Paristamil Navigation Paristamil advert login

‘கோட்டா அச்சம்’- சுமந்திரன் தரப்பின் புதிய தேர்தல் வியூகம்?

‘கோட்டா அச்சம்’- சுமந்திரன் தரப்பின் புதிய தேர்தல் வியூகம்?

21 மார்கழி 2019 சனி 13:03 | பார்வைகள் : 9333


இதுவரை சம்பந்தன் தரப்பு என்றே இப்பத்தியாளர் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் ஆனால் இனி அதற்கு அவசியமிருக்காது. ஏனெனில் வருங்காலத்தில் சம்பந்தன் தரப்பு என்று ஒன்று இருக்கப் போவதில்லை. இனி அது சுமந்திரன் தரப்பாகவே இருக்கும். தனிநபர்களை முதன்மைப்படுத்தி அரசியலை ஆராய்வதில் இப்பத்தியாளருக்கு எப்போதுமே உடன்பாடிருந்ததில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் தனிநபர்களை முன்னிறுத்தியே சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கின்றது. இது துரதிஸ்டவசமானது. ஆனாலும் இதுவே தமிழ்த் தேசிய அரசியலின் யதார்த்தமாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை அனைவருமே அறிவர். இதில் ஒழித்து மறைக்க ஒன்றுமில்லை.
 
ஆரம்பத்தில் சம்பந்தனின் முழுமையான ஆளுகைக்குள் இருந்த கூட்டமைப்பு, 2015இற்கு பின்னர் படிப்படியாக சுமந்திரனின் முழுமையான ஆளுகைக்குள் வந்தது. உண்மையில் சுமந்திரன் சதி செய்து தனக்கான இடத்தை எடுத்துக் கொள்ளவில்லை. தமிழரசு கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் நிலவிய அரசியல் வரட்சியை சுமந்திரன் நன்கு பயன்படுத்திக்கொண்டார். சுரேஸ் பிறேமச்சந்திரன் கூட்டமைப்புக்குள் இருக்கும் வரையில் சுமந்திரனுக்கு ஒரு நெருக்கடியிருந்தது உண்மை. ஏனெனில் சுமந்திரன் கூறும் விடயங்களை சுரேஸ் உள்ளுக்குள் இருந்து கொண்டே மறுக்கக்கூடிய ஒருவராக இருந்தார். 2015இற்கு பின்னர் அந்த நெருக்கடியும் இல்லாமல் போய்விட்டது. இப்போதுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் என்னதான் பேசிக்கொண்டாலும் கூட, இன்றைய நிலையில் தமிழரசு கட்சியினதும் கூட்டமைப்பினதும் நிழல் தலைவர் சுமந்திரன்தான்.
 
சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் அடிப்படையிலேயே ஒரு ஒற்றுமையுண்டு. இருவருமே தங்களது கதிரைகளை காப்பாற்றிக்கொள்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள் அதே வேளை, மக்களுக்காக எதையுமே பெற்றுக் கொடுக்காமல், தங்களை தொடர்ந்தும் நியாயப்படுத்திக் கொள்வதிலும் வல்லவர்கள். 1977இல் பாராளுமன்றம் சென்ற சம்பந்தன் 43 வருடங்களாக அரசியலில் இருக்கின்றார். இந்தக் காலத்தில் மூன்று தடவைகள் தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் தோல்வியடைந்திருக்கின்றார். அரசியல் தீர்வை ஒரு புறமாக வைத்தாலும் கூட, ஆகக் குறைந்தது தனது சொந்தத் தொகுதியான திருகோணமலை தமிழ் மக்களுக்குக் கூட குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதனையும் இதுவரை செய்ததில்லை. ஒவ்வொரு தேர்தல்களின் போதும், அந்தக் காலகட்டத்தில் எதனைக் கூறினால் மக்கள் தடுமாறுவார்கள் என்பதை துல்லியமாக கணித்து, காய் நகர்த்துவதில் சம்பந்தனின் கெட்டித்தனத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இப்போது அந்தக் கலையை சுமந்திரன் கச்சிதமாக கையாளுகின்றார்.
 
கடந்த ஜந்து வருடகால அரசியல் நகர்வுகளில் அவமானகரமான தோல்வியை சந்தித்திருக்கும் சுமந்திரன், அது தொடர்பில் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அடுத்த தேர்தல் வியூகத்திற்கு தயாராகிவிட்டார். ஆரம்பத்தில் சுமந்திரன் தொடர்பில் ஒரு பார்வையிருந்தது. சுமந்திரன் வழமையான அரசியல்வாதிகள் போன்று இருக்கப்போவதில்லை. அவர் சற்று வித்தியாசமானவர். அவரது முயற்சிகள் தோல்விடைந்தால் அரசியலை தூக்கிவீசிவிட்டு போய்விடுவார். இப்படியெல்லாம் சிலர் பேசுவதை கேட்க முடிந்தது. ஆனாலும் ஒரு முறை பதவியிரசியலுக்குள் வந்துவிட்டால், அதன் பின்னர் பதவிசுகத்தை விட்டுச் செல்ல எவருமே விரும்புவதில்லை. அந்த விடயத்தில் அனைவருமே பத்தோடு பதினொன்றுதான். சுமந்திரனும் இப்போது அந்த வரிசையில் இருக்கும் ஒரு சாதாரண தமிழ் அரசியல்வாதிதான்.
 
