10 கார்த்திகை 2020 செவ்வாய் 17:37 | பார்வைகள் : 9592
அண்மையில் கொழும்பிற்கு வியஜம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ – சீனாவின் கம்யூனிஸ் கட்சியை வேட்டையாடும் தன்மைகொண்டது – அதாவது வேடையாடி புசிக்கும் மிருகம் என்று தெரிவித்திருந்தார். பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கட்சிக் கட்டமைப்புக்கள் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இணைய வழி கலந்துரையாடலொன்றை நடத்தியிருக்கின்றனர். மகிந்தவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் தலைமையில் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான சீனத் தூதரகம் ஒழுங்கு செய்திருக்கின்றது. பொம்பியோ கொழும்பில் வைத்து தெரிவித்த கருத்துக்கு சீனா செயலால் பதிலளித்திருக்கின்றது. பொம்பியோ தெளிவாக சீனக் கம்யூனிஸ் கட்சி என்று அழுத்திக் கூறிச் சென்ற பின்னரும் கூட, ஆளும் பொதுஜன பெரமுன கட்சி, சீனக் கம்யூனிஸ் கட்சியுடன் இணைந்து நிகழ்வொன்றை செய்திருக்கிறதென்றால், அதன் பொருள் என்ன?
சீனாவிற்கும் இலங்கைக்கும் பௌத்தம் சார்ந்து நீண்ட தொடர்புண்டு. ஆனால் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கைக்கும் சீனாவிற்குமான ராஜதந்திர உறவு 1950 களுக்கு பின்னர்தான் துளிர்விட்டது. 1952இல் மேற்கொள்ளப்பட்ட றப்பர்-அரிசி உடன்பாடு (Ceylon-China Rubber-Rice Pact) இதில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. கொழும்பிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் ராஜதந்திரரீதியான உறவுகள் இருந்தாலும் கூட, சீனா இலங்கையர்கள் மத்தியில் முக்கியமானதொரு நாடாக கருதப்படவில்லை. சாதாரணமாக நாடுகளுக்கிடையில் இருப்பது போன்றதொரு தொடர்புதான் இருந்தது. ஆனால் இலங்கைக்கும் சீனாவிற்குமான ராஜதந்திர உறவில் ஏற்பட்ட நெருக்கம் என்பது பாரம்பரியமாக பணடாரநாயக்க வழிவந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காலத்தில்தான் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு பண்டாரநாயக்கவின் வெளிவிவகாரக் கொள்கையே பிரதான காரணம். டி.எஸ்.சேனநாயக்க வழிவந்த மேற்குசார்பு வெளிவிவகார அணுகுமுறைக்கு மாறாக, எந்தவொரு தரப்பிற்கும் சார்பற்றிருப்பது என்னும் வெளிவிவகாரக் கொள்கையொன்றை பண்டாரநாயக்கவே அறிமுகம் செய்தார். இதன் விளைவாகவே சீனாவுடனான உறவு சாத்தியப்பட்டது. இதனை அடையாளப்படுத்தும் வகையிலேயே பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தை சீனா அன்பளிப்பாக நிறுவியது.
இவ்வாறான நிலைமை இருந்த போதிலும் கூட, சீனா ஒரு முக்கியமான தரப்பாக இலங்கையில் இனங்காணப்படவில்லை. குறிப்பாக 2000இற்கு பின்னரான காலப்பகுதியில் சீனாவிற்கும் இலங்கைக்குமான உறவில் ஒரு வளர்ச்சிப்போக்கு காணப்பட்டது. 2005இல், ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சீன ஜனாதிபதியின் ஹ}-ஐpன்தாவோவின் அழைப்பின் பெயரில் பெய்ஐpங் சென்றிருந்தார். இதன் போது இரு ஜனாதிபதியும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். இதன் போது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மண் கதிர்காமர் படுகொலைக்கு சீன ஜனாதிபதி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். பயங்கரவாதத்தின் மூன்று ஆபத்துக்களான பிரிவினை, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத்தின் பிராந்திய சர்வதேச ரீதியான வலையமைப்பை தடுப்பது ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் ஏற்பட்டது. இதன் போது சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் பல திட்ட முன்மொழிவுகளையும் முன்வைத்திருந்தனர். அத்துடன் தெற்காசியா நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை இரு நாட்டு தலைவர்களும் வரவேற்பதாகவும் உடன்பாடு கண்டனர். இதே வேளை ஒரு சீனா என்பதே இலங்கையின் நிலைப்பாடு என்றும், சீனாவின் இறைமைக்கு ஆதரவாகவே நாம் நிற்போம் என்றும் சந்திரிக்கா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த பின்புலத்தில் நோக்கினால் சீனாவிற்கும் இலங்கைக்குமான ராஜதந்திர உறவை அடுத்து நிலைக்கு கொண்டு செல்வதற்கான சில வலுவான அடித்தளங்கள் சந்திரிக்காவின் காலத்திலேயே போடப்பட்டிருக்கின்றது. இதனை மகிந்த ராஜபக்ச அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான இறுதி யுத்த காலமே சீனா இலங்கையில் வலுவாக