ஜோ பைடன் நிருவாகம் இலங்கையை எப்படி கையாளப் போகின்றது?
30 தை 2021 சனி 08:23 | பார்வைகள் : 9449
இதுவரை உலகப் பொலிஸ்காரனாக செயல்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்கா, ட்ரம்ப் நடவடிக்கைகளின் மூலம் உலக நாடுகளைத் தட்டிக் கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த பின்னணியில் அங்கு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் புதிதாகப் பதவியேற்கின்றார் என்றால் அது மாபெரும் விழாவாகவும் தனது வல்லமையை உலகிற்கு கட்சிப்படுத்துகின்ற ஒரு வைபவமாகவும் உலகிற்கு காட்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை அது அப்படி அமையவில்லை.
அதற்குப் பிரதான காரணம் ட்ரம்ப் ஆதரவு காடையர்கள் சில தினங்களுக்கு முன்னர் நடத்திய அராஜகமாகும். அடுத்து இன்று உலகில் தனது செல்வாக்கை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல். முதலில் ரயில் பயணியாக வந்தே ஜோ பைடன் பதவிப்பிரமாணம் செய்வதாக ஏற்பாடுகள் இருந்தது. பின் அந்த ஒழுங்கு மாற்றப்பட்டது. ஓர் யுத்த களத்தில் இருந்து புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பது போல்தான் இந்தமுறை தெரிந்தது. அங்கு தெருக்களில் ஆரவாரிக்கும் மக்கள் கூட்டத்துக்குப் பதில் படையினரே குவிக்கப்பட்டிருந்தனர். அதிலும் இந்த படையினர் நம்பிக்கைக்கு உரியவர்களா என்று ஒரு அச்சமும் பயமும் இருந்தது.
இதற்குக் காரணம் அண்மையில் நடந்த வன்முறைகளின் போது இனவெறி பிடித்த படையினர் பலர் அதில் பங்கு கொண்டு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இது பைடன் பதவிக்காலம் முழுவதிலும் ஒரு அச்சுறுத்தலாக இருக்க முடியும் என்று நாம் கருதுகின்றோம். ட்ரம்ப் காலத்தில் அமெரிக்காவில் ஒரு இன வெறி வளர்க்கப்பட்டு விட்டது எனவும் நாம் எண்ணுக்கின்றோம். ட்ரம்ப் ஒரு மன நோயாளி போல் நிருவாகத்தை நடாத்தியதால் சர்வதேச மட்டத்தில் அமெரிக்கா அரசியல், பொருளாதார, இராணுவ மட்டங்களில் தனது நல்லெண்ணத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றது.
மரத்தால் விழுந்தவனை மாடு மோதியது போல் கொரோனாவும் அமெரிக்காவுக்கு மரண அடியைக் கொடுத்திருக்கின்றது.
பலயீனமான ட்ரம்ப் நிருவாகத்தை பாவித்து சீனா இன்னும் சில வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் முதலிடத்தைப் பிடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் பின்னணியில் இன்று அமெரிக்காவுக்கு ஜோ பைடன் ஜனாதிபதியாகி விட்டார். பதவியேற்க முன்னர் அவர் தனது தேர்தல் பரப்புரைகளின் போது தெரிவித்த கருத்துக்களும் அவரால் பதவிக்கு அமர்த்துபவர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் பைடன் நிருவாகத்தில் அமெரிக்காவின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்த நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. அநேகமாக பைடன் நிருவாகத்தில் ஒபாமா காலத்தில் இருந்த அதிகாரிகள் நிறையவே இடம்பெற்றிருக்கின்றார்கள்.
