Paristamil Navigation Paristamil advert login

மஞ்சள் - தேங்காய் - வைரஸ் - இருபதாவது திருத்தம்

மஞ்சள் - தேங்காய் - வைரஸ் - இருபதாவது திருத்தம்

11 ஐப்பசி 2020 ஞாயிறு 17:34 | பார்வைகள் : 9285


நாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில் கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. கஞ்சாவின் இடத்தை மஞ்சள் பிடித்திருக்கிறது. அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியைத் தடை செய்து விட்டது. இதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்ப ட்டிருருக்கிறது. உள்ளூரில் மஞ்சள் உற்பத்திக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் மஞ்சள் தேவையை பூர்த்தி செய்யலாம் என்று அரசாங்கம் திட்டமிடுகிறது.

 
கிளிநொச்சியில் உள்ள ஒரு மஞ்சள் உற்பத்தியாளரிடம் கேட்டேன். சாதாரணமாக பச்சை மஞ்சள் எவ்வளவு போகிறது? என்று 700 ரூபாய்க்கு குறையாமல் போகிறது என்று சொன்னார். ஒரு கிலோ உலர்ந்த மஞ்சளை பதப்படுத்தி எடுப்பதற்கு எவ்வளவு பச்சை மஞ்சள் வேண்டும்? என்று கேட்டேன். கிட்டத்தட்ட ஐந்து கிலோ பச்சை மஞ்சள் தேவை என்று சொன்னார். அப்படி என்றால் ஒரு கிலோ கட்டி மஞ்சளின் விலை மூவாயிரத்து ஐநூறு ரூபாய்களுக்குக் குறையாமல் வரும். மேலும் பச்சை மஞ்சளை உலர்த்தி எடுக்கும் பொறிமுறைக்கான செலவையும் சேர்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் ஒரு கிலோ மஞ்சளை நாலாயிரத்திகும் குறைவாக விற்க முடியாது. சந்தையில் இப்பொழுது மஞ்சள் ஒரு கிலோ நாலாயிரத்தில் இருந்து ஆறாயியிரம் ரூபாய் வரை  விற்கப்படுகிறது.
 
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள்தான் நாட்டின் பெருமளவிலான மஞ்சள் தேவையைப் பூர்த்தி செய்கின்றது என்று மஞ்சள் வியாபாரிகள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் புள்ளி விபரங்களின்படி ஒரு குடும்பம் சராசரியாக ஓராண்டுக்கு இரண்டரை கிலோ மஞ்சளை நுகர்கிறது. இதன்படி மொத்தம் 8600 மெட்ரிக்  தொன் மஞ்சள் ஓராண்டுக்குத் தேவை. ஆனால்  உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளின் மொத்த தொகை மூவாயிரத்துக்குக் குறைவான மெட்ரிக் தொன்கள்தான். எனவே உள்ளூர்த்  தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவிலிருந்து மஞ்சளை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது.
 
உலகின்  60 வீதத்துக்கும் குறையாத மஞ்சளை இந்தியா தான் உற்பத்தி செய்கின்றது. அங்கே ஒரு கிலோ கட்டி மஞ்சள் இப்பொழுது இந்தியக் காசில் 130 ரூபாய்க்கு கிடைக்கிறது. கட்டி மஞ்சளை இலங்கைக்கு கொண்டு வரும் போது இறக்குமதிச் செலவுகள் வரிகளோடு சேர்த்து ஒரு கிலோ கட்டி மஞ்சள் 350-550 ரூபாய் வரை முன்பு விற்கப்பட்டது. முன்பு என்றால் கோவிட் -19 முதலாவது தொற்றலைக்கு முன்பு.
 
இந்தியாவிலிருந்து கட்டி மஞ்சளை இறக்குமதி செய்வோர் அதை உள்ளூர்த் தேவைகளுக்கு மட்டும் வினியோகிப்பது இல்லை. மாறாக மேலதிகமாக இறக்குமதி செய்து இலங்கையிலிருந்து மஞ்சட் தூளை புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவ்வாறு  ஏற்றுமதித் தேவைகளுக்காக அதிகரித்த மஞ்சள் நாட்டுக்குள் இறக்கப்படும் பொழுது அது உள்ளூர் உற்பத்தியைப் பாதிக்கின்றது. இதைத்  தடுப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் மஞ்சள் இறக்குமதிக்கு மட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அதனால் மஞ்சளின் விலை அதிகரித்தது. இப்பொழுது  ராஜபக்ச அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியைத்  தடுத்தபின் மஞ்சள் கஞ்சாவாக  மாறிவிட்டது என்று மஞ்சள் உற்பத்தியாளர்கள் சொன்னார்கள்.
 
