Paristamil Navigation Paristamil advert login

இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13, தமிழர் அரசியல்!

இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13, தமிழர் அரசியல்!

2 தை 2022 ஞாயிறு 08:08 | பார்வைகள் : 10711


அனைவருமாக இணைந்து இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில், 11 தமிழ் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு வரலாற்று சம்பவம். இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இதனை குழப்புவதற்கும் பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. தேசியத்தை கைவிட்டுவிட்டனர், 13இற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முடக்க முற்படுகின்றனர், 1987இற்கு பின்னர் இத்தனை உயிர்கள் போனதெல்லாம் எதற்காக – இப்படியான பலவாறான அலங்கார நச்சு வரிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. எனினும் இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருந்தமையால், இந்த முயற்சி இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த முயற்சியில் இணைந்து கொள்ளாத இலங்கை தமிழரசு கட்சி இறுதியில் இணைந்து கொண்டது. எனினும் இறுதி ஆவணத்தில் அனைவரும் கையெழுத்திடும் வரையில் இந்த முயற்சியின வெற்றி எதோவொரு வகையில் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கின்றது. சம்பந்தன் ஒரு வேளை மேலும் இழுத்தடித்து, மேலும் குழப்பலாம். ஒரு வேளை, சம்பந்தன் தொடர்ந்தும் இழுத்தடித்தால், அவர் இந்தியாவை நோக்கிச் செல்வதை விரும்பவில்லை என்பதே அதன் பொருள். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், சம்பந்தனை தவிர்த்துவிட்டு விடங்களை முன்னெடுப்பதுதான் சரியானது. ஒரு தனிநபருக்காக இத்தனை கட்சிகள் காத்திருக்க வேண்டியதில்லை.

 
இந்த முயற்சியுடன், கஜேந்திரகுமார் தலைமையிலான, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து கொண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரப்பப்புள்ளியாக கூட ஏற்க முடியாதென்னும் நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் வெளிப்படுத்திவருகின்றார். ஆனால் உண்மையில், இது 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமல்ல. அடிப்படையில், இது இந்தியாவை கையாளுவது தொடர்பான விடயமாகும். அதே வேளை, கூட்டமைப்பின் கட்சிகளோ அல்லது இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ஏனைய தமிழ் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகள் எவையுமே, 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்திலேயே, இது தொடர்பில் இந்திய தரப்பிற்கு விபரமாகவே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. எனவே 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இப்போது வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
இந்த விடயத்தை சற்று மாறுபட்ட வகையில் சிந்திக்க வேண்டும். 13வது திருத்தச்சட்டத்திற்குள் என்ன இருக்கின்றது? – இப்படிக் கேட்பவர்கள் சமான்யர்கள். ஆனால் இன்றைய அரசியல் சூழலில், 13வது திருத்தச்சட்டத்தை ஏன் கையிலெடுக்க வேண்டும்? – அதன் முக்கியத்துவம் என்ன? இந்த அடிப்படையில் சிந்தித்தால், அது ஒருவரது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்கும். இப்போது தமிழ் மக்களுக்கு தேவை ராஜதந்திர நோக்கிலான அரசியல் நகர்வுகளாகும். வெறும் சுலோகங்களும், வெற்று நம்பிக்கைகளும் பயனற்றவவை. இந்த அடிப்படையில்தான் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியை நாம் பார்க்க வேண்டும். ஒரு புறம் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றது. வாய்ப்பு கிடைத்தால், மாகாண சபை முறைமையை முற்றிலும் இல்லாமலாக்குவது தொடர்பிலேயே அவர்கள் சிந்திக்கின்றனர். மாகாண சபைக்கு மாறாக, மாவட்ட சபை முறைமையொன்றை முன்வைப்பதற்கும் அவர்கள் முயற்சிப்பதாக தெரிகின்றது. அதே வேளை தற்போதிருப்பதை விடவும், மத்தியில் மேலும் அதிகாரங்களை குவிப்பதற்கான, ஜனாதிபதியை மேலும் அதிகாரமுள்ளவராக ஆக்குவதற்கான முயற்சியாகவே அவர்களது அரசியல் யாப்பு இருக்கும். அப்படியானதொரு அரசியல் யாப்பு வருவது நல்லதா – அல்லது, இப்போது இருக்கின்ற ஓரளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையாவது பாதுகாத்துக் கொள்வது சிறந்ததா? இப்போதிருக்கும் ஓரளவு சாதகமான விடயங்களை கூட, இல்லாமலாக்குவதை ஆதரிப்போர் உண்மையில் யாருடைய சேவகர்கள்? ஏனெனில் அதுதான் கோட்டபாய ராஜபக்ச தரப்பின் இலக்கு.
 
இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் ஆரவாரமான தமிழ் கதைகள் பல சொல்லப்பட்டாலும் கூட, கடந்த 12 வருடங்களில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு முன்னேற்றகரமான விடயங்களும் இதுவரையில் நடைபெறவில்லை. கட்சிகளுக்கிடையிலான கொழும்பு சந்திப்பின் போது, சம்பந்தன், தான் – 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி சென்றுவிட்டதாக வாதிட்டிருக்கின்றார். இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் அவர் இப்படித்தான் கூறியிருக்கின்றார். ஆனால் சம்பந்தனின் முயற்சிகள் எவையாவது செயல்வடிவம் பெற்றிருக்கின்றதா? அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த 12 வருடங்களில் சம்பந்தன் சாதித்தது என்ன? 13வது திருதத்தை, ஒர் ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறும் கஜேந்திரகுமார் சாதித்தது என்ன? இதுவரை விவாதிக்கப்பட்ட அனைத்துமே உதட்டளவு விடயங்கள் மட்டும்தான். செயலில் எதுவும் நிகழவில்லை.
 
இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்வு முயற்சிகளில், இன்றுவரையில், நின்று நிலைக்கும் ஒரேயொரு விடயம், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையலான, மாகாண சபை முறைமை ஒன்றுதான். இதற்கு காரணம் அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அங்கமாக இருப்பதுதான். இந்த விடயமும் இல்லாதொழிக்கப்படுமாக இருந்தால், தமிழ் மக்களுக்கு இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு சாதகமான விடயமும் கைநழுவிவிடும். இது தொடர்பில் தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் சிலர் வாதிடலாம் ஆனால், அவ்வாறு கூறுபவர்களிடம் இருக்கின்ற மாற்று திட்டம் என்ன? அவர்களால் தங்களின் மாற்று திட்டங்களை மக்கள்முன் வைக்க முடியுமா? வரலாம் – வரக் கூடும், அப்படியும் இப்படியும் நடக்கலாம் என்று கூறுவதை, எவர் வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். அதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. சாமானிய அறிவுபோதுமானது. ஒரு விளைச்சல் பற்றி ஆடம்பரமாக வர்ணிக்கலாம்- ஆனால், அறுவடையென்பது, இறுதியாக அடுக்கப்படும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையாகும்.
 
1972, 1978 அரசியல் யாப்புக்களை தமிழ் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் பங்குபற்றலின்றியே அரசியல் யாப்புக்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது? தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல் யாப்பின் கீழ்தானே, தமிழர்கள் ஆட்சி செய்யப்பட்டனர். இதுவரையில் தமிழ் தலைமைகள் சிங்கள தலைமைகளோடு மேற்கொண்ட உன்பாடுகள் எவையுமே வெற்றிபெறவில்லை. இதில் இறுதியாக இடம்பெற்றதுதான் கூட்டமைப்பு – 2015 கூட்டரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சி. இவ்வாறு சிங்கள தரப்புகளோடு செய்யப்பட்ட உடன்பாடுகள் ஒரு தலைப்பட்சமாக கிழித்து வீசப்பட்ட போது, தமிழ் தலைமைகளால் என்ன செய்ய முடிந்தது? தமிழ் மக்களின் நியாயத்திற்காக எவர் வந்து தலையீடு செய்தார்? இந்த நிலையில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கூட, புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சியொன்றில் ஈடுபடுவதற்கான வாய்பில்லை. ஏனெனில் ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் தோல்வி அவர்களுக்கான படிப்பினையாக இருக்கும்.
 
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், அதற்கான பொறுப்பு இந்தியாவிற்குண்டு, என்னும் கோரிக்கையை தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஓரு குரலில் முன்வைக்க முயற்சிக்கின்றனர். இதில் என்ன தவறுண்டு? இந்த முயற்சி அடிப்படையில் எதேச்சாதிகார அரசியல் யாப்பு ஒன்றை எதிர்ப்பதற்கான முதல் அடியாகும். ஏனெனில், கோட்டபாய ராஜபக்ச அணியினர், புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவதன் ஊடாக, 13வது திருத்தச்சட்டத்தில், அவர்களுக்கு நெருடலாக இருக்கின்ற விடயங்களை தூக்கிவிடலாம் என்றே எண்ணுகின்றனர். இந்திய வெளிவிவகார செயலருடனான சந்திப்பின் போது – 13வது திருத்தச்சட்டத்தில் சாதகமான, அதே வேளை பாதகமான அம்சங்கள் இருப்பதாக கோட்;டபாய குறிப்பிட்டிருந்தார். அது என்ன பாதகமான அம்சங்கள்? 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளடங்கியுள்ள, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் அத்துடன் இரண்டு மாகாண சபைகள் இணைந்து செயற்பட முடியுமென்னும் ஏற்பாடுகளைத்தான் அவர் பாதகமான விடயங்களென்று கூறுகின்றார். இவ்வாறானதொரு சூழலில் தமிழ் கட்சிகள் என்ன செய்ய வேண்டுமோ – அதனைத்தான் தற்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டிருக்கின்றன. இந்தியாவை நோக்கி செல்ல வேண்டுமென்னும் வாதத்தை இந்த கட்டுரையாளர், 2010இலிருந்து முன்வைத்து வருகின்றார். ஏனெனில், அருகிலிருக்கும் பிராந்திய அரசை தவிர்த்துவிட்டு, உலகெங்கும் அலைவதால் பயனில்லை. இந்தியாவை தவிர்த்து, புறம்தள்ளி, எந்தவொரு நாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவப் போவதில்லை. இதுதான் ஈழத் தமிழர்களுக்கான புவிசார் அரசியல் தலையெழுத்து.
 
