ஐரோப்பிய நாடுகளின் சந்தையாகவும் மாறவுள்ள கொழும்பு போட் சிற்றி!
15 ஆனி 2021 செவ்வாய் 12:10 | பார்வைகள் : 10221
கொழும்பு போட் சிற்றியெனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைச் சீனா வடிவமைப்பதால், எதிர்வரும் காலங்களில் இலங்கை சீனாவின் பக்கமே முற்று முழுதாகச் சாய்ந்துவிடுமென ஈழத்தமிழர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். நம்புகின்றனர்.
ஆனால் சிங்கள மக்கள் அவ்வாறான சிந்தனையில் இல்லையெனலாம். இலங்கையின் இறைமை சீனாவிடம் சிறிதளவேனும் பங்கிடப்படக் கூடாது. ஆனால் சீனாவிடம் உதவிகளைப் பெற வேண்டும் என்ற பகிரங்க நோக்கமே சிங்கள ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிங்கள மக்களிடமும் விஞ்சிக் காணப்படுகின்றன. இந்த உள்நோக்கமே இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போட் சிற்றிக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்ட மூலத்திற்குச் சிங்கள எதிர்க்கட்சிகள் எதிர்ப்புடன் கூடிய மறைமுக ஆதரவை வழங்கியிருந்ததாகவும் கூறலாம்.
சீன அரசு முழுமையான உரித்தாளராக இருந்தாலும். கொழும்பு போட் சிற்றியில் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளின் முதலீட்டாளர்களும் முதலீடுகளைச் செய்ய வேண்டுமென்ற நோக்கிலேயே இலங்கை செயற்படுகின்றது.
ஏனெனில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலகப் புகழ்பெற்ற பிரித்தானியாவைச் சேர்ந்த முதலீட்டாளரும் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினருமான நதானியேல் ரோத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) கொழும்புக்கு வந்திருந்தார். கொழும்புத் துறைமுக வர்த்தக நிதி நகரத்துக்கும் சென்று பார்வையிட்டிருக்கிறார்.
அவருடன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல பிரித்தானிய அரசியல்வாதியும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நிரஞ்சன் ஜோசப் டி சில்வா தேவா (Niranjan Joseph De Silva Deva Aditya) மற்றும் வர்த்தகத்துறை விற்பன்னரான ராஜன் பிரிட்டோ ஆகியோரும் வருகை தந்திருக்கின்றனர். 73 வயதான நிரஞ்சன் தேவா பிரித்தானிய இலங்கை ஆகிய நாடுகளின் இரட்டைப் பிரஜா உரிமையுள்ளவர்.
1999 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு யூலை மாதம் வரை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். தற்போது இலங்கையில் தேயிலை. றப்பர், மற்றும் தென்னந் தோட்டங்கள் போன்ற வர்த்தகச் செயற்பாடுகளை இலங்கையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார். அதற்கேற்ப தனியார் நிறுவனம் ஒன்றை இயக்கி அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் உள்ளார்.
வடக்குக் கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் பௌத்தர்களாக ஏன் மாறக்கூடாது அல்லது மாற்றிவிடக்கூடாது என்ற சிந்தனையைத் தோற்றுவித்தவர்களில் நிரஞ்சன் தேவாவும் ஒருவர்.
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நோர்வேயின் ஏற்பாட்டோடு சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த 2006 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவற்குக்கு இவருடைய உந்துதல் காரணமாக அமைந்திருந்தன. இவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்குமான ஒரு நிழல் தூதுவராகவும் அன்று செயற்பட்டிருந்தார்.
2008 ஆம் ஆண்டு யூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றுமொரு மூத்த உறுப்பினரான றொபேட் ஈவான்சுடன் கொழும்புக்கு நிரஞ்சன் தேவா வந்திருந்தார். அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த பின்னர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட றொபேட் ஈவான்ஸ், விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட வேண்டுமெனக் கூறியதோடு ஜனநாயக வழிக்கு வர வேண்டுமென எச்சரிக்கையும் விடுத்திருந்தார். நிரஞ்சன் தேவாவும் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு உறுப்பினராகவும் இந்தியாவுடனான உறவுகளுக்கான தூதுக்குழு மற்றும் ஆசியான் நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் பதவி வகித்திருந்த நிரஞ்சன் தேவாவின் இலங்கை அரசுக்கான சேவையைப் பாராட்டி, பௌத்த மகா சங்கம் 2006 ஆம் ஆண்டு விஸ்வகீர்த்தி ஸ்ரீலங்கா அபிமானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது.
