Paristamil Navigation Paristamil advert login

தென் சீனக் கடல் விவகாரமும் வடக்குக் கிழக்கும்!

தென் சீனக் கடல் விவகாரமும் வடக்குக் கிழக்கும்!

16 ஆவணி 2021 திங்கள் 10:15 | பார்வைகள் : 9795


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை இல்லை. ஆனாலும் இந்த மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடி, பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துக்கு எதிராக உள்ள தடைகளை நீக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

 
அமெரிக்கா ஆதரவுடன் பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்புரிமை பெற்று இந்த மாதத்துக்குமான தலைமைப் பொறுப்பையும் வகிக்கும் நிலையில், மோடியின் உரையை ரஷிய ஜனாதிபதி புட்டின் பாராடடியுள்ளார். ஆனால் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகச் செயற்பாடு உள்ளிட்ட தற்போதைய பூகோள அரசியல் நகர்வுகளில் ரஷியாவுடன் அமெரிக்கா முரண்படுகின்றது.
 
அமெரிக்க ரஷிய அரசியல் பகைமை என்பதற்கு நீண்டகால வரலாறு உண்டு. ஆனாலும் சமீபகாலமாக இரு நாடுகளுக்கிடையேயுமுள்ள பகைமை என்பது, ரஷிய- சீன உறவின் அடிப்படையில் எழுந்ததெனலாம். அத்துடன் இந்தோ- பசுபிக் பிராந்திய விவகாரத்திலும் சீனாவுக்குச் சாதகமான இராணுவச் செயற்பாடுகளுக்கும் ரஷியா ஒத்துழைப்பு வழங்குகின்றது. இதன் பின்னணியிலேயே அமெரிக்க-ரஷிய பகைமை வளர்ந்து வருகின்றது. இந்தப் பகைமைக்குள் இந்தியா இருதலைக்கொள்ளி எறும்பாக இயங்குகின்றது.
 
இதன்காரணத்தினாலேயே மோடியின் உரைக்கு புட்டின் நன்றி தெரிவித்திருக்கிார் போலும். ஆனால் புட்டினின் பாராட்டுத் தொடர்பாக அமெரிக்கா அலட்டிக்கொண்டதாகக் கூற முடியாது. இருந்தாலும் இந்திய- ரஷிய உறவின் பாரம்பரியம் நீடிக்கக் கூடதென்பதில் அமெரிக்கா கவனமாகவே இருக்கின்றது என்பதை 2015 ஆம் ஆண்டின் பின்னரான அமெரிக்க- இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எடுத்தியம்புகின்றன.
 
இதன் காரணத்தினலோ என்னவோ பாதுகாப்புச் சபையில் நரேந்திரமோடி நிகழ்த்திய உரையில் அமெரிக்க இந்திய உறவு முறை இயல்பாகவே வெளிப்பட்டது. ஆனாலும் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய வல்லாதிக்க நாடுகளையும் இணைத்துச் செயற்படுவதற்கான முறையில் காடல் சார்பாதுகாப்பு விவகாரத்தைக் கையாள ஐந்து அம்சத் திட்டமென்றை முன்மொழிந்திருக்கிறார் மோடி.
 
முதலாவதாக- சட்டப்படியான கடல்சார் வர்த்தகத்துக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். இதன் ஊடகாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
 
இரண்டாவது- தற்போது உள்ள கடல்சார் உரிமை குறித்த பிரச்னைகளுக்குச் சுமுகமான முறையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இது ஏற்படுத்தும்.
 
மூன்றாவதாக- இயற்கைச் சீற்றம் மற்றும் கடல் பிராந்தியத்துக்கு உள்ள ஆபத்துகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
 
நான்காவது- கடல்கள் மாசுபடுவதை தடுப்பதில் அனைத்து நாடுகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
 
ஐந்தாவது- கடல்சார் ஆதாரங்களை பயன்படுத்துவதில் அனைத்து நாடுகளுக்கும் உரிமையுண்டு. சில நாடுகள் மாத்திரம் அதிகளவில் மீன் பிடிக்கும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும்.
 
இவ்வாறு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்சத் திட்டத்தை பாதுகாப்புச் சபையின் இணையவழி மாநாட்டில் பங்குபற்றிய நாடுகள் பாராட்டியிருந்தாலும், சில நாடுகள் மாத்திரம் மீன்பிடிக்கும் நடைமுறை தளர்த்தப்பட வேண்டுமென்ற மோடியின் பரிந்துரை அமெரிக்காவுக்குக் கொஞ்சம் மனக்கஷ்டமாகவே இருந்ததாகச் சில இந்திய இணையச் செய்தி ஊடகங்கள் விமர்சித்திருந்தன.
 
