Paristamil Navigation Paristamil advert login

தமிழ் தேசியத்தையும் உரிமை அரசியலையும் தக்கவைத்தல் கூட்டமைப்பின் தோல்வியிலேயே தங்கியுள்ளது

தமிழ் தேசியத்தையும் உரிமை அரசியலையும் தக்கவைத்தல் கூட்டமைப்பின் தோல்வியிலேயே தங்கியுள்ளது

17 ஆடி 2020 வெள்ளி 14:57 | பார்வைகள் : 8955


ஒரு பக்கம் உலக மனித குலத்தை அழிந்துவரும் கொரோணா நோயின் தாக்கமும் மறுபக்கம் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் என உலக நாடுகள் சிக்கி தவித்துவருகின்றன. இது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தமிழ் மக்களை மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் மேலும் பாதித்துள்ளது. இந்தநிலையில் தான், அரசாங்கம் சிறிலங்காவின் 16ஆவது பாராளுமன்ற தேர்தலை நடத்துகின்றது. பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் திரட்சியடைந்த சிங்கள பெளத்த பெரும் தேசியவாதம் ஐக்கிய தேசிய கட்சியின் பிளவினூடாக இந்த தேர்தலில் மேலும் வலுவடைந்துவருகின்றது.

 
வட-கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தேர்தலை பற்றி மக்கள் கரிசனையுடன் சிந்திக்கமுடியாமல் கடுமையான இராணுவ கண்காணிப்புக்குள் நாளாந்த வாழ்வாதாரத்தை எப்படி கொண்டு செல்வது என்ற திண்டாட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல்களினால் அவர்களின் வாழ்கையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்ற யதார்த்தத்தின் மத்தியில் என்றும் இல்லாத அளவில் வாக்குகளை பல பிரிவுகளாக பிரிக்கும்வகையில் பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிறிலங்கா புலனாய்வு துறையால் தமிழ் மக்களின் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை மேலும் பலவீனமாக்கும் நோக்கத்தில் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும் சிறுசிறு குண்டு வெடிப்புக்கள், குண்டுகள் கண்டுபிடிப்பு இவற்றை மையப்படுத்தி தேடுதல்கள், கைதுகள் என மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி வாக்களிப்பை குறைக்க முனைந்துள்ளனர். புதிய அறிவிப்பாக குற்றச் செயல்களை தடுத்தல் என்ற போர்வையில் கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் மூன்று இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்களை அச்சுறுத்துவதனுடாக வாக்களிப்பை தடுத்தல் கள்ள வாக்களிப்பை ஊக்குவித்தல் என்பவற்றுக்கு வழிகோலப்பட்டுள்ளது. அதேசமயம், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முற்படுவதுபோல, இயன்றளவுக்கு அதிகமாக அரசாங்கத்தின் அடிவருடிகளை இம்முறை தேர்தலில் வெற்றிபெற வைப்பதே இதன் நோக்கம்.
 
வழமை போலவே, ‘மாவீரர்கள்’ , ‘புலிகள்’, ‘மாமனிதர் பட்டங்கள்’ போன்ற வார்த்தைகளை கட்சிகள் நான் முந்தி நீ முந்தி என்று பயன்படுத்திவருகின்றன. கடந்த பத்து வருடகாலத்தில் மக்களுக்காக எதையும் செய்யாமல் புலி நீக்கத்தையும் தமிழ் தேசிய கோட்பாட்டு நீக்கத்தையும் செய்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேர்தல் என்றவுடன் மீண்டும் ‘ஒற்றுமை’, ‘உரிமை’, ‘ஏக பிரதிநிதிகள்’, ‘புலிகளினால் உருவாக்கப்பட்டவர்கள்’, ‘பாராளுமன்ற பலம் தேவை’ என முதலைக்கண்ணீர் வடிக்கத்தொடங்கிவிட்டனர். சிங்கள பேரினவாத பிரதிநிதியான ஜி.எல்.பீரிஸ், கெகலிய ரம்புக்வல போன்றவர்களும் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெற்கில் தமது கட்சியான சிறிலங்கா பொதுஜென பெரமுனவும் வெல்லும் என்ற கருத்துக்களை வெளியிட்டு கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் உளவியல் உத்தி ஒன்றை கையாண்டுவருகின்றனர்.
 
