இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வுதான் மிகப் பொருத்தம்
8 ஆவணி 2021 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 10962
நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறை தீர்வொன்றே மிகப் பொருத்தமானது. அதனை முதலில் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவே பகிரங்கமாக வலியுறுத்தினார்’ என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பேராசிரியர் ஏ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
‘நாட்டில் அமைக்கப்படும் ஆணைக்குழுக்கள் மக்கள் நம்பிக்கையை வெல்வதாக அமைய வேண்டும் அத்தகைய ஆணைக்குழுக்களில் பாதிக்கப்பட்டோரின் பங்கேற்பு அமைவது முக்கியமானதாகும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பில் பரிந்துரை மற்றும் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.எம்.எச்.டி. நவாஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் மேற்படி சாட்சியப் பதிவு இடம்பெற்றது. பேராசிரியர் சர்வேஸ்வரன் இங்கு மேலும் தெரிவித்ததாவது;
நாட்டில் மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்கள் என்பன நடைமுறையில் உள்ளன. அதனை மீறிய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றில் குற்றவாளியாக காணப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது ஒரு அவசியம் இல்லாத சட்டமாகும். அதில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது நடைமுறைக்கு முரணானதாக அமைந்துள்ளது. அதுஇல்லாதொழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தண்டனைச் சட்டக் கோவை, குற்றவியல் நடவடிக்கை சான்று கட்டளைச் சட்டம் ஆகியவற்றுக்குள் இதனை உட்படுத்த முடியும்.
இனம், மதம் உள்ளிட்ட பேதங்களை விளைவிக்கும் வகையில் சில சமூக வலைத்தளங்கள் இயங்கும் நிலையில் அவை தடை செய்யப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம். அதே போன்று மொழி உரிமை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சமஷ்டி முறை தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும். தென்னிலங்கை மக்கள் மத்தியில் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை. அந்த வகையில் அதன் ஆரம்ப நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேவேளை தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் சமத்துவம் தொடர்பான சட்டங்கள் போதிய அளவில் நடைமுறையில் காணப்படவில்லை. அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்.
நாட்டில் முழுமையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஆரம்ப வகுப்புகளிலிருந்தே சமாதானக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்சினைகள் நீண்ட கால பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. யுத்தம் நிறைவடைந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துள்ள சூழ்நிலையில் மக்களின் காணிகளை யுத்த காலத்தில் பெற்றுக் கொண்டுள்ள இராணுவத்தினர் அந்தக் காணிகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பது முக்கியமாகும். காணிகள் மீள ஒப்படைக்கப்படுவதுடன் அதன் உரிமையாளர்களுக்கு அதற்கான நஷ்டஈட்டை வழங்குவதும் முக்கியமாகும். பிணை வழங்க முடியாத குற்றங்கள் என்ற விடயங்களில் அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க முடியாது. அத்தகையோருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிணை வழங்க வேண்டும் அல்லது அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிமன்றங்களில் அவ்வாறான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும்.
காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. அத்தகைய பொறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது அது பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்புடன் செயற்படுவதுடன் அவர்களது நம்பிக்கையை வெல்லும் வகையில் அது செயற்பட வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எனினும் எனது பரிந்துரைகள் அனைத்துமே தனியே தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது முழு நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் உரியவையாகும்.
நாட்டில் அபிவிருத்தி இடம்பெற வேண்டும். அதேவேளை முழுமையான சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும். அபிவிருத்தியின் போதும் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் வழங்கி அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பில் நம்பிக்கை ஏற்படுவது முக்கியமாகும். அதை விடுத்து அரசாங்கம் தன்னிச்சையாக ஒரு குழுவை அமைத்து விட்டு பெயருக்காக அந்தக் குழு இயங்குவதில் அர்த்தமில்லை. சமஷ்டி முறையே நான் பரிந்துரைக்கிறேன். அவ்வாறான சமஷ்டி முறைமை எமது நாட்டுக்கு பொருத்தமானதாக உருவாக்கப்படலாம்.
