Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க – சீன முறுகலும் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையும்!

அமெரிக்க – சீன முறுகலும் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையும்!

16 ஐப்பசி 2020 வெள்ளி 18:11 | பார்வைகள் : 8956


அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களை இலங்கைக்கான சீனத் தூதரகம் வன்மையாக கண்டிதிருக்கின்றது. அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் ராஜதந்திர நடைமுறைகளை மீறியிருக்கின்றது. மூன்றாம் நடானா இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் இலங்கை மக்களுக்குரியது. அதில் தலையீடு செய்ய அமெரிக்காவிற்கு அதிகாரமில்லை என்று, சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

 
அமெரிக்க தூதுவர் அப்படியென்ன கூறிவிட்டார்? சீன – இலங்கை உறவு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, நாடுகளுக்கிடையிலான உறவுகள் வெளிப்படைதன்மை மிக்கதாகவும் திறந்த அடிப்படையிலும் இருக்கவேண்டும். இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவு அந்த அடிப்படையில் இருக்குமாக இருந்தால் அதனை அமெரிக்கா ஊக்குவிக்கும். அமெரிக்க தூதுவரின் கருத்துக்களை மேலோட்டமாக நோக்கினால் அதன் ஆழத்தை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அண்மைக்காலமாக சினா தொடர்பில் அமெரிக்கா முன்னெடுத்து வருகின்ற உலகளாவிய நடவடிக்கைகளின் விளைவே அமெரிக்கத் தூதுவரின் கருத்து. சீன அரசு, கட்டுமானம் என்னும் அடிப்படையில் நாடுகளை கடன்பொறிக்கும் சிக்கவைக்கும் ஒரு மறைமுக நிகழ்ச்சிநிரலுடன் செயற்பட்டுவருகின்றது என்னும் அடிப்படையிலேயே அண்மையில் அமெரிக்கா இராஜங்கத் திணைக்களம் சீன அரசிற்கு சொந்தமான 24 நிறுவனங்களை தடைசெய்திருந்தது. இதில் அனேக நிறுவனங்கள் சீன அரசின் பாரிய கட்டுமான நிறுவனமான தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் (Communications Construction Company (CCCC) கீழ் இயங்குகின்றன. இந்த நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள் அனைத்தும் சீனாவின் ஒரு பாதை திட்டத்தை இலக்ககாக் கொண்டதென்று கூறப்படுகின்றது.
 
சீன அரசு அதன் விரிவாக்கல் வேலைத்திட்டத்திற்கான (expansionist agenda) ஓர் ஆயுதமாக கட்டுமானத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது, என்னும் அடிப்படையிலேயே மேற்படி தடையை அமெரிக்கா அமுல்படுத்தியிருக்கின்றது. இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களில், சீனாவின் கொழும்பு துறைமுக கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு வரும் நிறுவனமும் அடங்குகின்றது. இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியிருகின்றார். இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமான விவகாரத்தில் ஊழலும் மோசடிகளும் இடம்பெற்றதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றன. இது சீனாவின் ஒரு பாதைத் திட்டத்தில் நன்கு அறியப்பட்ட செய்தியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறானதொரு பின்னணியில்தான் அமெரிக்க தூதுவர் அலைனா சீனா தொடர்பான அமெரிக்க பார்வையை பதிவு செய்திருக்கின்றார்.
 
மகிந்த ராஜபக்ச காலத்தில் உச்சமடைந்த சீன-இலங்கை உறவின் தாக்கங்களை இப்போதுதான் இலங்கைத் தீவு எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகார கொள்கை வகுப்பு என்பது, இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டில்தான் தங்கியிருந்திருந்தது. இந்த அடிப்படையில்தான் ஜக்கிய தேசியக்கட்சியும் அதற்கு எதிரான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உருவாக்கப்பட்டது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் இன்றுவரையில் டி.எஸ்.சேனநாயக்கவினதும் ளு.று.சு.னு பண்டாரநாயக்கவினதும் செல்வாக்கின் எல்லைக்குள்தான், கொழும்பின் வெளிவிவகார அணுமுறை தீர்மானிக்கப்படுகின்றது. இன்று கோட்டபாய ராஜபக்ச கூறும் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கை என்பது உண்மையில் பண்டாரநாயக்கவின் வெளிவிவகார பாரம்பரியத்தின் நீட்சிதான். அதாவது, இலங்கை எந்தவொரு அதிகார பிரிவுக்கும், எந்தவொரு கருத்தியலுக்கும் சார்பாக இருக்கக் கூடாது. அனைவருடனும் நட்புறவை பேணும் வகையில்தான் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறை அமைய வேண்டும். ஆனால் இன்றைய புதிய – புவிசார் அரசியல் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் தரப்புக்கள் அனைத்திற்கும் இடையில் நடுநிலையை பேண முடியுமா?
 
