Paristamil Navigation Paristamil advert login

13-எதிர்ப்பு – சீனாவிற்கான அழைப்பா?

13-எதிர்ப்பு – சீனாவிற்கான அழைப்பா?

4 மாசி 2022 வெள்ளி 11:44 | பார்வைகள் : 10082


அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இது பல கேள்விகளை முன்வைத்திருந்தது. ஏனெனில் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் வழக்கத்திற்கு மாறான ஒன்று. இந்திய (தமிழ்நாட்டு) மீனவர்கள் தொடர்பில் வடக்கு மீனவர்கள் மத்தியில் அதிருப்திகள் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் இடம்பெற்றிருந்தது. கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன் பின்னர்தான் சீனத் தூதுவர், யாழ் மீனவர்களை நோக்கி உணவுப் பொதிகளோடு வந்திருந்தார். இருபது மில்லியன்கள் நிதியையும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக வழங்கியிருந்தார். யாழ் தீவகப் பகுதிகளில் சீனாவின் நிதியாதரவுடன் கலப்பு மின்-உற்பத்தி திட்டமொன்று இடம்பெறவுள்ளதாக முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதான செய்திகளும் வெளியாகியிருந்தன. பின்னர் இந்த திட்டம் கிடப்பிற்கு சென்றது. தாம் அந்த திட்டத்தை கைவிடவில்லையென்று, யாழ்;ப்பாண விஜயத்தின் போது, சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

 
யாழ்பாண விஜயத்தின் போது – வடக்கு தமிழர்களின் கலாசார குறியீடாக நோக்கப்படும், நல்லூர் கோவிலில் சீனத் தூதுவர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாண கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேஸ்டியுடன் சீன அதிகாரிகள் காட்சியளித்தனர். தமிழ் மக்களுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது? ஏனெனில் சீனா தமிழ் மக்களின் அரசியல் விவகாரத்தை ஒரு உள்நாட்டு விவகாரமாக நோக்குகின்றது. தாம் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் வெளிவிவகாரக் கொள்கையை கொண்டிருக்கவில்லை – என்பதே சீனாவின் ஒரு வரிப்பதிலாகும். அவ்வாறு கூறும் சீனாவோ – மறுபுறமாக, ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. உண்மையிலேயே நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாக் கொள்கையை சீனா கொண்டிருந்தால் – தர்க்கரீதியில் தமிழர் விவகாரத்தில் ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை என்னும் நடுநிலை அணுகுமுறையைத்தான் சீனா கைக்கொண்டிருக்க வேண்டும்.
 
ஆனால் சீனா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் பொறுப்பு கூறலை வலியுறுத்தும் பிரேரணைகளின் போது, சீனா எப்போதும் இலங்கையின் பக்கமாகவே இருக்கின்றது. தமிழ் மக்கள் பொறுப்பு கூறலையும் நீதியையும் எதிர்பார்த்திருக்கின்ற போது – சீனாவின் கொள்கை நடுநிலை என்றால், எந்தவொரு பக்கத்திலும் சீனா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆனால் சீனா அவ்வாறு செயற்படவில்லை. இந்த அடிப்படையில் சீனாவின் தலையிடாக் கொள்கை கேள்விக்குள்ளாகின்றது. ஒரு வகையில் மேற்குலகின் மனித உரிமைகள்சார் தலையீட்டை எதிர்கொள்வதற்கான ஒரு பதில் தந்திரோபாயமாகவே, தலையிடாக் கொள்கையை சீனா கைக்கொண்டுவருகின்றது. தர்க்கரீதியில் சீனா, தலையிடாக் கொள்கை என்னும் பெயரில், நாடுகளில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கான தலையீடுகளையே செய்கின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மனித உரிமைகள் சார்ந்து தலையீடுகளை செய்கின்ற போது, அதற்கு எதிராக நிற்பதன் மூலம்- குறித்த நாடுகளின் அதிகாரத்தில், செல்வாக்குச் செலுத்தும் மக்களின் ஆதரவை சீனா சம்பாதித்துக் கொள்கின்றது. பின்னர் அதனையே தனது விரிவாக்கலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றது.
 
