Paristamil Navigation Paristamil advert login

ரஷிய- சீனா உறவும் ஈழத்தமிழர் விவகாரமும்

ரஷிய- சீனா உறவும் ஈழத்தமிழர் விவகாரமும்

22 வைகாசி 2021 சனி 10:16 | பார்வைகள் : 9670


இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயற்பட்டாலும், சீனாவுடனான மோதலுக்கு அமெரிக்கா இந்தியாவைக் கருவியாக மாத்திரமே பயன்படுத்துகின்றது என்பது கண்கூடு.

 
இந்திய இராஜதந்திரம் இதனை உள்ளூரப் புரிந்து கொண்டாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவை ஒரு பெரிய ஜனநாயக நாடாக ரஷியா புரிந்து கொண்டாலும் சீனாவோடுதான் உறவை வளர்க்க முற்படுகின்றது.
 
சர்வதேச விவகாரங்களின் நிபுணர் பேராசிரியர் ஹர்ஷ பாண்ட் கூறுகையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என ரஷியாவுக்கு நன்கு தெரியும் என்கிறார். சீனாவில் ஒருவிதமான சர்வாதிகாரம் உண்டு. எனவேதான் ரஷியா இந்தியாவுடனான உறவை, பழைய நெருங்கிய நட்பு என்ற அடிப்படையில் வளர்க்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
 
ஆனால் கடந்த தசாப்தத்தில் ரஷியா சீனா உறவு வலிமை பெற்றுள்ளது என்றும் பேராசிரியர் ஹர்ஷ பாண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ரஷியா பாகிஸ்தானை விட குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. அமெரிக்கா உலகம் முழுவதும் படைத் தளங்களை அமைத்து வருகிறது. அது ரஷியாவுக்குச் சவாலாக உள்ளது. தனது மிகப்பெரிய பரப்பளவைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷியாவைக் பாதுகாக்க வேண்டியுள்ளது.
 
தனது எல்லையைச் சுற்றி பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை ரஷியா விரும்பாது. ரஷியாவின் கிழக்கே உள்ள சீனாவுடன், ரஷியா எந்த பகையையும் மோதலையும் விரும்பவில்லை. ரஷியாவின் இந்த நோக்கம் சீனாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனை ரஷியாவின் சமீபகாலச் செயற்பாடுகள் கோடிகாட்டுகின்றன.
 
ஆகவேதான் ரஷியாவுடன் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா இணைந்து செயற்பட வேண்டுமென்ற கருத்துக்கள் தற்போது எழ ஆரம்பிக்கின்றன. குறிப்பாக ஈழத் தமிழர் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களில் இந்தியா துணிந்து எடுத்திருக்க வேண்டிய செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்காமல் மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் சீனா ஆதிக்கத்தைக் குறைக்கவும் முடியுமென்ற கருத்துக்களும் உண்டு.
 
அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய உறவு என்பது இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களை அடிப்படையாக் கொண்டதெனக் கூறினாலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தனியொரு வல்லரசாக வளருவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.
 
இது இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள். இந்தியத் தீர்மானம் எடுப்போருக்குப் புரியாததல்ல. ஆனால் இந்திய மத்திய அரசின் ஏதோவொரு மறைமுக நிலைப்பாடு பூகோள அரசியல் நிலைமைகளில் குழப்பங்களை உருவாக்குகின்றன.
 
சீனாவோடு உறவைப் பேணிவரும் ரஷியா, அவ்வப்போது இந்திய- சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தால் அமைதிக்கான தீர்வைக் காண அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுமெனக் கூறுகின்றது.
 
ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரஷிய அதிகாரிகள் அவ்வப்போது நடத்தும் கலந்துரையாடல்களில் இவ்வாறான உறுதிமொழிகளை வழங்குகின்றனர். லடாக் பிரதேசத்தில் இந்தியா, சீனா மோதல் இடம்பெற்றபோது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ;யாவுக்குப் பயணம் செய்திருந்தார்.
 
இந்தப் பயணத்தின் மூலம் ரஷியா இந்திய உறவு பலப்படும் என்றொரு நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுமிருந்தார். அவ்வாறே தொடர்ச்சியான ஆறு மாதங்கள் இரு நாடுகளுக்குமடையே நல் உறவு நீடித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
 
ரஷியா- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே இராணுவ உறவு வலிமை பெற்றும் வந்தது. இந்த உறவைப் பலப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது பற்றி இந்திய ஊடகங்கள் வெள்வேறு கோணங்களில் விமர்சித்துமிருந்தன.
 
ரஷியாவிடம் இருந்து இராணுவத் தளபாடங்கள், ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் நடைமுறைகளும் காணப்பட்டன. ஆனாலும் ரஷியாவுடனான தொடர்ச்சியான உறவுக்கும் இராணுவ ஒத்துழைப்புப் பரிமாற்றங்களுக்கும் நரேந்திரமோடி அரசு கொஞ்சம் தயக்கம் காட்டியதை அவதானிக்க முடிந்தது.
 
நீண்ட காலமாகப் பாதுகாப்புச் சார்ந்த பல முக்கியமான ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா தயக்கம் காட்டிவந்ததாக ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர் வினய் சுக்லா கூறுகிறார்.
 
சில சமயங்களில் பணம் இல்லை என்றும், வேறு பல காரணங்களையும் குறிப்பிட்டு, ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இந்தியா தயங்கியது. எடுத்துக்காட்டாக 2014ம் ஆண்டு ரஷியாவுடன் இணைத்து ஹெலிகாப்டர் தயாரிக்கும் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்தியா எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை என்கிறார் வினய் சுக்லா.
 
