Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இந்துப் பண்பாட்டு இலக்கியங்களும் புலமை மரபுகளும்....!!!

இலங்கையில் இந்துப் பண்பாட்டு இலக்கியங்களும் புலமை மரபுகளும்....!!!

28 ஆடி 2020 செவ்வாய் 14:52 | பார்வைகள் : 9432


இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வருடம் தோறும் இந்துப் பண்பாட்டு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆய்வு மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் 'இலங்கையில் இந்துப் பண்பாடு - இலக்கியங்களும் புலமை மரபுகளும்' (இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை) என்னும் கருப்பொருளில் மாநாடு இடம்பெறவுள்ளது.

 
இலங்கையில் இந்துப் பண்பாட்டை நிலைநிறுத்துவதில் தலையாய பங்களிப்பை நல்கிய இலக்கியங்களையும் புலமை மரபுகளையும் தமிழிலும் பிறமொழிகளிலும் உள்ள எழுத்தாதாரங்கள் மூலமும் பிற தொல்லியல் சான்றுகள் மூலமும் வெளிப்படுத்துவதே இந்த ஆய்வு மாநாட்டின் பிரதான நோக்கமாகும். இந்நோக்கங்களை நிறைவேற்றும் முகமாக இவ்வாண்டு ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளது.
 
பூர்வீக காலம் தொட்டே இலங்கையில் இந்து சமயம் நிலைபெற்று வருகின்றது. இதிகாசச் செய்திகள் முதற் கொண்டு, உறுதித் தன்மை மிக்க வரலாற்று நிகழ்வுகள் வரையிலே அதற்கான தெளிவான சான்றுகளை நாம் கண்டு கொள்ளலாம். இந்துப் பண்பாட்டு அம்சங்கள் இலங்கைவாழ் இந்துக்களிடத்து மாத்திரமன்றி, இங்குள்ள ஏனைய மக்களாலும் பின்பற்றப்பட்டன. இலங்கையில் இந்து சமயம் சார்ந்த தமிழ்ப் புலவர்களால் யாக்கப்பட்ட நூல்களில் இந்து மதத்தின் செல்வாக்கினை நாம் கண்டுகொள்ளலாம்.
 
வியாபாரிகளாகவும், சுற்றுலாப் பிரயாணிகளாகவும், ஆக்கிரமிப்பாளர்களாகவும் இங்கு வந்து சென்ற கீழைத்தேய, மேலைத்தேய நாடுகளைச் சார்ந்தவர்கள் சிலர், தத்தம் மொழிகளில் எழுதிய நூல்களிலும் அக்காலத்தே இலங்கையில் நிலவிய இந்து சமயத்தின் நிலைமையைக் கண்டு கொள்ளலாம். பண்டைய இராசதானிகளிலே இந்து சமயம் சார்ந்த புலமையாளர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். சோதிடம் முதலான துறைகளில் அவர்கள் பெற்றிருந்த புலமை நன்கு மதிக்கப்பட்டது. இந்து கட்டட, சிற்ப, ஓவிய மரபுகளின் செல்வாக்கை அவற்றில் தெளிவாகக் கண்டுகொள்ளலாம் .
 
யாழ்ப்பாண இராச்சியம் நிலை பெற்ற காலம் முதலாக இந்து சமயம் சார்ந்தனவாக நூல்கள் பல எழுந்தன. இந்து சமயம் சார்ந்து சோதிடம், வைத்தியம் சமயம், தத்துவம் முதலான துறைகள் சார்ந்த புலமை மரபுகள் செழித்து வளர்ந்தன. தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் வாய்ந்த புலமை மரபுகளும் வளர்ந்தன. அப்புலமை மரபுகளே இலங்கையில் ஐரோப்பியர் ஆட்சி நிலவிய காலங்களிலும் இந்து சமயத்தை அழிவுறாத வகையிற் காத்தன. அம்மரபுகள் தமிழ் நாட்டிலும் பல வகையிலே தம் செல்வாக்கை நிலைநிறுத்தின. சில விடயங்களிலே வழிகாட்டிகளாகவும் அமைந்தன.
 
இத்தகைய பின்புலம் உடையதான நிலையில், இவ்வருட ஆய்வுப் பொருண்மை இலங்கையில் இந்துப்பண்பாடு-இலக்கியங்களும் புலமை மரபுகளும்(இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை) என்ற தொனிப்பொருளில் சமய இலக்கியங்கள், தத்துவ நூல்கள், சோதிட நூல்கள், வைத்திய நூல்கள், வரலாற்று நூல்கள், உரை நூல்கள், தத்துவ மரபு, சித்தர் மரபு, உரை, பிரசங்க, புராணபடன மரபுகள், ஆகமப் புலமை மரபு, சமஸ்கிருதப் புலமை மரபு, வைத்திய மரபுகள், வானசாஸ்திர மரபுகள், சோதிட மரபுகள் ஆகியவற்றை ஆய்வுப் பொருண்மையின் உட்பிரிவுகளாகவும் நூல்கள் (தமிழ், சிங்களம், சமஸ்கிருதம், ஐரோப்பிய மொழிகள் முதலானவை), பத்திரிகைகள்,சாசனங்கள் முதலான ஆவணங்கள், வெளிநாட்டவர் பயணக் குறிப்புக்கள் முதலான ஆய்வு மூலாதாரங்களை உடையதாகவும் இந்த ஆய்வுகள் அமைய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது கட்டுரைகளை, ‘பணிப்பாளர், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, கொழும்பு – 04’ என்ற முகவரிக்கோ அல்லது hindudir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம்.
 
கட்டுரை சமர்ப்பிக்கும் ஆய்வாளர்கள், தமிழில் A-4 அளவில், எட்டுப் பக்கங்களுக்குக் கூடாமல், பன்னிரண்டு புள்ளியளவில் மேற்கோள், குறிப்புப் பட்டியல், உசாத்துணை நூற் பட்டியல், கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் பெயர், மின்னஞ்சல் முகவரி என்பனவற்றுடன் தமது ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்கும்படி இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்