தமிழ்த் தேசிய தளத்தை பாதுகாப்பதற்கான உபாயம் என்ன?
18 புரட்டாசி 2020 வெள்ளி 10:11 | பார்வைகள் : 9880
அரசாங்கம் அதன் சிங்கள அடிப்படைவாத வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்துவருகின்றது. ஒரு புறம் ராஐபக்சக்கள் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்வது, மறுபுறமாக வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தை பலவீனப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது. மேற்படி இரண்டு வேலைத்திட்டங்களிலும், எந்தவொரு சமரசமுமின்றி அரசாங்கம் துரிதமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. சிங்கள அடிப்படைவாதத்தின் குறீடாக எழுச்சியுற்றிருக்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து இதற்கு மேல் வேறு எதனையும் எதிர்பார்க்கவும் முடியாது. எனவே இப்போது தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அதாவது தங்களது கட்சிகளின் பெயர்களில் தேசியத்தை வைத்திருக்கும் கட்சிகள் ஆகக் குறைந்தது, ஒரு இடைக்கால ஏற்பாடென்னும் அடிப்படையிலாவது ஒன்றுபட வேண்டியிருக்கின்றது. இதனுடன் தமிழ்த் தேசியத்தை தங்களது அரசியல் நிலப்பாடாக வைத்திருக்கும் சிவில் சமூக தரப்புக்கள், புத்திஜீவிகள், மக்கள் அமைப்புக்கள் அனைத்தும் ஓரணியில் திரட்சிபெற வேண்டியிருக்கின்றது. ஏன் இவ்வாறானதொரு தமிழ்த் தேசிய அமைப்பாக்கம் அவரசமாகத் தேவைப்படுகின்றது?
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஒரு தெளிவான செய்தியை சொல்லிச் சென்றிருக்கின்றது. அதாவது, தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் தங்களுக்குள் இணையக் கூடிய ஆகக்குறைந்த புள்ளிகளையாவது கண்டுபிடிக்காவிட்டால், தமிழ்த் தேசியத்தை கொள்கையளவில் எதிர்க்கும் அரச தரப்பு தமிழ் கட்சிகளின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கலாம். வடக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றி, கிழக்கில் பிள்ளையான் தரப்பின் வெற்றி அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பின் அம்பாறை பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கியிருக்கும் கருணா தரப்பின் வெற்றி – இவையெல்லாம் ஒரு தெளிவான படிப்பினையை தந்திருக்கின்றது. இந்த படிப்பினைகளிலிருந்து தமிழ்த் தேசிய தரப்புக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான் அதாவது, ஒன்றுபடுவதற்கான வாய்ப்புக்களை தேடுவது. வுhய்ப்புக்கள் சில வேளைகளில் நமக்கு முன்னால் தெளிவாகவே தென்படும். அப்படித் தென்படாத சந்தர்பத்தில், தங்களுக்கான வாய்ப்புக்களை தமிழ்த் தேசிய தரப்புக்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் நடந்து முடிந்த தேல்தல் முடிவுகள் நமக்கு முன்னால் வாய்ப்புக்களை தெளிவாக முன்னிறுத்தியிருக்கின்றது. அதனை பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதுதான் எஞ்சியிருக்கும் பணி.
இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு பின்னால் ஒரு தெளிவான காரணமுண்டு. தமிழ்த் தேசிய தளம் என்றால் என்ன என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத் தமிழரின் வரலாற்று வாழ்விடமான வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கூடடுணர்வுதான் தமிழ்த் தேசிய தளமாகும். அந்த கூட்டுணர்வை சிதறடிப்பதுதான் தமிழ்த் தேசியத் தளத்தை பலவீனப்படுத்துவதற்கான ஒரேயொரு வழிமுறையாகும். தமிழ் மக்கள் தங்களின் கூட்டுணர்வை ஒரு தேர்தலின் மூலம்தான் மெய்ப்பித்துக் காட்ட முடியும். அதனை விடவும் வேறு வழிமுறை ஒன்றில்லை. அந்த வகையில் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தெரிவுசெய்யும் பிரதிநித்துவ பலம்தான், அவர்களின் கூட்டுணர்விற்கான ஆதாரம். அதுவே தமிழ்த் தேசியத்திற்கான அஸ்திபாரம். இந்த அஸ்திபாரம் தற்போது ஆட்டம் கண்டிருக்கின்றது. இங்கு ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, தமிழ் அரசியல் கட்சிகளின் வெற்றியும் – தமிழ்த் தேசிய நிலைப்பாடுகொண்ட தமிழ் கட்சிகளின் தேர்தல் வெற்றியும் ஒரே பெறுமதியானதல்ல. இரண்டும் அடிப்படையிலேயே வேறானது. வடக்கு மாகாணத்தில் எவர் வென்றாலும் தமிழர்கள்தானே வரப் போகின்றனர் என்று கூறுவது தமிழ்த் தேசிய நோக்கில் தவறானது. ஏனெனில் அவ்வாறு வெற்றிபெறும் அனைத்து தமிழர்களும் ஓரணியில் இல்லை. ஒரு சிலர் அரசின் மேலாதிக்க நிகழ்சிநிரலுக்கு விரும்பியோ விரும்பாமலோ துணைபோவர்கள். அரசாங்கம் சிங்கள மேலாதிக்க மனோபாவத்தை விடுத்து, தமிழ் மக்களையும் சம பிரiஐகளா கருதக் கூடியதொரு அரசியல் சூழல் இலங்கைத் தீவில் இருக்குமாயின், எந்தவொரு தமிழர் வென்றாலும் பரவாயில்லையென்று வாதிடுவதில் பொருள் இருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு அரசியல் யதார்த்தம் இந்தத் தீவில் இதுவரை சாத்தியமாகவில்லை. அதுவரைக்கும் தமிழ்த் தேசிய இனம் தனது கூட்டுணர்வை பேணிப்பாதுகாக்க வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும். வரலாற்றுத் தேவைகளை புறக்கணித்து செயற்படும்போது, ஒரு இனம் அதற்கான தனித்துவமான வரலாற்றை இழந்து அடையாளமற்ற சமூகமாக வாழநேரிடும். தமிழர் தேசம் இப்போது எதிர்கொண்டிருக்கும் முதன்மையான சவால் இதுதான். இந்த சவாலை முறியடிப்பதற்கான வியூகங்களை வகுத்து செயற்படுவதுதான் தமிழ்த் தேசிய தரப்புக்களின் தலையாய கடப்பாடாக இருக்க வேண்டும்.
