Paristamil Navigation Paristamil advert login

சூழலின் நண்பனான வௌவால் இன்று மனிதனின் முதல் விரோதி!

சூழலின் நண்பனான வௌவால் இன்று மனிதனின் முதல் விரோதி!

13 மாசி 2021 சனி 06:02 | பார்வைகள் : 9371


இன்றைய நவீன அறிவியல் உலகில் முழு உலகுக்குமே கொவிட் 19 தொற்று பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. 2019 டிசம்பர் இறுதிப் பகுதியில் சீனாவில் தோற்றம் பெற்ற இத்தொற்று குறுகிய காலப் பகுதிக்குள் உலகெங்கிலும் பரவியதோடு, ஒரு வருட காலத்திற்குள் 10 கோடிக்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளதோடு, 23 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

 
அந்த வகையில் இலங்கையிலும் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பாதித்து, 360க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்கும் இத்தொற்று காரணமாகியுள்ளது. இன்னும் கூட அதன் கோரத் தாண்டவம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
 
இதேவேளை இத்தொற்றானது உலகின் சமூக, பொருளாதார மற்றும் இயல்பு நிலைப் பாதிப்புகளுக்கும் மனிதனின் நடத்தை பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படவும் காரணமாகிப் போயுள்ளது. இவ்வாறான நிலையில், கொவிட்19 தொற்று உலகின் பல்வேறு மட்டங்களதும் தீவிர அவதானத்தைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக இத்தொற்றின் ஆரம்பம் (மூலம்) குறித்த ஆராய்ச்சிகள் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
 
அந்த வகையில் இத்தொற்று முதன் முதலில் பதிவாகத் தொடங்கிய சீன நாட்டின் வுஹான் நகருக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் துறைசார் நிபுணர்கள் குழுவினர் அண்மையில் நேரில் விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
 
கொவிட்19 தொற்றானது மனிதனின் உருவாக்கம் என்ற முரண்பாடான கருத்தொன்றும் நிலவுகின்ற அதேநேரம், இவ்வைரஸ் பாலூட்டி விலங்கான வௌவாலில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து ஆரம்பம் முதல் காணப்படுகின்றது.
 
இதேவேளை, பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில், 'கொவிட்19 தொற்று வௌவாலில் இருந்து மனிதனுக்கு தொற்றுவதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய பங்களித்திருக்க கூடும்’ என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
 
கடந்த நூறு வருடங்களில் வெப்பநிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பல வௌவால் இனங்களின் இடம்பெயர்வு குறித்து இந்நிபுணர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்கள் இக்கருத்தை முன்வைத்திருக்கின்றனர்.
 
அதேநேரம், தற்போது உலகிற்கு பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட்19 தொற்று தோற்றம் பெறுவதற்கு முன்னர், அதாவது 2003 இல் சீனாவில் சார்ஸ் நோய் பரவிய காலப் பகுதியில் சுமார் 40 வௌவால் இனங்கள் சீனா, லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
இவ்வாறு கொவிட்19 தொற்று வௌவாலில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் சந்தேகமும் பலமாகவே காணப்படுகின்றன.
 
உலகில் எத்தனையோ விதமான உயிரினங்கள் காணப்பட்ட போதிலும், வெளவாலில் இருந்து கொவிட்19 தொற்று மனிதனுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவக் காரணம் என்ன என்ற கேள்வி பலர் மத்தியில் நிலவுகின்றது.
 
வெளவால் பறக்கக் கூடிய ஒரு பாலூட்டி உயிரினம் என்றாலும் அது கூடு கட்டத் தெரியாத குட்டி ஈனும் விலங்காகும். உலகில் காணப்படும் பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். வட மற்றும் தென் துருவங்களையும் சில தீவுகளையும் தவிர உலகின் எல்லாக் கண்டங்களிலும், நாடுகளிலும் காணப்படும் இந்த உயிரினத்தில் 1300 க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன.
 