காலூன்றிய காலமாக இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை சீனா மிகவும் திட்டமிட்ட வகையில் பயன்படுத்திக் கொண்டது. இது தொடர்பில் Stockholm Institute for Peace Studies குறிப்பிடும் ஒரு விடயம் மிகுந்த கவனத்திற்குரியது. அதாவது, சீனாவிடமிருந்து தடையின்றி ஆயுதங்கள் கிடைக்கும் என்பதை உறுதிப்புடுத்திக் கொண்டுதான், சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் யுத்தத்திற்கு செல்லும் தீர்மானத்தை எடுத்திருந்தது. ஏனெனில் அந்த நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதலுக்கு அமைவாக, மனித உரிமை சார்ந்த காரணங்களை முன்வைத்து மேற்கு நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியிருந்தது. 2017இல் அமெரிக்கா ஆயுத தளபாடங்கள் வழங்குவதை நிறுத்தியது. இந்தியாவும் உள்ளக அரசியல் காரணங்களை முன்வைத்து ஆயுதங்கள் வழங்கமறுத்திருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இலங்கைக்கான பிரதான ஆயுத வழங்குனர் என்னும் இடத்தை சீனா எடுத்துக் கொள்கின்றது. 1990களிலிருந்து சீனா ஆயுத தளபாடங்களை இலங்கைக்கு வழங்கிவந்த போதிலும், சடுதியாக பிரதான ஆயுத வழங்குனராக வந்தது இறுதி யுத்த காலத்தில்தான். இராணுவத்திற்கு புதிதாக அதிகளவான ஆட்கள் சேர்க்கப்பட்டனர். 116000 ஆக இருந்த இராணுவம் 2016இல் 180000 ஆக உயர்ந்தது. இராணுவத்திற்கான செலவினம் 40விகிதமாக அதிகரித்தது. 2007இல் 36.7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதக் கொள்வனவில் சீனாவுடன் உடன்பாடு செய்யப்பட்டது. அதே போன்று பாக்கிஸ்தானின் ஊடாகவும் இராணுவ உதவிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் சீனா மேற்கொண்டது. இறுதி யுத்தத்தின் போது சில நாடுகள் யுத்த நிறுத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருந்த போது, சீனா அதன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுத்தது. இவ்வாறானதொரு பலமான சீன ஆதரவு எல்லைக்குள்ளால்தான் இறுதி யுத்தத்ததை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகொண்டது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான சர்வதேச சூழல் உருவாவதற்கு காரணமாக இருந்தது என்பது உண்மையானாலும் கூட. யுத்தத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான இராணுவ உதவிகளை சீனாவே வழங்கியிருந்தது. ஒரு வேளை சீனாவின் இராணுவ உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்காதிருந்திருந்தால் இறுதி யுத்தத்தின் போக்கும் வேறு விதமாகவும் அமைந்திருக்கலாம்.
இன்று இலங்கை தொடர்பான அரசியல் உரையாடல்களில் சீனா எவராலும் தவிர்த்துச் செல்ல முடியாதவொரு சக்தி. இதன் காரணமாகவே, மைக் பொம்பியோ கொழும்பில் நின்றவாறு சீனா தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சென்றிருக்கின்றார். உண்மையில் இலங்கைக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த முற்படுவது அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரு உடனடி பிரச்சினையில்லை. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் அதன் அடிமடியில் கை வைக்கும் பிரச்சினை. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் அமெரிக்க கரிசினை பிராந்திய ரீதியிலானது. அதாவது இந்தியாவை மையப்படுத்தியது. இந்து சமூத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அதன் அயல்நாடுகளுக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த முற்படுவதை அமெரிக்கா பாராமுகமாக இருக்காது என்பதும் பொம்பியோவின் செய்தியாக இருக்கலாம். அதே வேளை வரப்போகும் புதிய அமெரிக்க நிர்வாகத்திற்கு, இலங்கை தொடர்பில் ஒரு கொள்கை சார்ந்த அடித்தளத்தை உருவாக்குவதும் பொம்பியோவின் நோக்கமாக இருந்திருக்கலாம். ஏனெனில் பொம்பியோவின் ஆசிய விஜயம் சாதாணரமாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் அமெரிக்க – இந்திய நகர்வுகளை கண்டு பின்வாங்;கும் நிலையில் இல்லை. சீனக் கம்யூனிஸ் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து நடத்தியிருக்கும் நிகழ்வு இதற்கு ஒரு சிறந்த சான்றாகும். அதே வேளை சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு அஞ்சாமல் எவ்வாறு விளையாடுவது என்பதற்கான உதாரணமாகவும் இலங்கை மாறிப்போகலாம். ஏனெனில் அந்தளவிற்கு இலங்கை விடயங்களை சாதாரணமாகவே கையாள முற்படுகின்றது.
