அமெரிக்க புலனாய்வு அறிக்கையும், இலங்கை விவகாரமும் – உண்மையும் கற்பனையும்
26 பங்குனி 2022 சனி 12:07 | பார்வைகள் : 12552
உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை ஒரு முக்கிய விடயமாக நோக்கப்படுவதான, ஒரு கதை நம்மவர்கள் மத்தியிலுண்டு. ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படியான பார்வைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சீனாவின் பிரசண்ணம் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதாகவும் – இதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியிருப்பதாகவும் இவர்கள் கூறுவதுண்டு. இன்னொரு தரப்பினரோ – சற்று ஒரு படிமேல் சென்று, இந்தச் சூழலை கையாளுவதற்கு வேறு வழியின்றி, இந்தியா ஈழத் தமிழர்களை நோக்கி வரவேண்டிவரும் என்றவாறு, கற்பனை செய்வதுமுண்டு. உண்மையில், இவ்வாறான பார்வைகளுக்கு அமைவாகத்தான் விடயங்கள் இடம்பெறுகின்றனவா?
அமெரிக்க தேசிய புலனாய்வு பணியகத்தின் இந்த ஆண்டுக்கான – உலகளவிலான அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை வெளியாகியிருக்கின்றது. அமெரிக்க அவதானத்தில் உலகளவிலான அச்சுறுத்தல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதில் முதலாவது அச்சுறுத்தலாக, சீனா குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டாவதாக ரஸ்யாவும் மூன்றாவதாக ஈரானும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தெற்காசியாவின் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் குறித்த அறிக்கையில் ஆராயப்பட்டிருக்கின்றது. தெற்காசியாவின் அச்சுறுத்தல்களாக ஆப்கானிஸ்தான் விவகாரம் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டாவதாக பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. மூன்றாவதாக, இந்திய-சீன எல்லைப்புற இராணுவ நெருக்கடிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது தவிர தெற்காசியாவிலுள்ள வேறு எந்தவொரு நாடுகள் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் தெற்காசியாவிலுள்ள இலங்கை உட்பட்ட, சிறிய நாடுகள் அமெரிக்க அவதானத்திலேயே இல்லை.
இதிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, இந்தியா-பாக்கிஸ்தான் முரண்பாடுகளின் வழியாகவும், இந்திய-சீன பதட்டங்களின் வழியாகவும்தான் தெற்காசிய விவகாரங்களை, அமெரிக்கா உற்று நோக்குகின்றது. தெற்காசியா தொடர்பான அமெரிக்க புரிதலும், அணுகுமுறையும் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டதென்பது தெளிவாகின்றது. தெற்காசியாவிலுள்ள நாடுகள் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு மற்றும் முரண்பாடுகளின் அடிப்படையில்தான், தெற்காசியாவின் உலக முக்கியத்துவம் தீர்மானிக்கப்படும். இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்காவின் தெற்காசிய கொள்கை முடிவுகள் அனைத்தும், புதுடில்லியின் முடிவுகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். புதுடில்லியின் தீர்மானங்களுக்கு அப்பால் சென்று செயற்படுமளவிற்கு, அமெரிக்க மூலோபாய சமூகத்திற்கு எந்தவொரு அவசியமும் இல்லை.
