Paristamil Navigation Paristamil advert login

அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...!!!

அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...!!!

2 மாசி 2020 ஞாயிறு 11:13 | பார்வைகள் : 9280


நீண்டகாலம் ஆட்சியில்  இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான  அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு ” அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ” என்று நாகரிகமாக  நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.

 
அண்மைய தசாப்தங்களில் மிகவும் நீண்டகாலமாக நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருந்துவரும் தலைவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டின். தற்போது தனது நான்காவது பதவிக்காலத்தில் ஆட்சிசெய்யும் 67 வயதான அவர் தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகும் அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கு புதிய பாதையைத் திறந்துவிடக்கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அறிவித்திருந்தார். அதில் ஒரு விசித்திரம் தற்போது தான் வகித்துவரும் ஜனாதிபதவியின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தி, பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய யோசனைகளை அவர் முன்வைத்திருப்பதேயாகும். தனக்குப் பிறகு ஜனாதிபதியாக பதவிக்கு வருபவர் வசம்  பெருமளவு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்பதில்  மாத்திரமல்ல, தற்போதைய தனது பதவிக்காலம்  முடிவடைந்த பிறகு அதிகாரமிக்கதொரு  பிரதமராக வருவதிலும்  புட்டின் அக்கறைகொண்டிருக்கிறார் போலும்.
 
அவரின் அறிவிப்பு ரஷ்ய ஆட்சி நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்களில்  கூறப்படுகின்ற போதிலும், 2000 ஆம் ஆண்டில் முதன் முதலாக பதவிக்கு வந்ததிலிருந்து அவரின் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக  அவதானித்து வந்திருக்கக்கூடிய எவருக்கும் அவர் எளிதில் அதிகாரத்தில் இருந்து இறங்கக்கூடியவர் அல்ல என்பதையும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் எத்தகைய திருகுதாளத்தையும் செய்வதற்கு தயங்காதவர் என்பதையும் நிச்சயமாக விளங்கிக்கொள்வதில் சிரமம் இருந்திருக்காது.
 
ரஷ்ய அரசியலமைப்பு ஜனாதிபதியொருவர் தொடர்ச்சியாக இரு பதவிக்காலங்களுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தில் இருப்பதை தடைசெய்கிறது. இதனால் தனது தற்போதைய பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டில் காலாவதியாகும்போது புட்டின் இன்னொரு பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக வருவதற்கு மக்களின் ஆணையைக் கேட்கமுடியாது. ஆனால், அவர் ஜனாதிபதியாக தனது முதல் இரு தொடர்ச்சியான பதவிக்காலங்களையும் நிறைவுசெய்தபோது 2008 ஆம் ஆண்டில் தனது நிருவாகத்தில் பிரதமராக இருந்த விசுவாசி டிமிட்ரி மெட்வெடேவுடன் பதவிகளைப் புட்டின்  பரிமாறிக்கொண்டதைப் போன்று மீண்டும் செய்துகொள்ளமுடியும்  அதாவது மெட்வெடேவை நான்கு வருடங்களுக்கு ஜனாதிபதியாக்கிவிட்டு  அவரின் கீழ் தான்  பிரதமராகிக்கொண்டார். முதலில் நான்கு வருடங்களாக இருந்த ரஷ்ய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் ஊடாக 6 வருடங்களாக நீடித்த பின்னரே 2013 முதல் மூன்றாவது பதவிக்காலத்துக்கு புட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு மீண்டும் வந்தார். மெட்வெடேவ் மீண்டும் பிரதமரானார்.இவர் ஜனாதிபதியாக பதவிவகித்த நான்கு வருடங்களிலும் கூட உண்மையான அதிகாரம் மறைமுகமாக புட்டினிடமே இருந்தது.
 
உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேசிய  சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். ஆனால், தனது அரசியல் அதிகார வாழ்வை நீடிப்பதற்கான திட்டங்களுக்கு பொதுமக்களின் இணக்கம் என்ற வெளிப்பூச்சை செய்வதே புட்டினி்ன் இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. அவர் அறிவித்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தினதும்  பிரதமரினதும் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான யோசனைகளைக் கொண்டிருப்பதற்கு அப்பால், அவரது தலைமையில் தற்போது இருக்கும் அரசாங்க சபையை (State Council ) பலப்படுத்துவதற்கான ஏற்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. புட்டினின் பாராளுமன்ற உரையை அடுத்து பதவி விலகிய மெட்வெடேவ் அந்த சபையின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது புட்டினின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான கசாகிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக 29 வருடங்கள் ஜனாதிபதி நூர்சுல்தான் நசார்பாயேவ் பதவியில் இருந்து இறங்குவதற்கு முன்னதாக கடந்த வருடம்  அதிகாரமிக்க பாதுகாப்பு சபையின்( Security Council) ஆயுட்காலத் தலைவராக தன்னை நிமித்துக்கொண்டார். அவரைப் பின்பற்றி புட்டினும் ரஷ்ய அரசாங்க சபையின் தலைவராக வந்து 2024 க்கு பிறகு ஜனாதிபதியாக ஓய்வுபெற்ற பிறகு ஆட்சியதிகாரத்தின் நெம்புகளை தன்கையில் வைத்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னைய தடவை புட்டின் தனக்கு வசதியாக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தபோது இருந்த சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் சற்று வேறுபட்டவை. அவரின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுவருவதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்ற நிலையில் இத்தடவை அரசியலமைப்பு சீர்திருத்தங்களை பெரியளவில் எதிர்ப்பின்றி அவரால் நிறைவேற்ற இயலுமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.ரஷ்யப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் மாஸ்கோவில் வீதி ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. 2021 பாராளுமன்றத் தேர்தலில் ரஷ்ய மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். புட்டின் திட்டமிடுவதைப் போன்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு சார்பான அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்டவேண்டியிருக்கும்.
 
