சுமந்திரன்! துப்பாக்கி இல்லாத சர்வாதிகாரி
13 ஆவணி 2020 வியாழன் 17:34 | பார்வைகள் : 9557
2018 ஒக்ரோபரில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, ரணில் அரசாங்கத்திற்கு ஆபத்த உருவானபோது, அதுவரை ரணில் அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
உள்ளூரில் நகைச்சுவையாக, வடலி வளர்த்து கள்ளுக்குடிக்கப் போகிறோம் என சொல்வதை போல, நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து அரசியல் தீர்வை பெற போகிறோம் என விசித்திர விளக்கம் வேறு கொடுத்தார். இலங்கை அரசியலில் பரிச்சயமுள்ள எவருக்கும் அந்த கருத்தின் அபத்தம் புரிந்திருக்கும்.
எனினும், எல்லா அரசியல்வாதிகள் மற்றும் நடிகைகளின் ரசிகர்களை போலவே, சுமந்திரனின் ஆதரவாளர்களும், மூளைக்கும் கைக்கும் தொடர்பில்லாமல், ஜனநாயகத்தின் காவலன் என்றொரு அடைமொழியை வழங்கி, அவரை சிலாகித்து வந்தனர்.
ஒருவர் சட்டத்தரணியாக இருப்பதாலோ, மெதடிஸ்த மிஷனரியில் உள்ளதாலோ, எதையும் வெளிப்படையாக கதைப்பதாக சொல்வதாலோ, நான் வன்முறையை விரும்பவில்லையென சொல்வதாலோ, அவர் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சுமந்திரனும் அப்படித்தான். அவர் உண்மையில் ஜனநாயகவாதியல்ல. மோசமான சர்வாதிகாரி.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகள், சரிவுகள் அனைத்திலும் சுமந்திரனின் தலையீடு உள்ளது. ஜனநாயக விழுமியங்களிற்கு எதிரான அவரது நடவடிக்கைகள் உள்ளன.
அதன் இறுதி வடிவம்தான- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் விவகாரம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனத்தை அம்பாறைக்கு வழங்குவதென எடுத்த தீர்மானம் அவ்வளவு விமர்சனத்திற்குரியதல்ல. அம்பாறைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது சரியா தவறா என்பதும் விவாதமல்ல.
இதில் பேசப்பட வேண்டிய விவகாரம்- அந்த நியமனம் வழங்கப்பட்ட முறை.
மிகப்பெரிய ஜனநாயகமீறல் நடந்துள்ள போதும் கட்சியின் கணிசமானவர்கள் வாய் திறக்கவில்லை. அறம் போதிக்கும் பத்தி எழுத்தாளர்களும், தமிழ் ஊடகங்களும் வாய் திறக்கவில்லை. ஜனநாயகத்தை மீறிய பணநாயகம் இதற்கு காரணமா என்பது தெரியவில்லை.
தேசியப்பட்டியல் என்பது 3 கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டியது. ஆனால் 3 கட்சிகளின் தலைவர்களிற்கும் தெரியாமல், ஒரு கட்சியின் இரண்டு உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் ஒருவரை தெரிவு செய்து, சம்பந்தன் அவரை அங்கீகரித்து, யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக ஒரு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மாவை சேனாதிராசா திறமையற்றவர், அம்பாறைக்கு ஆசனம் தேவையென்ற விவாதங்களில் இந்த பத்தி கவனம் செலுத்தவில்லை. அது இன்னொரு விவாதத்தளம்.
இதில் முதலாவது விவாதத்தளம்- தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதில் நடந்துள்ள ஜனநாயக மீறல்.
யுத்தத்தின் பின்னர் நடந்த எல்லா தேர்தல்களிலும், தேசியப்பட்டியல் நியமனத்தின் போது இப்படித்தான் நடந்தது. அதில் எல்லாம் சுமந்திரனே தலையிட்டார். இந்த விவகாரங்கள் முற்றி சம்பந்தப்பட்டவர்கள் வெளியேறிய பின்னர், “அவர் கதிரை கேட்டார். கொடுக்கவில்லையென்றதும் போய்விட்டார்“ என்ற பாணியில் கொச்சையாக விவகாரத்தை முடித்து வைத்தார்.
