சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோத பதிவுகள்
27 பங்குனி 2021 சனி 08:02 | பார்வைகள் : 9646
சமூக ஊடகமொன்றில் தன்னைப் பற்றி வெளிவந்த பொய்யான செய்தியொன்றினால் மிகவும் அவமானத்தைஉணர்ந்ததாகவும், கவலைக்குள்ளானதாகவும் கூறும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர், அதனை எதிர்கொள்வதற்கு -தான் கடுமையான சவால்களைசந்தித்ததாகவும் கூறுகின்றார்.
அவர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர். கடந்த வருடம் அவரின் படத்துடன் 'பேஸ்புக்' இல் பொய்யான தகவவொன்று வெளியாகியுள்ளது. போலிக் கணக்கு ஒன்றினூடாகவே அந்த பொய்த் தகவல் பதியப்பட்டிருந்ததாக அவர் கூறுகின்றார்.
"மேசன் தொழிலாளி ஒருவர் எழுதுவது போன்று அந்த தகவல் பதியப்பட்டிருந்தது. அந்த நபர் எனது வீட்டில் கட்டட நிர்மாண வேலை செய்ததாகவும், அந்த வேலைக்குரிய கொடுப்பனவில் ஒரு தொகையை நான் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது” என்கிறார் அந்த வர்த்தகர்.
"அதைப் பார்த்த எனது நண்பர்களும், என்னைத் தெரிந்தவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினார்கள்.
அந்தத் தகவலை நான் பார்த்த போது, அதை ஏராளமானோர் 'ஷெயார்' செய்திருந்தார்கள். பலர் எனக்கு எதிராக மோசமான கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். அந்தத் தகவலின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமலேயே, பலர் அதனை நம்பியிருந்தனர்” என அவர் கவலையுடன் பேசினார்.
"பொய்யான அந்தத் தகவலில் இருந்த - பெரும் ஆபத்து என்னவென்றால், தமிழர் ஒருவரின் பெயரில் திறக்கப்பட்டிருந்த கணக்கிலேயே என்னைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. தமிழரான மேசன் தொழிலாளி ஒருவரை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நான் ஏமாற்றி விட்டதாக, அந்தச் தகவலின் கீழ், சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். என் மீது குரோதம் கொண்டு எழுதப்பட்டிருந்த அந்தப் பொய்ச் செய்தி, இனங்களிடையே கசப்பினை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது" என்று அவர் விபரித்தார்.
சமூக ஊடகங்கள் நல்ல விடயங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அதேவேளை, தவறான காரியங்களுக்காகவும் உபயோகிக்கப்படுகின்றன. குறிப்பாக, போலிச் செய்திகளைப் பரப்புவதற்காகவும், குரோத பதிவுகளை வெளியிடுவதற்காகவும் சமூக ஊடகங்களை சிலர் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறான போலிச் செய்திகள் மற்றும் குரோதப் பதிவுகள் - தனிநபர்கள் மீதும், சமூகங்களிடையேயும் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகவும் மோசமானவையாகும். இவற்றை எதிர்கொள்வதும் பொதுவாக சிக்கலுக்குரிதாக உள்ளது.
இணையத்தின் ஊடாக ஒருவர் கேலி செய்யப்படுதல், மிரட்டப்படுதல், அச்சுறுத்தப்படுதல், பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுதல் மற்றும் கட்டாயப்படுத்தப்படுதல் போன்றவை 'இணைய வன்முறை' அல்லது 'சுரண்டல்' எனப்படுகிறது. தனிப்பட்ட படங்கள் அல்லது வீடியோக்கள், கேலிப்படங்கள், தொகுத்து அமைக்கப்பட்ட படங்கள் போன்றவற்றினை அனுமதி இல்லாமல் வெளியிடுவதும் இணைய வன்முறையாகவே கருதப்படுகிறது.