தெற்காசியாவில் இந்தியாவின் முடிவுகளே பிரதானமானது. இந்த பின்புலத்தில் சிந்தித்தால், இலங்கை விடயத்தில் அமெரிக்க ஈடுபாட்டின் எல்லைக்கோடு என்பது எப்போதுமே, இந்தியாவின் ஆர்வங்களுக்கு அமைவாகவே அமைந்திருக்கும். இந்தியாவின் அனைத்து அகுமுறைகளும் அமெரிக்காவிற்கு உகந்தல்ல என்பது உண்மைதான். உதாரணமாக ரஸ்ய – உக்ரெயின் யுத்தத்தின் போது – முழு மேற்குலகும் ரஸ்யாவிற்கு எதிராகவே திரும்பியது. ஆனால் இந்தியா மேற்குலகத்தின் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ரஸ்யாவிற்கு எதிராக ஜ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, இந்தியா அதில் பங்குகொள்ளவில்லை. ஏனெனில் இந்தியாவிற்கும் ரஸ்யாவிற்கும் நெருங்கிய நட்புறவுண்டு. ரஸ்யாவுடன் நிற்க வேண்டிய தேவை இந்தியாவிற்குண்டு.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட, ரஸ்ய விடயத்தில் இந்தியாவும் சீனாவும் அவரவர் நலன்களின் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நின்றனர். சர்வதேச அரசியலிலுள்ள சிக்கலான பக்கம் இதுதான். ஏனெனில் இங்கு அனைத்துமே நலன்களின் அடிப்படையில்தான் நிறுத்துப்பார்க்கப்படுகின்றன. நீதியின், நியாயத்தின், தர்மத்தின் அடிப்படையில் இங்கு எதுவும் நோக்கப்படுவதில்லை. நோக்கவும் முடியாது. எனவே சர்வதேச அரசியல் தொடர்பில் கற்பனை செய்வதைவிடுத்து, அதனை இரத்தமும் சதையுமாக புரிந்துகொள்வதே அவசியமானது.
இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்பில் இந்தியா அறியாத விடயங்கள் எதுவுல்லை. இந்தியாவை பொறுத்தவரையில், இலங்கை விடயத்தில், சிங்களவர், ஈழத் தமிழர் ஆகிய இரண்டு இனக் கூட்டத்திடமிருந்தும் அவமானகரமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இலங்கை தொடர்பில் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கும் போதும், இந்திய இராஜதந்திர சமூகம் இதனை கருத்தில் கொள்ளும். எனவே இந்தியாவிற்கு புதிதாக கதைகள் சொல்லுவதாக எவரேனும் நினைத்துக் கொண்டால் – அது தவறானது.
உலகில் எந்தவொரு நாடும் அதன் நலன்களை நிறுத்துப் பார்த்துத்தான், வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும். இந்தியாவின் தலையீடும் அதன் நலன்களிலிருந்துதான் தீர்மானிக்கப்பட்டது. அன்றிருந்த அரசியல் சூழல்நிலைகளினால் அவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. தனிநாட்டு கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்தியாவில் இருப்பது போன்றதொரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் இந்தியா அக்கறையுடன் இருந்தது. ஆனால் இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் உடன்படவில்லை. பிரபாகரன், இந்தியாவிற்கு எதிரான பாதையில் பயணித்தார். ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பலமான நட்புறவு பாதிக்கப்பட்டது. இப்போது நட்பு அறுந்திருக்கும் சூழலில்தான், தமிழ் கட்சிகள் இந்தியாவின் தயவை, தலையீட்டை கோருகின்றன.
ஆனால் இது எழுதுவது போன்று – பேசுவது போன்று – இலகுவானதொரு விடயமல்ல. ஏனெனில் அரசியல் சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இலங்கை தொடர்பான இந்தியாவின் பார்வைகள் கணிசமாக மாறிவிட்டது. இந்த நிலையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் எச்சமாக இருக்கின்ற 13வது திருத்தச்சட்டத்தை வலியுறுத்தக் கூடிய நிலையில்தான் இந்தியாவின் ஈடுபாடு மட்டுப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா ஒரு பிராந்திய சக்தி. இந்தியாவிற்கு உள்ளுக்குள்ளும், எல்லைகளிலும், அயல்நாடுகளிலும் ஏராளமான பிரச்சினைகள் உண்டு. இந்த ஏராளமான பிரச்சினைகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் தனது உடனடி அயல்நாடு என்னும் வகையில், இலங்கையின் உள்-விவகாரங்களில் தலையீடு;ம் ஆற்றலை இந்தியா கொண்டிருப்பது உண்மை. ஆனால் அதற்காக, எழுந்தமானமான முடிவுகளை, இந்தியா எடுக்கப் போவதில்லை. ஏற்கனவே விரல்களை சுட்டுக் கொண்ட அனுபத்திலிருக்கும் இந்தியா, ஒவ்வொரு விடயங்களையும் நிறுத்துப் பார்த்துத்தான் விடயங்களை முன்னெடுக்கும் வாய்ப்புள்ளது.
