மாற்றமடையும் உலக ஒழுங்கில் மாற்றமடையும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு எல்லைகள்
11 ஆடி 2021 ஞாயிறு 13:27 | பார்வைகள் : 9915
உலக வல்லரசுகள் தமது நலனுக்காக நவீன காலனித்துவக் கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன. இவை நேரடி இராணுவ ஆக்கிரமிப்பாகவோ, இராணுவ ஒத்துழைப்பு முயற்சிகளாகவோ, பொருளாதார முதலீடுகளாகவோ, பொருளாதார ஒத்துழைப்புகளாகவோ அமைகின்றன.
இத்தகைய ஆக்கிரமிப்பு வல்லரசுகளில் ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா என்பன 20ம் நூற்றாண்டின் இறுதி பாதிக் காலத்தில் போட்டி போட்டன. தற்போது அவ்விடத்தினை சீனா நிரப்பி உலகில் முதன்மை வல்லரசாக வர முயற்சிக்கின்றது. இதனை அண்மைய சீனா கம்மியுனிஸ் கட்சியின் 100 வருட கொண்டாட்டத்தின் போது சீனா ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார்.
தற்போதைய பூகோளப் பெருந்தொற்றுப் பேரிடல் நிலையில் உலகில் அமெரிக்க சார்பு முதலீட்டுப் பெறுமானம் குறைந்து சீனா சார்பு முதலீட்டுப் பெறுமானம் அதிகரித்துள்ளது. இனி எதிர்வரும் காலங்களில் மேற்குலகின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கிழக்குலகில் சிங்கப்பூர், டோக்கியோ, சியோல் போன்ற நகரங்கள் எழுச்சி பெறலாம்.
சீனா சார்பு அரசினை எதிர்த்தே தமிழர்கள் தமது இருப்பினைக் காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இது மிகவும் பலவீனமான சூழல் ஏகும். சீனாவின் செல்வாக்கு மத்திய கிழக்கில் எவ்வாறு விஸ்தரிக்கின்றதோ அதன் தாக்கத்தினை பொறுத்தே ஈழத்தமிழரின் அரசியல் பயணம் எதிர்காலத்தில் அமையும். இதற்காக ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஆஃப்கானிஸ்தானில் கடந்த காலத்தில் பெற்ற விளைவுகளை நாம் விரிவாக ஆராய வேண்டும்.
ஐக்கிய அமெரிக்காவின் இராணுவச் செலவீனங்கள் மத்திய கிழக்கில் மட்டுப்படுத்தப்படவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது ஆக்கிரமிப்பில் ஆஃபானிஸ்தானில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறும் சூழல் உள்ளது. பெரஸ்ரிரொய்க்காவின் போது ரஷ்யா ஆஃபானிஸ்தானில் இருந்து விலகியபோது அங்கு ஐக்கிய அமெரிக்கா கால் பதித்தது.
தற்போதைய சூழலில் இவ்வாறே ஐக்கிய அமெரிக்கா ஆஃபானிஸ்தானை விட்டு விலகும் சுழலில் சீனா இங்கு பொருளாதார முதலீடுகள் மூலம் கால் பதிக்க உள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளில் சீனாவின் பலம் அதிகரிக்க ஏதுவாக அமையும். இஸ்லாமியத் தீவிரவாதம் ஆரம்பத்தில் ரஷ்யாவிற்கு எதிராகவும் பின்னர் ஐக்கிய அமெரிக்கா உட்பட மேற்குலகிற்கு எதிராகவும் எவ்வாறு உருவாகியதோ அவ்வாறே புதிய உலக ஒழுங்கில் இஸ்லாமியத் தீவிரவாதம் சீனாவிற்கு எதிராக உருவாகும்.
மத்திய சிழக்கில் தொடர்ந்து இரத்தக்களரி ஏற்படாது இருப்பதற்கு சிறந்த விழிப்பினை மனிதநேயச் செயற்பாட்டார்கள் ஏற்படுத்த வேண்டும். எந்த சுதேச மக்களும் தமது வளங்கள் சுரண்டப்படும்போது அதனை எதிர்ப்பது வழமை. ஆனால் அதனை உலக வல்லரசுகள் தமது நலன்களுக்காக ஆட்சி மாற்றங்களையும் யுத்தங்களையும் உருவாக்குகின்றன. தற்போதைய மாற்றமடையும் புதிய ஒழுங்கில் ஆஃகானிஸ்தான் மட்டுமல்ல இலங்கையும் ஓர் முக்கிய கேந்திர மாற்றநிலையமாக உள்ளது. உலகில் சீனாவின் முதலீட்டுக்கு இணையாக ஏனைய வல்லரசுகளால் முதலிட முடியாது. இந்நிலையில் இலங்கையில் பிராந்திய ரீதியான வல்லரசு ஆதிக்கங்கள் நிகழலாம். இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகப் பகுதிகள் இந்திய அரசின் செல்வாக்கின் ஊடு ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு உட்படலாம். அதாவது இலங்கையின் திருகோணமலையில் ஐக்கிய அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து ஓர் கடற்படைத்தளத்தை உருவாக்கலாம். ஏனெனில் ஆஃபானிஸ்தானில் சீனா காலூன்றும்போது சீனாவை கண்காணிக்க இந்திய அரசுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஓர் சிறந்த புள்ளியாக திருகோணமலை அமையும். மத்தியகிழக்கில் சீனாவைக் கட்டுப்படுத்த இலங்கையை சிறந்த புள்ளியாக இஸ்ரேல் கருதுகின்றது. இதனால் புலம்பெயர்தமிழர்களை வடக்கு கிழக்கு அரசியலில் நேரடியாக ஈடுபடுத்தும் நிலை வரும். உலக வல்லரசுகளின் ஆதிக்க ஒழங்கில் அகப்பட்டு அழியும் இனங்களில் ஒன்றாக இஸ்லாமியர்களும் தமிழர்களும் அமைவது துர்லபமே ஆகும்.