அந்த வகையில், மேற்சொன்ன வர்த்தகர், இணைய வன்முறைக்கு ஆளாகியுள்ளார். தன்னைப் பற்றிய பொய்யான தகவல் 'பேஸ்புக்' இல் வெளியானதை அடுத்து, சில நாட்கள் அவமானத்தால் - தான் சோர்வுற்றிருந்ததாகவும், இதை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் தடுமாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மட்டுமன்றி இணைய வன்முறைக்குள்ளாவோரில் பெரும்பாலானோர் உளரீதியாகப் பாதிக்கப்படுவதோடு, அந்த சம்பவங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்திருக்கின்றனர் என்பதை, பாதிக்கப்பட்டோரின் அனுபவங்களினூடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இந்த நிலையில், "இணைய வன்முறைகளை எதிர்கொள்தல் மற்றும் அவற்றிலிருந்து மீள்தல் போன்ற விடயங்களில், ஒவ்வொரு தனிநபரிடத்திலும் காணப்படும் 'சமாளிக்கும் அல்லது முகம்கொடுக்கும் திறன்' (Coping Skill) பெரிதும் ஆதிக்கம் செலுத்துகிறது” என்கிறார் மனநல வைத்தியர் யூ.எல். சறாப்டீன்.
"சில விடயங்களை நம்மால் மாற்ற முடியாது. மாற்ற முடியாதவற்றில் சில விரும்பத்தகாத விடயங்களை நாம் எதிர்கொள்கிறோம். அவற்றுக்காக வருந்திக் கொண்டேயிருக்க முடியாது. அவற்றினை நாம் துணிவுடன் கடந்து விட வேண்டும் அல்லது அதனுடன் வாழப் பழக வேண்டும். அதற்கான மனநிலையை நமக்குள் வளர்த்துக் கொள்தல் அவசியமமாகும். அதைத்தான் 'முகம்கொடுக்கும் திறன்' (Coping Skill) என்கிறோம். அதேபோன்று மாற்றக் கூடிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உரிமையும் நமக்கு உண்டு. ஒருவரிடமுள்ள முகம்கொடுக்கும் அல்லது சமாளிக்கும் திறனை வளர்த்து விடுவதில் அவரின் எதிர்த் தரப்புக்கு முக்கிய பங்கு உள்ளது” என்று டொக்டர் சறாப்டீன் விளக்கினார்.
சமூக ஊடகங்களில் வன்முறைக்கு உள்ளாவோரும், அவ்வாறான நிலைமைகளை சிறந்த முறையில் 'எதிர்கொள்வதற்கு, தம்மிடமுள்ள 'சமாளிக்கும் திறனை' (Coping skill) வளர்த்துக் கொள்தல் வேண்டும்” என்கிறார் மனநல வைத்தியர் சறாப்டீன்.
நம்மைப் பற்றி குரோதமான அல்லது வெறுப்பான கருத்துக்களை வெளியிடுபவர், அதன் மூலம் நம்மை தனிமைப்படுத்த அல்லது ஒதுக்கி வைக்க முற்படுகின்றார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நபரொருவர் சமூகமொன்றிலிருந்து ஒதுக்கப்படும் போது, அந்த நிலைமை அவருக்கு மனச்சோர்வை அல்லது மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
எனவே, குரோதமான அல்லது வெறுப்பான கருத்துக்களை எதிர்கொள்வோர், அதனை வெளியிடுகின்றவரிடம் பதிந்துள்ள - தன்னைப் பற்றிய தப்பான அபிப்பிராயத்தைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். தன்னைப் பற்றி வெளியிடப்பட்டுள்ள குரோதக் கருத்துக்கு மூல காரணமான, தப்பபிப்பிராயங்கள் குறித்து - நாகரிகமாக விளங்கப்படுத்துதல் வேண்டும்" எனவும் டொக்டர் சராப்டீன் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் மற்றும் குரோதக் கருத்துக்களால் பாதிக்கப்படுவோரில் கணிசமானோர், அவற்றுக்கு எதிராக, எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அறியாமலுள்ளனர். அதேவேளை சட்ட நடவடிக்கை எடுப்பதிலுள்ள சிரமம் குறித்தும் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.
