Paristamil Navigation Paristamil advert login

டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் தோல்வியா? 2015ஆம் தேர்தலோடு ஒப்பீடு

டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் தோல்வியா? 2015ஆம் தேர்தலோடு ஒப்பீடு

1 ஆவணி 2020 சனி 16:02 | பார்வைகள் : 9067


நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது சந்தேகமே.

 
விஜயகலா மகேஸ்வரன் தோல்வியடைந்து டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினாலும், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சாத்தியமற்றதே.
 
கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால் சலுகை, நிவாரண அரசியலுக்குப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் கூட, இம்முறை அங்கஜன், டக்ளஸ் ஆகியோருக்கு வாக்களிப்பர் என்று கூற இயலாது. விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்களிப்பர் என்று சொல்லவும் முடியாது.
 
டக்ளஸ் தேவானந்தாவோடு செயற்பட்ட சந்திரகுமார் சுயேட்சையாகப் போட்டியிடுவது. ஈபிடிபிக்குப் பெரும் சவாலாகும். தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து சிறிதரனின் தனிப்பட்ட வாக்குச் சரிவுக்கும் இது காரணமாக அமையலாம்.
 
ஆகவே தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே இம்முறை ஆசனங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். முதற் சுற்று ஆசனப் பங்கிட்டில் தமிழரசுக் கட்சிக்கே ஆசனங்களும் போனஸ் ஆசனமும் கிடைக்கலாம்.
 
2015ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் 48ஆயிரத்து முந்நூற்றி 60 வாக்குகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஏழு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி, முதல் சுற்று ஆசனப் பங்கீட்டில் நான்கு ஆசனங்களைப் பெற்றது. 14ஆயிரத்து 137வாக்குகள் எஞ்சியிருந்தன.
 
இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் 30ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்ற டக்ளஸ் தேவானந்தாவும், 20ஆயிரத்து 25வாக்குகளைப் பெற்றிருந்த விஜயகலா மகேஸ்வரனும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.
 
17ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்றிருந்த அங்கஜன், 15ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆசனங்களைப் பெறமுடியவில்லை.
 
கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்று ஐந்து ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.
 
2015ஆம் ஆண்டு அங்கஜன் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பிரதியமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, தனது அமைச்சின் மூலமாகக் குறைந்த பட்சம் உதவிகளைச் செய்திருக்கிறார்.
 
இதனால் இம்முறை தேர்தலில் அங்கஜன் நம்பிக்கையோடு போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு என்பதில் இருந்து விலகித் தன்னைத் தனித்துவமாகவும் காண்பிக்கிறார் அங்கஜன்.
 
டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் வாக்கு வங்கிகளையே இலக்குவைத்தும் அங்கஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
 
இதனால் டக்ளஸ். விஜயகலா ஆகியோரின் வாக்குகள் இம்முறை சிதைவடையப் போகின்றன. ஏனெனில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குகளை அங்கஜனால் உடைத்தெடுப்பது கடினமானது.
 
நிவாரணம், சலுகை அரசியலுக்குப் பழக்கப்பட்ட மக்களே டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா ஆகிய இருவருக்கும் வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை அங்கஜன் அந்த வாக்குகளைப் பெறும் நோக்கில், இவர்கள் இருவரையும் விட மேலதிகமாக ஏதோ புதிய வடிவம் ஒன்றை அமைத்துள்ளார்.
 
அத்துடன் அங்கஜனுடைய இளமைத்துடிப்பினால் கவர்ச்சியடைந்த இளம் ஆதரவாளர்களும் இம்முறை அவருக்கு வாக்களிக்கக் கூடும். ஆகவே அவ்வாறு வாக்களிக்கும்போது ஏற்படும் வாக்குச் சிதைவுகளினால் குறித்த முன்று பேருமே இம்முறை ஆசனங்களைப் பெற முடியாமல் போகலாம்.
இதற்குச் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல.
 
அப்படி இல்லையேல் விஜயகலா மகேஸ்வரன் மாத்திரம் தோல்வியடைந்து டக்ளஸ் அல்லது சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரும் அங்கஜனும் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகலாம்.
 
அவ்வாறு இருவர் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளில் ஏற்பட்ட சரிவாகவே கருதமுடியும். ஏனெனில் தமிழரசுக் கட்சி, கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கியதால் ஏற்பட்ட விளைவாகவே அதனைக் கருத வேண்டும்.
 
தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கைகளை (இணக்க அரசியல்) சாதகமாகப் பயன்படுத்தியே, அதாவது அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும், அவர்கள் உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியே அங்கஜன் பிரச்சாரம் செய்கிறார். டக்ளஸ். சந்திரகுமார் ஆகியோரும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றனர்.
 
இவ்வாறான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களில் குறிப்பிடக்கூடிய பலர் நம்புகின்றனர். ஆனாலும் டக்ளஸ் சந்திரகுமார் ஆகிய இருவரையும்விட, கவர்ச்சிகரமான தோற்றத்தோடு உலா வரும் அங்கஜனுக்கே அந்தப் பிரச்சாரங்களை நம்பும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென நம்பியிருக்கும் சிலரும் வாக்களிக்கும் கள நிலைமை காணப்படுகின்றது.
 
தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கையினால் அதிருப்தியடைந்த ஏனைய ஆதரவாளர்கள் பலர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் வாக்களிப்பர். மேலும் சிலர் வாக்களிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வர்.
 
இம்முறை அனேகமான இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்கும் கள நிலையும் உண்டு.
 
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 63ஆயிரம் வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இம்முறை தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் தமக்குச் சாதகமாக்க முடியுமெனப் பலமாக நம்புகின்றது.
 
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் மொத்தமாக 82 ஆசனங்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியும் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவ்வாறு எதிர்பார்க்கிறது.
 
இதனாலேயே முதற் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகும் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலை உருவாகும். யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு வீதம் குறைவடைந்தால், தமிழரசுக் கட்சியின் நிலை மேலும் சிக்கலாகும்.
 
காரணம், அதிருப்தியால் வாக்களிப்பைத் தவிர்ப்போர், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர். இதனால் 2015ஆம் ஆண்டைப் போன்று ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியால் இம்முறை பெறமுடியாது.
 
(இங்கு அரசியல் கருத்துக்கள் எதுவுமே கூறப்படவில்லை. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் விகிதாசாரத் தேர்தல் முறையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் நிலை பற்றி மாத்திரமே 2015ஆம் ஆண்டுத் தேர்தலோடு ஒப்பிடப்பட்டுள்ளது.)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்