ஆனால், அங்கு நடந்த ஜனநாயக படுகொலையை பற்றி சுமந்திரனும் பேசியதில்லை. ஊடகங்களும் பேசியதில்லை. ஆனால், பின்னர்- புலிகள் ஆயுதம் தூக்கினார்கள், வன்முறையில் எனக்கு நாட்டமில்லையென்ற வியாக்கியானங்கள் வேறு!
ஜனநாயகம் என்பது சுமந்திரனின் விருப்பமல்ல. ஒரு கூட்டணியெனில், அதில் பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதே ஜனநாயகம். தேசியப்பட்டியல் விவகாரத்தில் 3 கட்சிகளின் தலைவர்களிற்கு தெரியாமல் முடிவெடுத்து… அது தெரிந்த பின்னர் அவர்களும், தமிழ் அரசியல் கட்சியின் அங்கங்களும் தெரிவித்த கருத்துக்களை புறம்தள்ளி சுமந்திரன் முடிவெடுத்தார். சுமந்திரனின் முடிவை செயற்படுத்தவர்தான் சம்பந்தனே தவிர, அவர் அதை முடிவெடுக்கவில்லை.
கட்சி நலன் என்ற ஒரு காரணத்தை சுமந்திரன் தரப்பு நியாயமாக சொல்லக்கூடும். அது ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கமல்ல. ஏனெனில், 2018இல் மைத்திரி கலைத்தது மிக மோசமாக தோல்வியடைந்த ஒரு அரசை. அது எவ்வளவு மோசமான அரசு என மக்கள் உணர்ந்திருந்தார்கள் என்பது, அதன் பின்னர் நடந்த தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. ஆனால், அது மோசமான அரசாயினும், ஜனநாயக நெறிமுறைகள் பின்பற்றப் பட வேண்டுமென, அப்போதைய “ஜனநாயக காவலன்“ சுமந்திரன் நீண்ட விளக்கங்கள் அளித்தார். ஆனால், அவரது நடவடிக்கைகள் நேர் எதிராக அமைந்துள்ளன.
அம்பாறைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கருத்து. ஆனால் ஒரு நியாயமான கருத்தை தனது தேவையொன்றிற்காக சுமந்திரன் எப்படி மோசமாக பயன்படுத்துகிறார் என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனும்-சி.சிறிதரனும் இணைந்து கூட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். சிறிதரனின் எதிர்பாராத உதவியும், சுமந்திரன் தேர்தலில் வெற்றியடைய காரணங்களில் ஒன்று. கூட்டமைப்பு தலைமையை சுமந்திரனும், தமிழ் அரசு கட்சியின் தலைமையை சிறிதரனும் கைப்பற்றுவது என்ற பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த இணைவு அமைந்தது.
தமிழ் அரசு கட்சியின் தலைமையை அகற்றி, சிறிதரனை நியமிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே, சுமந்திரன் தேசியப்பட்டியல் நியமனத்தை கலையரசனிற்கு வழங்கினார். எங்கும் இல்லாத நடைமுறையாக பொம்மை செயலாளர் கி.துரைராசசிங்கம் மூலம் பகிரங்க அறிவிப்பு விடுத்தால், அம்பாறை பிரதிநிதித்துவத்தை பறிப்பதில் மாவை தரப்பு சங்கடத்தை எதிர்கொள்ளும் என சுமந்திரன் கருதினார். ஆனால் மாவை, தலையிட்டு நியமனத்தை நிறுத்தியதையடுத்து, நியமன கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பினார்.