கல்முனையைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர், தனக்கு அவமானத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் தொகுத்து அமைக்கப்பட்டு 'பேஸ்புக்' இல் வெளியிடப்பட்ட படம் தொடர்பாக, பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற போது, ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
"இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவருடன் நான் எடுத்துக் கொண்ட படமொன்றில், தூதுவரின் உருவத்தை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக வேறொரு நபரின் உருவத்தை இணைத்து - தொகுத்தமைக்கப்பட்ட படமொன்றை, உள்ளூர் அரசியல்வாதியொருவர் அவரின் 'பேஸ்புக்' பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
'பேஸ்புக்' இல் வெளியான அந்தப் படம் 'தொகுத்து அமைக்கப்பட்டது' என்பதை அறியாத பலர், குறித்த நபருடன் இணைந்து நான் படம் எடுத்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டு, அந்த நபரை மட்டுமன்றி என்னையும் சேர்த்து திட்டினார்கள். என்னை கொல்ல வேண்டும் என அந்தப் படத்தின் கீழ் சிலர் கருத்திட்டிருந்தனர். அதனால், நான் பெரும் அவமானத்துக்குள்ளானதோடு, அது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றேன். அப்போது, என்னை அலைக்கழிக்கும் வகையில் பொலிஸார் நடந்து கொண்ட பின்னர்தான் முறைப்பாட்டைப் ஏற்றுக் கொண்டனர். பின்னர் இது தொடர்பில் கொழும்புக்குச் சென்று முறையிடுமாறும் கூறினர். அதற்கு நான் விரும்பவில்லை.
என்னை அவமானப்படுத்தும் வகையிலும் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் ஒருவர் எனது படத்தை தொகுத்து அமைத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்காக நியாயம் தேடி எனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து, கொழும்புக்கு நான் செல்ல வேண்டும் என்பது -என்ன வகை நியாயம் என்று எனக்குப் புரியவேயில்லை” என அவர் அலுத்துக் கொண்டார்.
உண்மையில் இணைய வன்முறைக்குள்ளாவோர் சட்ட ரீதியான நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதென்பது அத்தனை கடினமான காரியம்தானா என்பது குறித்தும், போலிச் செய்தி மற்றும் குரோத கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் இடம் கேட்ட போது...
"சமூக ஊடகங்களில் குற்றம் புரிந்தார் எனும் அடிப்படையில், ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை” என்கிறார் அவர்.
"போலிச் செய்தியொன்றை சமூக ஊடகங்களில் ஒருவர் பரப்புவாராயின், அந்த செய்தியின் உள்ளடக்கத்தின் அடிப்படையில், செய்தியை வெளியிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.
உதாரணமாக தேர்தல் காலத்தில் தேர்தல் தொடர்பில் போலிச் செய்தியொன்றை வெளியிட்டால், தேர்தல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், நீதித்துறை தொடர்பில் ஒருவர் போலியான செய்தியை வெளியிட்டால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் விளக்கினார்.
போலியான செய்தியொன்றினால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகி, கலவரம் ஒன்று ஏற்படும் சூழலொன்று ஏற்பட்டால் அந்தச் செய்தியை வெளியிட்ட நபருக்கு எதிராக, 'இன ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவித்தமை' மற்றும் 'கலவரத்தை ஏற்படுத்தியமை' ஆகிய குற்றங்களுக்காக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டத்தின் (ICCPR) கீழ், நடவடிக்கை எடுக்க முடியும்.
போலிச் செய்தியொன்று நபரொருவரை அச்சுறுத்தம் வகையில் அமைந்திருந்தால், அந்தச் செய்தியை வெளியிட்டவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ், 'குற்றமுறை அச்சுறுத்தல்' எனும் அடிப்படையில் வழக்குத் தொடர முடியும்.
இவ்வாறான செயற்பாடுகள் அல்லாமல் ஒரு நபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தியொன்று வெளியிடப்பட்டால், அதற்கு எதிராக சிவில் சட்டத்தின் கீழ் 'மான நஷ்ட வழக்குத் தொடரலாம்.
கிராமத்திலுள்ள ஒருவர் - இணைய வன்முறைக்கு ஆளாகும் போது, அதனை முறைப்பாடு செய்வதற்காக கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்பது, கஷ்டமான விடயம் எனவும் சட்டத்தரணி பஹீஜ் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதோடு, அவற்றில் வெளியிடப்படும் போலிச் செய்தி மற்றும் குரோதக் கருத்துக்களால் பாதிக்கப்படுவோர் அவற்றினை எதிர்கொள்ளும் வகையிலான திறன்களை வளர்த்துக் கொள்தலும் அவசியமாகும்.