Paristamil Navigation Paristamil advert login

தமிழர்கள் ஒரு தேசமா இருக்கின்றார்களா?

தமிழர்கள் ஒரு தேசமா இருக்கின்றார்களா?

6 கார்த்திகை 2021 சனி 16:36 | பார்வைகள் : 9627


தமிழ் சூழலில் கருத்துருவாக்கங்களில் ஈடுபடும் சிலர் தேசம் என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. தமிழர்கள் ஒரு தேசமாக சிந்திக்க வேண்டும் – அப்படி சிந்தித்தால்தான், இன்றைய சவால்களை வெற்றிகொள்ள முடியுமென்று சொல்வோர் உண்டு. இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகின்றது. அதாவது, தமிழர் தேசம் தொடர்பில் பேசுபவர்கள் – சுயநிர்ணய உரிமையை வெற்றிகொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே தேசம் என்னும் சொல்லை பயன்படுத்துகின்றனர். தமிழர் தாயகமாக அடையாளப்படுத்தப்படும் வடகிழக்கை தங்களின் வாழ்விடமாக கொண்டிருக்கும், தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்பதுதான் ‘தமிழர் தேசம’ என்பதால் உணர்த்தப்படுகின்றது. இந்த பின்புலத்திலிருந்துதான் ‘ஒரு நாடு இரு தேசம்’ என்னும் நிலைப்பாடும் கருக்கொள்கின்றது.
 
தேசம் தொடர்பான விவாதங்கள் ஒரு காலத்தில் பல தளங்களில் இடம்பெற்றிருக்கின்றது. பெனடிக் அன்டர்ஸன் என்னும் அரசியல் சிந்தனையாளரின் கருத்து இதில் முதன்மையான ஒன்றாக எடுத்துகொள்ளப்பட்டது. அதாவது, தேசம் என்பது ஒரு கற்பிதம். அதவாது, தேசம் என்பது இருப்பதில்லை சூழ்நிலைகளால் கருக்கொண்டு வளர்கின்றது, என்பதுதான் இதன் பொருள். அன்டர்ஸனின் சிந்தனைகள் அன்றைய சூழலில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. இந்த அடிப்படையில் தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால் சில அடிப்படையான தெளிவுகளை நாம் பெற முடியும். தமிழ் மக்கள் சாதி, மதம், வர்க்கம் என்னுமடிப்படையில் பிளவுற்றிருந்த ஒரு மக்கள் கூட்டம். தமிழரின் அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால் முதலாவது ஆயுதப் பேராட்டம், யாழ் உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையில்தான் இடம்பெற்றிருக்கின்றது. சாதியடிப்படையில் ஆயுத ரீதியாக மோதிக் கொள்ளுமளவிற்கு யாழ்ப்பாண சாதியமைப்பு சிக்கல் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. இந்த சாதிய அரசியலுக்கு இடதுசாரிகளே தலைமையேற்றனர். இப்படியிருந்த தமிழர் சமூகத்திலிருந்துதான் ஒரு தேசிய விடுதலை போராட்டம் முளைகொண்டது.
 
