Paristamil Navigation Paristamil advert login

ஆறு கட்சிகளின் கடிதமும் அரசியல் பொய்களும்

ஆறு கட்சிகளின் கடிதமும் அரசியல் பொய்களும்

13 மாசி 2022 ஞாயிறு 17:39 | பார்வைகள் : 10089


ஜனநாயக அரசியலில் பொதுவாக ஒரு கூற்றுண்டு. அதாவது கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும். அதாவது, அரசியலில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் இடம்பெறும் தவறுகளை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் விமர்சனங்கள் என்னும் பெயரில் பொய்கள் பரப்பப்படுமாக இருந்தால், அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அளவுக்கதிகமாகவே, பொய்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. 13வது திருத்தச்சட்ட எதிர்ப்பு என்னும் பெயரில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) குறித்த கடிதம் தொடர்பில் பொய்களை கூறியது. தேர்தல் போட்டியை கருத்தில் கொண்டு செயற்படும் ஒரு கட்சியின் பொய்யென்று அதனை நாம் விளங்கிக் கொள்ளலாம். பொதுவாக ஒரு அரசியல் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கையை பிறிதொரு கட்சி எதிர்ப்பதும், விமர்சனங்களை முன்வைப்பதும் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் தங்களை படித்தவர்கள் என்று கருதிக் கொள்ளும் தமிழ் சிவில் சமூகமும் கடிதத்தை படிக்காமலேயே அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.

 
இந்த கடிதம் தொடர்பான முதலாவது பொய் – 13வது திருத்தச்சட்டம் தொடர்பானது. அதாவது, குறித்த ஆறு கட்சிகளும் 13வது திருத்தச்சட்டத்தை ஒரு அரசியல் தீர்வாக முன்வைத்திருப்பதாக கூறப்படும் பொய். இரண்டாவது பொய், ஆறு கட்சிகளும் சமஸ்டி கோரிக்கையை கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களின் அபிலாஸைகளை 13ற்குள் முடக்குவதற்கான சதியில் ஈடுபடுவதாக சொல்லப்படுவது. மூன்றாவது பொய், சீனாவை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாதான் திரைமறைவிலிருந்து இதனை செய்வதாகச் சொல்லப்படும் (கற்பனையான) பொய்.
 
உண்மையில், இந்த கடிதத்தில், அரசியல் யாப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13 திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை, ஒரு நிரந்தரமான அரசியல் தீ;ர்வு என்று எங்குமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட போதும் கூட, அது ஒரு அதிகாரப் பகிர்வாக அமையவில்லை, மாறாக, அதிகார பரவலாக்கமாகவே அமைந்திருந்தது – என்னும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் யாப்பு ஒற்றையாட்சி அரசியல் யாப்பாக இருப்பதே இதற்கான காரணம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
 
இந்த விடயங்கள் அனைத்தும் கடிதத்தில் தெளிவாக இருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உரித்துள்ள நாடான இந்தியா, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும், அத்துடன், 13இலிருந்து அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றை கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவு செய்வதற்கும் இந்தியா உதவ வேண்டும். அதாவது, 1987இலிருந்து – இன்றுவரையில் இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக, பிளவுபடாத இலங்கைக்குள் ‘தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை’ உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும். இதனைத்தான் கடிதம் வலியுறுத்தியிருக்கின்றது. இதில் தமிழ் மக்களுக்கு எதிரான சதி எங்கிருக்கின்றது? 13 ஒரு அரசியல் தீர்வென்னும் விடயமே இதில் இல்லையே!
 
இந்த கடிதம் தொடர்பில் முன்வைக்கப்படும் பிறிதொரு விமர்சனத்தை பார்ப்போம். இந்தியாவை நோக்கி செல்வது சரி ஆனால், எதற்காக 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் குறிப்பிட வேண்டும் – சமஸ்டிக் கோரிக்கை பற்றி மட்டுமே பேசியிருக்கலாமே? சில வேளைகளில் சிறுபிள்ளைத்தனமான அரசியல் கேள்விகளுக்கு கூட நாம் பொறுப்புடன் பதிலளிக்கத்தான் வேண்டும்.
 
