Paristamil Navigation Paristamil advert login

ஒரேயொரு எம்.ஜி.ஆர்தான் தமிழகத்துக்கெல்லாம்!

ஒரேயொரு எம்.ஜி.ஆர்தான் தமிழகத்துக்கெல்லாம்!

29 மார்கழி 2020 செவ்வாய் 15:41 | பார்வைகள் : 9174


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து சாதனை படைப்பாரோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியைக் கூட அமைக்காமல் மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி ஆட்சியைப் பிடிப்பது பற்றி பேசி வருகின்ற முதன்முதலான தமிழக திரையுலக நட்சத்திரம் அவரைத் தவிர வேறுயாருமாக இருக்க முடியாது.
 
2021 மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தலில் 'மக்கள் சேவைக் கட்சி' என்ற தனது கட்சி போட்டியிடும் என்று ரஜினிகாந்த் இப்போது அறிவித்திருக்கிறார்.
 
தமிழகத்தில் பிரபலமான நடிகர் எவராவது தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தால் உடனே முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனுடன் ஒப்பீடு செய்யும் வழக்கம் ஒன்று இருக்கிறது. அது எந்தளவுக்கு பொருத்தமானது என்பதைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை.
 
ரஜினிகாந்த தனது அரசியல் கட்சி குறித்து அறிவித்த உடனடியாகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அன்றைய வேளையில் எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட பிறகு, 1972 ஒக்டோபரில் புதிய கட்சி தொடங்கிய நிகழ்வை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் நிவைுபடுத்துவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
 
சில வருடங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் குதித்த வேளையிலும், இதே ஒப்பீட்டையும் நிவைுபடுத்தலையும் பார்த்தோம். கமல்ஹாசனின் கட்சி மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பிறகு மாநிலத்தில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது ரஜினிகாந்தேதான்.
 
ரஜினிகாந்த் கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். எம்.ஜி.ஆர்.1977 ஜூலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் வரை மூன்று தசாப்தங்களாக தமிழத் திரையலகில் கோலோச்சினார். 1987 டிசம்பரில் மரணமடையும் வரை பத்து வருடங்கள் எம்.ஜி.ர் முதலமைச்சராக ஆட்சி செய்தார். கடந்த 24 ஆம் திகதி அவரின் 33 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
 
எம்.ஜி.ஆருக்கும் ரஜினிகாந்துக்கும் இடையில் மேலெழுந்தவாரியான பல ஒற்றுமைகள் இருந்தாலும் கூட, இருவரையும் சமமாக ஒப்பிடுவது பொருத்தமில்லாத ஒன்று. வயது உட்பட இருவருக்கும் இடையில் முக்கியமான பல வேறுபாடுகள் இருக்கின்றன.
 
கடந்த நூற்றாண்டின் 50களில் எம்.ஜி.ஆர் தீவிர அரசியலில் பிரவேசித்தார். 60களில் அவர் சட்டசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 70களில் முதலமைச்சரானார். பத்து வருடங்கள் முதலமைச்சராக பதவியில் இருந்த பிறகு1987 ஆம் ஆண்டில் அவர் மரணமடையும் போது 70 வயது.
 
ஆனால், மறுபுறத்தில் ரஜினிகாந்துக்கு தீவிர அரசில் அனுபவம் எதுவுமில்லை; இதுவரையில் எந்தவொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினராகவும் ஒருபோதும் அவர் இருந்ததில்லை.
 
ரஜினிகாந்த் இவ்வருடம் டிசம்பர் 12ம் திகதி தனது 70வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். ரஜினிகாந்த் கட்சி அரசியலுக்கு புதியவராக தனது 70 வயதில் பிரவேசிக்கும் அதேவேளை, எம்.ஜி.ஆர் பல தசாப்தகால தீவிர அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு தனது 70 வது வயதில் மரணடைந்தார்.
 
ரஜினிகாந்த் ஒரு தமிழரோ அல்லது தென்னிந்தியரோ அல்ல. அதேவேளை, எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி, இலங்கையில் கண்டியில் பிறந்தவர், கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் வளர்ந்த எம்.ஜி.ஆர். ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து முதலமைச்சராகுவதற்கு முன்னர் பல தசாப்தங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்.
 
அது போக, மலையாளம் ஒரு திராவிட மொழி, ரஜினிகாந்த் ஒர திராவிடனும் அல்ல. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மராட்டியர். ஆனால், கர்நாடக மாநிலத்தில் வளர்ந்தவர்.
 
எம்.ஜி.ஆரைப் போன்று ரஜினிகாந்த் தீவிர அரசியல் வாழ்விலோ பொதுவாழ்விலோ பல வருடங்களாக ஈடுபட்டவரும் அல்ல. திரைப்படங்களில் நடிப்பதற்காகவே தமிழகத்துக்கு வந்தவர்.
 
