Paristamil Navigation Paristamil advert login

புதுடில்லியின் நேரத்தை வீணாக்காதீர்கள்! சம்பந்தன் ஐயாவிற்கு ஒரு பகிரங்க மடல்

புதுடில்லியின் நேரத்தை வீணாக்காதீர்கள்!  சம்பந்தன் ஐயாவிற்கு ஒரு பகிரங்க மடல்

3 ஐப்பசி 2021 ஞாயிறு 17:46 | பார்வைகள் : 9953


வணக்கம் ஐயா!

 
தேக ஆரோக்கியத்துடன், இன்னும் சிறப்பாக பணியாற்றுவதற்கு, நீங்கள் துதிக்கும் எல்லாம்வல்ல – திருகோணமலை காளியம்மாளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும்.
இலங்கைக்கு விஐயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார செயலர் ஹர்ஷ் வர்தன் அவர்கள், உங்களையும் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில், ஒரு சில முக்கிய விடயங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கிலேயே இந்த மடலை வரைகின்றேன்.
 
இந்திய வெளிவிவகாரச் செயலர் உங்களை சந்திக்கின்ற போது, 13வது திருத்தச்சட்டம், மாகாண சபை தொடர்பில் நிச்சயம் வலியுறுத்துவார். ஏனெனில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் அதுவே இந்தியாவின் நெடுநாள் நிலைப்பாடாகும். மேலும், இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையின் அங்கமாகவும் 13வது திருத்தச்சட்டமே நோக்கப்படுகின்றது. இவைகள், நீங்கள் அறியாததும் அல்ல.
 
சுமார் 43 வருடங்களுக்கு மேலாக, அரசியல் வாழ்வில் தொடரும் உங்களுக்கு, இது தொடர்பில் ஆலோசனைகள் தேவைப்படாது. ஆனாலும் தீர்மானகரமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணங்கள் அனைத்தின் போதும், உறுதியான முடிவுகளை எடுக்க தயங்கும் ஒருவராகவே நீங்கள் காணப்படுகின்றீர்கள். அது ஏன் என்பதற்கு உங்களை தவிர வேறு எவரும் பதிலளிக்க முடியாது.
 
2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது, மக்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கையொளியை, சிறிது காலம் பரப்பியிருந்தது. அந்த காலத்தை திறம்பட கையாளுவதற்கான அனைத்து ஆற்றலும் உங்களிடம் இருந்த போதிலும் கூட, வாய்ப்புக்கள் அனைத்தும் வீணாகின. காலம் சென்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு பின்னர், எதிர்கட்சி தலைவர் ஆசனத்தை அலங்கரித்த ஒரு தமிழ் தலைவர் என்னும் பெருமை உங்களுக்கு கிடைத்ததை தவிர, குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த நன்மையும் தமிழர் வாழ்வில் ஏற்படவில்லை.
 
வர முடியாத புதிய அரசியல் யாப்பு ஒன்றிற்காக, கிடைத்த வாய்ப்பான காலம் முழுவதும் வீணாகியது. வீணாக்கப்பட்டது. ரணில்-மைத்திரி கூட்டரசாங்க காலத்தில், புதுடில்லியின் ஆதரவின்றி, ஒரு அரசியல் தீர்வை பெற முடியுமென்னும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீங்கள் செயற்பட்டிருந்தீர்கள். நாட்டின் மிகவும் உயர்;ந்த பதவிகளில் ஒன்றான எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, ஒரு முறை கூட, புதுடில்லிக்கு பயணம் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பியிருக்கவில்லை.
 
இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உங்களிடம் வலியுறுத்திய போதும், ‘சிங்களவர்கள் கோபிப்பார்கள்’ என்னும் ஒரு காரணத்தை கூறி, புதுடில்லியை தட்டிக் கழித்தீர்கள். அரசியல் தீர்வு என்பது முற்றிலும் இலங்கை தொடர்பான விடயம் என்னும் மனோபாவத்தின் அடிப்படையிலேயே நீங்கள் செயற்பட்டிருந்தீர்கள். ஆனால் இன்று தோல்வியடைந்து, தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கும் நிலையில், மீண்டும் புதுடில்லியின் ஆதரவை கோருகின்றீர்கள்.
 
அரசியல் தீர்வு விவகாரம் முற்றிலும் இலங்கையின் உள்ளக விவகாரம் என்னும் அணுகுமுறையே ஆட்சியாளர்களிடமும் இருக்கின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் உங்களுடைய அணுகுமுறைக்கும் ஆட்சியாளர்களின் அணுகுமுறைக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. அரசியல் தீர்வு என்பது முற்றிலும் இலங்கையின் உள்ளக விடயம் என்றால் நீங்கள் புதுடில்லியின் ஆதரவை கோருவதன் பொருள் என்ன?
 