தேசியப்பட்டியல் ஆசன விபரங்களை 14ஆம் திகதி வரை சமர்ப்பிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தமிழ் அரசு கட்சியின் கடிதம் கிடைத்ததும், அன்றைய தினமே 3 கட்சிகளின் விபரத்தை மட்டும் அவசரஅவரமாக 10ஆம் திகதியே அறிவித்தது. தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள ஒருவருக்கும், சுமந்திரனுக்குமிடையிலான தொடர்பு ஊரறிந்தது. தேர்தல் ஆணைக்குழுவின் நடுநிலை தன்மைக்க மாறாக, சுமந்திரனின் ஆலோசனைப்படி அவர் செயற்பட்டார் என்ற விமர்சனமும் உள்ளது. தேசியப்பட்டியல் விபரம் அவசரஅவசரமாக வெளியானதன் பின்னணி விவகாரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தேசியப்பட்டியல் விவகாரத்தில், பங்காளிக்கட்சிகளுடன் ஆலோசிக்காமல், அவசரஅவசரமாக அறிவிக்கப்பட்டதற்கான ஒரே காணரம்- மாவையை தேசியப்பட்டியலில் நியமிக்காமல், பலவீனப்படுத்தி, கட்சி தலைமையை கைப்பற்றுவதே சுமந்திரனின் திட்டம். அது ஒரு வகையில் சதி முயற்சி.
தனது தரப்பு பலவீனம் என்னவென்பது மாவை சேனாதிராசாவிற்கு தெரியாது, ஏன் தலைமை மாற்றப்பட வேண்டுமென்பது தெரியாது… மாற்றம் அவசியமா என கட்சிக்குள் விவாதிக்கப்படாமல், கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களின் அபிப்பிராயத்தை கருத்தில் எடுக்காமல்- சுமந்திரன் என்ற தனிநபரின் விருப்பு வெறுப்பிற்கு அமைய நிகழ்த்தப்படும் மாற்றம் இது. முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர்தின உரைகளிற்கு வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ஒவ்வொரு விதமான பொழிப்புரை சொல்வார்கள் என நகைச்சுவையாக சொல்லப்படுவதுண்டு. அதேவிதமாக, சுமந்திரனின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு அவரது ஆதரவாளர்கள் காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2015 தேசியப்பட்டியல் நியமனம்- தனக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிற்கு கொடுக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக- பெண்கள் என்ற காரணத்தை கண்டுபிடித்தார். உண்மையிலேயே பெண் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனில் வெற்றியடையும் வேட்பாளரையே நிறுத்துவார்கள். ஆனால் அந்த தேர்தலில் மதனி என்ற பெண்மணியை சுமந்திரன் நிறுத்தியபோதே, பெண் பிரதிநிதித்துவம் குறித்த சுமந்திரனின் பார்வை தெரிய வந்திருக்கும். ஆயினும் பெண்கள் சந்திப்புக்களிலும், மேடைகளிலும் பெண் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பவரை போல அவர் கூறி வந்தார். ஒப்பீட்டளவில் இந்த விடயத்தில் மாவை சேனாதிராசா மேலானவர். சசிகலா ரவிராஜை அவர்தான் களமிறக்கினார்.
கடந்த 10 ஆண்டுகளில் சுமந்திரன் நிகழ்த்தியளவிலான ஜனநாயக படுகொலைகள், 30 வருட ஆயுதப் போராட்டக்காலத்திலும் நிகழ்ந்ததில்லை.
வடக்கு மாகாணசபை தேர்தில் விக்னேஸ்வரனை கொண்டு வருவதிலும், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும கலந்துரையாடல் நடத்தாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டார். இதனால் தமிழ் தேசிய அரசியலில் பெரு வீழ்ச்சி நிகழ்ந்தது.
யாழ் மாநகரசபை தேர்தலில், கிறிஸ்தவ வேட்பாளர், தனது “அரசியல் கூலிப்படையை“ போல இயங்கினார் என்ற ஒரே காரணத்தினால் ஆனல்ட்டை தெரிவு செய்தார். அதன்போது கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் நடக்கவில்லை. சுமந்திரனின் ஜனநாயக விரோத தெரிவுகள், முடிவுகள் குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம்.
