இனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி!
25 ஆனி 2020 வியாழன் 14:30 | பார்வைகள் : 9545
வடக்கு கிழக்கின் தேர்தல் களத்தில் அதிக அச்சத்துடன் அனைத்துக் கட்சிகளும் நகர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கடந் தேர்தலில் அதிக ஆசனங்களை வடக்கு கிழக்கில் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அதிகமான நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது.
அதன் நம்பிக்கைகள் கொள்கைகள் இல்லாது தகர்ந்து போயுள்ளதை அதன் வேட்பாளர்கள் வெளிப்படுத்தும் செய்திகள் மூலமாக உணரமுடிகிறது. வெளிப்படையாகவே மாற்று அணியைத் தோற்கடியுங்கள் என மக்களிடம் கோரும் அளவுக்கு மாற்றின் வலிமை அதிகரித்துவிட்டது என்பதை மறைமுகமாக ஏற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பேச்சாளர் கூறுகிறார்கள்.
மாற்று என்பது விக்னேஸ்வரனின் தலைமையிலான அணியென்பதை கோடிட்டுக் காட்ட அனைத்து தரப்பும் முன்வருகின்றதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
ஏன் மாற்றுத் தரப்பினை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேச்சாளர் கோருகிறார்.தேசியக் கட்சிகள் வென்றாலும் பரவாயில்லை மாற்று வென்றுவிடக் கூடாது என்பதில் கவனம் கொள்கிறாதா? கூட்டமைப்பு என்ற கேள்வி எல்லாத் தரப்பிடமும் எழுந்துள்ளது. அப்படியான நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்றுவிட்டதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்கு பெரும்பான்மையை தருமாறு கோருவது ஒன்றும் தவறான விடயமல்ல. ஆனால் அது மாற்றுக்கு எதிராக மக்களை தமக்கு வாக்களிக்க சொல்வது தான் ஏன்?
கடந்த காலத்தில் தமிழரசு அரசியலில் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதான வேட்பாளர் நீதியரசர் விக்னேஸ்வரன் இங்கு நடந்தது இனப்படுகொலை என்பதையும் போர் குற்ற விசாரணை அவசியம் என்பதையும் வலியுறுத்தி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாகாண சபையில் மிகவும் துணிச்சலான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதுடன் பொது வெளியிலும் அதற்காக போராடிவருகிறார்.
தமிழ் மக்கள் மீதான போர் மனித உரிமைகளையும் மனிதாபிமானச்சட்டங்களையும் முற்று முழுதாக மீறிகின்றது என்பதை கோடிட்டுக் காட்டிவரும் விக்னேஸ்வரன் அவர்கள் அதனூடாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என குரல்கொடுத்து வருகிறார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கான விசாரணை முடிந்து விட்டது என யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு உரையாடலில் தெரிவித்ததுடன் அதற்கான ஆதாரங்களையும் அக்கூட்டத்தில் காட்சிப்படுத்தியிருந்தார் அத்துடன் இங்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள அவர் தாயார் இல்லை.
அதுமட்டுமன்றி ஜெனிவாவில் நல்லாட்சி அரசாங்கத்தின் கால நீடிப்புக்கு ஒப்புதல் அளித்ததுடன் விடுதலைப்புலிகளும் போர் குற்றங்களை செய்துள்ளதாக பல இடங்களில் உரையாற்றி வருகிறார். இதனால் அவர் தென் இலங்கை நல்லாட்சி அரசாங்கத்திற்கு மட்டுமல்ல தற்போதைய அரசாங்கத்திற்கும் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து பணிபுரிய தயாராகின்றதையே அவரது மாற்று அணி தோற்கடிக்க வேண்டும் எனக் கோரிக்கையின் உள் நோக்கமாகவுள்ளது.
போர்க்குற்ற விசாரணை என்பது தமிழரது அரசியல் வாழ்வின் அடிப்படையாகும் அதன் வழி தமிழரது வாழ்வும் இருப்பும் அதன் பொருளாதார சமூக உயிர்வாழ்வும் தங்கியிருகிறது. அதனை இழந்தால் தமிழரது அரசியலின் இருப்பு கேள்விக்குரியதாகவே மாறும். தமிழரது போராட்ட தடம், போர்குற்ற விசாரணையிலும் கடந்த கால போராட்ட வழிமுறையிலுமே தங்கியுள்ளது. தமிழருக்கான போராட்ட தொடர்ச்சி ஒன்று இருக்கின்றது என்பதை தெளிவாக வெளிப்படுத்தும் அம்சமாக முள்ளிவாய்க்கால் உள்ளது. அதில் கொல்லப்பட்ட அழிந்து போன சிதைந்து போன தமிழினத்தின் இரத்தமும் சதையும் தான் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதாரம். போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டது எனக் கூறும் அரசியல் ஒன்றினை தொடர்ந்து செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகிறது. அதனால் தான் மாற்றைத் தோற்கடிக்க கோருகிறது.
எனவே மாற்று அணி என்பது சரியான திட்டமிடலையும் உபாயங்களையும் உருவாக்கியுள்ளது. அது போர்க்குற்ற விசாரணையையும் இங்கு நடந்தது இனப்படுகொலை என்பதையும் மிக நீண்ட காலமாக உலகிட்கு வலியுறுத்திவருகிறது. இதனால் தான் இனப்படுகொலை தீர்மானத்தையும் கொண்டு வந்த நீதியரசர் விக்னேஸ்வரனை தோற்கடிப்பதன் மூலம் தான் இனப்படுகொலை தீர்மானத்தை வலுவிழக்க, தோற்கடிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு தான் மாற்று அணியை தோற்கடிக்க முயலுகிறார்கள். எனவே தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
சோதிநாதன்