தனதும், தனக்கு விருப்பமானவர்களதும் கதிரைகளை கைப்பற்றுவதற்கான விளையாட்டில் சுமந்திரன் ஈடுபடத் தொடங்கிவிட்டார். கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் வெற்றியையே தங்களின் தேர்தல் வெற்றிக்கான வியூகமாக பயன்படுத்த முற்படுகின்றார். அரசியலில் அச்சம்  என்பது ஒரு முக்கியமான விடயம். இந்த அச்சம் இரண்டு வகைக்குள் அடங்கும். ஒன்று மக்கள் மத்தியில் இயல்பாகவே காணப்படும் அச்ச மனநிலை. அது காலத்திற்கு காலம் மாறுபடும். அடுத்தது, அரசியல் வாதிகள் மத்தியில் காணப்படும் அச்சம்.
 
இந்த அச்சத்தை பயன்படுத்தி புதிய கூட்டுக்களையும் உருவாக்கலாம் ஏற்கனவேயுள்ள கூட்டுக்களையும் உடைக்கலாம். சுமந்திரன் இதனைத்தான் அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்த எத்தணிக்கின்றார். ‘கோட்டா அச்சம்’ என்பதே, சுமந்திரனின் தேர்தல் வியூகத்தின் அடிப்படையாக இருக்கப் போகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் மக்கள் மத்தியில் ‘கோட்டா அச்சம்’ தான் பிரதான பங்குவகித்தது. அதனை அதிகப்படுத்தியதில் கூட்டமைப்பிற்கு பிரதான பங்குண்டு. அதே அச்சத்தை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்தலாம் என்பதே சுமந்திரன் போடும் கணக்கு.
 
நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும், இந்தக் காலத்தில் மாற்றுத் தலைமைக்கான முற்சிகள் கூடாது, நாங்கள் ஒன்றாக நின்றால்தான், 22 ஆசனங்களை பெற முடியும், ராஜபக்ச தரப்பை மூன்றில் இரண்டு பெரும்பாண்மை எடுக்கவிடக் கூடாது என்பதெல்லாம் மேற்படி வியூகத்திற்கான முதலீடுகள்தான். இதன் மூலம் தங்களின் அரசியல் தோல்விகளை மக்கள் மத்தியில் இரண்டாம் பட்சமாக்கலாம் என்பதே சுமந்திரனின் எதிர்பார்ப்பு. அதே வேளை, நாடு தழுவிய பரந்த கூட்டணி ஒன்று தொடர்பிலும் சுமந்திரன தரப்பு கவனம் செலுத்தியிருக்கின்றது. இதற்காக மனோகணேசன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கூட்டணியுடனும் பேசியிருப்பாக தகவல். இதன் பின்னால் இருப்பதும் கோட்டா அச்சம்தான்.
 
கூட்டமைப்பு ஒரு தோல்வியடைந்த அரசியல் அமைப்பு, சம்பந்தன் – சுமந்திரன் படுதோல்வியடைந்த அரசியல்வாதிகள் என்பதை மக்கள் உணர்ந்தால் மட்டும்தான், புதிய தலைமை ஒன்றின் தேவையை அவர்கள் உணர்வார்கள். அவர்கள் அவ்வாறு உணர முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டால், அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெறுவது இலகுவாகிவிடும். கோட்டா அச்சம் இதற்கான சிறந்த அரசியல் முதலீடு ஏனெனில் அது ஏற்கனவே மக்களுக்குள் இருக்கின்ற ஒன்று. மக்கள் மனதில் இருக்கும் ஒன்றை மிகவும் இலகுவாக அரசியலாக்கிவிட முடியும்.
 
