Paristamil Navigation Paristamil advert login

யுத்தவெற்றியைச் சாப்பிட முடியாது?

யுத்தவெற்றியைச் சாப்பிட முடியாது?

19 தை 2022 புதன் 12:31 | பார்வைகள் : 10236


கொழும்பின் மிகப்பெரிய சுப்பர் மார்கட்களில் ஒன்றாகிய ஆர்பிகோ சுப்பர் மார்க்கெட்டில் விறகுக் கட்டுக்கள் விற்கப்படுகின்றன. ஒரு பொதி 150 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை போகிறது. சுப்பர் மார்க்கெட்களில் விறகை விற்கும் ஒரு காலம்.எரிவாயு தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய தேநீர் மட்டும் சாப்பாட்டுக் கடைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 
அச்சக உரிமையாளர் ஒருவர் சொன்னார் புது வருஷப் பிறப்புக்கு கலண்டர் அடிப்பதற்கு முடியாமல் இருப்பதாக. ஏனென்றால் கலண்டர் மாத இதழ்களை ஒன்றாகச் சேர்த்துப் இணைப்பதற்கு ஒரு உலோக பட்டி பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. இந்த உலோக பட்டி வெளிநாட்டில் இருந்து வருகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அதன் விலை அதிகரித்து செல்வதோடு அது அரிதான பொருளாக மாறிவிட்டது. எனவே காலண்டர்களை அடிக்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.கலண்டருக்கும் தட்டுப்பாடான ஒரு புது வருசம் பிறந்திருக்கிறது.
 
கடந்த திங்கட்கிழமை புத்தாண்டு பிறந்து இரண்டு நாட்களின் பின் அரசாங்கம் முட்டை விலை இரண்டு ரூபாயாலும் இறைச்சிக் கோழியின் விலை 50 ரூபாயாலும் குறைக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால் கடைகளில் ஏறிய விலை ஏறியதுதான். மூத்த வர்த்தகர் ஒருவர் சொன்னார் இலங்கை போன்ற நாடுகளில் ஏறிய விலை இறங்குவது மிக அரிது என்று. இலங்கை இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி அசாதாரணமானது. எனவே பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வந்ததும் இப்பொழுது ஏறியிருக்கும் விலைகள் இறங்கத்தானே வேண்டும் ?என்று அவருக்குச் சொன்னேன். அவர் சொன்னார் என்னுடைய இதுவரை கால அனுபவத்தின்படி ஏறிய விலைகள் இறங்குவது குறைவு என்று.அவர் கூறுவது சரியாக இருந்தால் வரப்போகும் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாக மாறலாம்.
 
“2022ஆம் ஆண்டும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படவேண்டிய வருடமாகவே அமையும் நிலையே இருக்கின்றது”என்று கூறியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார.தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை 500 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தியதன் பின்னர் வெளிநாட்டு கையிருப்பு மேலும் குறையும் என பொருளாதார நிபுணர் கலாநிதி நிஷான் டி மெல் தெரண செய்திக்கு தெரிவித்துள்ளார். இதனால், தரவரிசையில் இலங்கை தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று அவர் கூறுகிறார்.கடனைத் திருப்பிச் செலுத்துவதால் அன்னிய கையிருப்பு தொடர்ந்து குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.இந்த நிலையில் கடனை மீளச் செலுத்துவதற்கு மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தேவை எனவும், அதற்கான நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஆனால் நாட்டின் ஜனாதிபதி யுத்தகளத்தில் தான் செய்த சாதனைகளை இப்பொழுதும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்.நாட்டின் முதற்பிரஜையாக தன்னைத் தெரிவு செய்வதற்காக பல தியாகங்களை செய்த சிங்களவர்களின் பாதுகாப்பும் அவர்களது பாரம்பரியத்தை பாதுகாப்பதும் தனது தலையாய பொறுப்பு எனத் தான் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோட்டை கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையால் அவருக்கு “ஸ்ரீ லங்காதீஸ்வர பத்மவிபூஷன” விருது வழங்கப்பட்டபொழுது ஆற்றிய உரையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
யுத்த வெற்றிதான் அவருடைய ஒரே அரசியல் முதலீடு. கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியின் பின்னரும் அவர் தன்னுடைய சாதனை என்று கூறுவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் யுத்தத்தை வெற்றி கொண்டதையே.அதேசமயம் வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை பாதுகாத்ததையும் அவர் தனது சாதனையாக கூறுகிறார். அதற்கும் அப்பால் அவருடைய கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சி குறித்து அவர் பெருமையோடு சுட்டிக்காட்ட வேறு எதுவும் இல்லை.கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட எல்லாச் சறுக்கல்களுக்கு பின்னரும் அவர் தன்னை சிங்கள பௌத்தர்களின் தலைவராகவே காட்டுகிறார்.
 