சீனா இன்று வலுவாக காலூன்றியிருக்கும் நாடுகள் அனைத்திலும் இதனை நாம் காணலாம். ஆபிரிக்க நாடுகள் – அதிகம் மனித உரிமை சார்ந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. அங்கு சீனா தனது செல்வாக்கை அதிகளவில் பெருக்கியிருக்கின்றது. எனவே சீனா ஒரு இடத்தை அல்லது ஒரு மக்கள் கூட்டத்தை தெரிவு செய்யும் போது, அங்குள்ள பிரச்சினைகளை எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்றே திட்டமிடும். இந்த இடத்தில் ஒருவர் எதிர்வாதம் புரியலாம். ஏனைய நாடுகளும் அவ்வாறுதானே செய்கின்றன. பலம்பொருந்திய நாடுகள் தங்களுடைய நலன்களை நிறுத்துப் பார்த்துத்தானே எந்தவொரு தலையீட்டையும் செய்யும். நிச்சமாக – அதில் என்னிடம் மாற்று கருத்தில்லை.
 
ஆனால் இந்;தியா, அமெரிக்கா மற்றும் இன்னும் பல மேற்கு நாடுகளும், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் கரிசனைகளை காண்பிக்கின்றன. தமிழ் மக்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான ஒரு அரசியல் தீர்வே, தமது கொள்கை நிலைப்பாடென்று இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. அமெரிக்கா மனித உரிமைகள் என்னுமடிப்படையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறலுக்கான பொறுப்பு கூறலை வலியுறுத்துகின்றது. எனவே அவர்களின் தலையீடு தமிழ் மக்களுக்கு சாதகமானது. ஆனால் சீனாவோ, சர்வதேச அரங்குகளில் இலங்கையை காப்பாற்றிக் கொண்டு, இலங்கை அரசுக்கு எதிராக எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காமலேயே, தமிழ் மக்களை நோக்கி வருகின்றது.
 
இந்த அடிப்படையில்தான், இந்திய – ஈழ மீனர்களின் பிரச்சினையை பயன்படுத்தி வடக்கில் காலூன்றுவதற்கான பரிசோதனை முயற்சியில் சீனா ஒரு முறை சுழியோடிப் பார்த்தது. வடக்கில் இந்தியாவிற்கு எதிரான போக்குகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ – அங்கெல்லாம் காலூன்றலாம் என்பதற்கான ஒத்திகையாவே வடக்கை நோக்கி சீனா வந்தது.
 
மீனவர் பிரச்சினையை முன்வைத்து வடக்கை அளவிட்ட சீனாவிற்கு பிறிதொரு அழைப்பும் தற்போது விடுக்கப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டத்தை எதிர்த்தல் என்னுமடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுகின்றது. நிச்சயம் இதனையும் சீனா பயன்படுத்திக் கொள்ளும். தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான கோரிக்கையென்பது, தற்போதிருக்கின்ற மாகாண சபையை வலுவுள்ள ஒன்றாக மாற்றுதற்கான கோரிக்கையாகும். இப்போதுதிருக்கின்ற ஒன்றை மேலும் பலப்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கையானது – எப்படி தமிழ் மக்களுக்கு எதிரான ஒன்றாக இருக்க முடியும். இந்தக் கோரிக்கையை எதிர்த்தே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசி மக்கள் முன்னணி) நல்லூர் கோவிலடியில் குறிப்பிட்டளவான மக்களை திரட்டி, எதிர்பை வெளியிட்டிருக்கின்றது. சீனத் தூதுவர் எந்த கோவிலுக்கு முன்னால் நின்று இந்தியாவிற்கு செய்தி சொன்னாரோ – அந்த இடத்திலிருந்துதான் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற 13வது திருத்தச்சட்டத்தை கொழுத்தவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி சூழுரைத்திருக்கின்றது.
 
இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதிலிருந்து, குறித்த கட்சிகளின் தலைவர்களை இந்திய முகவர்களென்றும், அடிமைகளென்றும் பொது வெளிகளில் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். எனவே இவர்களது எதிர்ப்பு அடிப்படையில் 13 தொடர்பானதல்ல மாறாக, இந்தியாவோடு நிற்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டிற்கு எதிரானது, அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிரானது. இதன் மூலம் தாங்கள் இந்தியாவோடு இல்லையென்பதையும் இவர்கள் கூற முற்படுகின்றனர். அடிப்படையில் இந்தியாவிற்கு எதிரான மனோநிலையை யாழ் மக்கள் மீது விதைப்பதுதான் இதன் பின்னாலுள்ள உண்மையான இலக்கு. வடக்கிலிருந்து இந்தியாவை எதிர்ப்பது அடிப்படையில் யாருக்கான செய்தி? யாருக்கான அழைப்பு?
 
தர்க்க ரீதியில் 13வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பது என்பதே தவறானது. அத்துடன், அது ஒரு அரசியல் நேர்மையற்ற செயலாகும். ஏனெனில், 2012இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு 13ஜை (மாகாண சபையை) தீண்டுவதில்லை என்னும் விரதத்திற்கு முற்றுபுள்ளியிட்டது. அதன் பின்னர் 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. மக்கள் இரண்டு தேர்தல்களிலும் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர். எனவே, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டுவிட்டு, 13வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என்று கூறமுடியுமா? இப்போது 13ஜை எதிர்க்கப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் கஜன் பொன்னம்பலமும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறுகின்றார். இது எவ்வாறான அரசியல் நேர்மை? அங்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே தாம் போட்டியிடவுள்ளதாக கூறுகின்றார்? ஒரிடத்தில் ஒன்றுமில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டால் – அதனை நிரூபிப்பதற்காக அங்கு ஏன் செல்ல வேண்டும்? கஜன் பொன்னம்பலத்தின் வாதம் தர்க்கரீதியில் பொருளற்றது. எனவே இங்கு பிரச்சினை 13வது திருத்தச்சட்டம் இல்லை. விடயம் அதனைவிடவும் பாரதூரமானது.
 
ஒரு புறம் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அணியினர் பௌத்த அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவர முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படியானதொரு யாப்பை கொண்டுவர வேண்டுமென்றால் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கின்ற மாகாண சபையை இல்லாமலாக்க வேண்டும். ஆனால் 13 விடயத்தில் இந்தியா தலையீடு செய்தால் அது புதிய நெருக்கடியை தோற்றுவிக்கும். ஆனால் தமிழர்களும் 13இல் ஒன்றுமில்லை – அது தேவையற்ற ஒன்று – என்று கூறினால், அதன் பின்னர் சிங்கள கடும்போக்கு பௌத்த தேசியவாதிகளின் பணி சுலபமாகும். ஒரு வேளை, கஜன் பொன்னம்பலம் அணியினர் இதனை அறியாமலும் இருக்கலாம். 13ஜை இல்லாமலாக்க வேண்டும் அல்லது, பலவீனப்படுத்த வேண்டுமென்று, சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு பின்னாலும் இந்திய எதிர்;ப்புத்தான் மறைமுகமாக தொழிற்படுகின்றது. ஏனெனில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா எல்லாக் காலத்திலும் தமிழரின் பெயரால் இலங்கையில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது.
 
13வது திருத்தச்சட்டத்திலுள்ள போதாமைகளை தமிழ் பரப்பில் உரையாடுவது என்பது வேறு, அதனை வீதிகளில் நின்று எதிர்ப்பதென்பது வேறு. வீதிகளில் நின்று 13வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாக கோசமிடுவதும் – அதனை பாதுகாக்க வேண்டுமென்று கூறுபவர்களை இந்திய முகவர்கள், இந்திய அடிமைகள் என்றும் கோசமிடுவதானது – அடிப்படையில் இந்தியாவிற்கான எதிர்ப்பை வடக்கில் அடையாளப்படுத்துவதும், மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பை பரவல்படுத்துவதும் நோக்கத்தையுமே கொண்டதாகும். இவ்வாறான இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையே, மறுபுறமாக, சீனா தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றது. 13 எதிர்ப்பின் மூலம், சீனாவிற்கு வடக்கில் பிறிதொரு கதவு திறந்துவிடப்பட்டிருக்கின்றது. இனி அவர்கள் அதனை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்