வௌவால்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தேன், பழங்கள் மற்றும் மகரந்தம் என்பவற்றை உணவாகக் கொள்ளும். மற்றையது பூச்சிகளை உண்ணும். அதேநேரம் விலங்குகளில் இருந்து இரத்தம் குடிக்கும் ஓரிரு வௌவால் இனங்கள் தென்னமெரிக்கக் காடுகளில் காணப்படுவதையும் மறந்து விட முடியாது.
 
 
மேலும் வெளவால்களில் சில இனங்கள் மரங்களிலும், இன்னும் சில இனங்கள் குகைகளிலும், பழைய கட்டடங்களிலும், வழிபாட்டுக் கட்டங்களிலும் வாழக் கூடியனவாக உள்ளன. பொதுவாகக் கூட்டம் கூட்டமாக வாழக் கூடிய பண்பைக் கொண்டுள்ள இந்த உயிரினம், சுமார் 30 வருடங்கள் உயிர் வாழக் கூடியதாக விளங்குகின்றது.
 
சில நாடுகளில் வௌவால்களை வேட்டையாடி இறைச்சியாக உட்கொள்ளும் மக்களும் உள்ளனர்.
 
பல்வேறான பண்புகளைக் கொண்டிருக்கும் வெளவால் மனிதனுக்கு நன்மைகள் செய்யக் கூடிய உயிரியாகவும் விளங்குகின்றது. குறிப்பாக தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, தாவரங்களின் இனப் பரம்பல் என்பவற்றுக்கு வௌவால்கள் பெரும் பங்களிப்பு நல்குகின்றன. அவற்றின் எச்சம் விவசாயத்துக்குப் பயன்படுத்தக் கூடிய சிறந்த இயற்கைப் பசளையாகவும் விளங்குகின்றது. அத்தோடு விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியையும் கூட அவை செய்கின்றன.
 
இவை இவ்வாறிருக்க, 'இன்றைய நவீன மருத்துவ அறிவியல் உலகில் வௌவால்களில் இருந்து நிறைய புரதங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் புரதம் மனிதனின் இதயநோய் மருந்துக்கும் பயன்படுத்தப்படுகின்றது' என்று தமிழ்நாட்டில் வௌவால்கள் தொடர்பில் ஆய்வு செய்து கலாநிதி பட்டம் பெற்றுள்ள பிரவீன் குமார் தெரிவித்திருக்கின்றார்.
 
இவ்வாறான நிலையில், வௌவால்களில் காணப்படும் நோய்க் கிருமிகள் மனிதனுக்கு கடத்தப்படுகின்றன என்ற கருத்து அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.
 
அந்த வகையில் 1998 இல் மலேசியாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் ஒருவகை வௌவால் இனத்திலிருந்துதான் மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. குறிப்பாக இவ்வௌவால் இனத்தின் உமிழ்நீர், சிறுநீர் என்பவற்றில் இவ்வைரஸ் காணப்பட்டமையை நீண்ட ஆராய்ச்சிகளின் ஊடாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எனினும் பன்றியின் ஊடாகவே இவ்வைரஸ் மனிதனுக்கு கடத்தப்பட்டிருக்கின்றது என்பதுதான் மருத்துவ விஞ்ஞான உலகின் நம்பிக்கையாக உள்ளது. அதன் காரணத்தினால் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பெருந்தொகையான பன்றிகள் அக்காலப் பகுதியில் கொன்றொழிக்கப்பட்டன.
 
அதேநேரம் 2003 இல் சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ், குகைகளில் காணப்படும் ஒருவகை வௌவால் இனத்தில் காணப்பட்டதை சுமார் 15 வருட கால ஆராய்ச்சியின் பின்னர் சீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த வைரஸ் அந்நாட்டில் காணப்படும் மரநாய் போன்ற விலங்கொன்றின் ஊடாகவே மனிதனுக்கு கடத்தப்பட்டிருக்க முடியும் என விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
 
மேலும் விசர் நாய்க்கடிக்கு மூல காரணியாக விளங்கும் ரேபிஸ் வைரஸ் கறுப்பு பழ வௌவால் என்றழைக்கப்படும் வௌவால் இனத்தில் காணப்படுவதை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். அதாவது அண்மையில் கண்டறியப்பட்ட ஹென்ட்ரா வைரஸ் தொடர்பிலான தேசிய கண்காணிப்புத் திட்டம் 1995 ஜனவரியில் முன்னெடுக்கப்பட்ட போதே, இந்த ரேபிஸ் வைரஸை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
 