ஆனால் அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்கிய சிங்கள மக்கள் இப்பொழுது ஆத்திரத்தோடும் விரக்தியோடும் காணப்படுகிறார்கள். அவர்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. மூன்றிலிரண்டு பெரும்பான்மை எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது என்று கட்சிகள் நம்புகின்றன.அண்மை வாரங்களில் தென்னிலங்கையில் உள்ள பிரதேச சபைகளில் நிகழும் பட்ஜெட் வாக்கெடுப்புக்களின் முடிவுகள் அதைத்தான் நிரூபிக்கின்றன. கடந்த மாதம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள நாட்டின் மிகப்பெரிய பலநோக்கு கூட்டுறவுச் சபைக்கான தேர்தல் நடந்தது.அத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் உணர்த்துகின்றன. அதேபோல கடந்த மாதம் நிகழ்ந்த தாதியர் சங்கத்துக்கான தேர்தல் முடிவுகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.
 
அமைச்சுக்களின் செயலர்களும் பிரதான அதிகாரிகளும் பதவி விலகுவதும், பதவி மாற்றப்படுவதும் அதைத்தான் உணர்த்துகின்றன. இந்த வாரம் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பதவி நீக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுசில் பிரேம் ஜயந்த தெல்கந்த சந்தைக்குப் போயிருக்கிறார்.அங்கே பச்சை மிளகாய் ஒரு கிலோ 1200 ரூபாய்க்கு விற்கப்படுவதை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.“விவசாயத்துறை அமைச்சு தோல்வி கண்டுவிட்டது.விவசாயத்துறை தொடர்பில் அரசின் கொள்கை முழுத் தோல்வி கண்டு விட்டது” என்று அவர் கூறியுள்ளார். அதனால் பதவியில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார்.அவர் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சுமார்18 ஆண்டுகளாக சிரேஷ்ட அமைச்சுப் பதவிகளை வகித்தவர்.நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவராக பார்க்கப்படும் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியிருக்கிறார்.இது அரசாங்கத்தை விமர்சித்ததற்காக வழங்கப்பட்ட ஒரு தண்டனை என்பதற்கும் அப்பால் அரசாங்கத்தில் பிரதமர் மஹிந்தவின் நிலை பலவீனமடைந்து வருவதைக் காட்டுவதாகவும் ஒரு வியாக்கியானம் உண்டு.
 
ஆளும் தரப்புக்குக்குள் இருந்துகொண்டே அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள். அவர்களை தாமரை மொட்டு கூட்டணிக்குள் தொடர்ந்தும் பேணி வைத்திருப்பது பெருமளவுக்கு மகிந்த ராஜபக்சதான்.இப்பொழுது அவருக்கு விசுவாசமான ஒருவர் தூக்கப்பட்டிருக்கிறார். இது எதிர்காலத்தில் பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்குரிய நிலைமைகள் அதிகரித்து வருவதை காட்டுகிறதா?
 
புதிய ஆண்டு பிறந்த கையோடு நாட்டு மக்களுக்கு பசில் ராஜபக்ச சில சலுகைகளை அறிவித்தார்.மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கு இந்த சலுகைகள் போதாது. அவை அரசாங்கத்தின் தோல்விகளிலிருந்து மக்களுடைய கவனத்தைத் திருப்ப உதவாது.ஆனால், அதற்காக எதிர்க்கட்சிகள் நம்புவது போல ராஜபக்சக்களை இலகுவாக தோற்கடிக்க முடியாது.
 
“அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் கவிழ்க்கத் தேவையில்லை ஏனெனில் அது ஏற்கனவே கவிழ்ந்துவிட்டது” என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.அது உண்மை.அரசாங்கம் தோற்றுக்குகொண்டிருக்கிறது. ஆனால் அதைத் தம்முடைய வெற்றியாக மாற்ற எதிர்க்கட்சிகளால் முடியாதிருக்கிறது.அதற்கு முதலாவது காரணம் எதிர்க்கட்சிகள் ஒரு பலமான தலைமையின் கீழ் ஒன்று திரண்ட சக்தியாக இன்றுவரை மேலெழவில்லைவில்லை.இரண்டாவது காரணம் ராஜபக்சக்கள் இனிமேலும் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்க முடியும். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் புதிய வடிவம்.அதை அவர்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் மூலம் அடுத்தடுத்த கட்டத்துக்கு அப்டேட் செய்து கொண்டார்கள்.எனவே தென்னிலங்கை அரசியலில் தமிழின எதிர்ப்பும் முஸ்லிம் எதிர்ப்பும் தொடர்ந்தும் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளவரை ராஜபக்சக்கள் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கலாம்.
 
யுத்த வெற்றி வாதத்தை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்னவெனில் மூவினத்தன்மை பொருந்திய ஒரு கூட்டுக்குப் போவது.மூன்று இனத்தவர்களின் வாக்குகளையும் திரட்டும் போதுதான் யுத்த வெற்றி வாதத்தை அதாவது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை தோற்கடிக்லாம் என்பது 2015ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது.அவ்வாறு மூன்று இனத்தவர்களின் வாக்குகளையும் கவர்வதற்கு ஒரு ஜனவசியம் மிக்க தலைவர் வேண்டும். ஒப்பீட்டளவில் ரணில் விக்கிரமசிங்க அப்பொழுது அப்படியொரு தலைவராக தோன்றினார். இப்பொழுது அப்படி ஒரு தலைவரை கண்டுபிடிக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு தலைவரைக் கட்டியெழுப்பாதவரை ராஜபக்சக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.ஏழைச் சிங்கள மக்கள் யுத்த வெற்றியைச் சாப்பிட முடியாது என்று உணரும் ஒருநாள் வரும்வரையிலும் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்