ஆகவே ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மூத்த சர்வதேச அரசியல்வாதியும் சர்வதேச வர்த்தகச் செயற்பாட்டாளருமான நிரஞ்சன் தேவா, பிரித்தானிய நதானியேல் ரோத்ஸ்சைல்டடை மாத்திரமல்ல, ரஷ்ய நாட்டின் தொழிலதிபர் ஆண்ட்ரி மெல்னிச்சென்கோவையும் சென்ற மார்ச் மாதம் கொழும்புக்கு அழைத்து வந்து போட் சிற்றியைக் காண்பித்துள்ளார்.
மெல்னிச்சென்கோ சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த உர நிறுவனமான யூரோசெம் குழுமத்திலும், ரஷ்யாவைச் சேர்ந்த நிலக்கரி மின் நிறுவனமான சுக் நிறுவனத்திலும் பிரதான முதலீட்டாளர். கொழும்பு போட் சிற்றியின் மூலோபாயத் திட்டமிடல் குறித்து இவர் கவனம் செலுத்தியிருந்தார்.
இலங்கை முதலீட்டுச் சபைத் தலைவர் சஞ்சயா மொஹட்டாலா, அதன் இயக்குநர் ஜெனரல் பசன் வனிகசேகர ஆகியோருடனும் சென்ற மார்ச் 18 ஆம் திகதி இவர் கலந்துரையாடியிருக்கிறார்.
ஆகவே இந்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கு நன்கு புரிந்திருக்கின்றன. இதனாலேயே பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதாவது சீனாவுடன் இணைந்து பொருளாதாரம். பௌத்த கலாச்சாரம் என்பதில் இலங்கை பயணிக்க வேண்டுமென்ற ஆழமான நம்பிக்கை 1972 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து குடியரசாகிய போதே எழுந்தது. ஈழவிடுதலை அரசியல் போராட்டம் 1983 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டமாக மாறியபோது அதற்கு இந்தியா வழங்கிய ஆதரவினால் இலங்கையின் அந்த நம்பிக்கை மேலும் வலுப் பெற்றதெனலாம்.
இலங்கைச் சிங்கள மக்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இந்தியா தொடர்பாக இருந்த அச்சத்தை சீனா மெது மெதுவாகப் பயன்படுத்த ஆரம்பித்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சியமைத்திருந்தாலும் சீனாவுடனான உறவைத் தமது கட்சிக் கொள்கைளுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களில் பிரதிபலித்திருந்தன.
அதன் நீட்சியே 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் மெருகூட்டப்பட்டதெனலாம்.
ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழித்தால் மாத்திரமே இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பைப் பலப்படுத்த முடியுமென 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக நம்பிய அந்த இறுதிச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தியது சீனா.
இந்தோ- பசுபிக் பாதுகாப்பில் ஆதிக்கத்தைச் செலுத்த யார் முந்துவது என்பதில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்டு வந்த அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் புலிகளை ஒழிப்பதில் கூட்டாக உதவியளித்திருந்ததாக அப்போது பிரதமராக இருந்த அமரர் ரட்ண சிறிவிக்கிரமநாயக்கா 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பகிரங்கமாகவே கூறியதோடு நன்றியும் தெரிவித்திருந்தார்.
ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் அதிகம் துணிவோடு கால்பதித்தது சீனா. போர் முடிந்ததும் 2010 ஆம் ஆண்டு 500 மில்லியன் டொலர்களை வழங்கிய சீனா 2011 ஆம் ஆண்டு கொழும்பு போட் சிற்றிக்கான பேச்சுக்களை சீனா ஆரம்பித்தது.
