தமிழ்த் தலைமைகள் இந்தியத் தலையீட்டை கோர வேண்டிய தருணம்!
27 ஆவணி 2020 வியாழன் 17:35 | பார்வைகள் : 9239
தமிழர் அரசியல் மிகவும் தீர்க்கமானதொரு கட்டத்திற்குள் பிரவேசத்திருக்கின்றது. 1977இல், ஜே.ஆர். ஐயவர்த்தன பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சியமைத்த போது எவ்வாறானதொரு நிலைமையிருந்ததோ அவ்வாறானதொரு நிலைமையே தற்போதும் காணப்படுகின்றது.
77இல் வெற்றிபெற்ற ஜே.ஆர் தனது அரசியல் இருப்பையும், ஜக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தையும் கேள்விகளுக்கு அப்பாற்றபட்டவகையில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முற்றிலும் புறம்தள்ளி, சிங்கள பெரும்பாண்மைவாத அரசியல் யாப்பொன்றை கொண்டுவந்தார். அவ்வாறானதொரு நிலைமை மீளவும் ஏற்படுவதற்கானதொரு சூழல் தென்னிலங்கை அரசியலில் காணப்படுகின்றது. இதற்கான ஒத்திகையாகவே 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
13வது திருத்தச்சட்டம் சடமாக்கப்பட்டு, மாகாண சபை முறைமை அமுலுக்கு வந்த காலத்திலிருந்து, அதனை நீக்க வேண்டுமென்னும் குரல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அவ்வப்போது இந்தக் கோரிக்கைள் தோன்றி மறைந்திருக்கின்றன. இந்திய எதிர்ப்பு மானோபாவம் கொண்ட சிங்கள கடும்போக்குவாதிகள் காலத்திற்கு காலம், இந்தக் கோரிக்கையை முன்தள்ள முயற்சித்திருக்கின்றனர் ஆனால் தற்போது இந்தக் கோரிக்கைகள் முன்னரைவிடவும் வீரியத்துடன் மேலெழுந்திருக்கின்றது. இதற்கு கோட்டபாய ராஜபக்சவின் அரசியல் வெற்றியும் ஒரு பிரதான காரணமாகும்.
கோட்டபாய தனிச் சிங்களப் பெரும்பாண்மையின் ஆதரவுடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தற்போது, பலமானதொரு சிங்களத் தேசியவாத அரசாங்கமொன்று உருவாகியிருப்பதும், சிங்கள கடும்போக்குவாதிகள் மிகவும் உற்சாகமடைந்திருக்கின்றனர். தாங்கள் விரும்பும் விடயங்களை செய்வதற்கான சரியான தருணம் இதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள். கோட்டாவின் வெற்றியானது, சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் வெற்றியாகவே நோக்கப்படுகின்றது. கோட்டபாயவும் தனது வெற்றிக்கு அவ்வாறானதொரு தோற்றத்தைத்தான் வழங்க முயற்சிக்கின்றார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் வாயிலாக சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தச்சடத்தை நீக்க வேண்டுமென்னும் கோரிக்கைகள் மீண்டும் தென்னிலங்கை அரசியலை ஆக்கிரமித்திருக்கின்றது.
மாகாண சபை முறைமை என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவு. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட ஒன்று. அதில் போதாமைகள் இருப்பதாக தமிழர் தலைமைகள் தொடர்ச்சியாக கூறிவந்தாலும் கூட, தற்போதைய சூழலில் தமிழர்களுக்கு சாதகமாக இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவல் ஏற்பாடு அது மட்டும்தான். அந்த ஆகக்குறைந்த அதிகாரப்பகிர்விற்கான ஏற்பாட்டைக் கூட இல்லாமலாக்க வேண்டுமென்றே சிங்கள அடிப்படைவாதத் தரப்புக்கள் முயற்சிக்கின்றன. அவர்கள் இதன் மூலம் ஒரு விடயத்தை தெளிவாக வலியுறுத்த முற்படுகின்றனர். அதாவது, இலங்கைத் தீவில் தமிழர் வாழலாம் ஆனால், அவர்கள் எந்தவொரு அதிகாரத்தையும் கோருவதற்கு தகுதியற்றவர்களாவர்.