இதற்கு காரணம் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த நல்லாட்சி என்ற பெயரில் போர்க்குற்றம் என்ற சர்வதேச பொறியிலிருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவியதுபோன்ற உதவிகளை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. மேலும் இவர்களைப் பயன்படுத்தி சலுகை அரசியலூடாக சிங்கள பெளத்த பேரினவாதத்தை விஸ்தரிக்க முடியும் என்ற அடிப்படையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. விக்னேஸ்வரன் இதற்கு மசியமாட்டார் என்பது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தெரியும். அதனால்தான், பலமான சில அமைச்சுக்களை கொடுத்தேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுன விரும்புகிறது. இதன் ஒரு எதிரொலி தான் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளும் கதையை அவிழித்துவிட்டு நாடி பிடித்து பார்த்திருந்தார் சுமந்திரன். சுமந்திரனின் இந்த கருத்துக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்தும் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், ஐங்கரநேசன் ஆகியோர் தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதே தவிர கூட்டமைப்பினர் கேட்டும் கேட்காததுபோல இருந்துவிட்டனர். ஒருவேளை கூட்டமைப்பு இம்முறை தேர்தலிலும் அதிக ஆசனங்களை பெற்றுகொண்டால் வேட்பாளர் நியமங்களுக்கு அடிபட்டதைப்போல அமைச்சு பதவிகளுக்கான சண்டைகளுக்கும் குறைவு இருக்காது என்று எதிர்பார்கலாம்.
 
உரிமைகளுக்கான அவசியத்தை உணராத, போராட்டத்தின் வலியை புரிந்துகொள்ளாத, பாதிக்கப்பட்ட மக்களின் மனதை அறியாத, பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் அடிமைகளாகிபோயுள்ளவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவ ஆசனங்களை இறுக பற்றிப்பிடித்திருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல் திசை மாறிவிட்டது. தனியே ஓரிருவரை மட்டும் இதற்கு நாம் குறை கூறிவிட முடியாது.
 
ஆனால், இலங்கையில் தமது முதலீடுகளை விஸ்தரிக்க முயலும் சில முன்னனி தமிழ் ஊடக முதலாளிகள் தமது ஊடகங்கள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைக்கும் நோக்கில் ஒரு ஊடக அரசியலை மேற்கொண்டுவருகின்றார்கள். கூட்டமைப்பின் கடந்தகால தவறுகள் எல்லாவற்றுக்கும் சுமந்திரன் என்ற ஒரு தனி மனிதனே காரணம் என்றும் ஏனையவர்கள் அப்பாவிகள் சுற்றாவாளிகள் என்பதுபோலவும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
நாம் ஆழமாக ஆராய்ந்து பார்ப்போமானால் அன்று விடுதலைப் புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டாகவே உருவாக்கப்பட்டது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் ஆனந்தசங்கரியின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த விடுதலைப்புலிகள் அவரை நீக்கி கிடப்பில் இருந்த தமிழரசு கட்சியின் சின்னத்தை தேர்தலுக்கு உபயோகிக்கும் நோக்கில் பயன்படுத்தினார்கள். தமிழரசு கட்சிக்கு புத்துயிர் அளித்து அதனை வளர்க்கும் நோக்கம் விடுதலைப்புலிகளுக்கு கிஞ்சித்தும் இருக்கவில்லை. மாறாக தாம் ஏற்படுத்திய கூட்டமைப்பை வலுப்படுத்தி முரண்நிலையில் இருந்த முன்னாள் போராளிக் குழுக்களை ஒன்றுபடுத்தி தமிழ் தேசியத்தில் பற்றுறுதியான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கி ஜனநாயக வெளியில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான வலுவான ஒரு குரலை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
 