கொழும்பின் வெளிவிவகார அணுகுமுறைகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் நாடாக இந்தியாவே இருக்கின்றது. ஏனெனில், இலங்கையின் அமைவிடத்தை பொறுத்தவரையில் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறை இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் நேடியாகத் தொடர்புபடுகின்றது. இதில் ஏற்படும் ஏற்ற இறங்கங்களுக்கு ஏற்ப இந்தியாவின் நடவடிக்கைகளிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இலங்கையை பொறுத்தவரையில் இது எக்காலத்திலும் தவிர்க்கவே முடியாத யதார்த்தமாகும். இந்த விடயத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் கைக்கொண்ட வெளிவிவகார அணுகுமுறையின் விளைவாகவே இந்திராகாந்தி தலைமையிலான இந்தியா, ஒரு இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது. இந்தியாவின் தலையீட்டிலிருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவும் என ஜே.ஆர்.போட்ட கணக்கு பிழைத்தது. அன்றைய இந்தியா அமெரிக்காவிற்கு எதிரான சோவியத் அணியுடன் இருந்த போதிலும் கூட, இலங்கைக்கு உதவ அமெரிக்கா முன்வரவில்லை. இந்தக் காலத்தில், இந்திராகாந்தி அமெரிக்க அதிபர் ரீகனின் அழைப்பை ஏற்று, அமெரிக்கா சென்றிருந்தார். தனது உரையில் இந்திராகாந்தி குறிப்பிட்ட ஒரு விடயம் இந்தியாவின் அணுகுமுறையை தெளிவாக எடுத்தியம்பியது. அதாவது, எங்களுக்கு பிராந்திய விடயங்களில்தான் ஆர்வமுண்டு – உலகளாவிய விடயங்களில் ஆர்வமில்லை. இந்திராகாந்தியின் இந்தக் கூற்று ஒரு விடயத்தை தெளிவாக இடித்துரைத்தது. அதாவது, எங்களுடைய பிராந்திய விடயங்களில் வேறு எவரும் தலையீடு செய்வதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின் இந்த பிராந்திய மேலாதிக்க நிலைப்பாடுதான் இன்றுவரையில் இந்தியாவின் வெளிவிவகார கொள்கையின் அச்சாணியாக இருக்கின்றது. தனது பிராந்திய மேலாதிக்கத்திற்கு சவால்விடும் செயற்பாடுகளை இந்தியா ஒரு போதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை. இந்த அரசியல் யதார்த்தத்தை கொழும்பு எப்போதெல்லாம் புறம்தள்ள முயற்சிக்கின்றதோ, அப்போதெல்லாம் ஒரு இந்திய அச்சுறுத்தலை இலங்கை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இதனை கொழும்பு ஒரு போதுமே தவிர்க்க முடியாது.
 
இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் அமெரிக்காவும் இந்தியாவும் தவிர்க்க முடியாத மூலோபாய பங்காளிகளாக இருக்கின்றன. இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்தை முடக்குவதுதான் இரு நாடுகளதும் பொது இலக்கு. இந்த பின்புலத்தில்தான் இலங்கை விடயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நேர்கோட்டில் பணியாற்றுகின்றன. பனிப்போர் காலத்தில் இலங்கைக்குள் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரிப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆனால் இன்றைய நிலைமை அப்படியல்ல. அமெரிக்கா இந்து சமூத்திர பிராந்தியத்திற்குள் வலுவாக காலூன்றுவதை இந்தியா ஊக்குவிக்கின்றது. இந்த அடிப்படையில்தான் இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்துச் செல்வது தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனத்தை செலுத்துகின்றது. ஆனால் அமெரிக்காவின் அணுகுமுறை உலகளாவியது. சீனாவை எதிர்கொள்ளுல் என்னும் உலகளாவிய அணுகுமுறையின் ஒரு அங்கமாகவே இலங்கை விடயத்திலும் அமெரிக்கா அதன் கரிசனையை வெளிப்படுத்துகின்றது.
 
