இலங்கையோடு ஜேர்மனி பேரம் பேசியதா? ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சூழ்ச்சியா?
9 ஆனி 2021 புதன் 13:10 | பார்வைகள் : 9352
பிரித்தானியா வெளியேறியதால் இலங்கை விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் கையாள ஆரம்பித்துள்ள ஜேர்மன் அரசு, தனியே இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான அல்லது நியாயப்படுத்துவதற்கான தளபதியாக மாத்திரம் இயங்க முடியாது–
இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம் வகிக்கின்றது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான அதாவது நேரர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்த பிரித்தானியா, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் சூழ்ச்சிகளையும் அன்று வகுத்திருந்தது. தற்போது ஒன்றியத்தில் இருந்து விலகிய நிலையில், ஜேர்மன் அரசு மூலமாக ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக இரண்டு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஓன்று கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெற்றிருந்த வேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிலருக்கு எதிராக ஜேர்மன் அரசு மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை வழங்க வேண்டிய ஒத்துழைப்புத் தொடர்பாக ஜேர்மன் பிரதிநிதி ஹன்ஸ் பீற்றர் யூகல் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த பெ்பரவரி மாதம் 25 ஆம் திகதி மனியத உரிமைச் சபையின் 46 ஆவது அமர்வில் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்லெற் அம்மையார் இலங்கை குற்த்த அறிக்கையை வாசித்து முடித்த பின்னர் இடம்பெற்ற விவாதத்தில் ஜேர்மன் அரசின் பிரதிநிதி இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் முள்ளிவாய்க்கால் மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவமும் பொலிஸாரும் விதித்த தடைகள், இடையூறுகள், மற்றும் வடக்குக் கிழக்கில் தொடர்ந்தும் இராணுவத்தின் கண்காணிப்புகள், சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுதல் உள்ளிட்ட ஈழத்தமிழர்களுக்கு எதிரான நெருக்குவாரங்கள் பற்றி எதுவுமே அந்த ஜேர்மன் பிரதிநிதி பேசியிருக்கவில்லை. அதேவேளை ஜெனீவா பிரேரணைக்கு ஆதரவாகவும் ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேதான் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாகத் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜேர்மன் அரச நீதிமன்றத்தினால் ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது, ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் இளைஞர்கள் 18பேர் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர். அதாவது ஜேர்மன் நாட்டுக்குரிய விமானத்தில் அல்லாது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வேறு நாடொன்றின் விமானத்திலேயே இவர்கள் இலங்கைக்குக் கடத்தப்பட்டிருந்தனர்.
புலம்பெயர் தமிழர்கள் ஜேர்மன் விமானத்தில் பயணிப்பதைப் புறக்கணிக்கக்கூடாது என்ற உள்நோக்கில் வேறு விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியிருக்கலாம்.
28 பேர் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தாலும் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இரு தமிழ் இளைஞர்கள் ஜேர்மன் நாட்டு வழக்கறிஞர் ஒருவரின் கடுமையான போராட்டத்தினால் நாடுகடத்தப்படவில்லை. ஆனாலும் விரைவில் அந்த இரண்டு இளைஞர்களும் கடத்தப்படவுள்ளனர்.
அத்துடன இந்த மாதம் 9 ஆம் திகதி புதன்கிழமை மேலும் 20 தமிழ் இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். சுமார் ஆறு, ஏழு வருடங்களுக்கும் அதிகமாக ஜேர்மனியில் வாழ்ந்த இளைஞர்களே நாடு கடத்தப்படவுள்ளனர். இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் எத்தனை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களைப் பெறமுடியாதுள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஆகவே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னரான சூழலில், இலங்கை அரசுக்குச் சாதகமாகவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் நகர்வுகளை மேற்கொள்ள ஜேர்மன் தற்போது தூண்டிவிடப்பட்டிருக்கிறது.
அல்லது இலங்கை அரசு என்ற கட்டமைப்போடு ஜேர்மன் அரசு ஏதாவது பேரம் பேசியிருக்க வேண்டும்.
