Paristamil Navigation Paristamil advert login

1987ஆம் ஆண்டு யுத்த காலக் கண்ணாடி

 1987ஆம் ஆண்டு யுத்த காலக் கண்ணாடி

6 ஐப்பசி 2020 செவ்வாய் 18:52 | பார்வைகள் : 9385


01. கண்டதுண்டமாக வெட்டி விழுத்துகின்ற போதிலும்
உயிரைத் துச்சமென்று எண்ணியோருக்கு அச்சமென்பதில்லையே
நெஞ்சிலும் நேர்மைத்திறமும் உடையோர் நாங்கள் என்றுமே
நேருக்குநேர் வந்து நின்று பார்த்தால் உன்தன் திறமையை
 
02. பஞ்சமோடு பட்டினியால் வதைக்கலாமென்ற எண்ணமோ
வஞ்சகரின் சூழ்ச்சியால் வாட்டுகின்றாய் மக்களை
இரவல் மூளை வாங்கிவந்து மோதிநின்று பார்க்கிறாய்
இஷ்டமென்றால் வந்துபார் சொந்தப் புத்தியுண்டானால்
 
03. உயிருடன் உடமையின்று ஊசலாடும் போதிலும்
உறுதியுடன் உண்மையாக உழைத்திடுவோம் திண்ணமே
வெஞ்சமரில் வேங்கையாக நின்று வீரம் காட்டுவோம்
அகிம்சைப் போரில் ஆத்மசுத்தியோடு நின்று வாட்டுவோம்.
 
04. துச்சமென்று வீரத்துடன் வாழும் புலிகள் உயிரையே
அச்சமின்றி அழைக்குது பார் சைனைட் அவர்கள் கழுத்திலே
நஞ்சருந்தி உயிரை மாய்க்கத் தயாராய் இருக்கும் புலிகளை
வெஞ்சமரில் சூழ்ச்சியால் அடிமையாக்க முடியுமா?
 
05. சிங்கத்தின் பேரைச்சொல்லி சேனை பல திரட்டினும்
சங்கத்தமிழ் புலியின் வாலைத்தானும் பிடிக்க முடியுமா?
எங்கள் தமிழ் செல்வங்களே! அச்சமில்லை என்று சொல்லு
நீங்கள் காணும் களமெல்லாம் வெற்றி முரசே கொட்டு.
 
06. புத்தருமிருந்தால் அவரும் எங்கள் அணியிலே
பக்தனாக நடித்து நீ பரிகாசமே செய்கிறாய்
மொட்டயனே திரும்பிப்பார் சரிதானா நின் செயல்
தட்டயனே தடவுகிறாய் தலையை ஏன் எம் அணியைக் கண்டு
 
07. மொசாட் மூளை வாங்கி நீ மோத வந்து பார்த்தாயே
மொட்டான பெட்டியிலே பார்சல் பண்ணித் தந்தோமே போதுமா?
தியாகிகட்கு இலக்கணத்தைக் காண எண்ணித் தேடினால்
பரித் தியாகத்தினை வந்து பார் ஈழத்தமிழ் மண்ணிலே.
 
08. காந்தியடிகள் காட்டிவிட்டார் எங்களுக்கோர் பாதையை
ராஜீவ் காந்திக்குமே உணர்திடுவோம் சாத்தானின் வேலையை
திலீபனென்று ஒரு மேதையை தீபமேற்றி வைத்தனன்
இத் திலீபன் போல் நூறுபேர் காணும் அகிம்சைப் போருக்கு
 
09. செல்வத்துட் செல்வமாய் பெற்றோம் திருச்செல்வத்தை
வெல்லும் பாதை இதுவென்றே அடியெடுத்து வைத்தான்
முல்லை பெற்ற பேறினால் தியாகச் சுடர்கள் பலர்களே!
முண்டியடித்து ஓடுகிறாறா தியாகத்தீபம் ஏற்றவே.
 
10. தந்திரமாக எம்மை அழிக்கலா மென்றெண்ணமோ
புலிகள்தான் எங்கள் தமிழ் செல்வங்கள்
புன்மையர் தான் உனது அடியைத் தொட்;டு ஓம்புவோர்
கபட நாடகம் ஆடாதே எம் இனத்தை அழியாதே.
 
11. கோடரிக் காம்புதான் குலத்திற்கு ஈனமென் பார்
கோணலாக ஆட்சி செய்து இனத்தைக் கூறு போடாதே
உலகமெங்கும் மனதி ஜாதி உன்னதமாய் வாழ வேண்டில்
உத்தமராய் கனவானாய் உண்மையாய் உழைக்க வேண்டும்.
 