எனினும் உடனடியாக சமஷ்டிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. முதலில் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். குறிப்பாக சமஷ்டி என்பது ஏதோ நாட்டை பிளவுபடுத்தும் ஒன்று என தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் காணப்படுகின்றது.
சமஷ்டி என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறையில் உள்ளடங்கக் கூடியதே. பெரிய நாடுகளுக்கு மட்டுமன்றி சிறிய நாடுகளுக்கும் அது பொருத்தமானது. அவ்வாறு பெல்ஜியம்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை நாம் குறிப்பிட முடியும். சமஷ்டி முறைமை ஆட்சியில் மக்களின் பங்களிப்பு இடம்பெறுகிறது. இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழ் மக்கள் அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டில் சமஷ்டி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலில் கூறியவர் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி.பண்டாரநாயக்கவே ஆவார். அவர் யாழ்ப்பாணத்திற்கு 1926 ஆம் ஆண்டு வருகை தந்திருந்த போது அதனை பகிரங்கமாக அறிவித்தார். இலங்கைக்கு சமஷ்டி முறையே பொருத்தமானது என அவர் அப்போது வலியுறுத்தினார். அதனையே நாமும் இப்போது வலியுறுத்துகிறோம்.
நாட்டின் அனைத்து பிரஜைகளும் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் தமது தாய்மொழியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதிய சுதந்திரம் மற்றும் உரிமை இருக்க வேண்டும். எனினும் தமிழ் மக்களுக்கு தெற்கிலும் சிங்கள மக்களுக்கு வடக்கிலும் மொழிப் பிரச்சினைகள் காணப்படுவதை குறிப்பிட முடியும்.
கடந்த யுத்த காலத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சுயாதீனமான குழுக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சாட்சிகள் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களில் முதலில் 17 பேரும் அண்மையில் மேலும் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது”. இதன் போது குறுக்கிட்டு கேள்வி ஒன்றை எழுப்பிய ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் எச் .எம். ஏ. நவாஸ், சர்வதேச நாடுகளின் தற்போதைய நடைமுறைக்கிணங்க வளர்ச்சியடைந்த நாடுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படும் பொருத்தமான விடயங்களை எடுத்துக் கொண்டு எமது நாட்டிலும் காலத்திற்குப் பொருத்தமான சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் பேராசிரியரின் கருத்தைக் கோரினார்.
அதற்கு பதிலளித்த பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்ததாவது:
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சாட்சிகள் இன்றி கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சாட்சிகளை இனம் காணும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒரு காலம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவதற்கு போதுமான விதிமுறைகள் உள்ளன. அதேவேளை நீதிமன்றங்களில் அவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படுவது வரவேற்கக் கூடிய சிறந்த விடயமாகும்.
நாட்டில் சிங்களம். தமிழ், முஸ்லிம் என அனைவருக்குமே எமது நாடு என்ற உணர்வு அவசியமாகும். அதற்கு சிறந்த உதாரணமாக எமது கிரிக்கெட் அணியை குறிப்பிட முடியும். எமது கிரிக்கெட் அணி இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ போட்டியிடும் போது நமது மக்களில் ஒரு தரப்பினர் இந்தியாவுக்கும் மற்றொரு தரப்பினர் பாகிஸ்தானுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தமது ஆதரவைத் தெரிவிப்பதை பார்க்க முடிகின்றது. அது நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வு இல்லாமையைக் காட்டுகிறது.
மூன்று மொழிகளும் ஆரம்ப வகுப்பிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். இணைப்பு மொழியாக காணப்படும் ஆங்கில மொழி உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட வேண்டும்.
எனது கருத்துகளுக்கிணங்க மேற்படி பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றால் நாட்டில் சமஷ்டி மூலமான தீர்வு முக்கியமானதாகும். அதனை தெற்கு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனினும் தற்போதைய சூழ்நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.
நாட்டில் அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்வதற்கு இந்த நாடு சிறிய நாடு என எப்போதும் கூறிக் கொண்டிருக்க முடியாது. எம்மை விட சிறிய நாடுகளிலும் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கம் இடம்பெற்று வருகிறது.
நன்றி - லோரன்ஸ் செல்வநாயகம்