பிராந்திய சக்தியான இந்தியா ஈழத் தமிழ் மக்களின் சேவகன் அல்ல. இந்த மனோபவத்தின் அடிப்படையில் விடயங்களை கையாள முற்பட்டமையால்தான், இன்றும் விடயங்கள் வெறுமனே பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் கரிசனைகளை, ஆர்வங்களை புறம்தள்ளி செயற்படுவதால், இந்தியாவிடமிருந்து ஒரு போதுமே ஈழத் தமிழர்கள் நன்மைகளை பெற முடியாது. இதனை விளங்கிக் கொள்வதில் உங்களுடைய அனுபவம் ஒரு போதும் உங்களுக்கு சிரமத்தை தராது என்றே நம்புகின்றேன்.
 
 
வடக்கு கிழக்கை வரலாற்று வாழ்விடமாக கொண்டிருக்கும், ஈழத் தமிழ் மக்களின் சுயகௌரவம், சமத்துவம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் ஒரு போதுமே மாற்றங்கள் இருந்ததில்லை. வடகிழக்கு தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடம் என்னும் அங்கீகாரம் கூட, இந்தியாவினால் கிடைக்கப்பெற்ற ஒன்றுதான். தமிழ் மக்களின் கௌரவமும் சமத்துவமும் பாதுகாப்பப்பட வேண்டும் என்பதில் இந்தியா சமரசமற்று பேசிவருகின்றது. கூடவே, 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு தொடர்பிலும் இந்தியா தொடர்சியாக வலியுறுத்திவருகின்றது. இந்த விடயத்தில் இந்தியா விட்டுக் கொடுப்பற்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது. உங்களை சந்திக்கும் இந்திய அரசியல் தலைவர்கள், ராஜதந்திரிகள் இதனை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு வலியுறுத்தத் தவறியதில்லை. ஒரு பிராந்திய சக்தி, எங்கள் மீது அதன் பார்வையை தொடர்ந்தும் வைத்திருக்கின்ற என்பதே எங்களுக்கான ஒரு வாய்ப்புத்தான்.
ஆனால் நீங்களோ தொடர்ந்தும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசி வருகின்றீர்கள். ஒரு புதிய அரசியல் யாப்பு என்பது, முற்றிலும் இலங்கை அரசாங்;கம் தொடர்பானது. அதில் எவற்றை உள்ளடக்க வேண்டும் – வேண்டாம் என்று பிறிதொரு நாடு உத்தரவிடுவதற்கு இடமில்லை. ஆனால் 13வது திருத்தச்சட்டம் அப்படியானதல்ல. ஒரு இருதரப்பு உடன்பாடு என்னும் வகையில், அதனை வலியுறுத்துவதற்கான கடப்பாடும் பொறுப்பும் புதுடில்லிக்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் இந்தியா இந்த விடயத்தில் தலையீடு செய்துவருகின்றது. எனவே உங்களை சந்திக்கும் ஹர்ஸ் வர்தரன் அவர்களிடமும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசி, புதுடில்லியின் நேரத்தை வீணாக்காதீர்கள்.
 
இந்தியா எந்த 13வது திருத்தச்சடத்தை வலியுறுத்துகின்றதோ, அதனை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம் என்று கூறுவதுதான், இன்றைய நிலையில் நீங்கள் எடுக்கக் கூடிய சரியான முடிவாகும். இந்திய-இலங்கை ஒப்பத்தத்தின் அடிப்படையில், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான பொறுப்பை முற்றிலுமாக புதுடில்லியிடம் ஒப்படைக்கின்றோம் என்று கூறுங்கள். அவ்வாறில்லாது, புதுடில்லியால் தலையீடு செய்ய முடியாத – புதிய அரசியல் யாப்பு தொடர்பில், அவர்களிடம் வலியுறுத்திக் கொண்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது. ஏற்கனவே புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசி ஐந்து வருடங்களை வீணாக்கிய அனுபவத்திலிருந்தே நீங்கள் சிந்திக்க வேண்டும். பிறிதொரு விடயத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், அதாவது, இதுவரை புதுடில்லி மட்டும் வலியுறுத்திவந்த, 13வது திருத்தச்சட்டம் தொடர்பில், இப்போது மேற்குலக நாடுகளும் வலியுறுத்துகின்றன. ஜெனிவா பிரேரணையிலும் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தில், 13வது திருத்தச்சட்டம், மாகாண சபை தொடர்பிலேயே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஜெனிவா பிரேரணை என்பது மேற்குலக தராளவாத நாடுகளின் நிலைப்பாடுதான்.
 
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு முடிவெடுப்பதை இனியும் நீங்கள் தட்டிக்கழிக்க முடியுமா? இன்றைய சூழலில் எது சாத்தியமோ அதனை பற்றி மட்டும் சிந்தியுங்கள். நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறியார். இலங்கையின் அரசியல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களால், இதனை விடவும் உயர்ந்த அரசியல் தீர்வொன்று சாத்தியப்படுமாயின், அது நமது அடுத்த தலைமுறைக்குரியது. உங்கள் தலைமுறையில் எதனை செய்ய முடியுமே அதனை பற்றி மட்டும் சிந்தியுங்கள். காலத்தை தவறவிட்டுவிட்டு, பின்னர் மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதில் பயனில்லை.
 
உங்கள் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருக்கும்
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்