Paristamil Navigation Paristamil advert login

சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா?

சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா?

4 ஆடி 2021 ஞாயிறு 07:49 | பார்வைகள் : 10366


இன்றைய நிலையில் உலக அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்திருக்கும் பிரதான விடயம் என்ன? சந்தேகமில்லாமல், சீனா என்பதே இதற்கான பதில். சீனாவின் அபார பொருளாதார வளர்சியே இதற்கான காரணமாகும். பொருளாதாரம் வளர்ச்சிடைகின்ற போது, கூடவே இராணுவ ஆற்றலும் அதிகரிக்கும். இன்றைய நிலையில் உலகின் பிரதான சக்தியாக அமெரிக்காகவே இருக்கின்றது. சோவியத் – அமெரிக்க பனிப் போருக்கு பின்னரான உலகத்தில், அமெரிக்காகவே ஒரேயொரு தனிப்பெரும் சக்தியாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா முன்னர் இருந்த நிலையில் இப்போது இல்லை. இப்போதும் முதல் இடம் அமெரிக்காவிடம்தான் இருக்கின்றது எனினும், ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே சில அமெரிக்க சிந்தனையாளர்கள் அமெரிக்காவிற்கு பின்னரான உலகம் என்று வாதிட முயல்கின்றனர். அந்தளவிற்கு சீனாவின் எழுச்சி ஒரு பிரதான விடயமாக இருக்கின்றது.

 
பத்து வருடங்களுக்கு முன்னரான சூழலை உற்று நோக்கினால், சீனா என்பது இலங்கையர்கள் மத்தியில் ஒரு முக்கியமான பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமைகள் தலைகீழாகிவிட்டது. சீனாவை தவிர்த்து, இலங்கை அரசியல் தொடர்பில் விவாதிக்க முடியாத ஒரு நிலைமை உருவாகிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கும் – இலங்கை அரசிற்கும் இடையிலான இறுதி யுத்தத்தின் போது, சீனா பெருமளவு ஆயுத உதவிகளை அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். இன்று இலங்கைக்குள் சீனாவின் இடம் தொடர்பான விவாதங்கள் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றன.
 
மகிந்த ராஜபக்ச காலத்தில் சீனாவிற்கும் இலங்கைக்குமான உறவு வலுவடைந்தது. எதிர்காலத்தில், எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், சீனாவுடனான உறவை துண்டிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. வரலாற்று ரீதியாக இந்தியாவே முதன்மையான இடத்தில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் சீனா சிரித்துக் கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. சிங்களவர்களுக்கும் சீனா ஒரு விடயமாக இருக்கின்றது. தமிழர்களுக்கும் சீனா ஒரு விடயமாக இருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ – விளங்கியோ விளங்காமலோ, அனைவருமே சீனா தொடர்பில் பேசுகின்றனர். பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. சீனா அந்த நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
நான் இப்போது சீனா தொடர்பில் பேச முற்படும் விடயம் முற்றிலும் வித்தியாசமானது. அண்மையில் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். வேறு ஒரு நண்பர் தன்னிடம் கேட்டதாகவும், அதனையே தான் என்னிடம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதாவது, சீன கம்யூனிஸ் கட்சி உருவாக்கப்பட்டு நூறாண்டுகள் முடிவடையப் போகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சீனாவிடமிருந்து – ஈழத் தமிழர்கள் எவ்வாறான விடயங்களை கற்றுக்கொள்ளலாம்? – எதனை கற்றுக்கொள்ள வேண்டும்? – என்னும் அடிப்படையில் ஒரு கட்டுரையை எழுத முடியாதா – என்று அந்த நண்பர் கேட்டார்.
 
நான் உடனடியாக எந்த பதிலும் கூறவில்லை. இதனை அவர் என்னிடம் கேட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகின்றது. அண்மையில், சீன கம்யூனிஸட்; கட்சி, அதன் நூற்றாண்டை கொண்டாடியது. இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சீனாவை சந்தோசப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். மகிந்த தனது உரையில் வரலாற்று உண்மைக்கு மாறான விடயங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது, சீனா வரலாற்றில் பல ஆக்கிரமிப்புக்களை கண்டிருக்கின்றது ஆனால் சீனா எந்தவொரு நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவில்லை என்று மகிந்த குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இது தவறானது. இந்தியாவின் பகுதிகளில் சீனா பல தடவைகள் அத்துமீறி புகுந்திருக்கின்றது. இதுவே சீன-இந்திய எல்லைப்புற பிரச்சினையாக இப்போதும் தொடர்கின்றது. அவ்வப்போ மோதல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் மோதலுக்கான சூழல் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கின்றது.
 
