உண்மையில் இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் தனியாக ஆராயப்பட வேண்டியவை. ஏனெனில் இந்தக் கேள்விகளுக்கான பதில் அனைத்தும் ஒன்றே – அதவாது, இல்லை. 2009இற்கு பின்னரான தமிழ் மிதவாத அரசியல் என்பது ஒப்பீட்டடிப்படையில் ஆரம்பகால மிதவாத அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். ஒப்பீட்டடிப்படையில் ஆரம்பகால தமிழ் மிதவாத அரசியல் தனக்குள் பலமாக இருந்தது. அது தனக்குள் பலமாக இருந்ததால் அன்றைய அரசியல் சூழலை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் அதற்கிருந்தது. ஆனால் 2009இற்கு பின்னரான தமிழ் மிதவாத அரசியல் என்பது, போர் வீழ்சியொன்றிற்கு பின்னரான மிதவாத அரசியல். ஓப்பீட்டடிப்படையில் தனக்குள் பலவீனமாக இருந்தது. ஏனெனில் இன்று மிதவாத அரசியலுக்கு தலைமையேற்றிருக்கும் (இதில் சுமந்திரன் விதிவிலக்கு) அனைவருமே, 2009இற்கு முன்னரான அரசியலை விரும்பியோ விரும்பாமலோ இலகுவில் தூக்கிவீசமுடியாதவர்களாகவும், அதனை முற்றிலுமான ஒரு தோல்வியாக பொது வெளிகளில் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகவுமே இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர்.
ஒரு வேளை சுமந்திரன் 2009இற்கு முன்னரே அரசியலுக்குள் பிரவேசித்திருந்தால், அவரும் அவ்வாறுதான் இருந்திருக்க நேர்ந்திருக்கும். உண்மையில் 2009இல் ஒரு பெரும் வீழ்ச்சியை சந்தித்த பின்னர், அது தொடர்பில் திரும்பிப் பார்ப்பதையே முதலில் தமிழ் தலைமைகள் என்போர் செய்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு சுயவிமர்சனம் சார்ந்த மீள் பார்வையிருந்திருக்குமானால், இன்று யார் தூய்மையானவர் – என்னும் தேவையற்ற சச்சரவுகளும் விவாதங்களும் இடம்பெற்றிருக்காது. காய்த்தல் உவத்தலற்ற பார்வையொன்றால், கடந்த காலத்தை அளவிட்டால், இங்கு எவருமே தூய்மையானவர்கள் அல்லர். ஒவ்வொருவரும் தங்களுக்கு, தாங்களே பூட்டிக்கொண்ட விலங்குகளினால், வழிநடத்தப்பட்டிருந்தனர். தங்களுக்கு சரியென்பதையும் பிழையென்பதையும் செய்தனர். அவ்வாறான அனைத்து சரிகளினதும் பிழைகளினதும் விளைவுகளையே இருக்கின்ற தமிழ் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் பேசப்பட்ட விடயங்களையும், தேர்தல்; முடிந்ததும் இடம்பெற்ற விடயங்களையும் தொகுத்து சிந்திக்க முடிந்தால், தமிழ் சமூகம் எந்தளவிற்கு முட்டாள்தனமான பேச்சுக்களால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒருவர் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
தமிழ் அரசியலில் நம்பிக்கையாக இருக்கின்ற சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் மிகவும் மேலோட்டமான பார்வையே இருக்கின்றது. இவை வெறுமனே அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சுக்களின் வழியாகவே நோக்கப்படுகின்றது. ஒரு சிலர் இது தொடர்பில் உண்மையான நிலைமைகளை கூறினாலும் கூட, அது ஒரு பெரும் சிந்தனைப் போக்காக தமிழ்ச் சூழலில் பரிணமிக்கவில்லை. தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தீர்க்கமான சக்தியென்பது தொடர்பில் மீண்டும் எவரும் வலியுறுத்த வேண்டியதில்லை. ஏனெனில் அந்தளவிற்கு அது மனதில் பதிந்துவிட்டது. தமிழர் அரசியலை பொறுத்தவரையில், இந்தியாவின் தலையீட்டை கோருவதென்பது, விருப்பு வெறுப்புக்களுகப்பால், எக்காலத்திலும் தவிர்க்க முடியாதவொரு விடயமாகவே இருக்கின்றது. ஆனால் இந்தியா என்ன கூறுகின்றது என்பதை தமிழர் சரியாக விளங்கிக்கொண்டிருக்கின்றரா?
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான கடந்த 34 வருடங்களாக – தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா ஒரு விடயத்தையே வலியுறுத்திவருகின்றது. அது – தமிழ் மக்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான, அரசியல் அதிகாரப் பகிர்வில் இந்தியா தொடர்ந்தும் கரிசனையுடன் இருக்கின்றது. இவ்வாறு கூறிவிட்டு, அடுத்ததாக கூறும் விடயம்தான் இங்கு முக்கியமானது. அதவாது, அவ்வாறானதொரு தீர்வு, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக, உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்தியா எங்களுக்கு பின்னால் இருக்கின்றது என்றார் இரா.சம்பந்தன். ராஜதந்திர போராட்டமொன்றில் நாம் ஈடுபட்டுவருகின்றோம் என்றும் கூறப்பட்டது. 1987இல் இந்தியா எதனை ஒரு தீர்வாக முன்வைத்ததோ, அதைத்தான் இப்போதும் முன்வைக்கின்றதென்றால் தமிழரின் ராஜதந்திர போராட்டத்தின் பெறுமதி என்ன? உண்மையில் அப்படியானதொரு போராட்டத்தை தமிழர்களால் செய்ய முடிந்ததா? ஒரு வேளை அவ்வாறானதொரு போராட்டத்தில் தமிழர் ஈடுபட்டு, அங்கும் ஒரு முள்ளிவாய்க்காலை சந்தித்துவிட்டனரா? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதில்களை தேட ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். தொடர்ந்தும் சாதாரண மக்களை, எந்தவொரு மனச்சாட்சியும் இல்லாமல், சொல்லாட்சி கொண்டு ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்.