1949இல் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் – தனதுரையில் நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கித் தருவேன் என்றார். செல்வநாயகம்தான் தமிழ் அடையாள அரசியல் சிந்தனைப் பள்ளியின் தந்தை. பின்னர் இடம்பெற்ற விவாதங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் அனைத்துமே, இந்த அடையாளத்தை எவ்வாறு தக்கவைக்கலாம் – தக்க வைக்க முடியும் என்பவை தொடர்பான விவாதங்கள் மட்டுமே! அடையாளத்தை தக்கவைக்கும் ஒரு உபாயமாகவே தனிநாட்டு கோரிக்கை எழுந்தது. ஆரம்பத்தில் தனிநாட்டு கோரிக்கையை செல்வநாயகம் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 1971இல் இந்தியாவின் நேரடியான தலையீட்டில் இடம்பெற்ற பங்களாதேஸின் உருவாக்கம், இந்தக் காலத்தில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. இந்த பின்புலத்தில்தான் செல்வநாயகம் தனிநாடு தொடர்பான சிந்தனையை நோக்கி உந்தித் தள்ளப்படுகின்றார். ஏனெனில் தமிழசு கட்சியின் மூளையென்று வர்ணிக்கப்பட்ட வி.நவரத்தினம் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்த போது, செல்வநாயகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்;த பின்புலத்தில்தான் நவரத்தினம் பிரிந்து சென்று சுயாட்சி கழகத்தை உருவாக்கினார். இந்த கோரிக்கையை முன்வைத்து சுயேட்சையாகவும் போட்டியிட்டார் ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இப்போது தேசம் என்னும் கருத்துருவாக்கத்திற்கு வருவோம். சாதி, மதம், வர்க்கம் என்னுமடிப்படையில் பிளவுற்றிருந்த தமிழர் சமூகம் எவ்வாறு ஒரு அடையாள அரசியலுக்குள் சங்கமித்தது? இந்த இடத்தில்தான் பெனடிக் அன்டர்ஸனின் தேசம் ஒரு கற்பிதம் என்னும் வாதம் நமக்கு பயன்படுகின்றது. தங்களுக்குள் பல்வேறு பிளவுகளை கொண்டிருந்த (இப்போதும் கொண்டிருக்கின்ற) தமிழர் சமூகத்தின் மீதான சிங்கள-பௌத்த மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கள்தான் பிளவுகளை கடந்து சிந்திக்கத் தூண்டியது. வடக்கு கிழக்கு என்னும் பிரதேச வேறுபாடுகளை கடந்து சிந்திக்கத் தூண்டியது. தமிழ் தேசிய இனம் என்னும் அடையாளம் உருவாகியது. இந்த அடையாளத்தின் அடிப்படையில்தான் தமிழர் தேசம் என்னும் புரிதல் உருவாகியது. ஆனால் இதுவொரு புரிதல் என்னும் நிலையை கடந்து சென்றதா என்னும் கேள்வியுண்டு. இன்றைய சூழலை அவதானிக்கும் போது தமிழர்கள் ஒரு தேசமாக சிந்திப்பதை வரையறுப்பது என்பது மிகவும் சிக்கலானது. தேசம் என்பதை ஒரு ஒற்றைத் தன்மையானதாக பார்க்கும் போதே சிக்கல்கள் எழுகின்றன. ஏனெனில் இன்று தமிழர்கள் தேசமாக சிந்திக்க வேண்டுமென்று வாதிடுபவர்கள், இதனை ஒரு அரசியல் கோசமாகவே முன்வைக்கின்றனர். ஆனால் அரசியல் கோசமாக இதனை முன்வைக்கும் போது அது மிகவும் பலவீனமான ஒன்றாகவே இருக்கின்றது.
 
இன்று தமிழ் தேசிய அரசியல் என்பது தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலேயே பெருமளவிற்கு வரையறுக்கப்படுகின்றது. ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஒப்பீட்டடிப்படையில் பலவீனமடைந்திருக்கின்றன. தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்யாத தமிழ் கட்சிகளின் செல்வாக்கு முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நோக்கினால் தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தல் என்னும் கோசம் மிகவும் பலவீனமான ஒன்று. இதனை விளங்கிக் கொள்ளாமலேயே சிலர் இதனை உச்சரித்து வருகின்றனர். சிலரது வாதத்தின் படி தமிழர்கள் ஒரு தேசமாக சிந்திக்கின்றனர் என்றால் அங்கஜன் ராமநாதன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாணத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றது எப்படி என்னும் கேள்வி எழுகின்றது. டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கு முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. கிழக்கில் பிள்ளையான் வெற்றிபெற்றிருக்கின்றார். பிறிதொருவர் ராஜபக்சக்களின் மொட்டு சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கின்றார். அம்பாறையில் கூட்டமைப்பு அதன் பிரதிநிதித்துவத்தையே இழந்திருக்கின்றது. இவை தமிழர்கள் ஒரு தேசமாக இல்லை என்பதற்கான ஆதாரங்கள். மேலும் இன்று தமிழ் தேசியத்தை பிரதிநித்துவம் செய்வதாக கூறும் கட்சிகள் பெரும்பாலும் யாழ்மைய கட்சிகளாகவே இருக்கின்றன. ஒப்பீட்டடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி ஒன்றே வடகிழக்கு தழுவிய மக்கள் ஆதரவுடன் இருக்கின்றது. அதிலும் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
 
இந்த இடத்தில் பிறிதொரு வாதமும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, தமிழர்கள் மீதான நெருக்கடி அதிகரிக்கும் போது, அவர்கள் திரட்சி பெறுவார்கள். ஒரு தேசமாக சிந்திப்பார்கள். இதுவும் பலவீனமான வாதமாகும். ஏனெனில் நெருக்கடிகளால் திரட்சி பெறும் தமிழ் அரசியல் முதிர்ச்சியானதாக இருக்காது. நெருக்கடிகள் தணிகின்ற போது மீண்டும் பழைய நிலைமையே ஏற்படும். தமிழர்கள் தேசமாக சிந்திக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எப்போதும் நெருக்கடிக்குள்ளேயே இருக்க வேண்டுமென்பதும் ஒரு அபத்தமான வாதமாகும்.
 