இப்போது நான் பேச வந்த விடயத்திற்கு வருகின்றேன். சீனாவிலிருந்து ஈழத் தமிழர்கள் எதை கற்றுக்கொள்ள முடியும்? சீனா போன்ற ஒரு இராட்சத பலம் கொண்ட நாட்டிலிருந்து, எறும்புக்கு சமனான மக்கள் கூட்டமொன்று எதைக் கற்றுக்கொள்ள முடியும்? முதலில் சீனாவையும் ஈழத் தமிழர்களையும் ஒரு நேர் கோட்டில் வைத்து பேசுவதே தவறானது. அப்படி பேசினால் அது நகைப்புக்குரிய ஒன்றாகிவிடலாம். நிலைமை இப்படியிருக்க, எந்த அடிப்படையில் எழுதுவது?
 
வரலாற்றில் சீனா பல ஏற்ற இறக்கங்களை கண்ட ஒரு நாடு. ஒரு காலத்தில் கவனிப்பாரற்ற நிலையிலிருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மேற்குலக நாடுகள் அனைத்துமே, பொருளாதார வளர்ச்சியில், சீனாவை விடவும் பெரியளவில் வளர்ச்சியடைந்திருந்தன. மாவோவின் தலைமையிலான சீனாவோ, புரட்சி தொடர்பில் பேசிக் கொண்டிருந்தது. கருத்தியல் விவாதங்களில் நேரத்தை விரயம் செய்துகொண்டிருந்தது.
 
1976இல் சீனப் பெருந் தலைவர் மாவோ இறந்தார். அதனைத் தொடர்ந்து டெங் சியோவ்பிங், (னுநபெ ஓயைழிiபெ) சீனாவின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். இந்த இடத்திலிருந்துதான் சீனாவின் முகம் மாறத் தொடங்கியது. டெங்கின் பிரபலமான கூற்று ஒன்று இருக்கின்றது. அதாவது பூனை கறுப்பா அல்லது வெள்ளையா என்பது முக்கியமல்ல அது எலியை பிடிக்க வேண்டும். எலியை பிடித்தால், அத நல்ல பூனை.
 
இதன் பொருள் என்ன? உண்மையில் நாங்கள் எத்தகைய அரசியல் சித்தாந்தங்களை வைத்திருக்கின்றோம், எத்தகைய கொள்கைகளை வைத்திருக்கின்றோம், எவ்வாறான அரசியல் நிலைப்பாடுகளை வைத்திருக்கின்றோம் என்பதெல்லாம் முக்கியமல்ல – எங்களிடம் இருப்பதை கொண்டு நாங்கள் முன்னோக்கி பயணிக்க முடியுமா? இந்த உலகில் வெற்றிபெற முடியுமா? அப்படி முடியுமென்றால், அதனை நாங்கள் தொடர்ந்தும் பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால் ஒன்றின் மூலம் நன்மையில்லை என்றால், அதனை காவிக்கொண்டு திரிவதால் எவ்வித பயனுமில்லை. அதனை தூக்கி வீசிவிட்டு புதியவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுதான் டெங்கின் பூனை கோட்பாட்டின் அடிப்படையாகும்.
 
1984இல் சீனாவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான சீன தினசரியின் ஆசியர் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, மார்க்சியம் உயர்ந்த தத்துவமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் தொடர்ந்தும் அந்த வழியில் பயணித்தால் நாம் தனித்துப் போவோம். எனவே தொடர்ந்தும் அதனை பின்பற்றுவதில் பயனில்லை.
 
ஈழத்தமிழர்கள், சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் இதுதான். அதாவது நாம் பின்பற்றும் ஒரு விடயம் – நாம் போற்றும் ஒரு விடயம், நமக்கு பயன்படவில்லையாயின் அதனை தூக்கிவீச நாம் தயங்கக் கூடாது. மாற்றங்களை உள்வாங்கும் சமூகமே முன்நோக்கி பயணிக்க முடியும். ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், எங்கும் தோல்விகளையே காண முடியும். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற மாகாண சபையை தவிர, வேறு எதனையும் வெற்றியாக காண்பிக்கக் கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை. அந்த மாகாண சபை கூட, இன்றுவரையில் முழுமையாக தமிழர்களுக்கு பயன்படவில்லை. உண்மையில் அதனை முழுமையாக பயன்படுத்துவதிலும் தமிழர்களால் இதுவரையில் வெற்றிபெற முடியவில்லை.
 