இந்த நகர்வுகள் வெற்றியடைந்திருந்தால் கூட, கட்சியும் இனமும் ஓரளவு மீண்டிருக்கும். ஆனால், தமிழ் அரசியலில் சுமந்திரன் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் வெற்றியடையவில்லை. சுமந்திரன் வெற்றியடைந்த அரசியல்வாதியா என்பதை பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம். அதனால் இப்பொழுது தவிர்த்து விடுகிறேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இதுவரை ஜனநாயக விழுமியங்களிற்கு மாறாக தொடர்ந்து முடிவுகள் எடுத்து வரப்பட்ட போதும், நமது சமூகம் அதையிட்டு அதிகமாக அக்கறைப்படவில்லை. “அப்பிடியென்றால் பங்காளிகள் வெளியில் வரலாம்தானே“ என்பது மாதிரியாக ஒரு பதிலையே வைத்திருந்தார்கள். சமூகத்தின் இந்த ஆழமற்ற புரிதல் போக்கே, பலமான தமிழ் தேசிய அணியை உருவாக்க முடியாமல் போயுள்ளது.
மாவை சேனாதராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டுமென கூறும் எம்.பிக்களில் யாராவது ஒருவர் தனது ஆசனத்தை விட்டுக் கொடுக்கலாம்தானே என சமூக ஊடகங்களில் சில “அறிவாளிகள்“ எழுதியதை அவதானிக்க முடிந்தது. இத்தனைக்கும் அவர்கள் அரசியல கட்சிகளின் செயற்பாட்டு உறுப்பினர்கள். தேசியப்பட்டியல் விகாரத்தில், அது ஜனநாயக மீறலாக வழங்கப்பட்டதே பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள முடியாத இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்து, நமக்கு தீர்வு பெற்றுத்தர போகிறார்கள் என்பதை நினைக்கவே நெஞ்சம் வியர்க்கிறது!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எல்லா முக்கிய விவகாரங்களிலும் தலையிடும் சுமந்திரனுக்கு, ஏதாவதொரு தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில்- அந்த பிரச்சனைகளிற்கு முடிவை காண்கிறார். அந்த முடிவு சுமந்திரனுக்கும், அவரது ஆதரவாளர்களிற்கும் இனிப்பாக இருக்கிறது. ஆனால், நீண்டநாள் நோக்கில் தமிழ் சமூகத்திற்கு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
உதாரணத்திற்கு 3 விடயங்களை பற்றி மட்டும் சொல்லலாம்.
மாகாணசபைக்கு முதலமைச்சராக விக்னேஸ்வரனை கொண்டு வர எல்லா கட்சிகளும் எதிர்த்தன. சுமந்திரன் ஒற்றைக்காலில் நின்றார். விக்னேஸ்வரன் வந்தார். பின்னர், எல்லா கட்சிகளும் எதிர்க்க, விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை குழப்ப ஆனல்ட், சயந்தன், அஸ்மின் என்ற 3 “அரசியல் அடியாட்கள்“ மூலம் முயன்றார். விக்னேஸ்வரனிற்கு எதிரா நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர திரைமறைவில் செயற்பட்டார்.
தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரேயொரு தீர்வு மாகாணசபை முறைமை. அதனூடாக எதையாவது செய்யலாம் அல்லது கிடைத்ததை பாதுகாக்கலாம் என்றால், சுமந்திரனின் தனிப்பட்ட நலன்களினால் அது குழப்பப்பட்டது.
மாகாணசபையில் சுமந்திரனின் செல்லப்பிள்ளையாக இருந்த ஒரே காரணத்தினால், யாழ் மாகரசபை தேர்தலில் ஆனல்ட் முதல்வரானார். அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில், யாழ் மாநகரசபை நிர்வாகங்களில் மோசமான நிர்வாகமாக ஆனல்ட்டின் நிர்வாகம் பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகளே- மாநகரசபை மக்களே அவரை அங்கீகரித்தார்களா என்பது தெரிய வரும்.
சுரேஷ் பிரேமச்சந்திரனிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கக்கூடாது என்ற ஒரே காரணத்தினால், பெண் பிரதிநிதித்துவம் என்ற கோசத்தை தூக்கி, சாந்தி எம்.பியாக்கப்பட்டார். சாந்தியின் நியமனத்தினால் தமிழ் அரசியலுக்கு என்ன நன்மை விளைந்தது? அவரது குடும்பத்திற்கு 10 ஏக்கர் காணி பெற்றதை தவிர.