ஆனால் 2009 க்கு பிற்பட்ட புலிகளுக்கு பின்னரான காலத்தில் முகவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைக்கப்பட்டு ஆயுத இயங்கங்கள் ஓரம் கட்டப்பட்டு தமிழரசு கட்சியை பலப்படுத்தி வளர்க்கும் செயற்திட்டம் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டது. மிகவும் கவனமான முறையில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை முகவர்கள் இணைக்கப்பட்டனர். இதன் விளைவாக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உரிமை அரசியலை விட சலுகை அரசியல் சித்தாத்தம் ஆதிக்கம் செலுத்த தொடங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் தலைவர், மாவட்டக் குழுக்களின் பதவி போன்ற பல பதவிகளும் சுகபோகங்களுமே முக்கியமாக தென்பட தொடங்கின. இதன் வெளிப்பாடே, தேர்தலில் வேட்பாளர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்ட குழிபறிப்புக்களுக்கும் போட்டாபோட்டிகளுக்கும் காரணமாகும். ஆகவே, இந்த சலுகை அரசியல் சித்தாந்தம் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை நிறுவன ரீதியாக, நிறுவன கலாசார ரீதியாக வியாபித்துவிட்டது. இதனை புரிந்துகொள்ளாமல், சுமந்திரனே எல்லாவற்றுக்கும் காரணம் என்றும் சுமந்திரனை மட்டும் தோற்கடித்துவிட்டு கூட்டமைப்பின் ஏனையவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் செயற்படுபவது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கு சாவு மணி அடிக்கவே உதவும். அத்துடன், கூட்டமைப்பின் கடந்த 10 வருட கால அரசியல் செயற்பாடுகளை அங்கீகரிப்பதாகவும் அமையும்.
 
அதாவது, முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடைபெறவில்லை, இலங்கை ஒரு பெளத்த நாடு, பெளத்தத்துக்கு முன்னுரிமை, வட-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை, ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வு, வட்டுக்கோட்டை தீர்மானம் கைவிடப்பட்டமை போன்றவற்றை அங்கீகரிப்பதாக அமையும். ஏனெனில் இவை வெறுமனே சுமந்திரனின் நிலைப்பாடுகள் அல்ல. ஆகவே, எமது மக்கள் இவற்றை நிராகரிப்பதனால், சுமந்திரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இம்முறை தேர்தலில் நிராகரிக்கவேண்டும். அத்துடன், சுமந்திரனை நீக்கி கூட்டமைப்பின் ஏனையவர்களை வெற்றிபெற வைப்பது எந்த மாற்றத்துக்கும் வழிகோலப்போவதில்லை. வெற்றிபெறுபவர்கள் அமைச்சு பதவிகளை பெற்று சலுகை அரசியலை செய்வதையும் தடுக்கப்போவதில்லை. இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை தான்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது அதை தோற்கடிக்கக் கூடாது என சிலர் வாதங்களை முன்வைத்து வருகின்றனர் அப்படியாயின் கருணாவும் புலிகள் அமைப்பில் 25 வருடங்களுக்கு மேலாக இருந்தவர் தானே. ஏன் அவரை புலிகள் தமது அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தனர்? அவர் அந்த அமைப்பின் கொள்கை கோட்பாடுகளிலிருந்து தடம்புரண்டதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது. அதே நிலையில் தான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செயற்படுகின்றது. இந்த பொறுப்பு மக்களின் கைகளில் வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் தகுந்த தண்டனையை வழங்கவேண்டும்.
 
ஆகவே தமிழ் தேசியத்தின்பால் பற்றுள்ள மக்கள் தாம் எத்தனை பேரை பாராளுமன்றத்துக்குள் அனுப்புகிறோம் என்று பாராமல் அனுப்பும் ஒரு சிலராவது இனத்துக்காகவும் தேசியத்துக்காகவும் மனச்சுத்தத்துடன் குரல் கொடுப்பவர்களாக இருப்பவர்களை தெரிவு செய்து அனுப்புதலே தமிழ் தேசியம் வீழ்ந்துவிடாமல் காக்க உதவும். இதை அடைய வேண்டுமெனில் நீங்கள் சுமந்து நிற்கும் வலிகளை மறந்து பெருவாரியாக திரண்டு வாக்களிப்பில் கலந்து கொண்டு உண்மையாக எமக்காக தமிழ் தேசியத்தின் பால் குரல் கொடுப்பவர்களை வெற்றி பெறவைக்க வேண்டும்.
 
நாம் வாக்களிப்பை தவிர்க்கும் ஒவ்வொறு முறையும் அகற்றப்படவேண்டியவர்கள் உங்கள் தலைவர்களாக வலம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை சற்று சிந்தித்து உங்கள் வாக்குரிமையூடாக உங்களுக்கான தகுந்த தலைவர்களை நீங்களே தேர்தெடுங்கள்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்