Paristamil Navigation Paristamil advert login

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன?

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன?

7 ஆவணி 2020 வெள்ளி 17:03 | பார்வைகள் : 9362


நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குச் சற்றுக் குறைவான ஆசனங்களையே பொது ஜன பெரமுன பெற்றிருந்தாலும், அவர்களின் இலக்கான மூன்றில் இரண்டைப் பெற்றுக்கொள்வது அவர்களுக்குக் கடினமானதல்ல. ஒருவகையில் ஏற்கனவே அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது என்றும் சொல்லலாம்.

 
பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டது 145. மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஐப் பெறுவதற்கு அவர்களுக்குத் தேவைப்படுவது ஐந்து ஆசனங்கள் மட்டும்தான். அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா (2), அங்கஜன் இராமநாதன் (1), பிள்ளையான் (1) அதாவுல்லா (1) ஆகியோர் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான ஆதரவை வழங்குவார்கள்.
 
ஆக, மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு எதிரணியிலுள்ள யாரையும் நம்பியிருக்க வேண்டிய தேவை ராஜபக்‌ஷக்களுக்கு இருக்கப்போவதில்லை. அதனால், தாம் விரும்பிய அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டுவருவதில் அவர்களுடைய உடனடிக் கவனம் செல்லும் என எதிர்பார்க்கலாம்.
 
;அரசியலமைப்பை மாற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டை வழங்குங்கள் என்பதுதான் தேர்தல் பரப்புரைகளின் போது பொதுஜன பெரமுனையின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இப்போது அந்தப் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால், தமக்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை நோக்கிய அவர்களுடைய நகர்வை விரைவில் எதிர்பார்க்கலாம்.
 
வரப்போகும் அரசியலமைப்பு மாற்றம் எவ்வாறானதாக இருக்கும்? என்பதுதான் இங்கு எழும் கேள்வி. 19 ஆவது திருத்தம்தான் தமக்குக் கால்கட்டைப் போட்டது என்பது ராஜபக்‌ஷக்களின் முன்னைய குற்றச்சாட்டு. ராஜபக்‌ஷக்கள் மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக இந்தத் திருத்தத்தை நன்கு திட்டமிட்டு 2015 இல் கொண்டுவந்த ரணில் விக்கிரமசிங்க இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ளார். அந்தத் தடைகளைத் தாண்டி ராஜபக்‌ஷக்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார்கள்.
 
19 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வெகுவாகக் குறைத்தது. சுதந்திர ஆணைக் குழுக்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்தது. பாராளுமன்றத்தைப் பலப்படுத்தியது. 19 மாற்றியமைக்கப்படும் என ராஜபக்‌ஷக்கள் பொதுவாகச் சொன்னாலும் அதில் சில பிரச்சினைகள் உள்ளன. காரணம்- ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மீளக்கொடுப்பதென்றால், பிரதமர் பலவீனப்படுத்தப்படுவார். இது ஜனாதிபதி 8211; பிரதமர் முரண்பாட்டுக்கு வழிவகுத்துவிடலாம்.
அதனால், அந்த விடயங்களைத் தவிர்த்து சுயாதீனக் குழுக்களுக்கான அதிகாரங்கள் மீது கைவைக்கப்படலாம். அது ஒருவகையில் சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டைக்கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.
 
அதனைவிட, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் முற்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. சிங்களப் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளால் தெரிவான ஜனாதிபதியும், அரசாங்கமும் இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயற்படப்போவதில்லை. அவர்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இருப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவை எதிர்பார்க்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
 
தொல்பொருட்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் பௌத்த மயமாக்கல் ஒன்றுக்கான திட்டம் அரசாங்கத்திடம் ஏற்கனவே உள்ளது. இதற்காக ஜனாதிபதியும் ஒரு செயலணியை அமைத்திருக்கின்றார். பிரதமரும் ஒரு செயலணியை அமைத்திருக்கின்றார். இந்த இரண்டு செயலணிகளுமே சிங்கள பௌத்தவர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருக்கின்றது. இதில் தமிழ் உறுப்பினர் ஒருவரையும் இடம்பெறச் செய்யப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே போய்விட்டது. அரசுடன் இணைந்திருக்கக்கூடிய தமிழ் அமைச்சர்கள் அதனைச் செய்வதற்கான வல்லமையைக் கூட கொண்டவர்களாக இல்லை.
 
அரசாங்கம் ஒரு இனம், ஒரு மதம் என்பதை நோக்கிச் செல்கின்றதா என்ற சந்தேகத்தை எழுப்பும் சம்பவங்கள் பல உள்ளன. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் அதுவாகத்தான் இருக்கும். இந்த நிலையில் வரப்போகும் காலம் தமிழ் மக்களுக்கு சவால் மிகுந்ததாகவே இருக்கப்போகின்றது. இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான வல்லமையுடன் தமிழ்த் தரப்பு இருக்கின்றதா?

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்