மாற்றுத் தலைமை தொடர்பில் சிந்திப்போரை பொறுத்தவரையில், இது ஒரு பிரதான சவாலாகும். மாற்றுத் தரப்பினராக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் இதுவரை கூட்டமைப்பின் தோல்வியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லை. கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பே ஏகபோகமாக அரசியலை கையாண்டு வந்தது. ஆனாலும் அரசில் தீர்வு மற்றும் அபிவிருத்தி விடயங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதனையும் கூட்டமைப்பால் பெறமுடியவில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் கூட்டமைப்பிடம் அல்லது சுமந்திரனிடம் மட்டுமே, தமிழர் அரசியலை விட்டுவிடுவது சரியான ஒன்றா? அது ஒரு புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறையாக இருக்க முடியுமா? கடந்த ஜந்துவருடங்களாக கூட்டமைப்பு என்பது முற்றிலுமாக ஜக்கிய தேசியக் கட்சியின் ஒரு கிழையாகவே செயற்பட்டுவந்தது. இந்த நிலையில் கோட்டபாய தலைமையிலான புதிய ஆட்சியாளர்களை சுமந்திரனால் எதிர்கொள்ள முடியுமா – இந்த நிலையில் புதிய ஆட்சியாளர்களை எதிர்கொள்ள ஒரு மாற்றுத் தலைமை அவசியமில்லையா?
 
இந்தக் கேள்விகளின் அடிப்படையில் மாற்று தரப்பினர் மக்களை இதுவரை அணுகவில்லை. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான நம்பிக்கையாக இருப்பது விக்கினேஸ்வரன் ஒருவர்தான். ஏனெனில் அதற்கான ஆளுமையுடைவராகவும் இலங்கைக்குள்ளும் சர்வதேச பரப்பிலும் அங்கீகாரமுடையவராகவும் அவரே இருக்கின்றார். ஏனெனில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாற்றுத் தலைமையாக தன்னை முன்னிறுத்தி வந்தாலும் கூட, இதுவரை அதற்கான அங்கீகாரத்தை அவரால் பெற முடியவில்லை. ஏனெனில் அவர் கடந்த காலங்களிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. மேலும் இன்றைய நிலையில் கூட்டமைப்பை எதிர்கொள்ள வேண்டுமாயின் அதற்கு பிறிதொரு கூட்டுத்தான் தேவை. தனிக்கட்ச அரசியல் பொருத்தமானதல்ல.
 
தமிழரசு கட்சி என்னதான் தனித்துவம் பற்றி பேசினாலும் கூட, கூட்டமைப்பை விடுத்து தனியாக தேர்தலை எதிர்கொள்ள இதுவரை முயற்சிக்கவில்லை. ஏனெனில் தனிக்கட்சியாக அரசியலை எதிர்கொள்ள முடியாது. வேண்டுமானால் ஒப்பீட்டடிப்படையில் மற்றைய கட்சிகளை விடவும் கூடுதலான வாக்குகளை எடுக்க முடியும். ஆனால் இப்போதிருப்பது போன்று ஒரு பிரதான சக்தியாக இருக்க முடியாது. இது தமிழரசு கட்சியின் பலவீனம் ஆனால் இந்தப் பலவீனத்தை இதுவரை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளால் சரிவர பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இப்போதும் கூட, புளொட்டும் டெலோவும் வெளியேறப் போவதாக கூறினால் தமிழசு கட்சி நிலைகுலைந்து போகும். ஏனெனில் அதன் பின்னர் தமிழரசு கட்சியால் கூட்டமைப்பாக செயற்பட முடியாது. ஆனால் இதற்கான அரசியல் உறுதிப்பாடும், ஆளுமையும் பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் இருக்கின்றதா?
 
உண்மையில் தாராளவாதப் போக்கோடு, அரசியலையும் அபிவிருத்தியையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு செல்லக் கூடிய ஒரு மாற்றுத் தலைமைக்கான காலம் மிகவும் கனிந்திருக்கின்றது. ஆனால் காலத்தை சாதகமாகப் பயன்படுத்தி, முன்னேறிச் செல்லக் கூடிய நிலையில் மற்றவர்கள் இருக்கின்றனரா என்பதே மீண்டும் மீண்டும் தலைநீட்டும் கேள்வியாக இருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சீன போரியல் வல்லுனர் சன் சூவின் ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. போர்களில் தோல்விகள் நிகழும்போது, அது தொடர்பான பொதுவான பார்வை என்னவென்றால், வென்றவர் பலசாலி தோற்றவர் பலமற்றவர் என்பதே! ஆனால் சன் சூ அதனை இவ்வாறு கூறுகின்றார். நீங்கள் எதிரியின் பலத்தால் தோற்கடிக்கப்படவில்லை மாறாக உங்களது பலவீனத்தால் தோல்விடைந்தீர்கள். எனவே கூட்டமைப்பு என்னும் பெயரில் ஒரு கட்சியின் மேலாதிக்கமும் அதன் மூலம் ஒரு சில நபர்களின் மேலாதிக்கமும் தொடர்கிறதென்றால், அது அவர்களது கெட்டித்தனத்தால் நிகழவில்லை மாறாக, அவர்களை ஓரங்கட்ட முடியாமல் தடுமாறும் மற்றவர்களின் பலவீனத்தால்தான் அது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த பலவீனம் சரிசெய்யப்படாதவரையில் இதில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படப் போவதில்லை.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்