அதே வேளை இதனை இன்னும் ஆழமாகப் பார்ப்போமானால், சிங்கள பவுத்த தேசியவாதிகள் மத்தியில் புரையோடிப்போயுள்ள இந்திய எதிர்ப்பு மனோபாவமும் இதற்கு பின்னாலிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டம் இந்தியாவின் தலையீட்டிற்கான ஒரு காரணியாக இருக்கின்றது என்னும் நிலைப்பாட்டிலிருந்துதான், அவர்கள் இந்தக் கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். தமிழர் பிரச்சினையென்று வருகின்ற போது, இந்தியா தொடர்ச்சியாக 13வது திருத்தச்சட்டத்தை பற்றியே பேசிவருகின்றது. ஏனெனில் இந்தியாவிற்கு அதில் ஒரு உரித்துண்டு. 13வது திருத்தச்சட்டத்தை நீக்கினால் இந்தியாவின் தலையீடு செய்யும் அந்த உரித்தை இல்லாமலாக்கலாம் என்றே சிங்கள தேசியவாதிகள் கணிக்கின்றனர். கோட்டபாய ஏற்கனவே 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. இந்தப் பின்புலத்திலேயே தெற்கின் சிங்கள அடிப்படைவாதிகள் இப்போது இந்த விடயத்தை கையிலெடுத்திருக்கின்றனர். கோட்டபாய தனது அக்கிராசன உரையிலும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசியிருக்கின்றார்.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை இல்லாமலாக்க வேண்டுமென்பது, சிங்கள பௌத்த தேசியவாதிகளின் ஒரு நெடுநாள் ஆசை. ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, அவர்களுக்குள் முகழ்ந்த நெருப்பு இன்னும் அணையவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் தங்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை வெளியில் காட்டத் தவறுவதில்லை. இப்போதும் அதுதான் நடக்கின்றது. ஆனால் நிலைமை இப்போது முன்னரைப் போன்று இல்லை. அவர்கள் தங்களுக்கான வரலாற்று தருணம் கிடைத்திருப்பதாகவே கருதுகின்றனர். கடந்த காலத்திலிருந்த அரசாங்கங்கள் 13வது திருத்தச்சட்டமானது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அங்கம் என்பதால், இந்த விடயத்தில் எச்சரிக்கையுடனேயே நடந்துகொண்டன.
ஆனால் தற்போது ஆட்சியிலிருக்கும் கோட்டபாய ராஐபக்சவிடமும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் சாதகமான கருத்துக்கள் இல்லாமையினால், அவரது ஆதரவுடன் தாங்கள் விரும்புவதை இ;ம்முறை செய்துமுடித்துவிடலாமென்றே கடும்போக்குவாதிகள் எண்ணக் கூடும். அதே வேளை, மாகாண சபைகள் விவகாரத்தை கையாளுவதற்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவர் அடிப்படையிலேயே மாகாண சபை முறைமைக்கெதிரான நிலைப்பாடுள்ள ஒருவர். மாகாண சபை முறைமையை பலப்படுத்த வேண்டுமென்று அரசாங்கம் எண்ணியிருந்தால், அவ்வாறான ஒருவரை எதற்காக அமைச்சராக நியமிக்க வேண்டும்? இந்த விடயமும் ஆழமான சிந்தனைக்குரியது.
கடந்த ஐந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியின் போது, புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பு அதன் நேரத்தை வீணாக்கியிருந்தது. இதன் போது 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி தாம் அதிக தூரம் போய்விட்டதாகவும் சம்பந்தன் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் நிலைமைகளோ, ஆகக் குறைந்தது, இருக்கின்ற 13வது திருத்தத்தையாவது தமிழ் தலைமைகளால் காப்பாற்ற முடியுமா என்னும் கேள்வியில் தமிழ் அரசியலை நிறுத்தியிருக்கின்றது.
13வது திருத்தத்தில் என்ன இருக்கின்றது – என்ன இல்லையென்று விவாதிப்பதற்கான நேரம் கூட அதிகம் சுருங்கிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் ராஐபக்சக்களின் பலத்திற்கு முன்னால் தமிழர்களுக்கான நேரம் குறைந்து கொண்டிருக்கின்றது. 13 நீக்கப்படுவதில் அல்லது அது வெட்டிக் குறைக்கப்படுவது தொடர்பில் தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருப்பார்களானால், இலங்கைத் தீவில் அதிகாரக் பகிர்விற்கான குரலைக் கூட இழக்க நேரிடும். 13 தொடர்பில் என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும், இன்றும் இலங்கைக்குள் அதிகாரப்பகிர்விற்கான குரலை தக்கவைத்திருப்பதில் 13இற்கு ஒரு தவிர்க்க முடியாத இடமுண்டு. இலங்கைக்குள் அதிகாரப் பகிர்விற்கான குரலை பாதுகாக்க வேண்டுமாயின், 13யை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.
