Paristamil Navigation Paristamil advert login

புவியை அச்சுறுத்தும் சனத்தொகை பெருக்கம்!

புவியை அச்சுறுத்தும் சனத்தொகை பெருக்கம்!

18 ஆடி 2021 ஞாயிறு 10:10 | பார்வைகள் : 9804


2050 ஆம் ஆண்டில் மக்கள் தொகை ஆயிரம் கோடியாக உயரும். புதிய  வளங்கள் கண்டுபிடிக்கப்படாவிடில் உலகம் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆபத்து!

 
உலக சனத் தொகையில் சீனா(144 கோடி), இந்தியா(139 கோடி), ஐக்கிய அமெரிக்கா(33 கோடி), இந்தோனேஷியா(27 கோடி), பாகிஸ்தான்(22 கோடி), பிரேசில்(21 கோடி), நைஜீரியா(21 கோடி), பங்களாதேஷ்(16 கோடி), ரஷ்யா(14 கோடி), மெக்ஸிகோ(13 கோடி) ஆகிய நாடுகளே அதிக சனத்தொகையை கொண்டுள்ளன. உலக சனத்தொகைப் பட்டியலில் இலங்கை(2 கோடி) 58 ஆவது இடத்தில் உள்ளது.
 
உலக சனத்தொகை வளர்ச்சியானது வளர்ந்து வரும் நாடுகளில் மிக வேகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சனத்தொகை வருடமொன்றுக்கு 80 மில்லியன் தொகையினால் அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு பிறப்புக்களால் 2,18,900 சனத்தொகை அதிகரிக்கின்றது.
 
உலக சனத்தொகை மாநாடுகள் புகாரெஸ்ட் (1974), மெக்ஸிக்கோ (1984), கெய்ரோ (1994) நகரங்களில் கூடின. இருந்த போதிலும் உலக சனத்தொகை பற்றிய காத்திரமான உணர்வு 1987 இல்தான் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் உலக சனத்தொகை 500 கோடியை தாண்டியது. இதனால் வரும் பாதிப்புக்களை கருத்திற் கொண்டு 1988 இல் ஐ.நா சபையானது உலக சனத்தொகை தினமாக ஜூலை மாதம் 11 ஆம் திகதியை பிரகடனப்படுத்தியது.
 
கி.பி. 01 இல் உலக சனத்தொகை சுமார் 2 கோடியாக காணப்பட்டது. இத்தொகை தற்போது 789 கோடி. 2050 இல் 1000 கோடி என எதிர்பார்க்கப்படுகின்றது.பொதுவாக நோக்குமிடத்து 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தை தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. பூமியிலுள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகின்றது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி நகர்கிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. குடிநீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை ஏற்படுகின்றது. பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றியிருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
 
மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தி அடையாத நாடுகளிலே அதிகமாக காணப்படுகின்றது. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக, 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அடையாத நாடுகளான வறிய நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதமாகும்.
 
இலங்கையின் வருடாந்த சனத்தொகை பெருக்க வீதம் 1965ஆம் ஆண்டு 2.39% ஆகவும் 1985ஆம் ஆண்டு 1.47% ஆகவும் இருந்தது. 2010 ஆம் ஆண்டில் சனத்தொகைப் பெருக்க வீதம் 0.72% ஆக குறைந்திருக்கிறது. நடந்து முடிந்த சனத்தொகை மதிப்பீட்டின் மூலமே இந்த தகவல் கிடைத்தது. 1953 ஆம் ஆண்டு இலங்கையின் சனத்தொகை கணக்கெடுக்கப்பட்டது முதல் படிப்படியாக ஒரு வருடத்தில் சனத்தொகை பெருக்க வீதம் குறைய ஆரம்பித்தது. சனத்தொகை வீதம் ஒரு நாட்டில் குறைவது அந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கான சாதகமான அறிகுறியாகும்.
 
இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சாதகமான அறிகுறியாக விளங்குகிறது. இலங்கையின் வருடாந்த சனத்தொகை பெருக்க வீதம் 2019 இல் 0.45%, 2020 இல் 0.42% தற்போதும் 0.42% ஆக காணப்படுகிறது.
 
இன்று உலகில் 925 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வருடத்திற்கு 25 மில்லியன் குழந்தைகள் உலகில் பட்டினியால் இறக்கின்றன. போஷாக்கின்மையால் 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்றன. சனத்தொகை அதிகரிக்கும் நிலையில் பட்டினி இறப்புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதும் குழந்தைகள் வளர்ச்சியில் பாதிப்புக்கள் ஏற்படுவதும் உலகில் பட்டினி அதிகரிப்பும் மேலும் மேலும் அதிகரித்துச் செல்லும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
அறியப்பட்ட வளங்களை கணக்கில் எடுத்தால் உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. எதிர்காலத்தில் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள், முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு புதிய வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under Population) கருதப்படும் நிலை தோன்றக் கூடும்.
 
பூமியிலுள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் அறியப்படாத வளங்கள் அறியப்பட்ட வளங்களைப் போல பல மடங்குகளாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வளங்கள் கண்டறியப்பட்டால் மக்கள் தொகை பூமிக்கு ஒரு பொருட்டாக இருக்க மாட்டாது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்