மஞ்சள் மட்டுமல்ல தேங்காயின் நிலையும் அப்படித்தான். அரசாங்கம் தேங்காய் விற்பவர்களுக்கு அளவுப் பிரமாணங்களை அறிவித்திருக்கிறது. அவற்றின் அளவு பிரமாணத்தின் படி தேங்காயின் விலை தீர்மானிக்கப்படும். இதற்கென்று ஓர் வர்த்தகர் தேங்காயை அளக்கும் கம்பி வளையங்களை உருவாக்கியிருப்பதாகப் படங்கள் வேறு பகிரப்பட்டன.
 
எனது நண்பர் ஒருவர் சொன்னார்……தமிழில் ஒரு நல்ல பழமொழி உண்டு.  மாம்பழத்தை பெருப்பத்தை பார்த்து வாங்கு தேங்காயை அடைப்பதை பார்த்து வாங்குவது என்று. அதாவது தேங்காய் வாங்கும்போது அதன் பருமன் அல்ல அதன் அடர்த்தி தான் முக்கியம். அடர்த்தி கூடிய தேங்காய் எடை அதிகம் நிற்கும். எனவே தேங்காயைத் தூக்கி பார்த்து கைக்கணக்கில் எடை அடிப்படையில் தான் அதை வாங்குவது உள்ளூர் வழமை. அதற்கு அளவுப் பிரமாணம் வைக்க முடியாது. பருமனில் பெரிதாக இருக்கும் ஒரு தேங்காயின் உள்ளுடன் அடர்த்திக் குறைந்ததாக இருக்க முடியும் என்று சொன்னார். மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஓர் அரசாங்கம் தேங்காயை அளந்து வாங்கும் ஒரு நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தையல் கடைகளில் இருக்கும் அளவு நாடாவை தேங்காய் கடைக்கு கொண்டு வந்து விட்டது.
 
மஞ்சளும் தேங்காயும் மட்டுமல்ல உளுந்தின் விலையும் ஏனைய உப உணவுகளின் விலைகளும் அதிகரித்துச் செல்கின்றன கோவிட் -19க்கு முன்பு உளுந்து வடை 45 ரூபாய் வரை விற்கப்பட்டது. கோவிட் -19க்குப்  பின்பு அதாவது கோவிட் -19 முதலாவது தொற்றலைக்குக்பின் ஒரு வடை 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்பொழுது உளுந்தின் விலை ஒரு கிலோ ஆயிரத்து நாநூறைத் தாண்டி விட்டது. இனி வடையும் போய்ச்சா?
 
இந்த சுமைகளைக் எல்லாம் சாதாரண ஜனங்கள் எப்படித் தாங்கப் போகிறார்கள்? தனிச் சிங்கள வாக்குகளால் தான் பெற்றவை என்று அரசாங்கம் இறுமாப்புடன் கூறும் வெற்றிகளை  எவ்வளவு காலத்துக்கு தக்கவைக்க முடியும்? இந்த அரசாங்கத்தின் வெற்றிகள் அனைத்தையும் சோதனைக்குள்ளாக்கப் போகும் அம்சங்கள் இரண்டு.
 
முதலாவது இனப் பிரச்சினை. இரண்டாவது பொருளாதாரம். தனிச் சிங்கள வாக்குகளால் வென்ற அரசாங்கம் தனிச் சிங்கள வாக்காளர்களைக் கவரும் பொருட்டு நேரத்துக்கு ஒரு முடிவை எடுக்கிறது. தேர்தல்காலத்தில் தனிச் சிங்கள வாக்குகளை கவர்வதற்காக ரிசாத் பதியுதீனின் சகோதரரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் பெயரால் உள்ளே தூக்கிப் போட்டார்கள். அண்மையில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. அதன்பின் ரிசாத் பதியுதீன் கிழக்கு மாவட்டத்தில் மூத்த ராஜபக்சவான சமல் ராஜபக்சவோடு கைகுலுக்கும் காட்சி வெளிவந்திருக்கிறது. இதன் பொருள் என்ன?
 