கடல்சார் பாதுகாப்பில் உள்ள நவீன சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த நரேந்திரமோடியின் கருத்துக்கு நன்றி கூறுவதாகக் கூறிய ரஷிய ஜனாதிபதி புட்டின், கடல் சார் குற்றங்களை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்கொள்ளும் பணியை மேற்கொள்ள ரஷியா உறுதிபூண்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். சமமான சர்வதேச ஒத்துழைப்பின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க ரஷியா தயாராக இருப்பதாகவும் புட்டின் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
 
ஆகவே அமெரிக்க ஆதரவுடன் பாதுகாப்புச் சபைக்குத் தலைமை வகித்துக் கடல்சார் பாதுகாப்பு விவகாரம் பற்றிய விவாதத்தை நடத்திய மோடி ரஷயாவுடனும் உறவைப் பேணும் வகையில் காய் நகர்த்தியிருக்கிறார்.
 
ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷியா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நிலையான உறுப்பு நாடுகளும் மற்ற 10 உறுப்பு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. இந்தவொரு நிலையில், பாதுகாப்புச் சபையில் கடந்த ஆண்டு யூன் மாதம் தற்காலிக உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் 184 வாக்குகளைப் பெற்று பாதுகாப்புச் சபையில் உறுப்பு நாடாக இருப்பதற்கான ஆதரவும் இந்தியாவுக்கு உண்டு.
 
ஆகவே தென் சீனக் கடல் பிரதேசத்தில் சீனாவின் ஆதிகத்தைத் தடுபதற்கான போட்டியில் கூடுதலாக ஈடுபட்டாலும் இந்தோ- பசுபிக் பிராந்திய விவகாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவை முன்னிலைப்படுத்தலாம் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உண்டு. இதன் பின்னணியிலேயே ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை நோக்க வேண்டும்.
 
தென் சீனக் கடல் போக்குவரத்து விவகாரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முடியாதென 2016 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் சீனா அந்தத் தீர்ப்பை ஏற்கவில்லை. அந்தக் கடல் பகுதி தமக்குரியது என்பதே சீனாவின் நிலைப்பாடு. இந்தச் சர்ச்சை குறித்தும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவகாதிக்கப்படவுள்ளது.
 
இந்த இடத்திலேதான், அமெரிக்கா- இந்திய உறவு மேலும் வலுப்பெறுவதோடு, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட குவாட் அமைப்பின் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் திட்டங்களும் வகுக்கப்படலாம்.
 
இதன் பின்னணியிலேயே அமெரிக்காவுக்கான சீனாவின் புதிய தூதுவராக கின் கேங் (Qin Gang) இந்த வாரம் பதவியேற்கவுள்ளார். 55 வயதான இவர் சீனாவின் மூத்த இராஜதந்திரியாகவும் சீன கம்யூனிஸ் கட்சியின் அனுபவம் மிக்க உறுப்பினராகவும் உள்ளார்.
 
மிகத் தந்திரோபாயமானதொரு நரி என்று அமெரிக்கச் சர்புடைய பொறின்பொலிஸி என்ற இணையத் தளம் வர்ணித்திருக்கிறது. அதாவது சீனாவுக்கான அமெரிக்கத் தூதுவராக கின் கேங் நியமிக்கப்பட்டிருப்பது, தென் சீனக் கடல் மற்றும் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளக்கூடியவர் என்ற நம்பிக்கை சீனாவுக்கு இருப்பதாகவே அந்த இணையத்தளத்தின் விமர்சனத் தொனி வெளிப்படுகின்றது.
 
ஐ.நா.பாதுகாப்புச் சபைக் கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை தொடர்பாகப் பகிரங்கமாகக் கருத்துக்கூற விரும்பாத சீனாவின் முக்கிய ஊடகங்கள், கின் கேங்கின் நியமனம் அமெரிக்க- சீன உறவில் விரிசலைத் தடுக்கும் என்று நாசூக்காக விமர்சிக்கின்றன.
 
அதாவது இந்தியாவுடனான உறவு உள்ளிட்ட அமெரிக்காவின் எதிர்காலச் செயற்பாடுகளில் மாற்றங்கள் உருவாகலாம் என்ற தொனி சர்வதேச அரசியல் அரங்கில் பல ஊகங்களைக் கிளப்பியுமுள்ளன.
 
ஆனால் கின் கேங் அமெரிக்க விவகாரங்களைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றவரல்ல என்று த டிப்ளொமெற் என்ற செய்தித் தளம் கூறுகின்றது. இவருடைய செயற்பாடுகள் அமெரிக்க- இந்திய உறவை மேலும் நெருக்கமாக்குமே, வல்லாதிக்க நெருக்கடிகளைத் தீர்ப்பதாக அமையாதென்ற தொனியிலும் அந்தச் செய்தித் தளம் கூறுகின்றது.
 