இந்த பின்புலத்தில் நோக்கினால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி, மாகாண சபைத் தேர்தலையும் தமிழ்த் தேசிய கட்சிகள் பிளிவுற்று எதிர்கொள்ளுமாயின் வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் இழக்க நேரிடும். மிகவும் பலமானதொரு தனிச்சிங்கள அரசாங்கம் இருக்கின்ற நிலையில், வழமையான நமது அரசியல் விவாதங்கள் அனைத்தும் நீர்த்துப் போய்விட்டது. உதாணரமாக மாகாண சபையில் ஒன்றுமில்லை என்றவாறான வாதங்கள். ஏனெனில் இ;ன்றைய நிலையில் வடக்கு மாகாண சபையையும் தமிழ்த் தேசிய கட்சிகள் இழக்குமாயின் அல்லது தொங்கு நிலையில் ஒரு அதிகாரத்தை பெறுமாயின் அது தமிழ்த் தேசிய தளத்தின் மோசமான வீழ்சியாகவே அமையும். அரச தரப்பு தமிழ் கட்சிகளின் அதிகாரத்திற்குள் வடக்கு மாகாண சபை வீழுமாயின், அதன் பின்னர் எந்த அடிப்படையில் தமிழ்த் தேசியப் தரப்புக்கள் தங்களை நியாயப்படுத்த முடியும். இந்த இடத்தில்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட தமிழ் மக்களின் கூட்டுணர்வின் வெளிப்பாட்டை எண்ணிப்பார்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கான கூட்டுணர்வுத் தளம் சரிந்திருக்கின்றது. அதுவே வடக்கு மாகாண சபைக்கும் நிகழுமாயின் அதன் பின்னர் எந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசியவாதம் தன்னை மெய்பிக்க முடியும்?
கிழக்கு மாகாண சபையை பொறுத்தவரையில் நிலைமைகள் வித்தியாசமானது ஆனாலும் அங்கும் தமிழ்த் தேசியத்தை பெயரில் வைத்திருக்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்குமாக இருந்தால், அதிக கூடிய பிரதிநிதித்துவங்களை தக்கவைக்க முடியும். முஸ்லிம்களுடன்; ஒரு அர்த்தபுஸ்டியுள்ள உடன்பாட்டை செய்துகொண்டு ஆட்சியையும் பிடிக்கலாம். ஒரு வேளை அது சாத்தியப்படவில்லையாயின், அதி கூடிய ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாக செயற்படலாம். பலம் வாய்ந்த ஒரு அரசாங்கத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையை தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஆட்சியமைத்தும் எதுவும் பெரிதாக நடந்துவிடப் போவதில்லை. மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்னும் எனது வாதமானது, தமிழ் மக்களின் கூட்டுணர்வை பேணிப்பாதுகாப்பதன் ஊடாக, தமிழ்த் தேசிய தளத்தை பேணிப்பாதுகாப்பதற்கான உபாயமாகும். மாறாக மாகாண சபையில் இருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் நான் இங்கு வாதிடவில்லை. ஏனெனில் இந்தக் காலத்தில் இதனைத் தவிர வேறு எதனையும் தமிழ்த் தேசிய தரப்புக்களால் செய்ய முடியாது. அத்துடன் தமிழர் தாயக் பகுதியில் தமிழ் கூட்டுணர்வை பாதுகாக்க முடியாவிட்டால் வெளித்தரப்புக்களுடன் உரையாடுவதற்கான தார்மீக பலத்தையும் நாம் இழந்துவிடுவோம்.