13வது திருத்தச்சட்டம் என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட ஒன்று. 1987இற்கு பின்னர் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட, இன்றுவரையில், இலங்கையில் நிலைத்திருப்பது அது ஒன்றுதான். இலங்கையின் ஆட்சியாளர்கள் இன்றுவரையில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க முற்படவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம்தான் இதற்கான காரணம். அதே வேளை, இந்தியாவில் எவர் ஆட்சி செய்தாலும், ஈழத்- தமிழர்கள் தொடர்பான அவர்களின் நிலைப்பாடு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருக்கின்றது. இதனைத்தான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலரும் பிரதிபலித்திருந்தார். ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்திலாவது நீங்கள் ஒன்றாக நிற்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த பின்னணியில் – இப்போது, இந்தியாவை நோக்கி செல்ல வேண்டுமென்றால் – எவ்வாறு செல்ல முடியும்? இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை விட்டுவிட்டு செல்ல முடியுமா? இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டத்தின் பெயரில் இந்தியாவின் தலையீ;ட்டை தமிழ் கட்சிகள் கோருகின்றன. அரசல்லாத மக்கள் கூட்டமொன்று பிறிதொரு நாட்டை நோக்கி செல்லும் போது, அந்த நாட்டுக்கு ஏற்புடைய ஒன்றின் ஊடாகத்தான் செல்ல வேண்டு;ம். அப்படி செல்வதுதான் அறிவுபூர்வமான அரசியல் அணுகுமுறையாகும். இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவை அணுகியிருக்கின்றனர். இதனை தவறென்று வாதிட முற்படுவர்கள் எவரிடமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்தவொரு அறிவுபூர்வமான மாற்று அணுகுமுறையும் இல்லை. மற்றவர்கள் மீது வசைக் கற்களை வீசுவதை தவிர அவர்களிடம் எதுவுமில்லை. இதனைத்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் அவர்களுக்கு ஆதரவான கருத்துருவாக்கிகள் என்போரும் செய்து வருகின்றனர். இதிலுள்ள வேடிக்கையான விடயம் என்னவென்றால் அவர்களில் அனேகர் அறு கட்சிகளின் கடிதத்தை கூட சரியாக வாசிக்கவில்லை. வாசித்திருந்தால் இப்படியான சலசலப்புக்கள் ஏற்பட்டிருக்காது.
 
அடுத்த பொய் இந்தியா தொடர்பானது. இந்தியாவை புரிந்து கொள்வதில் எப்போதுமே ஒரு குழப்பம் இருந்து வருகின்றது. ஆனால் மீண்டும், மீண்டும் இந்தியா தொடர்பில் பேசுவதிலிருந்தே அனைவரும் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தவிர்க்கவே முடியாத நாடு. ஒன்றை தவிர்க்கவே முடியாதென்று நமக்கு தெரிந்துவிட்டால், அதனை கையாளுவதற்கு முயற்சி செய்வதுதானே சரியானது. எப்படி கையாளுவது? அதற்கான உபாயம் என்ன? ஆறு கட்சிகளின் கடிதம் தொடர்பில் படித்தவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும், தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கையில் இவ்வாறு கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது, இலங்கையை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து அகற்றி மீள இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் வழியே தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா விரும்புகின்றது. அதற்காக தமிழ் மக்களையும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அரசியலமைப்புடன் பிணைக்கும் 13வது திருத்தச்சட்டத்தை உயர்த்திப் பிடிக்குமாறு இந்தியா அழுத்தம்கொடுக்கின்றது.
 
இது ஒரு அருமையான கற்பனைப் பொய். ஆனால் இதே கருத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்) செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது, சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டு, இந்தியாவின் காலடிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியையே தமிழ் கட்சிகள் செய்வதாக அவர் குறிப்பிடுகின்றார். 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் இந்த செய்தி பிரசுரமாகியிருந்தது. தமிழ் காங்கிரஸ் செயலாளரின் கருத்தையே தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கையும் பிரதிபலிக்கின்றது. யார் – யாருடைய ஆலோசனையில் இயங்குகின்றனர்? சிவில் சமூக அமைப்புக்கள் பொறுப்புனர்வுடனும், மக்களது நலனையும் கருத்தில் கொண்டு தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
 
இலங்கையில் சீனாவின் பிரசன்ணம் தொடர்பில் இந்த கட்டுரையாளர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தப் பத்தியில் விவாதித்திருக்கின்றார். சீன – இந்திய அதிகாரப் போட்டி தொடர்பில் அளவுக்கதிகமாக கற்பனை செய்ய வேண்டாம் என்றும், இந்த கட்டுரையாளர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். இலங்கையை மையப்படுத்தியிருக்கும் பலம்பொருந்திய நாடுகளுக்கிடையிலான பலப்பரிட்சையை கையாளுவதற்கான பலம் ஈழத் தமிழர்களிடம் இல்லை. இந்த பின்னணியில் இந்தியாவிற்கும் மேற்குலகதத்திற்கும் ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை தவிர வேறு எந்தவொரு தெரிவும் ஈழத் தமிழர்களுக்கு முன்னால் இல்லை. இந்த அடிப்படையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சீனா தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றது.
 