12. எட்டப்பன் கூட்டமொன்றை இரைகொடுத்து வளர்க்கிறாய்
எங்கும் கொள்ளை போகுதையா புரியாதோ இது உமக்கு
ஏன் இந்தக் கபடவேடம் ஏங்குகின்றார் தமிழ் மக்கள்
யானிருக்கப் பயமேனென்றாய் புரியுதையா உனது வேடம்
 
13. புனிதமான வாழ்வு ஒன்றை அமைக்கவே ஈழ மண்ணில்
புண்ணியவான்கள் பலர் தோன்றியுள்ளார் இந்த மண்ணில்
தன்மானத் தமிழ் மன்னனாகிவிட்டான் பிரபாகரன்
தெய்வீகத் தவப்புதல்வர்தவக்கொழுந்தே வாழ்க! வாழ்க!
 
14. லொத்தர் போட்டல்லோ தீபமேற்றச் செல்கிறார்
பக்தர்கள் கூட்டமே பரவசமாய் பார்க்குதய்யா
எத்திக்கும் ஆகிநிற்கும் ஈசன்பாதம் வேண்டும்போது
சந்திக்கும் களமெல்லாம் எங்கள் பக்கம் வெற்றியாகும்.
 
15. தமிழ் மண்ணைக் காக்கவென்று உணர்வுகொட்டி உள்ளே வந்தார்
தாங்காத தவறுசெய்து தாக்காதே தமிழர் தம்மை
பாசாங்கு போதுமய்யா பகடக்காய் ஆக்காதே
பாரதமே திரும்பிப்பார் நின்பாங்கான சாதுரியத்தை.
 
அகிம்சைப் போரும் பயங்கரப் போரும்
 
பஞ்சப்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களென்று
அறைந்தான் யோகமுனி
ஆரறிவாரென்று அருமறையைச்
சொன்ன அருந்தவத்தான்
‘அடே சிங்களவா
தமிழைப் படி’ என்றவன்
கையசைத்து வெட்கித்து
கேட்டிடுமோ என்று நகைத்தான்
அவரைத் தரிசிக்க வந்த
அதிகாரி வாசலிடைச் செல்கையிலே
மேற்படி நிறைமொழிகள்
1950க்கு முன்பறைந்தான்
தேரடியில் நல்லூரில்
தேரடா உள்ளென்று
சொன்ன திருவாக்கு
பார்த்தீபனை பாரறிய
பாங்காக இருத்தியதே
தேரோடும் வீதியிலே
ஈசான மூலையிலே
ஈழ மண்ணுக்காய்
இன்னுயிரை ஈய்ந்தான்
புயலே வீசியது
புரட்சியே வெடித்தது
கற்பூர ஒளிபோல
கனவாகக் கரைந்தனையே
வனவாசம் பூண்டு
வானைப் பிளந்தவர்கள்
நாட்டில் புகுந்து
நர்த்தனங்கள் ஆடுகின்றார்
தேடித் தேடி
தெருவெல்லாம் அலைந்த படை
ஓடி ஒதுங்கிவிட்டார்
ஒரு சொல் போதுமைய்யா
எட்டு மாதக் கர்ப்பிணியை
ஏறி மிதித்துப் போட்டு எரித்தவர்கள்
பச்சைப் பாலகரை
பதை பதைக்க கொன்றவர்கள்
பசிக்கு உணவூட்டும்
பாமர உழவர்களை
சூட்டுக்குள் போட்டு
தீ மூட்டிக் கொன்றவர்கள்
பள்ளிச் சிறார்களை
செல் அடித்துக் கொன்றவர்கள்
மனித மலமதனை
மனைகள் மேலே
பரல் பரலாய் வீசினவன்
பி. ஏச். டி படித்த பேராசான்
எங்குற்றார் இவர்கள்
எது பயங்கரவாதம்
உரிமைக்காய் குரல் கொடுத்து
வாழ்வதற்கு இடம் வகுக்க
வரிந்து நிற்பரோ அவ்வாதம்
அடக்கி ஒடுக்கி
அழ நினைப்பது அவ்வாதம்
மொட்டை தட்iடெயல்லாம்
முடங்கி கிடப்பதற்கு
தொலைவில் காலமில்லை
தொடர்வோம் எம் பணியை
 
