Paristamil Navigation Paristamil advert login

திண்ணைச் சந்திப்பு

திண்ணைச் சந்திப்பு

13 கார்த்திகை 2021 சனி 10:34 | பார்வைகள் : 10341


கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும்,எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்கட்சி கால அவகாசம் கேட்ட படியால் அக்கட்சியையும் இணைத்துக் கொண்டு  இறுதிமுடிவை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவை நோக்கி எப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்பது தொடர்பில் முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதே சரி.

 
இச்சந்திப்பை  ஒழுங்குபடுத்தியது டெலோ இயக்கம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவ்வியக்கத்துக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. இதுகாரணமாக அந்த இயக்கத்தின் பேரம்பேசும் சக்தி அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது.அந்த இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தனது கட்சியின் உயர்ந்திருக்கும் பேரம்பேசும் சக்தியை சாத்தியமான வழிகளில் பிரயோகித்து தமிழ் அரசியலில் தமது கட்சியின் ஸ்தானத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உழைக்கும் ஒருவராகக் காணப்படுகிறார்.டெலோவின் முயற்சியால் கடந்த ஏப்ரல் மாதத்திருந்து ஐந்து கட்சிகள் ஏதோ ஒரு ஒருங்கிணைப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றன. ஜெனிவா கூட்டத்தொடரின்போது அவை ஒரு கூட்டுக் கடிதத்தையும் அனுப்பியிருந்தன.அதன் அடுத்தகட்டமாக இந்தியாவை நோக்கி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்று மேற்படி கட்சிகள் தீர்மானித்தன.
 
மேற்படி சந்திப்புக்களில் சிலவற்றில் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருக்கிறார். அவர் பொதுவாக சந்திப்புகளுக்கு எதிரானவராக காணப்படவில்லை.ஆனால் முடிவெடுக்கும் தருணங்களில் அவர் சம்பந்தரையும் சுமந்திரனையும் மீறிச்சிந்திக்க முடியாதவராக காணப்படுகிறார். அதனால் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின் போது கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக்கட்சி கூட்டுக்குள் இருந்து பின்வாங்கியது. இப்போதும் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்திலும் தமிழரசுக்கட்சி பங்குபற்றவில்லை. ஏனெனில் கூட்டமைப்புக்குள் உள்ள ஒப்பீட்டளவில் பெரிய கட்சி அது. மூத்த கட்சியும் அது.  ஏனைய சிறிய கட்சிகளின் முயற்சிகளின் பின் செல்ல அது தயாரில்லை என்று தோன்றுகிறது. அதேசமயம் பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்புக்கு வெளியே இருக்கும் கட்சிகளோடு ஏன் ஒருவித ஒருங்கிணைப்பை நாடுகின்றன என்பதை குறித்து தமிழரசுக் கட்சி தன்னை சுய விசாரணை செய்து கொள்வதாகவும் தெரியவில்லை.
 
கூட்டமைப்பு இப்பொழுது இதயத்தால் ஒன்றிணைந்த ஒரு கூட்டாக இல்லை.அது தேவை கருதிய ஒரு கூட்டாகத்தான் இருக்கிறது.அதன் தலைவரான சம்பந்தர் பௌதிக ரீதியாக நடமாட முடியாத ஒருவராக மாறிவிட்டார்.நடைமுறையில் சுமந்திரன்தான் செயற்படும் தலைவராக இருக்கிறார்.கூட்டமைப்பின் செயற்படு தலைவராக மட்டுமல்ல தமிழரசுக் கட்சியின் முடிவுகளின் மீதும் செல்வாக்குச் செலுத்தும் ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார்.எனவே மேற்படி கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவுக்கு ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்ற விடயத்தில் சுமந்திரனை தவிர்த்தமை தந்திரோபாய ரீதியாகப் பொருத்தமானதா? சுமந்திரனை விலக்கிக்கொண்டு சம்பந்தரை அணுகியபொழுது சுமந்திரன் நிலைமைகளைக் குழப்பிவிட்டார் என்று மேற்படி கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.
 
கடந்த சனிக்கிழமை கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் சம்பந்தரை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்தார்.தீபாவளி பண்டிகையை ஒட்டிய ஒரு சந்திப்பு என்று கூறப்பட்ட போதிலும்கூட மேற்படி ஐந்து கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சியை நோக்கி சம்பந்தரைத் தூண்டும் உள்நோக்கம் அந்த சந்திப்பில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.எனினும் சந்திப்புக்கு பின்னரும் தமிழரசுக்கட்சி திண்ணையில் நடந்த சந்திப்பில் பங்குபற்றவில்லை.அக்கட்சி தனக்கு கால அவகாசம் தேவை என்று கேட்டிருந்தது. அதன்படி அக்கட்சியின் கருத்தையும் பெற்றுக்கொண்டு ஒன்றிணைந்த ஒரு கோரிக்கையை முன் வைக்கலாம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.இதனிடையே, இந்திய தூதுவர் மறுபடியும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறார்.மேலும், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று கூட்டமைப்பு  அமெரிக்கா செல்லவிருப்பதாக ஒரு தகவல் உண்டு.
 