வினய் சுக்லாவை பொறுத்தவரை, இந்தியாவிடம் பலதரப்பட்ட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் இருந்திருந்தால், இந்திய- சீன எல்லையில் மோதல் ஏற்பட்டபோது கல்வான் பள்ளத்தாக்கில் காயம் அடைந்து, உயிருக்குப் போராடிய இராணுவத்தினரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
 
 
சுக்ஹோய் (Sukhoi) மற்றும் மிக் (Mig) விமானங்கள் இந்திய விமானப்படையின் முதுகெலும்பு. ஆனால் இந்த வகை விமானங்களையும் கொள்வனவு செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது எனவும் எஸ்-400 ரக ஏவுகணைகூட இதுவரை கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை அவர் கூறுகின்றார்.ஆகவே ரஷியாவைவிட இந்தியா அமெரிக்காவையே நம்புகின்றது என்பது புலனாகிறது. இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் மாத்திரமல்ல ஈழத்தமிழர் விவகாரமும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்புக்குள்ளேயே அதாவது இந்தியாவின் அழுத்தத்தால் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே தீர்ந்துவிட வேண்டுமெனவும் இந்தியா விரும்புகின்றது.
ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசு அதாவது சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை இந்தியாவைக் கடந்து அமெரிக்காவோடு நேரடியாகப் பேசியே இலங்கைக்குத் தேவையான அனைத்து விவகாரங்களையும் முடிக்க வேண்டுமென அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
 
இலங்கையின் இந்த எதிர்ப்பார்ப்பு என்பது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை காணப்பட்டது. 2007 ஆம் அண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தபோது காலியில் நடத்தப்பட்ட கோல் டயலொக் (Gall Dialog) என்ற உரையாடல் மூலம், இந்தியாவைக் கடந்து அமெரிக்காவோடு தொடர்புகளைப் பேணுவது என்ற கொள்கை நடைமுறைக்கு வந்தது. இந்த உரையாடலில் அமெரிக்க, உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.
 
இந்த உரையாடலில் இந்திய இராணுவ அதிகாரிகள் பங்குபற்றியிருந்தாலும், அமெரிக்காவோடு நேரடியாகப் பேசுவது என்ற இலங்கையின் அணுகுமுறை குறித்து அவர்கள் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. இலங்கை சிறிய நாடு அதனைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அதீத நம்பிக்கை இந்திய அதிகாரிகளுக்கு உண்டு.
 
 ஆனால் குறைந்தது கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கை அமெரிக்கா மற்றும் சீனாவுடனான உறவை தமக்கு ஏற்றவாறான கோணங்களில் புதுப்பித்துள்ளதையே சமீபகாலச் செயற்பாடுகள் கோடிகாட்டுpன்றன.
 
2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமும் அவ்வாறான அணுகுமுறை ஒன்றையே பின்பற்றியிருந்தது. கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியாவுக்கு கையளிக்கும் விடயத்தில் மைத்திரி- ரணில் ஆகியோரிடையே அன்று ஏற்பட்டிருந்த முரண்பாடுகள்கூட இலங்கையின் நலன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இதனை இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
 
பொருளாதார ரீதியில் சீனாவோடும் இந்தோ- பசுபிப் பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா இந்தியாவோடும் இணைந்து செயற்படுவதென்ற இலங்கையின் இரட்டை நிலைப்பாட்டுக்கு, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் விரும்பியோ விரும்பாமலோ அல்லது கண்டும் காணாமல் இருப்பது என்ற அணுகுமுறை தற்காலிகமானதே.
 
இது சிங்கள ஆட்சியாளர்களுக்குப் புரியாததல்ல. ஆனால் இந்தத் தற்காலிக அணுகுமுறையின் ஊடே, இலங்கை தமக்குரிய புவிசார் நலன்களைப் பெற்றுவிடுகின்றது.
 
குறிப்பாக ஈழத்தமிழர்கள் சார்ந்த விடயத்தில் சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் கொதிநிலையை அதாவது இன அழிப்புப் பற்றிய விசாரணை அல்லது போர்க்குற்றம்; மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக்கான அனைத்துப் பொறிமுறைகளையும் இலங்கை இல்லாமல் செய்துவிடுகின்றது.
 
அல்லது அதற்கான அழுத்தங்களைக் குறைக்கிறது. அத்துடன் இலங்கை ஒற்றையாட்சித் தன்மை கொண்ட நாடு என்பதும் இந்தத் தற்காலிக அணுகுமுறையினால் தொடர்ந்தும் நிறுவப்படுகின்றது.
 
ஆகவே எதிர்வரும் காலங்களில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்போர் இந்த விடயங்களை உற்றுநோக்காமல், தொடர்ந்தும் இலங்கையைச் சிறிய நாடு என்றும் அமெரிக்காவையும் அதனோடு இணைந்த மேற்குலக நாடுகளை மாத்திரம் நம்பிக் கொண்டிருப்பதும் இந்திய இராஜதந்திரத்துக்குத் தோல்வியே.
 
இந்தோ- பசுபிப் பிராந்தியத்தில் தமக்குரிய பாதுகாப்பையோ அல்லது இந்தியா தான் நினைப்பதையோ இதானால் சாதித்தவிடவும் முடியாது.
 
அமெரிக்காவை நம்பி ரஷியாவோடு உறவை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதும் இந்தியாவுக்கு ஆபத்தானேதே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க நண்பர்களான அவுஸ்திரேலியா, ஜப்பான், போன்ற நாடுகளும் சில மேற்குலக நாடுகளையும் உள்ளடக்கிச் சீனா செய்துகொண்ட மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில்கூட இந்தியா கைச்சாத்திடவில்லை. இது இந்திய வெளியுவுக்கொள்கையின் பலவீனம் மாத்திரமல்ல. ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கையாண்ட அணுகுமுறையின் தோல்வியும் பிரதான காரணம் என்பதும் கண்கூடு.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்