2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பிரித்தானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் இலங்கை விவகாரத்தைக் கையாளும் முக்கிய நாடாக இருந்தபோதுதான் புலிகளுக்கு எதிரான பயணத் தடை விதிக்கப்பட்டது.
அதுவும் சர்வதேச நாடுகளில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பயணத் தடை விதிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தப் பயணத்தடை தவறான முடிவென அப்போது போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவராக இருந்த உல்கென்றிஸ் கண்டித்திருந்தார். சமபலத்தோடு இரு தரப்பும் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் ஒரு தரப்பை மாத்திரம் தண்டிக்க முடியாது எனவும் இது இருதரப்புப் பேச்சுவார்த்தை தொடருவதற்கான தடைகளை உருவாக்குமெனவும் உல்கென்றிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கண்டிநேவிய நாடுகளான பின்லாந்து, சுவிடன், டென்மார்க் போன்ற நாடுகள் அங்கம் வகித்திருந்தால், நோர்வே தலைமையிலான போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் இந்த மூன்று நாடுகளும் வெளியேற வேண்டுமென அன்று விடுதலைப் புலிகள் நோர்வே அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த மூன்று நாடுகளும் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்குப் பயணத் தடை விதித்தால், போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் இந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் நேர்மையாகச் செயற்படுவார்களென எதிர்பார்க்க முடியாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் செப்ரெம்பர் மாதம் இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதாலேயே புலிகள் மீதான பயணத் தடைக்குக் காரணமென அன்று கொழும்பில் சிங்கள ஆங்கில ஊடகங்கள் விபரித்திருந்தன. ஆனால் பயணத் தடைக்கு அது காரணமல்ல.
1999 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு யூலை மாதம் வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பல சர்வதேச உயர் பதவிகளை வகித்திருந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியப் பிரஜையான நிரஞ்சன் ஜோசப் டி சில்வா தேவா ஆதித்தியா (Niranjan Joseph De Silva Deva Aditya) என்பவரே காரணமாக இருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு உறுப்பினராகவும் இந்திய அரசு மற்றும் ஆசியான் நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான தூதுக்குழு உறுப்பினராகவும் இவர் பதவி வகித்திருந்தார்.
ஆகவே நிரஞ்சன் தேவாவின் சர்வதேசத் தொடர்புள்ள சந்தர்ப்பங்களை இலங்கை அரசு அன்று பயன்படுத்தியிருந்தது. பயணத் தடை விதிப்பதற்காக கதிர்காமரின் கொலையைச் சாதகமாக்கியிருக்கிறார்கள்.
குறிப்பாகப் புதுடில்லியுடனான நிரஞ்சன் தேவாவின் உறவு சாதகமாக இருந்தது என்ற கருத்தும் உண்டு.
ஏனெனில் இலங்கை அரசுக்கான சேவையைப் பாராட்டி, பௌத்த மகா சங்கம் 2006 ஆம் ஆண்டு நிரஞ்சன் தேவாவுக்குக் கண்டியில் வைத்து விஸ்வகீர்த்தி ஸ்ரீலங்கா அபிமானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தமை அதற்குச் சிறந்த உதாரணமாகும்.
ஆகவே ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை இந்திய அரசுகளும் அதற்கு ஆதரவான சர்வதேசத் தொடர்பாளர்களும் கூறுகின்ற நேர்மையற்ற தகவல்களை மாத்திரம் நம்பிக் கொண்டு செயற்பாடுகளை அன்று முன்னெடுத்த பிரித்தானிய, மறுபுறத்தில் அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு உசுப்பேத்தித் தம் மீதான போலியான நம்பிக்கையைத் தக்கவைத்துமிருந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, ஜப்பான். நோர்வே ஆகிய நாடுகள் இணைத்தலைமை நாடுகளாகச் செயற்பட்டிருந்தன. ஆனாலும் பிரித்தானிய அரசுதான் ஈழத்தமிழர்களுக்கு எதிரான யோசனைகள், தீர்மானங்கள் அனைத்துக்குமே காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.