இந்த பின்புலத்தில் தமிழர்கள் ஒரு தேசமாக இருக்கின்றார்களா என்றால் – பதில் இல்லையென்பதுதான். அதே வேளை ஆரம்பத்தில் இருந்தது போன்று வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான பார்வைகளிலும் தற்போது ஒரு சரிவு தெரிகின்றது. உண்மையில் வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பான கோரிக்கைகள் கிழக்கிலிருந்துதான் பலமாக எழ வேண்டும். ஆனால் அப்படியான சூழல் இல்லை. இதுவும் தமிழர்கள் ஒரு தேசமாக சிந்திக்கின்றனர் என்னும் கோசத்தை பலவீனப்படுத்துகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம் திம்பு பேச்சுவார்த்தையின் விளைவாக கிடைக்கப் பெற்ற ஒன்று. இதுவே பின்னர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டு நிரந்தரமாக இணைக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் கூட, அது பின்னர் இடம்பெறவில்லை. வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் ஆயுள் மிகவும் குறுகியதாக இருந்தமையால், பின்னர் இது தொடர்பில் எவருமே அக்கறைப்படவும் இல்லை. இன்றைய சூழலில் அவ்வாறனதொரு வாக்கெடுப்பு இடம்பெற்றால் கூட, தமிழர்களால் வெற்றிபெற முடியாது. முஸ்லிம்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என்பதற்கு அப்பால், கிழக்கு மாகாண தமிழர்களே இதற்கான ஆதரவை பெரும்பாண்மையாக வழங்குவார்களா என்னும் சந்தேகமும் இருக்கின்றது. அந்தளவிற்கு தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமடைந்திருக்கின்றது. உள்ளுக்குள் சிதைந்திருக்கின்றது.
 
நிலைமை இவ்வாறிருக்கின்ற போது, வெறும் சூத்திரங்களில் சுகம் காணும் ஆய்வுகளால் பயனில்லை. தமிழ் சூழலில் முன்வைக்கப்படும் பெரும்பாலான அரசியல் உரையாடல்கள் நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட முடியாமைக்கான உதாரணங்களாகவே தெரிகின்றன. இந்த நிலையில் முதலில் இந்த சிதைவிலிருந்து எவ்வாறு மீண்டெழுவது என்பது தொடர்பில்தான் நாம் சிந்திக்க வேண்டும். உள்ளுக்குள் சிதைந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் சமூகத்தினால், வெளித்தரப்புக்களை ஒரு போதுமே கையாள முடியாது. இந்த அடிப்படையில் நோக்கினால் இலங்கைத் தீவை மையப்படுத்தியிருக்கும் புவிசார் அரசியலில் தமிழர்கள் ஒரு விடயமாகவே இல்லை. அதே வேளை விடயமாக நோக்கப்பட்டக் கூடிய, நிலையில்கூட இல்லை.
 
இந்த அடிப்படையில் ஈழத்-தமிழர்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் புவிசார் அரசியல் ஆய்வுகளில் பெரும்பாலானவை மிகைப்படுத்தப்பட்ட பார்வைகளாகும். இலங்கைத் தீவை மையப்படுத்தி ஒரு புவிசார் அரசியல் நிலைகொண்டிருப்பது உண்மை. அது இலங்கையின் அமைவிடத்துடன் தொடர்புபட்டது. ஆனால் இந்த சதுரங்க ஆட்டத்தில் தமிழர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும்தான். ஒன்றில் ஆட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் அல்லது ஆட்டத்தில் ஒரு காயாகவாவது இருக்க வேண்டும். தமிழர்கள் இரண்டிலும் இல்லை. இதற்கு தமிழர்களின் அரசியல் உள்ளக ரீதியில் சிதைவடைந்திருப்பதுதான் காரணம். ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்திலாவது, நீங்கள் ஒன்றாக நிற்க வேண்டுமென்று புதுடில்லி கூறுவது இந்த பலவீனத்தை கருத்தில் கொண்டுதான். இந்த பலவீனம் நிவர்த்தி செயப்படாவிட்டால் – சூத்திரங்களில் சுகம் காணுவது மட்டுமே இறுதியில் மிஞ்சும். சூத்திரங்கள் எப்போதும் கவர்சிகரமானவைதான்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்