பைடன் நிருவாகத்தை ஒபாமாவின் மூன்றாவது பதவிக்காலமாக நாம் பார்த்தாலும் அதில் தவறுகள் இருக்காது என்று எதிர்பார்க்க முடியும். சீனா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருவாகம் மென்போக்குடன் பயணிக்க முனைகின்றது. இதுவரை இஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. இன்று இந்தப் பிள்ளைக்கும் ஒரு கலக்கம். காரணம் அவர்கள் கடைசிவரை ட்ரம்பை நம்பி இருந்தார்கள். சவுதிக்கும் புதிய அமெரிக்க நிருவாகத்தின் மீது ஒரு நல்லெண்ணம் கிடையாது. இது வரை ட்ரம்ப் ஈரானுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு வந்தார். அது அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் பலவும் ட்ரம்ப் செயல்பாடுகளினால் விரக்தியில் இருந்தது. இப்போது அதனை சரி செய்ய வேண்டிய தேவை ஜோ பைடனுக்கு இருக்கின்றது.
மீண்டும் நேட்டோவை உலகில் பலமிக்க சக்தியாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை பைடனுக்கு இருக்கின்றது. இப்படி பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பைடன் அமெரிக்காவுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். பதவியேற்பு வைபவத்தில் அமெரிக்க மக்களுக்கு அவர் நம்பிக்கைகள் பலவற்றையும் வழங்கியதோடு, நாடு எதிர்நோக்கின்ற சவால்கள் பற்றியும் பேசி இருந்தார். அனைவருக்கும் சம உரிமை, போரற்ற உலகம், தமது சரிவுகளைச் சரிசெய்வது, நமது நேசநாடுகளின் உறவுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்புவது போன்ற கதைகளை அவர் அங்கு பேசி இருந்தார்.
சர்வதேச விவகாரங்களும் அவர்களது உள்வீட்டுப் பிரச்சினைகளும் அப்படி இருக்க புதிய அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருவாகம் இலங்கையுடன் எப்படிக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய முடியும் என்று இப்போது பார்ப்போம். அதற்கு முன்னர் சமகாலத்தில் இலங்கை அரசியல் களத்தை சற்று நோக்க வேண்டி இருக்கின்றது. ஆளும் தரப்புக்குள் கடும் போக்கு இனவாதிகளுக்கும் மென்போக்காளர்களுக்குமிடையில் பனிபோரொன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதில் பல இடங்களில் கடும் போக்காளர்கள் மூக்குடைபட்டாலும் அவர்களது மூர்க்கத்தனங்களை அந்தக் குழு கைவிடுவதற்குத் தயார் இல்லை என்ற நிலை. ஏதோ செல்வம் கொழிக்கின்ற ஒரு நாட்டை நிருவகிக்கின்றார்கள் போல்தான் அவர்கள் நடந்து கொண்டு வருகின்றார்கள்.
அவர்களுக்கு பக்கத்து நாடுகளைப் பற்றியோ சர்வதேசத்தைப் பற்றியோ எந்தக் கவலைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெனிவா 46 வது அமர்வுக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை எந்தவகையிலும் தயாரில்லை. அது எந்த திருத்தங்களுடன் வந்தாலும் நாம் அதனை ஏற்கமாட்டோம் என்று அடித்துக் கூறுகின்றது அரசு. மேலும் மூன்று தமிழ் கட்சிகளும் சமர்ப்பிக்கின்ற பிரேரணைகளை ஐ.நாவும் மனித உரிமைகள் அமைப்பும் தூக்கி எறிய வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. நமது பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு இந்த மூத்த அரசியல்வாதிகள் செய்கின்ற வேலையை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அரசாங்கம் கூறுகின்றது. நாம் இதுவரை யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. எனவே எமக்கும் எவரும் தொந்தரவுகள் கொடுக்க முனையக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கேட்டுக் கொண்டிருக்கின்றார். அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு மிகவும் விசுவாசமான அமைச்சர் சரத் வீரசேகர முன்மொழிந்திருக்கின்றார்.