சீனாவின் பிடிக்குள் ஏதோவொரு வகையில் இலங்கை சென்றுவிட்டது. இனி அதிலிருந்து வெளியில்வருவது மிகவும் சவாலான விடயம். அதே வேளை இலங்கைக்குள் சீனாவின் பிடி அதிகரிக்கும் போது, அது நிச்சயம் இந்தியாவிற்கான நெருக்கடியாக மாறும். அவ்வாறான சூழலில், இலங்கை மீதான பிடியை இந்தியா இறுக்கும். அதே வேளை அமெரிக்காவும் அதன் பிடியை இறுக்கும்.
 
அமெரிக்க தூதுவரின் கருத்துக்களை சீனா கண்டித்திருக்கும் நிலையில், சீனாவின் அதி உயர் மட்டக் குழுவொன்று இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளது. சினாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான லுயபெ துiஉஉhi தலைமையிலான 26 பேர் கொண்ட குழுவினர் இலங்கையில் தரையிறங்கியிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்தச் செய்தி வெளியாகியிருக்கின்றது. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர், அண்மையில் ஜனாதிபதியுடன் தொலை பேசியில் உரையாடியிருந்தார். அவர் பேசிய விடயங்கள் தொடர்பில் எதுவும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி கானொளி வழியாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் உத்தியோக பூர்வ பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமையளித்தல் என்னும் சாகர் (ளுயுபுயுசு) கோட்பாட்டின் அடிப்படையில், இலங்கை விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலைப்பாட்டை மோடி அறிவித்திருந்தாhர். இ;வ்வாறானதொரு பின்னணியில்தான் சீனாவின் அதியுயர் குழு இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றது. கொரோனாவின் மூன்றாவது அலையால் இலங்கை பாதிக்கப்பட்டிருப்பதான செய்திகளுக்கு மத்தியிலும், சீனாவின் உயர் குழுவொன்று நேரடியாகவே இலங்கையின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை அரசியல் கவர்ச்சிமிக்க செய்தியாகும். கொரோனாவினால் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், இந்த சந்தர்பத்தை, சிறிய நாடுகளுக்குள் ஊடுருவதற்கான தருணமாக சீனா கைக்கொள்ள முயற்சிக்கின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டுண்டு.
 
இந்த விஜயத்தின் போது, இலங்கை எதிர்பார்க்குத் 1.2 பில்லியன் சீனக் கடன் தொகையின் இரண்டாவது பகுதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனக் கடனின் முதலாவது பகுதியான 500 மில்லியன் தொகையை இந்த ஆண்டு மார்ச்சில் இலங்கை பெற்றிருந்தது. இந்தியாவிற்கு மீளச் செலுத்த வேண்டிய கடன் தொகையின் பெறுமதியை மோடி அண்மையில் குறைப்பதாக அறிவித்திருந்தார். இவ்வாறான பின்புலத்தில் சீன உயர் குழுவின் இலங்கை விஜயம் அதிக முக்கியத்தும்மிக்க ஒன்றாகவே இருக்கின்றது. சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை விழுந்து கொண்டிருக்கின்றது என்னும் பலவாறான விமர்சனங்களுக்கு மத்தியிலும், கொழும்பு மீண்டும் சீனாவின் கடனையே கோரிநிற்கின்றது. இது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதுதான் இலங்கையின் எதிர்கால அரசியலாக இருக்கப்போகின்றது. சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை அதிகமாக சிக்குப்பட்டால் இலங்கையால் அதன் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை பாதுகாக்க முடியுமா? கோட்டா- மகிந்த தலைமையிலான அரசாங்கம் ஒரே நேரத்தில் இருதுருவங்களாக மோதிக் கொள்ளும் அமெரிக்க – இந்தி கூட்டடையும் சீனாவையும் சமநிலையில் அணுகலாம் என எண்ணுகின்றது. இந்த சமநிலைப்படுத்தும் கொள்கையில் இந்த அரசாங்கத்தினால் வெற்பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்