இந்த பின்புலத்தில் சிந்தித்தால் இலங்கையின் மீதான சர்வதேச அவதானம் என்பது இந்தியாவை தாண்டிச் செல்லக் கூடிய ஒன்றாக எப்போதுமே இருக்கப் போவதில்லை. நான், இங்கு சுட்டிக்காட்டும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை அதற்கொரு தெளிவான சான்று. அதாவது, மேற்குலகத்தின் தெற்காசியா தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இந்தியாவை அனுசரித்துச் செல்வதாகவே இருக்கும். அதே போன்று, இந்தியாவின் தீர்மானங்கள், கருத்துக்களே உலக அரங்கில் உற்று நோக்கப்படும். ஏனெனில் உலக அரசியல் போக்கில் இந்தியாவிற்கு ஒரு பிரதான இடமுண்டு. குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரையில், அதன் முதன்மையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளுவதற்கு இந்தியாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் கட்டாயமானது. அதே போன்று, இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியை ஒரு எல்லைக்குள் முடக்குவதற்கு அமெரிக்காவின் ஒத்தாசை இந்தியாவிற்கு தேவை. இந்தியா, அமெரிக்காவுடனான, சுதந்திர பாதுகாப்பு உடன்பாட்டை கொண்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவின் கடல்வழியை, இந்தியாவின் படைத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்த முடியும். அதே போன்று, பிரித்தானியாவுடன் இந்தியா சுதந்திர பாதுகாப்பு உடன்பாட்டை கொண்டிருக்கின்றது. இவ்வாறான உடன்பாடுகளும் நட்புறவும் இருந்தாலும் கூட,
இந்தியா உலக விடயங்களில் முற்றிலுமாக அமெரிக்காவுடன் இல்லை. இந்தியா இப்போதும், நேருகால அணிசாரா கொள்கைப் பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே அதன் வெளியுறவுகளை தீர்மானிக்கின்றது. இந்தியாவில் எவர் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் இந்திய வெளிவிவகார கொள்கையின் அஸ்திபாரம். அணுகுமுறைகள் வேண்டுமனால் மாறலாம் ஆனால் அடிப்படை ஒன்றுதான். எனவே சீனாவின் பிரசண்ணத்தின் அடிப்படையில் இலங்கையின் மீது அமெரிக்காவும் இந்தியாவும் பெரியளவில் பதட்டமடைந்திருப்பதாக கற்பனை செய்வது அர்த்தமற்ற ஒன்று. அதே வேளை, இந’தியா வேறு வழியில்லாமல் ஈழத் தமிழர்களை நோக்கிவரும் என்றவாறு கற்பனை செய்தால், அது ஒருவரின் அரசியல் கற்றுக்குட்டித்தனமாகவே இருக்க முடியும். அவ்வாறானவர்கள் தங்களுக்குள் இப்படியொரு கேள்வியை கேட்டுக் கொள்வது நல்லது. அதாவது, சிங்களவர்கள் இந்தியாவிற்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து. சரணாகதியடைந்தால், ஈழத் தமிழர்கள் விடயத்தை இந்தியா கைவிடலாம்தானே! ஒரு வேளை அப்படி நடந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்விற்காக பேசுகின்ற ஒரேயொரு நாடான, இந்தியாவும் கூட, ஈழத் தமிழர்களுக்கு இல்லையென்றாகலாம். ஆனால் அவ்வாறு நடக்காதென்றே – நாம் நம்புகின்றோம். ஆனால் இந்த நம்பிக்கை எப்போதும் கைகொடுக்கும் என்றில்லை. எனவே தமிழ் அரசியல் சமூகம், வாய்ப்புக்கள் இருக்கின்ற போது, அதனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியலை பழக வேண்டும்.