1997 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி வகித்திருந்த ரெனி பிளேயர் காலத்தில் இருந்தே பிரித்தானியத் தொழில்கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு போன்றதொரு மாயையைக் காண்பித்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இடம்பெற்ற தமிழ் இன அழிப்புக்களை பிரித்தானியா கண்டுகொள்ளாதது போல் செயற்பட்டுமிருந்தது.
அத்துடன் 2005 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைவரை இலங்கை விவகாரத்தில் பிரித்தானியாவைப் பிரதானமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டதாலேயே 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு துணிவோடு முன்னெடுத்திருந்ததென்றும் கூறலாம்.
அதாவது பயணத் தடையை அடுத்து 2006 ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராக முற்று முழுதாக விதிக்கப்பட்ட தடையே அந்தத் துணிவுக்குக் காரணமெனலாம்.
புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை என்பது அன்று புவிசார் அரசியலை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. ஆகவே அந்தச் செயற்பாட்டின் நீட்சியைத் தற்போது ஜேர்மன் அரசு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
கருக்குழு நாடுகளில் அங்கம் வகித்திருந்த பிரித்தானியாவைச் சில புலம்பெயர் அமைப்புகள் நம்புகின்றன. அவ்வாறே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுபோன்றதொரு தோற்றத்தை வெளிப்படுத்தி வரும் ஜேர்மன் அரசையும் சில புலம்பெயர் அமைப்புகள் நேசிக்கின்றன.
ஆனால், 1994 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை சர்வதேச அரங்கில் முன்னெடுத்திருந்த லக்ஸ்மன் கதிர்காமரின் அரசியலையே, ஜேர்மன் 2019 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
இவ்வாறான சந்தேகங்கள். கேள்விகளுக்கு மத்தியில், ஜேர்மனியில் இருந்து மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் மிகவும் இரகசியமாக கொழும்புக்கும் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களுக்கும் வந்து சென்றிருக்கின்றனர்.
பலரைச் சந்தித்து உரையாடியதோடு, தமிழ் இளைஞர்கள் ஜேர்மனியில் இருந்து கடந்த மார்ச் மாதம் கடத்தப்பட்டமை தொடர்பாகவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் கேட்டு அறிந்திருக்கின்றனர்.
ஆனால் இந்தச் சந்திப்பின் பின்னரும்கூட எதிர்வரும் 9 ஆம் திகதி 20 தமிழ் இளைஞர்கள் இலங்கைக்குக் கடத்தப்படவுள்ளனர்.
கருக்குழு நாடுகள் பட்டியலில் இடம்பெறும் ஜேர்மன், ஈழத்தமிழர்களுக்கு எதிராக மாத்திரம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் சந்தேகங்களையே உருவாக்கியிருக்கின்றன.
ஆகவே முதலில் ஜேர்மன் அரசு இந்தச் சந்தேகங்களை நீக்க வேண்டும். ஏனெனில் பிரித்தானியா வெளியேறியதால் இலங்கை விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் கையாள ஆரம்பித்துள்ள ஜேர்மன் அரசு, தனியே இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான அல்லது நியாயப்படுத்துவதற்கான தளபதியாக மாத்திரம் இயங்க முடியாது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சூம் மீற்றிங்குகளை (zoom meeting) மாத்திரம் நடத்திக் கொண்டிருக்காமல், நினைவேந்தல்களில் மாத்திரம் கவனம் செலுத்தாமல், தற்போதைய புவிசார் அரசியலில் காணப்படும் சுழிவு நெழிவுகள், சர்வதேச அரசுகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நலன்களுக்கு ஊடாக எப்படி நகர்ந்து காரியத்தைச் சாதிக்கலாமென்பதையிட்டு ஆழ்ந்து பரிசீலித்தல் நன்று.
புலம்பெயர் அமைப்புகள் தாயகத்தில் உள்ள தேர்தல் அரசியல் கட்சிகளை நம்பிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமுமில்லை.