பெடியங்களே செல்லப் பெடியங்களே
 
1. பெடியங்களே செல்லப் பெடியங்களே பிரியமான செல்வங்களே
அப்பழுக்கற்ற குழந்தையாகி அரவணைப்பில் வாழ்ந்தனரே
ஆருமறியா பாலகராகி அன்பில் வாழ்ந்த உள்ளங்களே
கல்வியென்னும் கருந்தனம் பேணி கதறின் பதறிக் கற்றவரே
கரையேறாது கலங்கி நின்று கல்மனமாகி கர்ச்சனை கொண்டு
றோட்டு றோட்டாய் கூடி நின்று குதர்க்கம் பேசின காலம் போச்சு
வேறு வேறாய் கூடிகூடிக் வேங்கையாமென விரைந்தனரே.
 
2. விதவிதமான திட்டங்கள் தீட்டி வேறுவேறாய் திரண்டு நின்றனர்
கற்றோம் நாமென கணக்கெடுக்காமல் கடைசி வழியை நாடினரே
காணி பூமி காடுமேடெலாம் கடுகி வித்தையும் கற்றனரே
வேதமுதல்வனின் அடியினை தொட்டு வேல் எடுத்து வெஞ்சினம் கொண்டனர்
வருகில் வாவென வாதம் பொருதி வண்தமிழில் பெருவசனம் எழுதி
தமிழன் பெருமை காத்திடுவோமென தாரணியெங்கும் சாற்றினீரே
சங்கே முழங்கு வெண்சங்கே முழங்கு என விண்ணதிர விட்டு ஊதிடுவீர்.
 
3. வேங்கை நெடும்படை விரைந்து திரட்டி வீடுவீடாய் விஜயம் செய்தனர்
ஆந்தையாமென விழிகள் பிதுங்கிட ஆட்சியாளர் அரற்றி மலைத்தனர்
உரிமைகள் ஊமைகளானதால் உருவெடுத்தது பூதகாரமாய்
தமிழன் என்றொரு சாதியானதால் தடைகள் போட்டனர் சகல தரப்பிலும்
கானலை நீரென நம்பிய கயவர்கள் கால்கள் கடுத்திட ஓடினரல்லோ
நாயுமறியா தன்வாயுதிரத்தை நன்றாய் கடிக்குது நனைந்த எலும்பினை
காரணம் இவையென காட்டியே மாற்றார் கறைகள் ஒழித்திட கடும்திட்டம் போட்டனர்.
 
4. காளைகள் கருத்தினில் கண்ட கயவர்கள் காடு மேடெலாம் தெறித்துத் தொங்கினர்
எஞ்சியிருக்கும் எட்டப்பர் தமக்கு என்ன நடக்குமோத யாரறிவாரே
பனையில் தென்னையில் பலதர மரங்களில் பாங்காய் தொங்கினர் படையினர் பலரே
மனம் பொறுக்காத ஆட்சியாளர் மக்களை வதைக்க இட்டனர் கட்டளை
கொழுத்தினர் வீடுகள் எரித்தனர் சாலைகள் சித்திரவதைகள் சரளமாய செய்தனர்
கோடிக்கணக்காய் அழித்தனர் சொத்தினை கொடுமை கொடுமை இயம்புதற்கெளிதே
சர்வதேச அரங்கில் வளர்ந்தது சண்டமாருத தென்றல் தானே.
 
5. பொங்கி எழுந்தனர் புவிதனில் வாழும் ஆறுகோடி தமிழர் கூட்டம்
தமிழகம்தனில் தற்கொலை செய்தனர் தயங்காதுதவி தானாய் கொடுமென
தானாடாவிடினும் தன்தசையாடுமென தனிப்பெருந்தலைவன் தகவுடன் உரைத்தான்.
இராம தூதராய் வந்த நெடுமாறன் இரத்தம் கொதித்திட கடலினில் வந்தான்
பொறுமை காத்திடல் நலமெனக்கூறி பொறுப்பை ஏற்றான் பாரத தலைவன்
பார்த்த சாரதியும் றொமேஸ் பண்டாரியும் பாங்காய் தூது வந்ததனால்
பாரதப் போரும் பதினெட்டு நாள் போர் நிறுத்தமும் பதினெட்டு வாரமே.
 
