Paristamil Navigation Paristamil advert login

பொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்!

1 பங்குனி 2020 ஞாயிறு 06:57 | பார்வைகள் : 9732


எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதியுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்துக்கு அமைய நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடைக்கிறது.
 
இதற்கமைய மார்ச் 01ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் விரும்பியதொரு தினத்தில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம். பெரும்பாலும் மார்ச் 1ஆம் திகதியுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் எட்டாவது பாராளுமன்றம் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
 
இலங்கை அரசியல் வரலாற்றில் எட்டாவது பாராளுமன்றத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நாட்டின் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எட்டாவது பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக முன்னைய ஆட்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்ற முக்கிய மூன்று தூண்களில் சட்டவாக்கத்தின் பலத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பல எட்டாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னைய ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இவற்றில் முக்கியமான விடயமாக ஓரிடத்தில் மாத்திரம் மையப்படுத்தப்பட்டிருந்த அதிகாரங்களை பாராளுமன்றத்துடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தத்தைக் குறிப்பிடலாம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்த விடயங்கள் பல பாராளுமன்றத்துடன் பகிரப்பட்டன.
 
இதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் கொள்கையளவில் அதனைப் பார்க்கும் போது சிறப்பானதொரு விடயமாக அமைவதாக அரசியல் தரப்பில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.
 
சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்தின் அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கப்பட்டது. இது மாத்திரமன்றி 19ஆவது திருத்தச் சட்டத்துடன் இணைந்ததாக தகவலறியும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
அதாவது நாட்டில் உள்ள ஒரு பொதுமகன் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் குறித்து தகவலை அறிந்து கொள்வதற்கான உரிமை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.
 
பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட தகவலறியும் சட்டம் பலம் பொருந்தியது என அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
 
இதனால் அரசாங்கத்துறையில் இடம்பெறுகின்ற மோசடிகள் மற்றும் குழறுபடிகளை பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வது மாத்திரமன்றி, ஊடகங்கள் அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகின.
 
இதனால் அரசாங்க நிறுவனங்கள் பல நெறிமுறை புரளாமல் செற்படத் தொடங்கின என்றால் அது மிகையாகாது.
 
பிரதிநிதித்துவம், சட்டவாக்கம், நிதி முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு என்பன பாராளுமன்றத்தின் முக்கிய நான்கு செயற்பாடுகளாகும். இதில் கண்காணிப்பு என்ற விடயம் எட்டாவது பாராளுமன்றத்தில் பலப்படுத்தப்பட்டது என்றே கூற வேண்டும். கடந்த காலங்களில் பாராளுமன்றம் வெறுமனே சட்டங்களை அங்கீகரிக்கும் நிறுவனமாக மாத்திரம் இருந்தது.
 
இருந்த போதும் எட்டாவது பாராளுமன்றத்தில் அதனையும் தாண்டிய செயற்பாடுகளை பாராளுமன்றத்தால் முன்னெடுக்க முடிந்தது. இதில் முக்கிய விடயம் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட குழுமுறை செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
 
அதாவது கொள்கைத் திட்டமிடல் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளை குழுக்களின் ஊடாக ஆராய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
 
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மாற்றப்பட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. துறைசார் மேற்பார்வைக் குழுவென்றால், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கான தனியான குழுவொன்று அமைக்கப்படும். அந்தக் குழுவானது எந்வித பதவிகளையும் வகிக்காத பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட குழுவாக அமையும்.
 
 பாராளுமன்றத்தில் எந்தவொரு சட்டமூலத்தை அல்லது ஒழுங்குவிதியை அல்லது கட்டளையை நிறைவேற்றுவதாயினும் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் அங்கீகாரம் அவசியம். இதன் மூலம் ஒருவிடயம் முடிந்த பின்னர் ஆராயப்படுவதற்குப் பதிலாக, நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே விரிவாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு பாராளுமன்றத்துக்குக் கிடைத்தது.
 
அது மாத்திரமன்றி, துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களைக் கூட ஆராய்ந்து அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை பரிந்துரைப்பதற்கான வாய்ப்புக்களும் கிடைத்தன.
 
 
உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தலைமையிலான சுகாதார மற்றும் சமூகநலநோன்புகை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, பெருந்தோட்டத்துறையில் உள்ள வைத்திய நிலையங்களை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான கொள்கைத் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பில் சகல தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முடிந்தது.
 
இதுபோன்று பல்வேறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களினால் கொள்கைத் திட்டங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகின.
 
இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் மற்றுமொரு வெற்றியாக, கலந்துரையாடும் விடயம் சம்பந்தமாக விரும்பிய ஒருவரை அழைத்து அவரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், விரும்பிய நேரத்தில் குழுவைக் கூட்டி அதுபற்றிக் கலந்துரையாடுவதற்கும் சந்தர்ப்பம் உருவானது.
 
இதனால் துறைசார் வல்லுனர்களுக்கும், அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்களுக்கும் இடையில் பிணைப்பொன்றும் உருவாகியுள்ளது.
 
எட்டாவது பாராளுமன்றத்தின் மற்றுமொரு முக்கிய விடயம் குழுநிலை செயற்பாடுகள் ஊடகவியலாளர்களுக்கு திறந்து விடப்பட்டமையாகும். இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் இடம்பெறும் குழு செயற்பாடுகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
 
எனினும், எட்டாவது பாராளுமன்றத்தில் குழு செயற்பாடுகளை நேரில் கண்ணுற்று அவற்றை அறிக்கையிடுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவே முதன் முதலில் ஊடகங்களுக்கு திறக்கப்பட்ட குழுவாகும்.
 
ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட்டமையால் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நேரடியாக மக்களால் பார்க்க முடிந்தது.
 
இது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், பாராளுமன்றம் தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாட்டையும் மாற்றுவதற்கு வழியேற்படுத்தியது. இதனைத் தொடர்ந்ததாக பல்வேறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அமர்வுகளும் ஊடகங்களுக்குத் திறக்கப்பட்டன.
 
வெறுமனே சபையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று குழு முறையில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன என்பதை மக்கள் அறிவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது.
 
இதுபோன்று பல்வேறு மாற்றங்களைப் புரிந்ததாக எட்டாவது பாராளுமன்றம் காணப்படுகிறது. சாதனைகளைப் போல சவால்களையும் அதிகமாக சந்தித்தது எட்டாவது பாராளுமன்றம் என்றே குறிப்பிட வேண்டும்.
 
ஆட்சி மாற்றமொன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் நான்கு தடவைகள் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என பல்வேறு சவால்களும் எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.
 
இனிமேல் எதிர்கொள்ளப்படுவது அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஆகும். முன்னைய ஆட்சியின் நான்கரை வருட ஆட்சியில் நாட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர் என்பதன் வெளிப்பாடே ஜனாதிபதித் தேர்தல் முடிவாகும். முன்னைய ஆட்சியில் நிலவிய பலவீனங்கள், தவறுகள்  அதிகம்.
 
 ஈஸ்டர் தின தாக்குதலும் இதற்கொரு உதாரணம். முன்னைய ஆட்சியின் உறங்கு நிலை, உதாசீனங்கள் போன்றவற்றால் நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே பெரும்பாலான மக்களின் அபிப்பிராயம் ஆகும். இதனாலேயே ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அமோக ஆதரவு வழங்கினர். இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத் தேர்தல் எதிர்நோக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்