பௌத்தகுருமாரின் மெதுவான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2014 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவும் சீன ஜனாதிபதியும் அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். அப்போது கொழும்பு போட்சிற்றி (Colombo Port City) என்றுதான் இதற்குப் பெயரிடப்பட்டிருந்தது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் திட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்துடன் பௌத்த குருமாரின் எதிர்ப்புகளைச் சமாளிக்க 2016 ஆம் ஆண்டு பெயரில் மட்டும் மாற்றம் செய்தது. அதன்படி கொழும்பு சர்வதேச வர்த்தக நகரம் (Colombo International Financial City- CIFC) என்று இத் திட்டத்திற்குப் பெயரிடப்பட்டது.
இதனால் கொழும்புத்துறைமுகத்துக்கு ஆபத்து இல்லை என அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்று மீண்டும் ராஜபக்ச குடும்பம் ஓகஸ்ட் மாதம் ஆட்சியமைத்த பின்னரும், இந்தப் பெயரில் மாற்றம் செய்யப்படவிலலை.
ஆகவே இவ்வாறான தோற்றப்பாடுகளே இலங்கை சீனாவின் பக்கம் சென்றுவிட்டது எனவும் இன்னும் சில ஆண்டுகளில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை சீனாவின் கூட்டாளி நாடாக இருக்குமெனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது ஈழத்தமிழர்கள் விவகாரமே.
அதாவது மேற்குலகம், ஐரோப்பா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் 2009 ஆம் ஆண்டுக்கு மே மாதத்திற்குப் பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியல், பொருளாதாரச் செயற்பாடுகள் உள்ளிட்ட அரசியல் விடுதலைக்கான சர்வதேச ரீதியான அத்தனை செயற்பாடுகளையும் முற்றாகவே அழிக்க வேண்டுமென்பது சிங்கள ஆட்சியாளர்களின் பிரதான இலக்கு.
அதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் தேவை என்பதைப் புரியாதவர்கள் அல்ல சிங்கள ஆட்சியாளர்கள்.
ஆனால் இலங்கையை நோக்கி அமெரிக்காவும் இந்தியாவும் கீழறங்கி வரவேண்டும் என்பதே அவர்களின் இராஜதந்திரம். இதனை இரண்டு வகையாகப் பார்க்கலாம்.
ஒன்று- இந்தியாவைக் கடந்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையிடம் வரவேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.
அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட இலங்கை குறித்த விடயங்களை அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் புதுடில்லியைக் கேட்டுத்தான் கையாண்டு வந்தன.
ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் இலங்கைக்கு இந்தியா தேவையில்லை என்ற நம்பிக்கை சிங்கள ஆட்சியார்களுக்குப் பிறந்துவிட்டது.
இரண்டாவது- அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளோடு சமாந்தரமான உறவுகளைப் பேணுவது. அதாவது ஆசியாவில் இலங்கை சிறிய நாடாக இருந்தாலும், இலங்கையை மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் புதுடில்லியைக் கடந்து முக்கியப்படுத்த வேண்டும் என்பதிலேதான் சமாந்தர உறவுக்கான இராஜதந்திரத்தை இலங்கை கையாளுகின்றது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக இருந்த மைக் பொம்பியோ இலங்கைக்கு வந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்ததில் இருந்து, இலங்கையை அமெரிக்காவின் ஜே- பைடன் நிர்வாகமும் இந்தியாவைக் கடந்து நேரடியாகவே கையாள ஆரம்பித்துள்ளதெனலாம்.
இந்த இடத்திலேதான் கொழும்பு போட் சிற்றியில் மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் முதலீடு செய்யக்கூடிய முறையில் நிரஞ்சன் தேவாவை இலங்கை பயன்படுத்துகின்றது. நதானியேல் ரோத்ஸ்சைல்ட் கனடாவிலும் மிகப் பெரிய முதலீட்டாளர். அவ்வாறானவர்கள் கொழும்பு போட் சிற்றியில் முதலீடு செய்தால். நிச்சயம் ஏனைய மேற்குலக முதலீட்டாளர்களும் காலப்போக்கில் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
அதற்கேற்றவாறே ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership- RCEP) ஒன்றை சீனா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கைச்சாத்திட்டது. அமெரிக்க நட்பு நாடுகளான அவுஸ்திரேலியா. ஜப்பான் ஆகிய 15 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு செயற்படவுள்ளது.
இந்த ஒப்பந்ததில் இந்தியா கைச்சாத்திடவில்லை. ஆனாலும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா இணைந்து கொள்ள முடியுமென சீனா கூறியுள்ளது.