மேற்படி சந்திப்புகளின் தொகுக்கப்பட்ட ஒரு சித்திரத்தை ஆராய்ந்தால் மிகத் தெளிவான சில விடைகள் கிடைக்கின்றன.முதலாவது கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை சம்பந்தப்பட்ட கட்சிகளே செய்யுமாக இருந்தால் அதற்கு ஒரு வரையறை உண்டு. தேர்தல் நோக்கங்களைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு பலமான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியுமென்றால் அது எப்பொழுதோ ஏற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஓர் ஐக்கியம் ஏற்படாத ஒரு பின்னணியில்தான் தமிழ்தேசிய பரப்பில் மூன்று தரப்புகளை காணமுடிகிறது. இந்நிலையில் கட்சிகளாக விரும்பி ஒரு கூட்டை உருவாக்கக் கூடிய வாய்ப்புகள் பெருமளவுக்கு குறைவு என்பதே கடந்த 12 ஆண்டுகால அனுபவம் ஆகும்.மாறாக தேர்தல் உள்நோக்கம் இல்லாத பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முயன்றால் அவ்வாறான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்யலாம் என்பது கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இது முதலாவது.
 
இரண்டாவது  விடயம், இந்தியாவை நோக்கி ஒரு  பொதுக்  கோரிக்கையை  எந்த அடிப்படையில் முன்வைப்பது என்பது.13வது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைப்பதா?அல்லது இந்தியாவை இனப்பிரச்சினைக்குள்  மீண்டும் தலையிட வைக்கும் ஓர் ஊக்கியாக பயன்படுத்துவதா?
 
மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை 13வது திருத்தத்தை ஒரு  இறுதித்தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை.கடந்த பன்னிரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் மிக குறிப்பாக 2015க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஈழத்தமிழர்கள் ஒப்பீட்டளவில் அதிகளவு  தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்திருக்கிறார்கள். மேற்சொன்ன கட்சிகள் யாவும் தாங்கள் சார்ந்த கூட்டுக்களுக்கூடாக அல்லது தமிழ் மக்கள் பேரவைக்கு ஊடாக அல்லது வட மாகாண சபைக்கூடாக அவ்வாறான முன்மொழிவுகளை முன் வைத்திருக்கின்றன. அந்த முன்மொழிவுகள் யாவும் 13ஐக் கடந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒற்றையாட்சி கட்டமைப்புக்கு வெளியே வரும் கூட்டாட்சி முன்மொழிவுகள் ஆகும். எனவே மேற்கண்ட கட்சிகள் 13ஐ ஒரு இறுதி ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளவில்லை.ஆயின் இந்தியாவை மீண்டும் இனப்பிரச்சினைக்கு தலையிடக்  கோரும் ஒரு ஊக்கியாகத்தான் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்படுகிறதா?
 
அப்படியென்றால் அது மிக ஆழமான ஒரு விடயம்.இனப்பிரச்சினையில் இந்தியாவை மீண்டும் தலையிட வைப்பது அல்லது இந்தியாவை அரவணைப்பது மூலம் தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்துவது போன்ற அனைத்துமே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் ஆகும். இதுதொடர்பில் கட்சி நிலைப்பாடுகளுக்கு அப்பால் முழுத் தமிழ்த்தரப்பும் ஒருமித்த ஒரு பொது கொள்கைக்கு;பொது அணுகுமுறைக்கு போகவேண்டும்.
 
ஆனால் 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒத்தகருத்து கிடையாது.அதேசமயம், இந்தியாவின் பிராந்திய நலன்களை குறிப்பாக புவிசார் நலன்களை பாதுகாக்கவேண்டும் என்ற விடயத்தில் எல்லாத் தமிழ் கட்சிகளும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டில் உள்ளன என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
 
பொதுவாக கடும்போக்காளர்கள் என்று கருதப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது இந்த விடயத்தை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. இந்திய-இலங்கை உடன்படிக்கையை அக்கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் விடயத்தில் அக்கட்சியானது இந்தியாவோடு ஒத்துழைக்கும் என்பதனை அக்கட்சியின் தலைவர் அழுத்தமாகக் கூறி வருக்கிறார். ஆனால் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனையும் அக்கட்சி தெளிவாக தெரிவித்துவிட்டது.
 
தமிழரசுக்கட்சி 13ஆவது திருத்தத்தைக் கடந்து சென்று 13 பிளஸ் குறித்து பேசிய ஒரு கட்சி.அக்கட்சியானது தனது வெளியுறவுக் கொள்கை இதுதான் என்பதனை தெளிவாக வரையறுத்து கூறாவிட்டாலும் கூட அதன் பல தசாப்தகால நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதகமாக சிந்திக்கும் ஒரு கட்சி அல்ல.
 
மற்றது விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி.  இக்கூட்டணி  திண்ணை சந்திப்பில் பங்குபற்றியது.இக்கூட்டணிக்குள் காணப்படும் பங்காளிக் கட்சிகள் இந்தியாவின் பிராந்திய   நலன்ளைப்  பாதுகாப்பவை  அதோடு இந்திய தலையீட்டை வரவேற்பவை.
 
எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்ப் பரப்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளில் பெரும்பாலானவை இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு ஆதரவாகவே காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக 13வது திருத்தத்தை ஒரு உச்சமான தீர்வாக ஏற்றுக் கொள்வதில்தான் கட்சிகளுக்கிடையே கருத்து பேதங்கள் உண்டு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் கொழும்பின்மீது இந்தியா அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதில் மேற்படி கட்சிகள் மத்தியில் பெரியளவிற்கு முரண்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவ்வாறு இந்தியாவை அழுத்தம் பிரயோகிக்க வைக்கத்தக்க ஒரு கோரிக்கையானது 13ஐ அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதில்தான் கட்சிகளுக்கிடையே வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.
 
இலங்கை இனப்பிரச்சனை என்பது சாராம்சத்தில் ஒரு புவிசார் அரசியல் பிரச்சினைதான். தமிழ் மக்கள் அனுபவிக்கும் எல்லா துயரங்களுக்கும் காரணம் அவர்களுடைய புவிசார் அமைவிடம்தான். ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் எனப்படுவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவியியல் அருகாமையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது -Geographical proximity. இதில் சிங்கள மக்களுக்கும் இந்தியாவோடு அருகாமை உண்டு.தமிழ் மக்களுக்கும் உண்டு.ஆனால் சிங்கள மக்களை விடவும் தமிழ் மக்களுக்கு அதிகமாக இருப்பது தமிழ்நாடு.மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் இன்னபிறவால் இருநிலத்து தமிழ் மக்களுக்கும் இடையே அருகாமை அதிகம்.அந்த அருகாமையை பயன்படுத்தித்தான் இந்திய அரசு  இந்திய-இலங்கை உடன்படிக்கையை நோக்கி கொழும்பை நிர்ப்பந்தித்தது. அதே அருகாமையை தமிழ் மக்களும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.ஏனென்றால் சிறிய தேசிய இனங்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது அருகில் இருக்கும் பேரரசுகளால்தான் அதிகம் தீர்மானிக்கப்படுகிறது என்பது ஒரு வரலாற்று அனுபவம் ஆகும். பின்லாந்தில், திபெத்தில்,கிரீமியாவில்,சைபீரியாவில்,கிழக்குத் திமோரில் அதுதான் புவிசார் அரசியல் யதார்த்தம்.
 
எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு தேசமாக சிந்திக்கின்ற வெளியுறவுக் கொள்கைதான். அதை அமல்படுத்தத் தேவையான ஒரு வெளியுறவு பொதுக்கட்டமைப்புத்தான்.அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்றால்  மக்கள்  பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளடங்களாக தாயகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் அக்கறையுள்ள எல்லோரும் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்மக்கள் அரசியலை அரூபமாக சிந்திக்காமல் தூலமாக பிரயோக வடிவத்தில் சிந்திக்க வேண்டும்.அதாவது கட்டமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும்.ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை; ஒரு பொதுவான வெளியுறவு கட்டமைப்பு போன்றன  இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் இந்தியாவை நோக்கி எப்படிப்பட்ட ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைப்பது என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது.
 
பொருத்தமான கட்டமைப்புகள் இருந்தால் எந்த ஒரு நெருக்கடிக்குள்ளிருந்தும் விடுபடலாம் என்பதற்கு ஸ்ரீலங்காவில் அண்மைக்கால உதாரணம் உண்டு. டெல்டா திரிபு வைரஸ் நாட்டின் கழுத்தை நெரித்தது. ஒருபுறம் பொருளாதார நெருக்கடி.இன்னொரு புறம் வைரஸ் நெருக்கடி.மூன்றாவதாக ராஜதந்திர நெருக்கடி.இம் மூன்று நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு அரசாங்கம் அதன் வெளியுறவு அணுகுமுறைகளில் சுதாகரித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்குரிய கட்டமைப்புகளையும் நிபுணத்துவ அறிவையும் அவர்கள் பயன்படுத்தினார்கள்.அந்த மாற்றங்களை முன்னெடுக்ககூடிய நபர்களை உரிய பதவிகளில் நியமித்தார்கள். அதன் விளைவாக அண்மை மாதங்களில் அரசாங்கம் அதன் வெளியுறவு அணுகுமுறைகளில் ஒப்பீட்டளவில் மாற்றங்களை காட்டியிருக்கிறது.
 
அவர்கள் ஒரு அரசுடைய தரப்பு. அவர்களிடம் எல்லாவற்றுக்கும் கட்டமைப்புக்கள் உண்டு. ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களிடம் உரிய பொருத்தமான வெளியுறவுக் கொள்கையும் கிடையாது; ஒரு பொதுவான வெளியுறவுக்  கட்டமைப்பும் கிடையாது. இவ்வாறான ஒரு வெற்றிடத்தின் பின்னணியில்தான் மேற்படி கட்சிகள் இதுவரை சந்தித்தன இனியும் சந்திக்கவிருக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்