இதேவேளை ஆபிரிக்கக் கண்டத்தின் சில நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் எபொலா வைரஸ் 1976 இல் முதன் முதலில் மனிதர்களை தாக்கத் தொடங்கியது. அந்த வைரஸும் வௌவாலில் இருந்து மான், சின்பன்சி போன்ற வன விலங்குகள் ஊடாக மனிதனுக்கு கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மூன்று வகையான பழந்தின்னி வௌவால்கள் எவ்வித நோய்த் தாக்கத்திற்கும் உள்ளாகாமல் இந்த வைரஸின் காவியாகக் காணப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
 
இற்றை வரையும் வௌவாலில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ள வைரஸுகளின் தாக்கம் பிரதானமாக சுவாசத் தொகுதியை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலையில் தற்போது உலகிற்கு சவாலாக விளங்கும் கொவிட்19 வைரஸின் தாக்கமும் சுவாசத் தொகுதியை அடிப்படையாகக் கொண்டதாகவே விளங்குகின்றது.
 
இவ்வாறான ஆய்வின் வெளிப்பாடாக இந்திய மருத்துவப் பேராசிரியர் டொக்டர் முத்து செல்வகுமார், 'வௌவாலின் உடலில் 200 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் காணப்படுகின்றன. அவற்றில் 60க்கும் மேற்பட்டவை மனிதனைப் பாதிக்கக் கூடியவை' என்றும், 'நிபா வைரஸ், எபொலா வைரஸ், சார்ஸ் வைரஸ், மேர்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ், எபோலா வைரஸ், ரேபிஸ் வைரஸ் அவற்றில் சுட்டிக்காட்டத்தக்க வைரஸ்கள்’ என்றும் கூறியுள்ளார்.
 
எனினும் இவ்வைரஸ்கள் எல்லா வௌவால்களிலும் காணப்படுபவை அல்ல. அவ்வைரஸ்களால் வௌவால்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதுமில்லை. ஆனால் மனிதனுக்கு தொற்றினால் பாதிப்புகள் ஏற்படும் என்றும் பேராசிரியர் முத்து செல்வகுமார் குறிப்பிட்டிருக்கின்றார்.
 
பொதுவாக வெளவால்களில் காணப்படும் வைரஸ்கள் வெளிப்படுமாயின் அவை காட்டு விலங்குகளுக்கும் வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கும்தான் முதலில் தொற்றும். அத்தோடு பறவைகளுக்கும் ஊர்வனவுக்கும் கூட தொற்ற முடியும். இவற்றின் ஊடாக இவ்வைரஸ்கள் மனிதனுக்கு கடத்தப்படலாம். சில சமயம் வெளவால் கடிப்பதாலோ அல்லது அதன் சிறுநீர், இரத்தம், எச்சம் ஊடாகவோ கூட மனிதனுக்கு அதன் ஊடலிலுள்ள வைரஸ்கள் தொற்ற வாய்ப்பு உள்ளது.
 
ஆகவே மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகள் பயக்கும் வௌவால் நோய்க் கிருமிகளின் இருப்பிடமாக விளங்குவதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் எல்லா வௌவால்களிலும் இவ்வைரஸ்கள் காணப்படுவதில்லை. அத்தோடு வௌவால்களில் காணப்படும் வைரஸ்கள் நேரடியாக மனிதனுக்கு கடத்தப்படுவதை ஆராய்ச்சி ரீதியில் உறுதிப்படுத்தும் சான்றுகளும் இன்னும் இல்லை.
 
அவற்றில் காணப்படும் வைரஸ்கள் ஏதாவதொரு விலங்கு அல்லது உயிரினத்தின் ஊடாகவே மனிதனுக்கு கடத்தப்பட்டிருக்கின்றன. அதனால் வௌவால்கள் மற்றும் காட்டு விலங்குகள், வீட்டு வளர்ப்பு உயிரினங்கள் தொடர்பில் முன்னவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுவதே ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்கும்.
 
நன்றி - தினகரன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்