6. விலாங்காய் விளங்கும் வல்வினையாளர் வீணாய் மொசட்டிடம் தஞ்சமாகினர்
பலஸ்தீன மதற்கு பரிவும் காட்டி புகழிடம் கொடுத்து யூதரை ஏற்றனர்
சதுரங்கமதனை சரியாயாடிட சாட்சாத் அமெரிக்க அரசு அயராது உழைக்குது
திக்கொளி பரப்பிய திம்பு பேச்சுக்கும் திட்டமிட்ட டில்லி பேச்சுக்கும்
தீர்வுண்டாவென எழுந்தது கேள்வி திகைத்து நிற்கும் தீரர்கள் இடையே
பெடியங்கள் என்ற பொற்பதம் தன்னை பி. பி. சி. அழைக்குது செல்லமாகவே
பெரியோர் சிறியோர் பேராளர் பெண்கள் வாயிலும் பெடியங்களே
குழந்தை குட்டி குருமன்களெல்லாம் பெடியன்களென்றே பெருமிதமாகிறார்.
 
7. அந்தோ அன்னை இந்திரா இருந்திடின் இற்றைவரைக்கும் காத்திருப்போமோ?
ஆயினும் இளவல் ரஜீவ்காந்தி விட்டிடுவாரென விளம்பலாமா
எதற்கும் எங்கள் கால்களுண்டுளூ எதிர்த்து நிற்கும் ஆற்றலுண்டு
எண்ணிய எண்ணியாங் கெய்துவரெல்லோ எண்ணியர் திண்ணியராகப் பெறின்
என்றிட்ட வள்ளுவர் வாக்கிது பொய்யோ ஏதிலார் மனுவின் பரம்பரையல்லோ
தர்மயுத்தத்தில் வெற்றியே காண்பீர் தயங்காது ஒன்றாய் கூடினாலல்லோ
பெடியங்கள் பெடியங்கள் பெடியங்கள் என்றுபோற்றித் துதித்திட பேணுவீர்நின்னை.
 
தம்பிமாரே
 
ஒழுக்கம் விழுப்பம் தரும் தம்பிமாரே
ஓரணியில் நின்றிடுவீர் தம்பிமாரே
மறத்தமிழன் நிலம் காக்க தம்பிமாரே
மறுவற்ற சேவை செய்வீர் தம்பிமாரே
காலம் காலமெல்லாம் தம்பிமாரே
கதை கதையாய் போச்சுதையோ தம்பிமாரே
வேறுபட்டு நிற்பதனால் தம்பிமாரே
வெந்து நெஞ்சு வேகுதையோ தம்பிமாரே
கூறுபோட்டு விடவல்pலவோ தம்பிமாரே
குறி வைத்து ஆளுகின்றான் தம்பிமாரே
பதவி மோசம் முனி என்று தம்பிமாரே
பக்குவமாய் செப்பிடுவீர் தம்பிமாரே
தன்னலமற்ற சேவை செய்தால் தம்பிமாரே
தனக்குவமை உண்டோ பாரில் தம்பிமாரே
பட்டம் பதவியெல்லாம் தம்பிமாரே
பாங்காய் வந்து சேருமெல்லோ தம்பிமாரே
பதவிக்காக முயற்சியெல்லாம் தம்பிமாரே
அர்த்தமற்ற சுயநலமே தம்பிமாரே
குளத்தைக் கலக்கியல்லோ தம்பிமாரே
பருந்திரையாக்கிடாதீர் தம்பிமாரே
தியாகிகளாய் சென்றுள்ள தம்பிமாரே
தீதுவழி செல்லாதீர் தம்பிமாரே
அட்டவதானத்துடன் தம்பிமாரே
அரும்பணியாற்றிடுவீர் தம்பிமாரே
வேறுபாடற்று நின்று தம்பிமாரே
விறல்வேற்கைபோல் எழுங்கள் தம்பிமாரே
மாற்றானின் பலமறிந்து தம்பிமாரே
மனதார உழைக்க வேண்டும் தம்பிமாரே
சிங்கள பௌத்தம் தான் நாட்டில் என்று தம்பிமாரே
எப்படியும் காப்பேன் என்றான் தம்பிமாரே
குள்ளநரிக் கூட்டமெல்லோ தம்பிமாரே
குறியால் உணர வேண்டும் தம்பிமாரே
படையெடுத்துச் செல்லுமுன்னே தம்பிமாரே
படைத்தவனை வேண்டிடடா தம்பிமாரே
வீறுபெற்று எழுந்திருங்கோ தம்பிமாரே
ஏறுநடை போடுங்கோ தம்பிமாரே
வெற்றி வெற்றி வெற்றி என்று தம்பிமாரே
விடாது நின்றோதிடுங்கோ தம்பிமாரே.
சுபம்
 
ஆக்கம் : கனகராஜன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்