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும் ஒன்பது இலட்சம் ரூபாய் கடன் செலுத்த வேண்டி இருக்கின்ற அரசாங்கத்துக்கு, இராணுவ பயிற்சி வழங்க எங்கிருந்து பணம் வருகின்றதோ தெரியாது. ஒருவருக்கு பயிற்சி வழங்க ஏழு இலட்சம் மூபாய் வரை தேவைப்படுகின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க தெரிவிக்கின்றார். இவை கடும்போக்கு பௌத்தர்களின் சிந்தனையில் இருந்து வளர்க்கப்பட்ட கருத்துக்கள். மியான்மாரில் பௌத்த துறவிகளும் ஆயுதப் பயிற்சி பெற்ற நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றது. இது முற்றிலும் பௌத்த தர்மத்துக்கு முரணான சிந்தனையாகும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பு விவகாரத்தில் மூக்குடைபட்டவர்கள் இப்போது வடக்கு, கிழக்கில் சிறுபான்மை மக்களின் காணிகளையும் விளைச்சல் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு பௌத்த புனித தளங்களைப் பாதுகாத்தல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். அது ஹொங்கொங்கில் சீனா தனது ஆதிக்கத்தை கைப்பற்றியது போல் ஒரு கதையாகவே போய் கொண்டிருக்கின்றது. சர்வதேச அமைப்புகளும் உலக நாடுகளும் முஸ்லிம்களின் கொரோனா மரணங்களின் போது இலங்கை கடைப்பிடிக்கின்ற அணுகுமுறை மிகவும் தவறானது என்று அடித்துக் கூறியும் கடும் போக்கு பௌத்த குழுக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அரசு அதனை விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. சில தினங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரே இதுவிடயத்தில் அரசின் நடவடிக்கை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இருந்தார்.
ஒரு வங்குரோத்து நாடாக பல சர்வதேச அமைப்புகள் இலங்கையை அடையாளப்படுத்தி இருக்கின்ற பின்னணியில் இலங்கை எப்படி இவ்வாறு நடந்து கொள்ளமுடியும். இந்தக் கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு டொலரின் விலை உச்சகட்டத்துக்குச் சென்றிருக்கின்றது. தெற்கு-கடுவான வங்கியில் இருந்து ஆளும் தரப்புடன் நெருக்கமானவர் ஒருவர் தனது டி.எச்.குனசேக்கர என்ற நிறுவனத்துக்கு 315 கோடி வங்கி கடன் ஒன்றைக் கோருகின்றார். கடன் கோருவதற்கான காரணம் வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் சிக்கரட் விலை அதிகரிக்க இருப்பதால் அதனை வாங்கிப் பதுக்கி வைத்து அதில் கிடைக்கும் இலாபத்தில் கடனைச் செலுத்துவதாகவும் அதற்குப் பிணையாக கடன் வாங்குகின்ற நிறுவனம்-நபர் தான் கொள்வனவு செய்யும் சிக்ரட்டை பிணையாக வைக்கின்றார். இதற்கு அனைத்து மட்ட அதிகாரிகளும் அங்கிகாரம் கொடுக்க ஒரு பணிப்பாளர் இது சட்டவிரோதமான வேலை என்று குறிப்பை பதிந்து தனது எதிர்ப்பை காட்டினாலும் இந்த கடன் வழங்கப்படுகின்றது.
இந்த வங்கிக் கொள்ளையை அண்மையில் ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி இருந்ததுடன், இது விடயத்தில் நிதி அமைச்சு விளக்கம் தர வேண்டும் எனவும் கோரி இருக்கின்றார். இதனால் அரசுக்கு வர வேண்டிய பெரும் தொகையான வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட ஏற்பாடுகள் நடந்து முடிந்திருக்கின்றன. நிதி அமைச்சில் உள்ள உயர் மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் கொடுத்த தகவலை மையமாக வைத்து இந்தப் பணம் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால் தகவல்படி சிகரட் விலை உயராததால் கடன் பெற்றவருக்கு இப்போது பணத்தை திருப்பி செலுத்துவதில் சிக்கல். இதுவும் மிகச்சிறிய ஒரு வட்டிவீதத்தில் இந்தக் கடனை வழங்கி இருக்கின்றது.