அதேவேளை, இவர் இலங்கை இராஜதந்திரிகளோடு நன்கு நெருக்கமானவர் என்றும் இலங்கையில் சீன முதலீடுகள். முற்றும் சீன அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் நன்கு விளக்கமுள்ளவர் எனவும் இலங்கை இராஜதந்திரியொருவர் கூறுகிறார்.
 
எவ்வாறாயினும் பாதுகாப்புச் சபைக் கூட்டம் முடிவடைந்த பின்னரான சூழலில் அமெரிக்கச் சீன பகைமை மேலும் அதிகரிக்கக்கூடிய சந்தர்பங்களும் அமெரிக்க, இந்தியா உறவு மேலும் புதுப்பிக்கப்படக்கூடிய ஏதுநிலைகளுமே தென்படுகின்றன.
 
ஏனெனில் மலாக்கா நீரிணையூடாக தென் சீனக் கடல் வரை சென்றடையும் பாதை மீது ஆதிக்கத்தை வளர்த்தெடுக்கச் சீனா நீண்டகாலமாவே முற்படுகின்றது. இதனாலேயே அமெரிக்காவினால் இந்தியா தலைமையில் இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அடிப்படையில் குவாட் எனப்படும் இராணுவ அணி உருவாக்கப்பட்டது. இந்த அணி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.
 
இங்கேதான் இலங்கையின் முக்கியத்துவமும் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திச் சிங்கள ஆட்சியாளர்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களையும் நீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் மிகவும் இலகுவாகவே முன்னெடுக்கப்பட்டன.
 
தென் சீனக் கடல் மற்றும் இந்தோ- பசுபிக் விகாரத்தை மையமாகக் கொண்டு 2007 ஆம் ஆண்டு அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாகச் செயற்பட ஆரம்பித்திருந்தன. ஈராக் குவைத்  ஆகிய நாடுகளின் கரையோரத்தில் இருந்து பாரசீக வளை குடாவினூடாகவும் அதனுடைய குறு நீரிணையான கோமூர்ஸ் நீரிணையூடாகவும் அரபிக் கடல், ஈழத்தமிழர்களின்; மன்னார். வளைகுடா மற்றும் கிழக்கு மாகாண கடற் பகுதி வழியாகவும் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தழுவி மலாக்கா  நீரிணையூடாகத் தென் சீனக் கடலை சென்றடையும் பாதை மீது சீன அதிக அக்கறை கொண்டிப்பதாக மூத்த ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான அமரர் சிவராம் 2003 ஆம் ஆண்டு  வீரகேசரியில் எழுதிய கட்டுரையில் கூறியிருக்கிறார்.
 
ஆகவே 2007 ஆம் ஆண்டு மலாபார் பயிற்சியைக் கூட்டாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏன் ஆரம்பித்தன என்பது பற்றியும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப்போராட்டம் இல்லாதொழிக்கப்பட்ட பின்னணி குறித்தும் இலகுவாக அறிந்துகொள்ளவும் முடியும்.
 
2009 இன் பின்னரான சூழலில் சூடுபிடித்த இந்தோ- பசுபிக் விவகாரம் மற்றும் தென்- சீனக் கடலில் சீனா ஆதிக்கமும் அதற்கான அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளின் எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கான காரணிகளையும் நேரடியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
 
எனவே ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியா தலைமையில் மாத இறுதிவரை நடைபெறுகின்ற கடல்சார்ந்த விவாதம் உலகில் அரசு என்ற கட்டமைப்பு இல்லாத தேசிய இனங்களின் அரசியல் விடுதலைக்கான நியாயங்களை இல்லாமல் செய்துவிடுமோ என்ற ஜயம் எழாமலில்லை.
 
ஏனெனில் எதிர்வரும் 19 ஆம் திகதி தீவிரவாத அமைப்புகள் குறித்து ஐ.நா பொதுச் செயலாளரின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள், விடுதலை கோரி நிற்கின்ற தேசிய இனங்களின் அரசியல் அங்கீகாரத்தை நியாயப்படுத்துமா அல்லது வெறுமனே பயங்கரவாத இயக்கங்கள் என்ற கோசத்தோடு அவர்களின் நியாயங்களும் அமுக்கப்பட்டு விடுமா என்ற சந்தேகஙகள் நிலவுகின்றன.
 
இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரதான செயற்பாட்டாளராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்