மேற்குலக தலையீடுகள் தொடர்பிலும் நான் எனது எழுத்துக்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றேன். இலங்கையின் மீதான அமெரிக்க தலையீடு என்பதை நாம் எவ்வாறு விளங்கிக்கொண்டிருக்கின்றோம்? அமெரிக்காவின் கரிசனை உலகளாவியது. அதில் இலங்கையும் அடங்குகின்றது. இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களானது, இலங்கை அரசை நிர்மூலமாக்குவதற்கானதல்ல. மாறாக, அரசாங்கத்தை உலக தாராளவாத ஜனநாயக ஒழுங்கிற்குள் வருமாறு வற்புறுத்துவது. அதற்கான அழுத்தங்கள்தான் தற்போது பிரயோகிக்கப்படுகின்றது. உலக ஒழுங்குக்குள் வர மறுக்கின்ற போது இலங்கையின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கலாம். 2012இல் இலங்கையின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் இதனை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. புதிய அரசாங்கம் தாராளவாத உலக ஒழுங்குடன் ஒத்துப் போக இணங்கிய போது, மேற்குலக அழுத்தங்களின் தன்மையும் மாறியது. தராளவாத உலக ஒழுங்குடன் மோத முங்படுகின்ற அரசாங்கம் இலங்கையில் அட்சிக்கு வருகின்ற போதெல்லாம், இவ்வாறான அழுத்தங்களை கொழும்பு நிச்சயம் சந்திக்க நேரிடும். இது அரசாங்கம் அறியாத ஒன்றுமல்ல. ஆனால் இவ்வாறான அழுத்தங்களால் பிறிதொரு விளைவும் ஏற்படுகின்றது. அதாவது, இந்த அழுத்தங்கள் பிறிதொரு புறம் தமிழர் பிரச்சினையை ஜரோப்பாவிற்குள் தொடர்ந்தும் ஏதேவொரு வகையில் பேசுபொருளாக்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறுதான் இந்த அழுத்தங்களை புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பில் அபரிமிதமான கற்பனைகளுக்குள் முழ்கினால் அது தமிழரின் குறைபாடாகும்.
ஆனால் இந்த அழுத்தங்களை சரியாக மதிப்பிட்டால் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ளலாம். அதவாது, அமெரிக்காவின் அழுத்தங்களானது, முற்றிலும், உலகளாவிய விழுமியங்கள் தொடர்பானது. அதாவது, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய கடப்பாடு தொடர்பானது. ஆனால் அமெரிக்கா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசியதில்லை. தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தை ஒரு உள்நாட்டு விவகாரமாகவே அமெரிக்கா பார்க்கின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிடும் ஒரேயொரு நாடு இந்தியா மட்டுமே! அதே வேளை, இதுவரையில் பிராந்திய விவகாரமாக மட்டுமே சுருங்கியிருந்த 13வது திருத்தச்சட்ட விவகாரம், தற்போது, சர்வதேச அரங்கிலும் பேசுபொருளாகிவிட்டது. இதன் பாரதூரத்தை அரசாங்கம் உணர்ந்திருக்கின்றதா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. ஜெனிவா பிரேரணையில் 13வது திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்டிருப்பதன் மூலம், ஒரு விடயம் மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது, அரசியல் யாப்பில் இருக்கின்ற விடயங்களை கூட இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை – அது அமுல்படுத்தப்பட வேண்டும். ஒரு வேளை அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை நீக்க முற்பட்டால் கூட, அதற்கு பதிலாக புதிய ஒன்றை முன்வைக்க வேண்டிய நிர்பந்தத்தை இவ்வாறான அழுத்தங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. இவைகள் தமிழர்களுக்கு சாதகமான விடயங்கள்தான்.
ஆனால் தமிழர் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதவாது, தமிழர்களை மட்டும் முன்வைத்து எந்தவொரு விடயமும் இங்கு இடம்பெறவில்லை. ஆனால் தமிழரும் உள்ளடங்கியிருக்கின்றனர். இவ்வாறான அழுத்தங்களால் ஏற்படும் மாற்றங்கள், தமிழருக்கும் ஓரளவு சாதாகமான வாய்ப்புக்களை தரலாம். வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது, தமிழர்கள் அதனை பயன்படுத்திக் கொள்வதற்கேற்றவாறு, தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த பின்புலத்தில் தமிழர் அரசியல் எதை நோக்கி – என்னும் கேள்விக்கான பதில் – ஒன்றுமட்டுமே. அதாவது, வாய்ப்புக்கள் கிடைக்கலாம் – அது கிடைக்கின்ற போது, தமிழர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவதற்கு தயாராக இருக்க வேண்டும் – அத்துடன் ஒரு வேளை வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால் இருக்கின்ற விடயங்களை உச்சளவில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது மட்டுமே தமிழர் அரசியல் இலக்காக இருக்க வேண்டும். இருப்பது மகாகாண சபை மட்டுமே.