அரசு பணம் அச்சடித்து நாட்டில் வங்குரோத்து நிலையை மேலும் அதிகரிக்கப் போகின்றது. ஆனால் வெளிநாடுகளுக்கு செலுத்து வேண்டிய கடன்களை டொலரில் செழுத்த வேண்டும். அதனை எப்படி செய்வது.? உத்தேச வருவாயை விடக் கடன் தொகை மிகையாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நாடு வெளிநாடுகளிடம் பணம் கேட்டு வருகின்ற போது சிறுபான்மைக்கு எதிரான அடக்கு முறையில் இந்த அரசு முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது.
சீனாவுடன் ஒப்பு நோக்குகின்ற போது இலங்கை ஆதிக்கப் போட்டியில் அமெரிக்கா மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. பக்கத்தில் இருக்கின்ற இந்தியாவை வைத்துத்தான் இது விடயத்தில் ஏதும் காரியம் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியா கூட இது விடயத்தில் எந்தளவு சாதிக்க முடியும் என்று தெளிவில்லாத நிலை இருக்கின்றது. இலங்கை விவகாரத்தில் சீனா அதன் பலயீனத்தை உச்ச நிலையில் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதித்து வருகின்றது. இவ்வாறான பின்னணியில் புதிய அமெரிக்க அதிபர் இலங்கைக்கு எந்தளவுக்கு மூக்கு கயிறு போட முடியும் என்று தெரியவில்லை.
ஆனால் பைடன் நிருவாகத்தில் வெளிவிவகாரத்துக்குப் பொறுப்பாக வருகின்ற சமந்தா பவருக்கு நமது ஜனாதிபதி ஜீ.ஆர். தொடர்பில் எந்தளவு புரிதல் இருக்கின்றது என்பதில் நமக்கு நிறையவே குழப்பங்கள் இருக்கின்றன. தற்போதய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது அவருக்கு நன்கு பரீட்சயமானவர். அந்தக் காலத்து உறவுகள் தொடர்பில் திருப்தி இல்லாத நிலை என்பதுதான் எமது கருத்து. யாழ். பெற்றோருக்குப் பிறந்த ரோஹினி ரவிந்திரன் கமலா ஹரிசுக்கு வலது கரம் போன்று வெள்ளை மாளிகையில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் ரஸ்யா பலயீனப்பட்டிருந்த போது புட்டின் அங்கு அதிபராக வந்து அந்த நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்தது போல பைடனாலும் மீண்டு அமெரிக்காவை பழைய நிலைக்கு மீட்க முடியும். எனவே இலங்கை போன்ற நாடுகள் ஓரேயடியாக அமெரிக்கா போன்ற ஒரு நாட்டை புறம் தள்ளிவிட்டு கிழட்டு சிங்கம் என்ற எண்ணத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது என்றாலும் இலங்கை விவகாரத்தில் இந்தியா காத்திரமான பங்களிப்பை செய்யாதவரை ஈழத் தமிழர் விவகாரத்தில் நல்லது நடக்க வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. ஆனால் இதில் நம்பிக்கை தருகின்ற செய்தி என்னவென்றால் வடக்கு கிழக்கில் மிகப் பெரிய அரசியல் சக்திகளும் இந்த முறை ஒத்த கருத்துடன் சர்வதேச களத்தை சந்திக்க இருக்கின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்களிடையே ஒருமித்த கருத்துக்கு வராமை பெரும் குறை என்று சொல்லி இருந்தார். நாமும் இதனைத் தொடர்ச்சியாகச் செல்லி வந்திருக்கின்றோம்.
நஜீப் பின் கபூர்- நன்றி -தினக்குரல் இணையம்