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை வலியுறுத்துகின்றோம் ஆனால் 13யை நிராகரிக்கின்றோம் என்று ஓரு சிலரும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றோம் ஆனால், 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரம்ப புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று, இன்னும் சிலரும் – வாதிடுவதை காணமுடிகின்றது. உண்மையில் இந்த இரண்டு வாதங்களும் அப்பாவித்தனமானவை. இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாகியதன் பின்னால், இந்தியாவின் நலன்கள் பற்றி கரிசனை இருந்தது உண்மையாயினும், ஒப்பத்தத்தின் அடி நாதமாக இருந்தது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை காண்பதுதான். அது எப்படியான தீர்வாக இருக்க வேண்டுமென்பது தொடர்பில்தான் திம்பு பேச்சுவார்தையில் விவாதிக்கப்பட்டது. எனினும் ஜெயவர்த்தன அரசாங்கம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க மறுத்த காரணத்தினால், தமிழ் தலைமைகளின் முழுமையான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவில்லை. எனினும் தான் எடுத்துக் கொண்ட விடயத்தில் பின்வாங்க விரும்பாத ராஜீவ்காந்தி, மாகாண சபை முறைமையின் கீழான அரசியல் தீர்வொன்றை ஏற்குமாறு தமிழ் தலைமைகளை கோரினார். முதலில் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள், பின்னர் நிங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நான் செய்துதருவேன் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த பின்புலத்தில் வந்ததுதான் இலங்கை அரசியிலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபைகள் சட்டம். 1987, நவம்பர் மாதம் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1988இல், ஜெயவர்த்தன, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாக இணைப்பதாக அறிவித்தார். 1988 நவம்பர் மாதத்தில் இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது.
 
விடுதலைப் புலிகள் இயக்கம் இதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அப்போதிருந்த தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலில் போட்டியிட மறுத்திருந்த நிலையிலும்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, ஆகியவை தேர்தலில் போட்டியிட்டிருந்தன. 1988 டிசம்பரில், அன்னாமலை வரதராஜப் பெருமாள் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார். பிரேமதாச- விடுதலைப் புலிகள் உடன்பாட்டை தொடர்ந்து, 1990 மார்ச்சில், இந்திய அமைதிப் படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், மாகாண சபை செயலிழந்தது. இந்திய படைகள் இலங்கையில் தொடர்ந்தும் நிலைகொண்டிருந்தால், மாகாண சபை செயலழிந்திருக்காது. இந்திய படைகளை நம்பித்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்தது.
 
மாகாண சபை செயலிழந்த பின்னர் – மாகாண சபையை பலப்படுத்துவது, அதன் அதிகாரங்களை உச்சளவில் பயன்படுத்துவது தொடர்பில் தமிழ் அரசியல் பரப்பில் எவரும் பேசவில்லை. ஏன்? ஏனென்றால், விடுதலைப் புலிகள் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த போராட்டத்தின் இலக்கு தனிநாடு. தனிநாடு தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கும் சூழிலில் எவர் மாகாண சபை பற்றி சிந்திக்க முடியும்? கேக்கின் மீதான கனவினால், கையிலிருந்த ரொட்டியின் அருமை தொடர்பில் எவருக்கும் சிந்திக்க நேரமிருந்திருக்கவில்லை. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை முன்வைத்தும், சர்வதேச அழுத்தங்களை முன்வைத்தும், பலவாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
 
இவ்வாறானதொரு சூழலில்தான், கையிலிருக்கும் ரொட்டியும் கைநழுவிவிடுமோ, என்னும் ஆபத்தான சூழல் தோன்றியிருக்கின்றது. இப்படியான சூழலில், மாகாண சபையை தவிர்த்து சிந்திக்க முடியுமா? அதனையும் விட்டால் வேறு என்ன வழியுண்டு? இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தொடர்பில், அவரது மருமகன், பேராசிரியர், ஏ.ஜே.வில்சன், இவ்வாறு கூறுவார். செல்வநாயகம் கேக்கிற்காக பானை நிராகரிக்கும் ஒரு தலைவரல்ல. தமிழ் மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழக்கூடிய, ஒரு அரசியல் ஏற்பாடுதான் எமக்கு தேவையானது. அதில் எந்தவொரு மாற்று அபிப்பிராயமும் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருப்பவர்களுக்கு இருக்க முடியாது. ஆனால் அதனை எவ்வாறு அடைவது? வெறும் அறிக்கைகளாலும், வட்ஸ்அப் குறுந் தகவல்களாலும், முகநூல் பதிவுகளாலும் அடைய முடியுமா? கேக் கிடைக்கும் வரையில் பானை உண்டு, காத்திருக்கும் அரசியல் சிறந்ததா – பட்டினி கிடந்து செத்துப் போவது தொடர்பில் விவாதங்கள் செய்வது நல்லதா?

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்