ஏனெனில் இது அரசியல்ரீதியில் அடைக்காப்பதற்கான காலம் மட்டுமே. குஞ்சுகளை பொரிப்பதற்கான காலம் வரும் வரையில் அடைகாத்தலை பேணிப்பாதுகாக்க வேண்டும். ஒரு வேளை அதற்கான வாய்ப்பு மீளவும் 2025இல் வரக் கூடும். தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பதற்கான தமிழ் கூட்டுணர்வை பேணிப்பாதுகாப்பதுதான் அந்த அடைகாத்தலாகும். அதற்கான ஒரேயொரு வழிமுறை இலங்கையின் தேர்தல்களின் மூலம் பெறக் கூடிய, ஆகக் கூடிய அல்லது முழுமையான பிரதிநிதித்துவ பலம் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இருக்க வேண்டும். இந்த பின்புலத்தில் நோக்கினால் அடுத்துவரவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கின் பிரதிநிதித்துவங்கள் தமிழ்த் தேசிய தரப்புக்களால் வெற்றிகொள்ளப்பட வேண்டும். அது நடக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியத்தை பெயரில் வைத்திருக்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும். இது நடந்தால் மட்டும்தான் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய தளத்தை பேணிப்பாதுகாக்க முடியும்.
இதற்கான உபாயங்கள் என்ன? தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியத்தை பெயரில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அல்லது விக்கினேஸ்வரன் புதிதாக ஒரு கட்சியை பதிவுசெய்ய முடிந்தால் அவரது கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அத்துடன் தற்போது மணிவண்ணன் தலைமையில் உருவாகிவரும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை, ஐங்கரநேசன் தலைமையிலான பசுமைக் கட்சி, இதனுடன் கொள்கை அடிப்படையில இணைந்து வரக் கூடிய சிவில் சமூக அமைப்புகள், இடதுசாரிக் குழுக்கள், என அனைவரையும் ஓரணிப்படுத்துவதன் மூலம், நான் மேலே குறிப்பிட்டவாறான நிலைமையை ஏற்படுத்த முடியும். இவர்கள் அனைவரும் இணைந்து கொள்வதில் எந்தவொரு கொள்கைசார்ந்த தடைகளும் இல்லை. அத்துடன், இவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளும் அல்ல, அத்துடன் தீர்க்கவே முடியாத முரண்பாடுகளும் இல்லை.
இவ்வாறானதொரு முயற்சியின் போது, ஏற்படக் கூடிய பிரதான பிரச்சினை சின்னம் சார்ந்த பிரச்சினையாகவே இருக்கும். எந்தச் சின்னத்தின் கீழ் தேர்தலை எதிகொள்வதென்பதே முதலில் சலசலப்புக்களை ஏற்படுத்தும். இதில் எந்தவொரு கட்சியின் சின்னத்தை முதன்மைப்படுத்தினாலும் முரண்பாடுகளே தோன்றும். இதனை தவிர்ப்பதற்கு சரியானதொரு உபாயம் ஒரு பொதுச் சின்னத்திற்கு செல்வதுதான். ஏனெனில் இன்றைய நிலையில் ஏகமனதாக மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு சின்னம் இல்லை. வீட்டுச் சின்னம் தொடர்பில் இருந்த மயையையும் கடந்த தேர்தல் முடிவுகள் பொய்ப்பித்துவிட்டது. வீட்டுச் சின்னத்தில் அனைத்து கட்சிகளும் போட்டியிடுவதற்கு சம்மதித்தால் ஒரு தெளிவான பகிரங்கப்படுத்தப்பட்ட உடன்பாட்டின் கீழ் அதனை மேற்கொள்ளலாம் ஆனால், அதற்கு அனைத்து தரப்புக்களையும் இணங்கச் செய்வது கல்லில் நாருரி;ப்பதற்கு ஒப்பானது. அதே வேளை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சின்னங்களில் போட்டியிட்டவர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் அதருப்திகளையும் பொதுச் சின்னமொன்றின் ஊடாக இல்லாமலாக்கலாம். வீடு, மீன், சைக்கிள் என்றெல்லாம் மோத வேண்டிய அவசியமும் இல்லாமல் போகும். தமிழ்த் தேசியத்தை பெயரில் வைத்திருக்கும் அனைத்து கட்சிகளும் இதனை கருத்தில் கொண்டு, செற்படுவதற்கான முயற்சிகளை உடனடியாகவே மேற்கொள்ள வேண்டும்.
இது முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதற்கான காலம் அல்ல. அதிகம் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களை தேடவேண்டிய காலம். தமிழ்த் தேசியத்தின் அஸ்திபாரமான, தமிழ் மக்களின் கூட்டுணர்வை சிதறடித்துவிட்டு, தமிழ்த் தேசியத்தை கட்சிகளின் பெயரில் வைத்திருப்பதில் எந்தவொரு பயனும் இல்லை. தமிழ் மக்களின் கூட்டுணர்வை பாதுகாக்க முடியாவிட்டால், இத்தனை கட்சிகள் இருப்பதன் பயன் என்ன?