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி, ரணிலை பாதுகாத்த சம்பவங்களில் கணிசமானவை சுமந்திரனின் தனிநபர் முடிவுகள். அதனால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர் தனிப்பட்ட ஆதாயத்தை பெற்றது மட்டுமே எஞ்சியது.
மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் நியமனம் கிடைக்கக்கூடாது என்பதற்காக, அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் தேவை என்ற கோசத்தை கையிலெடுத்துள்ள சுமந்திரன், அம்பாறை பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதில் தனது பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்தபோது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியுடன் வந்து, போராட்டத்த முடித்து வைத்தார். கல்முனை தொடர்பாக ரெலோ கறாரான நடவடிக்கையெடுக்க முனைந்த போதெல்லாம், கோடீஸ்வரனை பிரித்து எடுத்து, ரணிலை சந்திக்க வைத்து, உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்து, ரெலோவை பலவீனப்படுத்தினார். சுமந்திரனின் நடவடிக்கைகள், கல்முனையை தரமுயர்த்த அழுத்தம் கொடுப்பதாக அமையாமல்… அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதாகவே அமைந்தது.
அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதற்கு ஒரே காரணம்- கல்முனை விவகாரம். அதற்கு சுமந்திரனும் பொறுப்புக் கூற வேண்டியவர்.
ஆனால், தேர்தலில் கூட்டமைப்பின் சறுக்கலிற்கு பிறரிடம் காரணம் தேட விளைவது, கூட்டமைப்பை மேலும் பின்னடைய வைக்கும்.
ஜனநாயகமென்பது- தேர்தல்கள் நடப்பது, அதில் அரசியல் கட்சிகள் போட்டியிடுவது, அந்த அரசியல்கட்சிகள் சார்பில் பேசுவது மட்டுமல்ல. அந்த கட்டமைப்பிற்குள் கூட்டு முடிவுகளும், கூட்டு பொறுப்புக்களுமே. சுமந்திரனின் அகராதியில் அது இருப்பதில்லை. அவர் தன்னை எதிர்த்தவர்களை மோசமாக- ஜனநாயக விரோதமாக கட்சியை விட்டு வெளியேற்றியதே நடந்தது.
இப்பொழுது மாவை சேனாதிராசாவிற்கு நடந்ததும் அதுதான். ஆயுத இயக்கங்களில் கூட இவ்விதமான மோசமான பழிவாங்கும் கலாச்சாரமும், ஜனநாயக மீறலும் இருக்கவில்லை. இப்பொழுது தமிழ சமூகம் ஆறுதல்படக்கூடிய ஒரே அம்சம்- சுமந்திரனிடம் துப்பாக்கி இல்லையென்பது மட்டுமே.
இறுதியாக- இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு இறுதியாக கிளிநொச்சியில் கூடியபோது, சி.சிறிதரன் பின்வருமாறு சுமந்திரனை பார்த்து கேள்வியெழுப்பினார்- “நீங்கள் எதையுமே நாம் என சிந்திக்க, செயற்பட மாட்டீர்களா? நான் செய்தேன், நான் சென்றேன், நான் பார்ப்பேன் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். இங்கு கட்சியுள்ளது. மத்தியகுழு உள்ளது. நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளோம். நானும் ஜெனிவாவிற்கு பலமுறை சென்று வந்தேன். அங்கு என்னாலானவற்றை செய்துமுள்ளேன். நான் செய்தேன் என நான் கூறுவதில்லை. உங்களால் ஏன் கூட்டாக சிந்திக்க, செயற்பட முடியாமலுள்ளது?“ என கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த கேள்வியெழுப்பப்பட்டு பல மாதங்களாகி விட்டது. சுமந்திரன் தனது இயல்பை மாற்றவில்லை. பல மாதங்களின் பின்னர், அப்பொழுது சிறிதரன் எழுப்பிய கேள்வியையே இப்பொழுது நாமும் எழுப்புகிறோம்.
ஆனால், இதில் முரண்நகை- சிறிதரன், சுமந்திரன் இப்பொழுது இரட்டைக்குழுல் துப்பாக்கி. அரசியலுக்கும் நேர்மைக்கும் தொடர்பில்லையென்பது இதைத்தானா?
தமிழ் பக்கம் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை