சமூக முடக்கம் ஏற்படுத்திய இனமுடக்கம்
24 ஆவணி 2020 திங்கள் 15:49 | பார்வைகள் : 9464
இலங்கை மக்களின் இனமுரண்பாடு கொரோனாத் தொற்றுக்கு பின்பு சமூகத்தில் தீவிரமடைந்து உள்ளதை அண்மைய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது.
சமூக பொருளாதாரச் சிக்கலினை தவறாக ஆட்சியாளர்கள் எதிர்கொள்ளும்போது இனமுரண்பாடுகள் அதிகரிக்கும். இதன்போது ஆட்சியினைத் தக்கவைப்பதற்காக இனரீதியாக, மதரீதியாக வாக்காளரை மையப்படுத்தி அரசியலில் கட்சிகள் இயங்குகின்றன. இவையே நாட்டில் நல்லிணக்கச் சூழல் அற்றுப்போகும் சூழல் உருவாவதற்கு காரணமாகின்றது.
கொரோனாத் தொற்று பாரிய சமூக பொருளாதார பின்னடைவை முழு உலகிலும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்து கொரோனாப் பரவனையைக் கட்டுப்படுத்துவதற்கு ஆட்சியாளர்களுக்கு சட்டத்திற்கு மேலான சட்ட அதிகாரம் கிடைத்துள்ளது. இது அசாதாரண சர்வாதிகார ஆட்சியினை ஆட்சியாளர் அமைப்பதற்கு ஏதுவாக அமைந்தது. கொரோனாத் தொற்றுத் தொடர்பான சமூகச் செயற்பாடுகள் பல்லினச் சமூகச்சூழலில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகைகள், பாதுகாப்புக்கள் கேள்விக்குட்பட்டதாகவும், பெரும்பான்மையினருக்குச் சாதகமானதாகவும் அமைவதனால் இனங்களுக்கு இடையிலான முரண்பாடு அதிகரித்த தன்மையும் பெரும்பான்மைச் சமூக ஆட்சியாளர்களுக்கு சார்பாக ஆதரவு வழங்கிய நிலைமையும் ஏற்பட்டது.
இதனாலேயே இலங்கையில் ஆட்சியாளர்கள் ⅔ பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியினை அமைக்க முடிந்தது. அதாவது கொரோனாத் தொற்றில் சமூக பொருளாதார இராஜதந்திர தாக்கம் இலங்கையில் தணல்விட்டுக் கொண்டிருந்த இனமுரண்பாடுகளைப் பற்றி எரிவதற்கான எரிபொருளாக மாறியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு ஓர் உலக அசாதாரண சூழலில் ஆட்சியைக் கைப்பற்றிய பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரது உரிமைகளை மதிக்காது அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. இது இலங்கையில் இனமுரண்பாட்டை மேலும் அதிகரிக்கும்.
கொரோனாவிற்குப் பின்பான உலகில் உள்நாட்டு அரசியல் உரிமைகள் அடக்கப்பட்ட வரிசையில் சீனாவினால் ஹொங்கோங் அடக்கப்படுகின்றமையை முதன்மையாகக் குறிப்பிடலாம். இந்தியாவினால் காஷ்மீர் மாநிலத்தின் மீதான அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. அதேபோல் இலங்கையிலும் தமிழர் மீதான பெரும்பான்மை இனத்தின் அடக்குமுறை அதிகரிக்கும் சூழலே உள்ளது. மேலும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் வெற்றி தோல்வி என்ற நிலையிலேயே உள்ளது.
கொரோனாவிற்கு பின்பான சர்வதேச உறவுகளிலும் பகைமைத்தன்மை அதிகரித்தும், இராஜதந்திர உறவாடல் தவிர்க்கப்படலும் காணப்படுகின்றது. இதற்கு ஐக்கிய அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகியமை, சீனா தைவான் கருத்து மோதல், லெபனான் மோதல்கள், துருக்கி, சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் பிணக்குகள் உதாரணங்கள் ஆகும். இந்நாடுகளில் எல்லாம் கொரோனாச் சமூக முடக்கத்திற்கு அப்பால் சிறுபான்மை இனங்களுக்கான முடக்கம் அதிகரித்து உள்ளது. இலங்கையிலும் அண்மைய புதிய ஆட்சியின் புதிய நிர்வாகப் போக்கு இலங்கையில் தமிழின முடக்கத்திற்கான பாதையாகவே அமையப் போகின்றது. அதனையே தற்போதைய 9வது பாராளுமன்றம் மாற்ற முனைகின்ற 19வது திருத்தச்சட்டமும், புதிய அரசியலமைப்புக்கான பெரும்பான்மை இனரீதியான முன்னெடுப்புக்களும் எடுத்துக் காட்டுகின்றன.