இங்கு பறிதொரு விடயத்தையும் ஆழமாக நோக்க வேண்டும். அதாவது, சீனா அதிகம் வலுவாக காலூன்ற முற்படும் நாடுகளுக்கிடையில் ஒரு ஒத்த தன்மையிருக்கின்றது. அதாவது, அந்த நாடுகள் ஒன்றில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் அதே வேளை பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் நாடுகள். இந்த இடத்தில் ஒரு கம்போடிய சட்டத்தரணி ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த விடயம் நினைவுக்கு வருகின்றது. இது நடந்து பல வருடங்களாகின்றன. கம்போடியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகம். இது தொடர்பில் நான் கேட்ட போது – அந்த நன்பர் கம்போடியாவின் பிரதமர் குன்சானின் கருத்தொன்றை மேற்கோள் காட்டினார். அவர் கூறுவாராம் – நாங்கள் ஏன் சீனாவிடம் செல்கின்றோம்? ஏனென்றால் சீனாவிடம் கடன் பெறுவது மிகவும் இலகு. நாங்கள் அமெரிக்காவிடம் சென்றால் – ஜரோப்பிய நாடுகளிடம் சென்றால் ஏராளமான நிபந்தனைகளை போடுகின்றனர். மனித உரிமைகள், ஜனநாயகம் என கேள்வியெழுப்புகின்றனர். ஆனால் சீனாவிடம் இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அவர்கள் கடனுக்கான வட்டி தொடர்பில் மட்டுமே பேசுகின்றனர். இந்த விடயம் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. சீனாவிடம் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கும் போது, சீனா குறித்த நாட்டுக்குள் கால்பதிக்கும் எல்லையின் அளவும் அதிகரித்துச் செல்லும். இலங்கை விடயத்தில் நடந்து, நடக்கப் போவதும் இதுதான்.
ஒரு காலத்தில் அமெரிக்கா இலங்கைக்குள் கால்பதிப்பது தொடர்பில் இந்தியா எச்சரிக்கையுடன் இருந்தது. ஆனால் இன்றோ நிலைமைகள் தலைகீழாக மாறியிருக்கின்றன. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் சீனா சிரித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகாரச் செயல் ஜயநாத் கொலம்பகே இந்தியாவிற்குத்தான் முன்னுரிமை என்கின்றார். மூலோபாய ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு விடயத்தையும் சிறிலங்கா செய்யாது செய்யவும் கூடாது – அப்படிச் செய்தால் சிறிலங்காவால் சீவிக்க முடியாது. இவ்வாறு கூறினாலும் கூட, பிறிதொரு புறம் பொருளாதாரரீதியில் நாங்கள் முழு உலகத்துடன் தொடர்புகொள்வோம். ஏனெனில் எங்களுக்கு தெரிவுகள் மிகவும் குறைவு. இதன் மூலம் இலங்கையில் சீனா என்பதை பொருளாதார ரீதியாக பாக்க வேண்டும் என்பதையே தற்போதைய சிறிலங்காவின் நிர்வாகம் வலியுறுத்த முற்படுகின்றது. ஜயநாத் கொலம்பகே இவ்வாறு கூறுகிக்கொண்டிருக்கும் அதே வேளை சீனக் கம்யூனிஸ் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கட்சிரீதியில் இணைந்து கலந்துரையாடுகின்றன. சீனக் கம்யூனிஸட்; கட்சியின் அனுபவம் சிறிலங்காவின் பொதுஜன பெரமுனவிற்கு எதற்காக? அவ்வாறாயின் இலங்கையும் சீனக் கம்யூனிஸ் கட்சியின் வழியில் பயணிக்கப் போகின்றதா? பி.ஜே.பி அல்லது ஏனைய நாடுகளின் கட்சிகள் இலங்கையிலுள்ள கட்சிகளுடன் உரையாடலில் ஈடுபடவில்லையே! ஒரு நாட்டின் ஆளும் கட்சி பிறிதொரு நாட்டின் கட்சியுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது ராஜதந்திர நடைமுறையும் அல்லவே! இந்த விடயங்களை உற்றுநோக்கும் போது, இலங்கையின் தற்போதைய ஆளும் தரப்பிற்குள் இரண்டு வகையான கொள்கை நிலைப்பாடு இருக்கின்றதா? இந்தியாவின் கொல்லைப்புறத்தில் சீனாவின் கம்யூனிஸ் கட்சி என்பதை இந்தியா எவ்வாறு விளங்கிக்கொள்ளப் போகின்றது?