2009இல் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. அந்த இயக்கம் அழியும் போது, அவர்களுக்கு இந்த உலகில் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு எவருமே இருக்கவில்லை. கூப்பிடும் தூரத்தில் இருந்த இந்தியாவின் ஆதரவை கூட எங்களால் பெற முடியவில்லை. இதில் பெருமைப்பட என்ன இருக்கின்றது? 32 நாடுகளினால், பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டிருந்த நிலையில்தான், அந்த இயக்கம் அழிந்துபோனது. யுத்தம் நிறைவுற்று 12 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, அந்த இயக்கம் மேற்குலக நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகவே சித்தரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இப்போதும் விடுதலைப் புலிகளை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முற்படுவதால் ஈழத் தமிழர்களால் முன்நோக்கி பயணிக்க முடியுமா?
 
இந்த இடத்தில் மீண்டும் டெங் சியோவ்பிங்கின் பூனை கோட்பாட்டை நினைத்துக்கொள்ள வேண்டும். நம்மிடமுள்ள பூனை மிகவும் அழகாக இருக்கலாம், தடவுவதற்கு பஞ்சு போன்ற ரோமத்துடன் இதமாக இருக்கலாம், காலை சுற்றித்திரியலாம், ஆனால் எலியை பிடிக்கும் வல்லமையற்றதாக இருந்தால் அதனால் எவ்வித பயனும் இல்லை. எலியை பிடிக்க முடியாத எங்களின் பூனை, நல்ல பூனையல்ல.
 
எங்களிடமுள்ள கொள்கை நிலைப்பாடுகள் மேடைகளில் கூறுவதற்கு சிறப்பாக இருக்கின்றது, ஆனால் நடைமுறையில் தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் அழிவுகளையும் ஏமாற்றங்களையுமே கொடுக்கின்றது என்றால் அந்தக் கொள்கைகளால் எந்தவொரு பயனுமில்லை. அடிப்படையில் அது தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் கொள்கையல்ல.
 
இன்றும் தமிழர் அரசியல் அதிகம் எதிர்ப்பு வாதங்களையே நம்பியிருக்கின்றது. உலகமே தங்களுக்கு அநியாயம் செய்துவிட்டதான குற்ற உணர்விலேயே காலம் விரயமாகின்றது. மற்றவர்களை குற்றம் சாட்டும் அரசியல் அடிப்படையிலேயே தவறானது. ஏனெனில் மற்றவர்களை நம்பி தமிழர் தனது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அவ்வாறாயின் வீழ்ச்சிக்கு எவ்வாறு மற்றவர்கள் காரணமாக இருக்க முடியும்? எங்களின் பக்க தவறுகளை திரும்பிப் பார்க்க, திருத்திக்கொள்ள நாம் தயராக இல்லை. இதுதான் தமிழர் பக்கத்திலுள்ள அடிப்படையான பிரச்சினை. உண்மையில் இந்த மனோபாவத்துடன் இன்றைய உலகத்தை ஈழத் தமிழர்களால் ஒரு போதுமே எதிர்கொள்ள முடியாது. அப்படி எதிர்கொண்டால் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சும்.
 
தமிழ் தலைவர்கள் என்போரும், தமிழ் அறிஞர்கள் என்போரும், இந்த இடத்திலிருந்துதான் சிந்திக்க வேண்டும். பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் போக்குகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அது வாய்ப்புக்களையும் கொண்டு வரலாம் ஆனால், வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கு முதலில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக் கூடிய, தந்திரோபாயமாக சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய, நெகிழ்வான தலைமை ஒன்று அவசியம். அவ்வாறில்லாவிட்டால் என்ன வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அதனால் ஈழத் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காது. இதற்கு 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஒரு சிறந்த உதாரணம். ஆட்சி மாற்றம் வாய்ப்புக்களை தந்தது ஆனால் அதனை தமிழர் தலைமைகளால் கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. நமது நிலைமை தொடர்பில், நம் மத்தியில் ஆரோக்கியமான உரையாடல்கள் அவசியம். இல்லாவிட்டால் ஒரு போதுமே நம்மால் தமிழர்களாக முன்னோக்கி பயணிக்க முடியாது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்