மேலும் பலம்பொருந்திய நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியை சிறிய நாடுகளின் அரசியலமைப்பின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. சர்வதேச அரசியலை சட்டக் கண்கொண்டு பார்;க்கக் கூடாது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பலம்பொருந்திய நாடுகள் செயற்படுவதில்லை. தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு இந்தியா எந்த சர்வதேச சட்டத்தின் கீழ் பயிற்சியளித்தது? அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை எந்த சர்வதேச சட்டத்தின் கீழ் பிரகடணம் செய்தது? எந்த சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டன? எந்த சர்வதேச சட்டத்தின் கீழ் ஈரானின் இரண்டாம்மட்ட தலைவரான காஸிம் சுலைமானி கொல்லப்பட்டார்? இப்போது ரஸ்யா, எந்த சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உக்ரெயின் மீது படையெடுக்கப் போவதாக அச்சுறுத்துகின்றது? இந்த விடயங்களை சட்டக் கண்-கொண்டு பார்த்தால் இதற்கு பின்னாலுள்ள அரசியலை ஒரு போதுமே விளங்கிக் கொள்ள முடியாது. எனவே ஒரு வேளை சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை முற்றிலுமாக மீட்க வேண்டுமென்று இந்தியா விரும்பினால், அதற்கு 13வது திருத்தச்சட்டம் தேவையில்லை. ஒரு பிராந்திய சக்தி, 13வது திருத்தச்சட்டத்தை நம்பித்தான் இலங்கை விடயத்தை கையாள முற்படுகின்றது என்பது நல்ல நகைச்சுவையாக இருக்க முடியும்!
 
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் இந்தியா எந்த நேரத்திலும் இராணுவ ரீதியான தலையீட்டை செய்யும். இதுவே பலம்பொருந்திய நாடுகளின் இயல்;பு. நிலைமை இவ்வாறிருக்கின்ற போது, 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இலங்கையை கட்டுப்படுத்துவதற்காக ஏன் இந்தியா தமிழ் கட்சிகளை பயன்படுத்த வேண்டும்? உண்மையில் அவ்வாறானதொரு நோக்கம் இந்தியாவிற்கு இருந்தால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சமஸ்டியடிப்படையிலான அதிகாரப் பகிர்வையல்லவா இந்தியா பெற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் வடக்கு கிழக்கில் சீனப் பிரசண்ணத்தை தடுக்கக் கூடிய வல்லமையை தமிழர்கள் பெற்றிருப்பார்கள். பின்னர் எதற்காக 13 தொடர்பில் பேச வேண்டும்?
 
விடயங்களை வேறு கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும். இந்த இடத்தில்தான் ஆறு கட்சிகளின் கடிதத்தை விமர்சிப்பவர்கள் அனைவருமே தவறு செய்கின்றனர். அதாவது, இந்தியாவை நோக்கிய கோரிக்கை எப்படியானதொரு சூழலில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது? கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியாளர்கள் என்ன செய்ய முயற்சிக்கின்றனர்? கோட்டபாய அணியினர், புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவர முயற்சிக்கின்றனர். முதலாவது வரைபில் மாகாண சபை இல்லையென்னும் செய்தியும் வெளியாகியிருக்கின்றது. அரசியல் யாப்பின் மூலம் ஓரளவு வாய்ப்பை வழங்கிவரும் 13வது திருத்தச்சட்டத்தையும் முற்றிலுமாக இல்லாமலாக்குவதற்கான அரசியல் சதியொன்று திட்டமிடப்படுகின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான், தமிழ் கட்சிகள் அதனை தடுத்து நிறுத்தும் ஒரு தந்திரோபாய நகர்வாக இந்த நகர்வை மேற்கொண்டிருக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக இருக்கின்ற ஒரேயொரு துருப்புச் சீட்டு, இந்தியாவிற்கான துருப்புச் சீட்டாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஏனெனில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பயன்படுத்தும் வல்லமை இந்தியாவிற்கு மட்டும்தான் உண்டு. ஆறு கட்சிகளின் கோரிக்கையை இந்த பின்புலத்தில்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விடயத்தை எதிர்ப்பதற்கு முன்னர் அது தொடர்பில் சரியான தெளிவை பெறுவது அவசியம். இந்திய தலையீட்டை எதிர்ப்பதுதான் அகில இலங்கை தமிழ் காங்கிரசினதும் (முன்னணி) தமிழ் சிவில் சமூகத்தினதும் நிலைப்பாடென்றால், அதனை அவர்கள் தெளிவோடு, நேர்மையாக செய்யலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்