Paristamil Navigation Paristamil advert login

வடக்கிருத்தலின் உன்னத வடிவம் திலீபனின் தியாகம்

வடக்கிருத்தலின் உன்னத வடிவம் திலீபனின் தியாகம்

26 புரட்டாசி 2021 ஞாயிறு 11:19 | பார்வைகள் : 10340


ஈழப்போராட்ட வரலாற்றில் திலீபனின் அமைதிவழியிலான ஈகப் போராட்டம் உலகப் போராட்ட  வரலாற்றில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்திச் சென்றுள்ளது.

 
ஓர் மனிதன் தான் நேசித்த  மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக  தனது இன்னுயிரை ஈகம் செய்தமை உயிர்க்கொடையின் உயர்ந்த நிலையாகவே பார்க்கப்படுத்தல் வேண்டும். அவ்வகையில் திலீபனின் கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டம் உலக வரலாறில் இதுவரை இல்லை எனலாம் .
 
பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் ஈழத்தில் யாழ்ப்பாண மாவ ட்டத்திலுள்ள  ஊரெழு என்ற கிராமத்தில் திரு திருமதி இராசையா வாழ்விணையர்களின் 4வது மகனாக  1963 கார்த்திகை 29ம் திகதி பிறந்தார் . அவருடைய தந்தையார் ஓர்  ஆசிரியர். பார்த்திபன்  சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே தாயார் இறந்துவிட்டார். தந்தையாரின் அரவணைப்பிலும் அண்ணன்களின் பாசத்திலும் வாழ்ந்த பார்த்தீபன்  தனது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்ப்பணத்தில் புகழ்மிக்க யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்று கல்வியில் சிறந்து விளங்கி யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ கற்கை நெறிக்கு தெரிவானார்.
 
ஈழவிடுதலைப்  போராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவடைந்த காலப்பகுதியில் அப்போராட்டத்திற்கு கணிசமானளவு கல்வியியலாளர்களை தந்த பெருமை  யாழ் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. அவ்வகையில் பார்த்தீபனும் 1980 களில்   தனது மருத்துவ கற்கை நெறியினைக்  தியாகம் செய்துவிட்டு  தமிழ்மக்களின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்  இணைந்து பேரினவாத சிங்கள அரசுக்கு எதிராக போராடினார். பார்த்தீபனுக்கு விடுதலைப்புலிகள் இட்ட பெயரே  திலீபன்.
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்டத்திற்கான அரசியல் துறையில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக திலீபன் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில்  ஈழவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் கபட நோக்கில் சிங்கள அரசின் வேண்டுதலுக்கு அமைய இந்திய அரசினால் 29 ஆடி 1987ல்  கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்திய ஆயுதப்படையினர்   இந்திய அமைதிகாக்கும் படைனர் என்னும் பெயரில் ஈழத்தில் கால்பதித்தனர் .
 
ஈழத்தமிழர்களின் விடியலை தனது மூச்சாக்கி போராடிய திலீபன்  இந்திய அமைதிப்படை யினரிடம் ( இந்திய  அரசிடம்)  அமைதிப்படையினர் என்ற வகையில் ஈழத்தமிழ் மக்களுக்கு உடனடியாக தீர்க்கவேண்டிய ஐந்து விடையங்களை நிறைவேற்றக் கோரி உண்ணாநோன்பினை நோற்றார்.  அக் கோரிக்கைகளாவன:
 
1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்கள; குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
 
2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
 
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
 
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
 
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
 
இக் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தான் உயிர் துறப்பது உறுதி என அறிவித்து நீராகாரரமின்றி வன்முறையற்ற வழியில் திலீபன் முன்னெடுத்த போராட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படாததன் காரணமாக 12ம் நாள் 26 புரட்தாதி மாதம்  1987திலீபனின் உயிர் பிரிந்தது.
 
திலீபனால் வன்முறையற்ற வழியில் நாடாத்தப்பட்ட  போராட்டம் காந்தியின் வழி நடந்த உண்ணாவிரத போராட்டமன்று. தொல்தமிழரின் மரபில் குறிப்பாக சங்ககாலத்தில்  வழக்கத்தில் இருந்த வடகிருத்தலின் உன்னத வடிவமே ஆகும்.
 
காந்தி  நீர் அருந்தி மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசின் மறைமுக ஆதரவு இருந்தது ஏனெனில் அவர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஆயுதம் ஏந்திய விடுதலைப்போரை மழுங்கச் செய்வதற்கு காந்தி உண்ணாவிரத போர்களில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்தது.இதனை நன்கு அறிந்த காந்தி தன்னுடன் பொது மக்களையும் நீரருந்தி உண்ணாநோன்பிருந்து   பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மனதை மாற்றிக் கொள்ளும்  வலிய கருவியாக பயன்படுத்தி பயனடைந்தார் என்பதே உண்மையாகும்.
 
திலீபனின் உண்ணாவிரத  போராட்டத்திற்கு காந்திய தேசத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஏனெனில் இந்திய அரசு திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள அரசை பகைக்க விரும்பவில்லை .
 
ஆயினும் திலீபன் “நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்”. என குறிப்பிட்ததாக தியாகி திலீபன் அவர்களுடன் உண்ணா நோன்பு மேடையில்  உதவியாளராக இருந்த முன்நாள் போராளியான கவிஞர் மு .வே.யோ. வாஞ்சிநாதன் எழுதிய” ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனுடன் 12 நாட்கள்”என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
திலீபன் தனது கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப்  போராட்டத்தின் மூலம் ஈழத்தமிழருக்கு சொல்லிச் சென்ற செய்தி  “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் , சுதந்திர தமிழீழம் மலரட்டும்”.  அதாவது விடுதலையை   வேண்டிநிற்கும் ஈழத்தமிழினம்  தனது விடுதலைக்காக பிறரிடம் சாராது ஒன்றுபட்டு போராடுவதன்  மூலம்  வெற்றியைப் பெற்று தனது தேசத்தை நிறுவ முடியம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்