 
சொல்லப் போனால், தமிழக அரசியல் கோலங்களுக்குள் ரஜினிகாந்த் ‘பரசூட் மூலம் இறக்கப்பட்டவர்’.
 
தமிழகத்தைப் பொறுத்த வரை ‘வெளியாளான’ ரஜினிகாந்தும் அவரது ஆன்மீக அரசியலும் திராவிட அரசியலில் ஊறிப் போன மாநிலத்தின் தமிழ்த் தேசியவாத உணர்வுடைய தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பது சந்தேகமே.
 
தமிழ்நாடு மாநிலம் 1967 முதல் திராவிடக் கோட்பாட்டைப் பின்பற்றுகின்ற அரசியல் கட்சிகளினால் ஆளப்பட்டு வருகிறது. திராவிடவாதம் என்பது பொருளாதார அபிவிருத்தி, சமூகநீதி, சமத்துவம், சாதிப் பாகுபாடு ஒழிப்பு, பெண்களின் மேம்பாடு, மதச் சார்பி்ன்மை, பகுத்தறிவுவாதம், சுயமரியாதை, தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் ஒத்துழைப்பு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு மற்றும் தமிழ்த் தேசியவாத உணர்வு ஆகியவற்றை வலியுறுத்துகின்ற ஒரு கோட்பாடாகும்.
 
‘திராவிட அரசியல் கோட்பாடு' தமிழகத்தில் 53 வருடங்களாக கோலோச்சுகிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மாநிலத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது அண்ணா தி.மு.க ஆட்சி செய்கிறது. ஆனால், 2021 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திராவிட பாரம்பரிய பகுத்தறிவுவாதம் மற்றும் சுயமரியாதை இயக்க செல்வாக்கிற்கு மத்தியிலும் கூட, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட அரசியலில் திரையுலக நட்சத்திரங்கள் மேலாதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்த மாநிலம் தமிழ்நாடுதான். 1977 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆர்.தான் இந்திய மாநிலமொன்றின் முதலமைச்சராக வந்த முதல் திரைப்பட நடிகர்.
 
1977 தொடக்கம் 1987 வரை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர், மூன்று தடவைகள் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். அவரது மரணத்துக்குப் பிறகு ஒரு சில மாதங்கள் மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சராக இருந்தார். அவரும் எம்.ஜி.ஆருடன் முன்னர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். பிறகு ஜெயலலிதா ஜெயராம் அண்ணா தி.மு.க.வின் தலைமைத்துவத்துக்கு வந்த முதலமைச்சராக பதவியும் வகித்தார். எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா 28 படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
 
ஜெயலலிதா மொத்தமாக 15 வருடங்கள் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை வகித்தார். 1991,2001, 2011 மற்றும் 2016 சட்டசபைத் தேர்தல்களில் அவர் முதலமைச்சராக தெரிவானார்.
 
"திரைப்பட நடிகராகவும், முதலமைச்சராகவும் இருந்தவர்க ளில் எம்.ஜி.ஆர் மாத்திரமே நடிகையான தனது மனைவியும் நடிகையான துணைவியும் தனக்கு பிறகு முதலமைச்சராக வருவதை உறுதிப்படுத்திச் சென்றவர்" என்று சுவாரஸ்யமாக சொல்லப்படுவதுண்டு.
 
எம்.ஜி.ஆர் மரபு:
 
எம்.ஜி.ஆர் பற்றிய மதிப்புணர்வும் தோற்றப்பாடும் தனித்துவமானவை. அதன் மர்மம் தமிழர்களின் மனங்களில் இன்றும் கூட கோலோச்சுகிறது.
 
அவரது மரணத்துக்கு முன்னர் எம்ஜி.ஆர் சாதாரண மக்களின் அபிலாசைகளை உருவகப்படுத்துபவராக விளங்கி னார். தங்களது அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு மானிட சாதனமாக எம்.ஜி.ஆரை அந்த மக்கள் நோக்கினார்கள். அவர் மரணமடைந்து மூன்று தசாப்தங்களுக்கும் கூடுதலான காலம் கடந்து விட்ட போதிலும், தமிழ்நாட்டில் தேர்தல் கட்டங்களில் எம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னால் போதும், கூட்டத்தினர் பித்துப் பிடித்தவர்கள் போன்று கூச்சலிடுவார்கள். அந்தளவுக்கு வல்லமையும் நிலைபேறும் கொண்டது எம்.ஜி.ஆரின் மரபு.
 
நன்றி
இளஞ்செல்வன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்