இந்த நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்ளுவதற்கு தமிழ் தலைமைகள் என்ன செய்யலாம்? அவர்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள் என்ன? உண்மையில் தற்போது தமிழ் தலைமைகளுக்கு முன்னால் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. அதவாது, இந்த விடயத்தில் இந்தியாவை அணுக வேண்டும். இதில் தமிழ் தலைமைகள் தாமதிக்கக் கூடாது. இது தொடர்பில் தமிழ் தலைமைகள் தங்களுக்குள் கூடி, முதலில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை இந்தியாவை அணுகுவதில் ஒரு கூட்டு உடன்பாட்டிற்கு வரவேண்டியது மிகவும் அவசரமானது. கொள்கை, கருத்து முரண்பாடென்று இதில் மோதிக்கொள்ள முடியாது. ஒரு வேளை இதில் எவரேனும் உடன்படவில்லையென்றால் அவரை விட்டுவிட்டு, மற்றவர்கள் விடயங்களை கையாளவேண்டும். 13யை பாதுகாப்பதில் இந்தியாவிற்குள்ள உரித்தை தமிழ் தலைமைகள் உணர்;த்தாவிட்டால், அதன் பின்னர் இந்தியா இந்த விடயத்தில் தலையீடுசெய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. தமிழர்களே தேவையில்லையென்று கூறுகின்ற ஒரு விடயத்தை எதற்காக இந்தியா பாதுகாக்க வேண்டும்? எனவே தமிழ் தலைமைகள் இதனை கொள்கை சார்ந்த விடயங்களுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இது கொள்கை சார்ந்த பிரச்சினையல்ல, மாறாக, அரசியல் தந்திரோபாயம் சார்ந்த பிரச்சினை. அரசியல் தந்திரோபாயம் சார்ந்த பிரச்சினைகளை கொள்கை சார்ந்த பிரச்சினைகளோடு தொடர்புபடுத்தி குழும்பிக் கொள்ள வேண்டியதில்லை.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னால் இந்தியாவின் நலன்கள் இருந்தன என்பது எந்தளவு தூரம் உண்மையோ, அதேயளவிற்கு, இந்தியாவின் நலன்களுக்கான நகர்வுகளின் விiளாவாகவே தமிழர் பிரச்சினை இந்தியாவின் கரிசனைக்குள் வந்தது என்பதும் உண்மையானது. உண்மையில், இலங்கையை தங்களது கண்காணிப்பின் எல்லைக்குள் வைத்திருப்பதுதான் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் இலக்கு. அந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு காரணியாகவே தமிழர் பிரச்சினையிருந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் முகப்பிலேயே இலங்கையின் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை காண்பது அவசியமென்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த அடிப்படையில் சிந்தித்தால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அச்சாணியாக இருப்பது தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதான். இந்தியாவைப் பொறுத்தவரையில் அந்தத் தீர்வு, 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக் கொண்டதாக இருக்க வேண்டுமென்று தொடர்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றது. ஆனால் இந்தியா என்னதான் இதனை வலியுறுத்தினாலும் கூட, தேவையுள்ள தமிழர்கள் அது தொடர்பில் இந்தியாவை அணுகாவிட்டால், இந்தியாவின் வலியுறுத்தல்கள் ஒரு உதட்டளவு அழுத்தமாகவே இருக்கும். இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின், தமிழ் தலைமைகள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மீண்டும் கையிலெடுப்பதே உசிதமானது.
ஒரு வேளை பி. ஜே.பி இந்தியாவிற்கு, இந்த ஒப்பந்தம் தொடர்பில் புதிய சிந்தனைகள் இருக்கக் கூடும். கொழும்பு 13வதில் கையை வைக்கின்ற போது, பி.Nஐ.பி இந்தியா, காங்கிரஸின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலும் புதிய விடயங்களை உள்ளடக்கி, அதனை புதுப்பிக்கவும் முயற்சிக்கலாம். தற்போதுள்ள சூழலில் பிராந்திய – சர்வதேச உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கைத் தீவை மையப்படுத்தியும் சில மாற்றங்ளை காண்பிக்கலாம். அரசியலில் எதுவும் நிகழ்வதற்கான காலமொன்றுக்குள் தமிழர்கள் பிரவேசிக்கின்றனர். இதனை புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது தமிழ் தலைமைகளின் வரலாற்று கடமையாகும்.