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு மொத்தம் 150 ஆசனங்கள் தேவை. அரசாங்கத்திடம் 150 உறுப்பினர்கள் உண்டு. ஆனால் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகி விட்டார். எனவே வெளியில் இருந்து ஒருவரைப் பெறவேண்டும்.மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் வருமாக இருந்தால் அதை ஈடுசெய்ய முஸ்லீம் தரப்பின் உதவியை அரசாங்கம் எதிர்பார்க்கின்றதா? 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் தரப்பில் ஒருபகுதி ஆதரவாக வாக்களிக்குமா ?
 
ஏற்கனவே முஸ்லிம் பிரதிநிதகள் 17 ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தார்கள் . அதன்பின் அதற்கு எதிரான 18க்கும் வாக்களித்தார்கள். அதன்பின் 18க்கு எதிரான 19க்கும் வாக்களித்தார்கள். இப்படியே மாறி மாறி ஒவ்வொரு ஆளும் தரப்போடும் சேர்ந்து அந்தந்த அரசாங்கம்  கொண்டுவரும் யாப்பு திருத்தங்களுக்கு ஆதரவாகக் கை உயர்த்தியிருகிறார்கள்.  கடந்தவாரம் ரவூப் ஹக்கீம் கூறுகிறார் முன்பு செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக இப்பொழுது இருபத்தாவது திருத்தத்திற்கு எதிராக நானே ஒரு வழக்கைத் தாக்கல் செய்தேன் என்று.
 
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று எல்லாவிதமான உபாயங்களையும் கைக்கொண்டு வருகிறது. இதில் ஆகப்பிந்தியது இரண்டாவது கோவிட்-19  அலை என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
கொரோனா வைரஸ் ராஜபக்சக்களின் நட்பு சக்தி போலத் தோன்றுகிறது. யுத்த வெற்றி வாதத்தை 2020க்கும் புதுப்பிப்பதற்கு கோவிட்-19 உதவியது இப்பொழுது 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ராஜபக்சக்களை  மன்னர்கள் ஆக்குவதற்கும் அதே கோவிட்-19  உதவப் போகின்றதா? எப்படி என்றால் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக தமிழ் முஸ்லிம் சிங்கள தரப்புகள் வழக்குகளைத் தொடுத்திருந்தன. அந்த வழக்கின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இரண்டாவது கோவிட்-19 தொற்றலை குறித்த அச்சம் ஏற்பட்டிருகிறது. நாட்டில் ஒரு தொகுதி  கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. பொதுப் போக்குவரத்து இயங்குகின்றது. ஒரு தொகுதி கிராமங்களைத் தவிர பெரும்பாலான கிராமங்களும் நகரங்களும் வழமைபோல செயற்படுகின்றன.
 
முதலாவது கோவிட்-19 அலையைப் போலன்றி இப்பொழுது மக்கள் மத்தியில் பதட்டமும் அச்சமும் கிடையாது. அவர்கள் ரிலாக்சாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் நோய்த்தொற்றைக் காரணமாகக் கூறி பொதுக்கூட்டங்கள் பொதுமக்களை ஒன்று கூட்டும் நிகழ்வுகள் யாவும் வரும் 31ஆம் திகதி வரை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக  ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது. பொதுமக்கள் கருத்தை நொதிக்க செய்வதும் கடினம். மொத்தத்தில் நீதிமன்ற தீர்ப்பு மட்டும்தான் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப் போகிறது. வெகுசன எதிர்ப்பைக் காட்டும் நிலைமைகள் பெருமளவுக்கு தடுக்கப்பட்டுள்ளன. இப்படிப் பார்த்தால் 20 ஆவது திருத்தத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு மறுபடியும் வைரஸ் அரசாங்கத்திற்கு உதவி இருக்கிறதா ?
 
இருக்கலாம் வைரஸ் ராஜபக்சக்களை மேலும் பலப்படுத்த உதவக் கூடும். ஆனால் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் அவர்கள் தேர்தலில் பெற்ற வெற்றிகளைக் கேள்விக்குள்ளாக்கி விடுமா  ?

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்