இதேவேளை, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அமெரிக்க டாலர் அடிப்படையில் 70.1 சதவீதம் உயர்ந்து 48.16 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக சென்ற ஏழாம் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட சீனாவின் சுங்கத் திணைக்களத் தகவல்கள் கூறுவதாக ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கிலச் செய்தித் தளமான குளோபல் ரைம்ஸ் (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, சென்ற ஜனவரி முதல் மே வரை இந்தியாவுக்கான சீன ஏற்றுமதி 64.1 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி 90.2 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியா சீன ஆகிய இரு நாடுகளின் மொத்த வர்த்தகம் 92.89 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியிருப்பதாக சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு கொவிட் (COVID) இன் தாக்கம் காரணமாக, சீனாவுடனான ஒட்டுமொத்த வர்த்தகம் 2019 ஜனவரி-செப்டம்பர் மாதத்தில் (60.5 பில்லியன் அமெரிக்க டொலர்) 13.1% குறைந்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (69.7 பில்லியன் அமெரிக்க டெரலர்) இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே சீனாவுடன் இலங்கை ஏன் பொருளாதார ரீதியில் நெருக்கமாகின்றது அல்லது அடிமைப்படுகின்றதென இந்திய அரசு கேள்வி தொடுக்க முடியாது. கை நீட்டவும் முடியாது.
அத்துடன் சீனாவின் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடுகளும் கொழும்பு போட் சிற்றியில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை இதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஆகவே இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்காவோடும் பொருளாதாரத்துக்குச் சீனாவோடும் உறவு என்ற இரட்டை நிலைப்பாட்டை இலங்கை கடைப்பிடிப்பதால், தற்போதைக்குப் பிரதான வல்லாதிக்க நாடுகளுக்குப் பிரச்சனை இருக்காது.
ஆனாலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இலங்கை சீனாவின் முழுமையான கூட்டாளியா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டியதொரு நிர்ப்பந்தம் எழலாம். இந்தோ- பசுபிக் பாதுகாப்பு என்று வரும்போது நிச்சயமாக இலங்கை அமெரிக்கா பக்கமே நிற்க வேண்டிய கட்டாயச் சூழலும் உண்டு. ஏனெனில் ஈழத்தமிழர் விவகாரம் அந்த அளவுக்கு இலங்கையைக் கட்டிப்போட்டுள்ளது.
சர்வதேசப் பயங்கரவாதத் தடுப்புப் பேராசிரியர் றொகான் குணவர்த்தன கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சண்டே ஒப்சேவர் ஆங்கில வார இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், ஐக்கிய நாடுகள் சபை புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தார்.
இவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிழல் ஆலோசகராக நீண்டகாலமாகச் செயற்பட்டும் வருகிறார். ஆகவே அவ்வாறான அழுத்தங்களுக்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகள் பணியுமாக இருந்தால், சீனாவுக்குச் சமாந்தரமான முன்னுரிமை இலங்கையில் அமெரிக்காவுக்கும் கிடைக்கும்.
1) மேற்குல மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்களை கொழும்பு போட் சிற்றிக்கு அழைத்து வந்த நிரஞ்சன் தேவா (Niranjan Joseph De Silva Deva Aditya) என்ற இராஜதந்திரி இவர்தான். 20 ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி விகித்தவர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்குமான ஒரு நிழல் தூதுவராகவும் அன்று செயற்பட்டிருந்தார்.
2’)இவர்தான் பிரித்தானியாவைச் சேர்ந்த சர்வதேச முதலீட்டாளர் நதானியேல் ரோத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) கனடாவிலும் முதலீடுகளைச் செய்துள்ளார். கொழும்பு போட் சிற்றியில் இவருடைய ரோட்சைட் வங்கி ஒன்றும் திறக்கப்படவுள்ளது.
3) இவர்தான் ரஷ்ய நாட்டின் தொழிலதிபர் ஆண்ட்ரி மெல்னிச்சென்கோ (Andrey Igorevich Melnichenko) கொழும்பு போட் சிற்றியை சென்ற மார்ச் மாதம் பார்வையிட்டு அதன் வர்த்தக மூலோபாயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அ.நிக்ஸன்-