இதே போன்ற நிலைதான் இலங்கையிலும் காணப்படுகிறது.ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் விரும்புகின்றதைப் போன்று அரசியலமைப்பில் மாற்றத்தைச் செய்யவேண்டுமென்றால், எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றவேண்டியிருக்கும். தங்களுக்கு அத்தகையதொரு பெருவெற்றியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே நாட்டின் அதியுயர் பதவிகளில் இருக்கும் இரு சகோதரர்களும் இன்று நாட்டு மக்களிடம் விடுக்கும் பிரதான வேண்டுகோள். இன்றைய இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களும் இதையே வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
 
ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, தற்போதைய அரசியலமைப்பு மீதான வெறுப்பு பிரதானமாக அந்த அரசியலமைப்புக்கு முன்னைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி கோதாபய 19 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட 1978 அரசியலமைப்பு அதன் இயல்பான விளங்காத்தன்மை மற்றும் குழப்பங்கள் காரணமாக பல பாரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் நாட்டின் பாதுகாப்பு, சுயாதிபத்தியம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்காக இந்த அரசியலமைப்புக்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டியது அவசியமாகும் என்றும் கூறியிருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக்குறைத்து அதேயளவுக்கு பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரித்த 19 வது திருத்தத்தை முற்றுமுழுவதுமாக கைவிடுவதே பெரும்பாலும் ராஜபக்சாக்களின் நோக்கமாக இருக்கிறது. முறையான ஆட்சி நிருவாகத்தை நடத்துவதற்கு அந்த திருத்தம் பெரும் தடையாக இருக்கிறது என்பதே அவர்களது நிலைப்பாடு. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குரிய நிபந்தனைகள் பற்றி 19 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் தங்களை இலக்காகக்கொண்டு புகுத்தப்பட்டவை என்று ராஜபக்சாக்கள் ஆரம்பத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள்.
 
இன்றைய இலங்கை அரசியலில் மிகவும் விசித்திரமான ஒரு விடயத்தையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.அதாவது 19 வது திருத்தத்தை கொண்டுவந்ததை தனது தலைமயிலான அரசாங்கத்தின் சாதனைகளில் பிரதானமானது என்றும் உலகிலேயே தனது  அதிகாரங்களைக் குறைப்பதற்கு முன்வந்த ஒரே ஆட்சியாளர் தானே என்று ஒரு கட்டத்தில் பெருமைக்கு உரிமை கோரிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே 19 வது திருத்தத்தை எதிர்ப்பவர்களில் முக்கியமான ஒருவராக மாறியிருக்கிறார். அந்த திருத்தத்தை இல்லாமல் செய்வதற்காக பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு பாராளுமன்றத் தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டிருப்பதாக அவர்  பிரகடனத்தையும் வேறு செய்திருக்கிறார்.
 
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அந்த ஆட்சிமுறையை இல்லாதொழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களின் முக்கியமான வாக்குறுதியாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்பது விளங்கிவந்திருக்கிறது.ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர்கள் எல்லோருமே அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதே வரலாறு.ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காவிட்டாலும் ஜனாதிபதிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களை ஓரளவுக்கேனும் குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நம்பகமான ஒரு நடவடிக்கை 19 வது திருத்தமேயாகும் என்பதில் சந்தேகமில்லை. இன்று அதற்கு ஆபத்து வந்திருக்கிறது.
 
இது இவ்வாறிருக்க, உள்நாட்டுப் போரில் அரசாங்கப்படைகளின் வெற்றிக்குப் பிறகு இலங்கையை ஆட்சிசெய்வது ஏதோ தங்களது ” பிரத்தியேக உரிமை ” என்பது போல நினைக்கும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதியின் பதவிக்கால வரையறை குறித்து  19 வது திருத்தத்தில் உள்ள  ஏற்பாடு நீண்டகால ஆட்சி பற்றிய அவர்களது கனவுக்கு ஒரு முட்டுக்கட்டையாக   இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் மூனறில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமானால், அந்த இரு பதவிக்கால வரையறையை அவர்கள் மாற்றியமைத்து தங்களது முன்னைய ஆட்சியில் கொண்டுவந்த 18 வது திருத்தத்தில் இருந்ததைப் போன்று மட்டுப்பாடற்ற பதவிக்கால ஏற்பாட்டை புகுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது.ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூட தனது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகளில் ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அதைச் செய்யவிரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாகவே கூறியும் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
 
42 வருடகாலமாக நடைமுறையில் இருந்துவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் பாதகங்கள் பற்றி இதுகாலவரையிலான விமர்சனங்களுக்குப் பிறகு முன்னரைவிடவும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ” சீர்திருத்தத்தில் ” ஆட்சியாளர்கள் நாட்டம் காட்டுகின்ற நிலை தோன்றியிருப்பது இலங்கை அரசியலின் ஒரு முரண்நகையாகும். கோதாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றி அல்ல, ” மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ” புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவது பற்றியே வாக்குறுதி அளித்திருந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் கூடுதலாக நீடிக்கும் ” ஜெயவர்தன  அரசியலமைப்புக்கு ” பதிலாக ” ராஜபக்ச அரசியலமைப்பு ” ஒன்றை அவர்கள் கொண்டுவந்து இலங்கையின் அரசியலில் ஒரு முத்திரையைக் குத்துவதற்கு ராஜபக்சாக்கள் அக்கறை காட்டவும் கூடும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்